வியாழன், 24 ஏப்ரல், 2014


வள்ளி மலை (ஸ்ரீவள்ளியின் அவதாரத் தலம்)

1. வள்ளி மலை வேலூர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.
2. வேடர் தலைவனான நம்பிராஜன் ஸ்ரீ வள்ளியை குழந்தையாகக் கண்டெடுத்து வளர்த்த தலம்.
3. முருகக் கடவுள் வேடனாக வந்து ஸ்ரீவள்ளியிடம் தன் காதலை தெரிவித்த தலம்.
4. (பின்னர்) முருகப் பெருமான் வயோதிக வேடத்தில் தோன்றி ஸ்ரீவள்ளியிடம் தேனும், தினை மாவும் பெற்றுப் பின் தன்னை மணம் புரியுமாறு கேட்டு திருவிளையாடல் புரிந்து அருளிய தலம்.
5. ஸ்ரீவிநாயகர் யானை உருவில் வந்து ஸ்ரீ வள்ளியை பயம் கொள்ளச் செய்து, தன் சகோதரனின் காதலுக்கு உதவி அருளிய தலம்.
6. குமரக் கடவுள் ஸ்ரீவள்ளியை மணம் புரிந்து அருளிய தலம்.
7. தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எண்ணற்ற திருப்பணிகள் செய்விக்கப் பட்ட தலம்.

தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. மலை அடிவாரத்தில் உள்ள திருக்கோயில். புனிதத் தன்மை வாய்ந்த சரவணப் பொய்கை தீர்த்தம்.
2. மலை உச்சியில் உள்ள குடவரைக் கோயில்: அடிவாரத்தில் இருந்து 444 படிகளைக் கடந்து இக்கோயிலை அடையலாம்.
3. குமரி தீர்த்தம்: ஸ்ரீவள்ளி வயோதிக வேடத்தில் வந்த தமிழ்க் கடவுளுக்கு அருந்த நீர் கொடுத்து அருளிய இடம் (மலைக் கோயில்).
4. கணேச கிரி: ஸ்ரீவிநாயகர் வடிவில் அமைந்துள்ள பாறை (மலைக் கோயில்). இப்பெருமானே ஸ்ரீவள்ளி நாயகியின் கரம் பற்ற குகக் கடவுளுக்கு உதவி புரிந்து அருளியவர்.
5. திருமால் கிரீஸ்வரர்: சிவபெருமான் பரந்தாமனின் திருநாமம் தாங்கி சிவலிங்க வடிவில் வீற்றிருக்கிறார் (மலைக் கோயில்).
6. வள்ளி மலை சுவாமிகளின் ஜீவ சமாதிக் குகை (மலைக் கோயில்).

பக்குவம் அடைந்த ஜீவாத்மாவை பரமாத்மா தேடி வந்து ஆட்கொள்ளும் அருட்செயலே ஸ்ரீவள்ளி திருமணம் உணர்த்தும் உட்குறிப்பு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத புனிதத் தன்மை பொருந்திய தலம் வள்ளி மலை. கட்டாயம் தரிசித்துப் பயன் பெறுவோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை: