சனி, 7 செப்டம்பர், 2019

18. அசுரப்புரோகிதர்களைக் காத்தல்!

பிரகலாதனின் உபதேசங்களைக் கேட்டதும் அசுரகுமாரர்கள் மிகவும் யோசித்துவிட்டு, இரணியனின் கட்டாயத்துக்குப் பயந்து, பிரகலாதன் சொன்னவற்றையெல்லாம் அந்த அசுரேஸ்வரனிடம் கூறிவிட்டார்கள். அதனால் இரணியன் அதிகக் கோபமும் அகங்காரமும் கொண்டு தன் சமையற்காரனைக் கூப்பிட்டு, பரிசாரகர்களே! மந்தபுத்தி படைத்தவன் தான் என் குமாரன் பிரகலாதன் அவன் கெட்டதுமல்லாமல், மற்றவருக்கும் துன்மார்க்கமான உபதேசங்களைச் சொல்லி, அவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் பிரகலாதனைத் தாமதமின்றி அழித்தொழிக்க வேண்டும். அவனறியாத வண்ணம் அவனுடைய ஆகாரங்களிலெல்லாம் ஆலகாலம் என்ற கொடிய விஷத்தைக் கலந்து அவனுக்குக் கொடுங்கள். இந்தக் காரியத்தில் சந்தேகம் வேண்டாம்! என்று கட்டளையிட்டான். பரிசாரகர்களும் அப்படியே விஷங்கலந்த அன்னத்தை பிரகலாதனுக்கு கொடுத்தார்கள். அதையறிந்த பிரகலாதன், தன் மனதில் யாதொரு மாறுபாடும் இல்லாமல், அனந்தன் என்ற திவ்யநாமதே யத்தினால் அந்த அன்னங்களையெல்லாம் வாங்கி மகிழ்ச்சியுடன் அமுது செய்தான். ஸ்ரீஅனந்தனின் நாமத்தை உச்சரணை செய்த பெருமையால் அன்னத்தில் கலந்துள்ள விஷமெல்லாம் தன் வீரியத்தை இழந்து பிரகலாதனின் ரத்தத்திலேயே ஜீரணமாகிவிட்டது. அந்த மகாவிஷம் பிரகலாதனுக்கு ஜீரணமானதைப் பார்த்ததும் சமையற்காரர்கள் மகாபயம் பிடித்தவர்களாய் இரணியனிடம் ஓடி நடந்தவற்றைக் கூறினார்கள். அதனால் இரணியன் இன்னும் கோபங்கொண்டு, புரோகிதர்களான சண்டாமர்க்கர்களைக் கூப்பிட்டு, புரோகிதர்களே, விரைவில் அந்த துன்மார்க்கப்பையலைக் கட்டியிழுத்துச் சென்று உங்கள் மந்திர பலத்தால் பயங்கரமான கிருத்தியை உண்டாக்கி, அவனை அழித்து விடுங்கள் என்று கட்டளையிட்டான். புரோகிதர்களான பிராமணர்கள் அசுரேஸ்வரனின் ஆக்ஞையை ஏற்று பிரகலாதனை அணுகினார்கள். வணக்கமாக நின்று கொண்டிருக்கும் பிரகலாதனைப் பார்த்து, சிறுவனே! திரிலோக விக்கியாததமான பிரமகுலத்தில் உதித்து, இரணியனின் மகனான உனக்கு எந்தத் தேவதைகளால் என்ன ஆகவேண்டும்? விஷ்ணுவான அந்த அனந்தனாலே தான் உனக்கு என்ன பயன்? உன் பிதாவான இரணியகசிபோ சகல உலகங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் நீயும் அப்படியே அதிபதியாக இருக்கலாம். ஆகையால் சத்துருபட்ச ஸ்தோத்திரத்தை விட்டுவிடுவாயாக: சகல உலகங்களுக்கும் உன் தந்தையே பூஜிக்கத்தக்கவராகவும் பரமகுருவாகவும் இருக்கிறார். ஆகையால் இப்போது நீ அவரது கட்டளையை ஏற்று நடப்பதே நியாயம்! என்று புத்திமதி கூறினார்கள்.

மகாத்மாக்களே! நீங்கள் சொல்வது மெய்தான். மூன்று உலகங்களிலும் பிரமபுத்திரனான மரீசியின் வமிசம் மேலானது தான். என் தந்தை மேன்மையானவர், தேஜோ பல பராக்கிரமங்களையுடையவர் என்பதும் உண்மைதான். அவரே பரமகுரு என்பதும் நியாயமே! அத்தகைய என் தந்தைக்கு நான் சிறிதாவது அபராதம் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, அனந்தனாலே பயன் என்ன என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த வசனம் ஒன்றுதான் பொருள் அற்றது! என்றான் பிரகலாதன். பிறகு மரியாதைக்காக ஒன்றும் சொல்லாமல், புன்னகையுடன் பிரகலாதன் அவர்களைப் பார்த்து, புரோகிதர்களே! விஷ்ணுவான அந்த அனந்தனால் என்ன பயன் என்ற உங்களது வாக்கியம் நேர்த்தியாக இருக்கிறது. அனந்தனாலே காரியம் என்னவென்று நீங்கள் கேட்டது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் சொல்லுகிறேனே என்று மனதில் கிலேசங்கொள்ள வேண்டாம். அனந்தனாலே உண்டாகும் பயனை நான் சொல்கிறேன் கேளுங்கள். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்று சொல்லப்படும் நால்வகை புருஷார்த்தங்களும் எவனால் உண்டாகுமோ, அந்த அனந்தனாலே பிரயோசனமென்ன என்று நீங்கள் சொல்வதை நான் எப்படி அங்கீகரிப்பேன்? மரீசி முதலியவர்கள் அனந்தனை ஆராதித்தே, அவனது கிருபையினாலே தாம் விரும்பியதையெல்லாம் பெற்றார்கள். தத்துவ ஞானிகளான பரமாத்மாக்கள் ஞானநிஷ்டையினாலே அந்த பரமாத்மாவை ஆராதித்து, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தார்கள். சம்பத்து ஐசுவரியம், பெருமை, சந்தானபலம் ஆகிய நல்ல காரியத்துக்கும் மோட்சத்துக்கும் ஒன்றாலேயே பெறத்தக்க காரணம் எதுவென்றால் அது ஸ்ரீஹரியினுடைய ஆராதனையேயாகும். இப்படித் தருமார்த்த காம மோட்சங்கள் எவனிடமிருந்து பெறப்படுமோ, அப்படிப்பட்ட அனந்தனாலே என்ன பயன் என்று நீங்கள் கேட்டீர்கள்? பிராமணர்களே! இதுவென்ன நியாயம்? மேலும் நான் பல வார்த்தைகளைச் சொல்லி பயன் என்ன? நீங்களோ எனது ஆசிரியர்கள். ஆகையால் சந்தேகமின்றி நல்லதாயினும் பொல்லாததாயினும் என்னிடம் சொல்லுங்கள். இதனால் சிறப்பிராது அற்ப விவேகம் தான் இருக்கும். இனி என்னுடைய முடிவான சித்தாந்தத்தைக் கூறுகிறேன். கர்த்தாவும், வளர்ப்பவனும், சங்கரிப்பவனும் உலகநாதனும் எல்லோருடைய இதயத்திலிருப்பவனும், யாவற்றையும் அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படுபவனும் அந்த ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல் வேறு ஒருவனுமல்ல; பாலியனான நான் இப்படிச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்தருள வேண்டும்! என்று பிரகலாதன் கூறினான்.

பாலகனே! இனிமேல் நீ இப்படிச் சத்துருபக்ஷ ஸ்தோத்திரமான வார்த்தைகளைச் சொல்லமாட்டாய் என்று எண்ணித்தான், நெருப்பின் மத்தியிலே தகிக்கப்பட்டிருந்த உன்னை வெளியே இழுக்கச் செய்தோம். மூடனாகையால் அதையே நீ மறுபடியும் பேசுகிறாய். இனியும் உன் பிடிவாத்தை விடாமல் இருப்பாயானால், கிருத்தியை உண்டாக்கி ஒரு கணத்தில் உன்னை நாசமாக்குவோம்! என்றார்கள் புரோகிதர்கள். பிராமணர்களே! ஒருவனால் ஒருவன் ரட்சிக்கப்படுவதுமில்லை அழிக்கப்படுவதுமில்லை. அவனவன் தனது சதாகாரத்தினாலேயே தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். நற்செயல்களால், சகல பயன்களும் நற்கதியும் உண்டாகின்றன. ஆகையால் எப்போதும் நல்லவற்றையே செய்யவேண்டும்! என்றான் பிரகலாதன். அசுரப் புரோகிதர்கள் கோபம் அடைந்து மந்திரங்களை உச்சாடனம் செய்து, மிகவும் பயங்கர முகத்துடன் தீச்சுவாலை வீசும்படியான ஒரு கிருத்தியை உண்டாக்கி அதைப் பிரகலாதன் மீது ஏவினார்கள். அது பூமிநடுங்க தன் பாதங்களை எடுத்து வைத்து மிகவும் கோபத்துடன் தனது சூலத்தினாலே, பிரகலாதனின் மார்பைத் தாக்கியது. அந்தச் சூலம் பிரகலாதனின் மார்பிலே பட்டவுடனேயே சடசடவென ஒடிந்து தரையில் விழுந்து பொடிப்பொடியாயிற்று! பகவானும் ஜகதீஸ்வரனுமான ஸ்ரீஹரி எங்கே பிரியாமல் இருப்பானோ, அங்கே வஜ்ராயுதமானாலும் பொடியாய்ப் போகும் என்றால் சூலத்தின் கதியை பற்றிச் சொல்லவா வேண்டும்? இவ்விதமாக அந்த கிருத்தியையினால் ஒன்றும் செய்யமுடியாமற் போகவே, அது தன்னைக் குற்றமில்லாத இடத்திற்கு ஏவிய புரோகிதர்கள் மீதே திரும்பி விழுந்து அவர்களைத் தகிக்கத் துவங்கியது. அதனால் தவிக்கிற ஆசிரியர்களைக் கண்டதும் பிரகலாதன் மிகவும் பரிவு கொண்டு அவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணா! ஸ்ரீஅனந்தா! இவர்களைக் காப்பாயாக! என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் ஓடிச்சென்று, சுவாமியைத் துதிக்கலானான்.

ஓ சர்வ வியாபகனே! ஜகத்ரூபனே! ஜகத்கர்த்தாவே! ஜனார்த்தனனே! கடினமான மந்திர அக்னியால் தகிக்கப்படும் இந்தப் பூசுரர்களைக் காப்பாயாக. சர்வ பூதங்களிடத்திலும் ஜகத் குருவான ஸ்ரீவிஷ்ணுவே வியாபித்திருக்கிறார் என்பது சத்தியமானால் இந்தப் புரோகிதர்கள் பிழைப்பார்களாக. ஸ்ரீவிஷ்ணு யாவரிடத்திலும் பிரியமாய் இருப்பவன் என்று நான் நினைத்து, சத்துரு பக்ஷத்திலும் துவேஷமில்லாமல் நான் இருப்பேனேயானால், இந்தப் பிராமணர்கள் பிழைக்கவேண்டும். என்னைச் சங்கரிக்க வந்த க்ஷத்திரிய அசுரர்களிடமும் எனக்கு விஷம் இட்ட சமையற்காரர்களிடமும், அக்கினியை மூட்டிய தானவர்களிடமும் தந்தங்களாலே என்னைப் பிடித்துப் பிடித்துக் குத்திய திக்கு கஜங்களிடத்திலும்; விஷங்கக்கி என்னைக் கடித்த பாம்புகளிடமும் என் சிநேகிதர்களிடமும் நான் சமமான புத்தியுடையவனாக இருந்து, எங்கும் ஒரு தீங்கும் நினைக்காமல் இருந்தேன் என்றால் அந்தச் சத்தியத்தினாலேயே இந்த அசுரப்புரோகிதர்கள் பிழைத்து சுகமாக இருக்கவேண்டும்! என்று பிரகலாதன் பிரார்த்தித்தான். அதனால் அப்புரோகிதர்களின் வேதனை ஒழிந்தது. அவர்கள் மகிழ்ச்சியுடன், பிரகலாதாழ்வானைப் பார்த்து, குழந்தாய்! நீ தீர்க்காயுளுடன் எதிரற்ற வீரிய பலபராக்கிரமங்களும், புத்திர பவுத்திர தனாதி ஐசுவரியங்களும் பெற்றுச் சுகமாக இருப்பாயாக! என்று ஆசிர்வதித்துவிட்டு, இரணியனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை: