வியாழன், 24 ஏப்ரல், 2014


திருவண்ணாமலையில் அற்புதம் - அனைவருக்கும் கிடைத்த மயில் வாகனின் பேரின்ப தரிசனம்

அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர். முருக வழிபாட்டு சமயத்திற்கு தனிப்பெரும் குருநாதர். இவரின் காலத்தில் வாழ்ந்த சம்பந்‌தாண்டான் என்னும் காளி உபாசகன் அருணகிரிநாதரின் புகழ் மீது மிகுந்த பொறாமை கொண்டு இருந்தான். ஒரு முறை இவன் அரசனான பிரபுடதேவராயனை ஏவி, அருணகிரிப் பெருமானை அரசவைக்கு அழைத்து வரச் செய்தான்.

மன்னன் அருணகிரிநாதர் மீது பெருமதிப்புக் கொண்டவன். இருப்பினும் சம்பந்‌தாண்டானுக்கு அஞ்சி இதற்கு உடன்பட்டான். அவைக்கு வந்த அருணகிரிநாதரைப் பார்த்து 'உம் மார்கம் உண்மை எனில் முருகக் கடவுளை வரவழைத்துக் காட்டும்' என்று சம்பந்‌தாண்டான் சூளுரைத்தான். அன்பே உருவான அருணகிரியாரும் சம்மதித்து அருளினார்.

சம்பந்‌தாண்டான் இரவு முழுவதும் காளி பூஜை செய்து, தன் 12 ஆண்டு வழிபாட்டின் எஞ்சிய பலனாக 'முருகக் கடவுளை காலையில் தோன்ற விடாமல் செய்தருள வேண்டும்' என்று காளியிடம் வஞ்சகமாக பிரார்த்தித்தான். காளி தேவியும் 'உன் வழிபாட்டின் பலன் இத்துடன் நிறைவுற்றது. யாம் குமரவேளை தடுத்து அருள்வோம். இருப்பினும் உன் எண்ணம் ஈடேறாது' எனக் கூறி மறைந்தருளினாள்.

மறு நாள் காலையில் திருவண்ணாமலை திருக்கோயிலில் அமைந்துள்ள முருகக் கடவுளின் சந்நிதி முன்பு அனைவரும் கூடினர். அருணகிரியார் திருப்புகழ் பாடல்களால் குமரவேளை துதித்துப் பாடியும், பெருமான் தரிசனம் அளித்தருளவில்லை. ஞானக் கண் கொண்டு தரிசித்த அருணகிரியார், காளி தேவியின் பிடியில் குமரவேள் கட்டுண்டு இருப்பதைக் கண்ணுற்றார்.

பின்னர் அருணகிரியார் பெருமானின் வாகனமான மயிலை நினைந்து 'மயில் விருத்தம்' பாடி அருள, அப்பாக்களால் மெய் மறந்த காளி தேவியின் பிடி தளர்ந்தது. அக்கணமே திருக்கோயில் தூண் பிளந்து, கோடி சூர்ய பிரகாசமாய் குழந்தைக் கடவுள் மயில் மீது காட்சி அளித்து அருளினார். 'என்னே ஆச்சரியம்; என்னே வியப்பு; குமரவேளின் கருணைக்கு எல்லை என்பதும் உளதோ? !!!

கற்ப கோடி காலம் தவம் இருந்தாலும் புலப்படாத பரம்பொருளை - சிவ ஜோதியான ஆறுமுகக் கடவுளை கண் முன் நிறுத்தியது தமிழ்ப் பாக்கள் அன்றோ!!! என்னே அருணகிரிநாதரின் மாண்பு!! 'நல்லார் ஒருவர் உளரேல் - அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்றாள் அவ்வை. அருணகிரியாரால் ஆயிரக் கணக்கானோர் முருக தரிசனம் பெற்று உய்ந்தனர்!!!!!

கருத்துகள் இல்லை: