வியாழன், 24 ஏப்ரல், 2014


காஞ்சீபுரம்:- நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம் தந்தருளும் அத்தி வரதர்

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் காஞ்சியில் அமைந்து உள்ள வரதராஜப் பெருமான் ஆலயமும் இடம் பெறுகிறது. இத்தலத்தில் ஆதியில் எழுந்தருளி இருந்த மூலமூர்த்தியின் திருநாமம் அத்தி வரதர். பிரமனின் யாகத்தில் இருந்து வெளிப்பட்ட மூர்த்தியான இப்பெருமானின் திருமேனி அத்தி மரத்தால் அமையப் பெற்ற சிறப்புப் பொருந்தியது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அந்நியப் படையெடுப்பில் மூல மூர்த்தி சிறிது பிண்ணம் அடையும் நிலை ஏற்பட்டது. 'அனந்த சரஸ்' என்று அழைக்கப் படும் திருக்கோயில் தீர்த்தத்தின் நீருக்கு அடியில் ஒரு மண்டபம் அமைத்து அதில் மூலவரான அத்தி வரதப் பெருமானை எழுந்தருளச் செய்தனர்.

பின்பு 'பழைய சீவரம்' என்னும் இடத்தில் இருந்து மற்றொரு மூல மூர்த்தியை அமைத்து, பெருமானை ஆகம விதிப்படி அம்மூர்த்தியில் ஆவாகனம் செய்வித்து திருக்கோயிலில் எழுந்தருளச் செய்தனர். இப்பெருமானே தற்பொழுது நாம் தரிசித்து மகிழும் வரதராஜப் பெருமான் ஆவார்.

திருக்குள நீருக்கு அடியில் அமைந்துள்ள மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ஆதி மூர்த்தி அத்தி வரதர், நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்பட்டு திருக்கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் எழுந்தருளுவார். பத்து நாட்கள் பெரு மகிழ்வுடன் அனைவருக்கும் திவ்ய தரிசனம் அளித்துப் பின் மீண்டும் தீர்த்த மண்டபம் புகுந்து அருளுவார்.

கடந்த முறை அத்தி வரதப் பெருமான் தரிசனம் அளித்தது 1979 ஆம் ஆண்டில். அடுத்த முறை தரிசனம் தர இருப்பது 2019 ஆம் ஆண்டில். ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும் பாடிப் பரவிய அத்தி வரதரை கட்டாயம் தரிசித்துப் பிறவிப் பயன் பெறுவோம்.

கருத்துகள் இல்லை: