சனி, 7 செப்டம்பர், 2019

ஆவணி அவிட்டம்

அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம் பூணூல்

சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக

இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல்

உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள்

கூறுகின்றன.

உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல்

போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல்

சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை

அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்

கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய

அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின்

மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய

நோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல்

போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று

சொல்லுகிறோம்.

உப நயனம் என்ற இரண்டு சொற்களின் அர்த்தம் காயத்ரீ மந்திரத்தைக்

கற்றுக் கொள்வதற்கு குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல் என்று பொருள்.

இந்த வேதம் படிப்பதற்கு காலங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. தக்ஷிணாயனம்

என்று சொல்லக்கூடிய ஆறு மாதங்கள், வேதம் சொல்லக் கூடிய காலங்கள்.

உத்ராயணத்தில் அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கு

சம்ஸ்க்ருதத்தையும், உப அங்கங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்

தெரிந்துகொள்ளவேண்டும். தை,மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இந்த

ஆறு மாதங்களும் உத்தராயணம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,

மார்கழி இந்த ஆறுமாதங்கள் தக்ஷிணாயனம். ஆவணி மாதத்தில் அவிட்ட

நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். இதையே எல்லோரும்

பொதுவாக ஆவணி அவிட்டம் என்பார்கள். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு

ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில்

ச்ரவண நட்சத்திரத்தன்று ஒரு தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள்

ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.

சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் எடுத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு

வேதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மாறி வந்தாலும் ருக் வேதம்தான்

முதன்மையாக இருப்பதினால் அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும்

உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். இந்த உபாகர்மா அன்று

தக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து உத்தராயண

ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்

தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில்

தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட

உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை

ஆரம்பம் செய்ய வேண்டும்.

இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை

நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரீ ஜபம் செய்ய

வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து

முடிக்காததற்காகத்தான் பரிகாரமாக "காமோகார்ஷீத்" ஜபம் சொல்லப்பட்டு

இருக்கிறது. ஆனால் எப்படியோ ஒரு அறியாமை இந்த விஷயத்தில் புகுந்து

விட்டது. 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று

ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.

அதேபோல் பலரும் வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை

மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும்

அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்

கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வது

எதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே

முக்கியம். பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை. பூணூலை மாற்றிக்

கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும்.

ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை

ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது

போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம்

வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம்

ஸ்திரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து

இருக்கிறார்கள். பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான்

காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு

இருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம்,

காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி

இருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ

மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம்

இருக்கின்றன. இந்த ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரீ

ஜபத்தை அதிக அளவில் செய்தால்தான் சித்திக்கும் என்றும், மற்ற ஜபங்கள் பலன்

அளிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீ மந்திரம் ஒன்றுதான்

வேதத்திலிருந்து வந்தது. மற்ற எல்லா மந்திரங்களும் அதிகமாக

புராணத்திலிருந்துதான் வந்தவை. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை

ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப்பட்டு

இருக்கிறது. ஆனால் காயத்ரீ மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன்

மனத்தூய்மைதான். மனோபலம்தான். மனோபலத்தையும், மனத் தூய்மையும்

வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.

இன்றைக்கு மனோபலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே

காயத்ரீ அனுஷ்டாணம் குறைந்து இருப்பதுதான்.

சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால்

தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள்

செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே

வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து
விடுகிறது.

கருத்துகள் இல்லை: