சனி, 7 செப்டம்பர், 2019

5. வருணாசிரமங்கள்

தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் முதலியவற்றின் படைப்புக் கிரமங்களைப் பற்றிப் பராசர முனிவர் கூறியதும் மைத்ரேய முனிவர் அவரை நோக்கி, மகரிஷியே! மனிதர்கள் படைக்கப்பட்டதைப் பற்றி நீங்கள் சுருக்கமாகச் சொன்னீர்கள். இனி அவர்களுடைய குணங்களைப் பற்றியும், வருணாசிரம விவரங்களை பற்றியும், ஆசார வேறுபாடுகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்! என்றார். அதற்குப் பராசரர் பின்வருமாறு கூறலானார்: பூர்வத்தில் பிரமன் மனிதர்களைப் படைக்க வேண்டும் என்று சிந்தித்தபோது, அவரது முகத்திலிருந்து சத்வகுணமுடையவர்களான பிராமணர்கள் தோன்றினார்கள். அவரது மார்பிலிருந்து ராஜசகுணமுடைய க்ஷத்திரியர்கள் தோன்றினார்கள். தொடைகளிலிருந்து ராஜசகுணமும் தாமஸகுணமும் கலந்தவைசியர்கள் தோன்றினார்கள். பாதங்களிலிருந்து தமோ குணமுடைய சூத்திரர்கள் தோன்றினார்கள். இவ்விதம் பிரமதேவனின் முகம், மார்பு, தொடைகள், பாதங்கள் என்னும் அவயங்களிலிருந்து பிறந்த பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களை யாகங்களுக்குரிய செயல்களை செய்யும்படி அவர் நியமித்தார். மைத்ரேயரே! இந்த நால்வகையான மக்களும் யாகங்களுக்கு முக்கியமானவர்கள். யாகங்களால் தேவதைகள் திருப்தியடைந்து, காலாகாலத்தில் மழைபொழிந்து மனிதரைத் திருப்தியுறச் செய்வார்கள். ஆகவே உயர்வுக்கு ஏதுக்களான யாகங்கள் மக்களால் முக்கியமாகச் செய்யத் தக்கவையாகும். வேத சாஸ்திரத்திற்கு விரோதமான ஒழுங்கீனங்களை விட்டு சன்மார்க்கத்தில் நடக்கிற சத்புருஷர்கள் சொர்க்கசுகத்தையும் மோக்ஷõனந்தத்தையும் தம் மனிதப்பிறவியிலேயே அடைவார்கள். இவ்விதமாக இரண்யகர்ப்பனால் படைக்கப்பட்ட நான்கு வர்ண மக்களும், சாஸ்திர விசுவாசத்தினால் சதா சாரமும் விநயமும் அடைந்து, நிர்மலமான இருதயமுடையவராய் சகலவிதமான சத்கருமங்களையும் செய்துகொண்டு காமக்குரோத லோபம் இல்லாமல், நினைத்த இடத்தில் நினைத்தபடி வசித்து, நிர்மலமான இதயத்தில் இறைவனைத் தியானித்துத் தத்துவ ஞானம் பெற்று தெளிந்தவர்களாய் சற்கதியடைந்தார்கள்.

இதுபோல் கிருதயுகத்திலிருந்து திரேதாயுகத்தின் இடைக்காலம் வரை நடந்தது. பிறகு, நாராயணாம்சம் என்று சொல்லப்பட்ட காலவசத்தினாலே, மனிதருடைய சத்துவ புத்தியும் தைரியமும் ஆயுளும் குறையும்படி நேரிட்டது. அதனால் மோகமும் லோபமும் மேலிட்டன. அதருமம் மிகுதியாயிற்று அதனால் மோட்சமார்க்கத்திற்கு விரோதமான ராகத்துவேஷங்கள் பிரபலமாயின. ஆகையால் இயல்பாகவே உண்டாகத்தக்க ஞானமும், தொந்தங்களை வெல்லத்தக்க சக்தியும் மக்களிடம் குறைந்தன முன்பெல்லாம் பெண்கள் முதலியவை இல்லாமலேயே ஆனந்தம் உண்டாவதுண்டு. யோகப் பயிற்சியினால் சிரசிலுள்ள சந்திர மண்டலத்தினின்றும் ஒழுகும் அமிருதத்தினாலே பசியுங்கூட இல்லாமல் இருந்தது. ஒருமுறை மழை பெய்தாலே பயிர்கள் செழுமையாக வளர்ந்தன. நினைத்தபோதே மரங்கள் பலிதமாயின. நினைத்தவை நினைத்தவாறே கைகூடின பரத்வாச முனிவருக்கு நடந்தது. போலவே, கற்பக விருட்சங்கள் வந்து வேண்டியதைக் கொடுத்தன. வேண்டும்போதெல்லாம் மழை பெய்தது. உழுது வருந்தாமல் பூமி விளைந்தது இவ்விதமான எட்டுச் சித்திகளும் நாளடைவில் க்ஷீணித்து பாதகச் செயல்கள் அதிகமாயின.

அதனால் பூமியில் வாழும் மக்கள், ராகத்துவேஷ. லோப, மோகாதி தொந்த துக்கங்களினால் பீடிக்கப்பட்டு, ஒருவரையொருவர் விசுவாசியாமல் மலைப் பிரதேசங்களிலும், தண்ணீர் சூழ்ந்த நிலப்பகுதியிலும் வசித்தார்கள். அங்கு கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள் முதலியவற்றை அமைத்தார்கள். நகரங்களையும் வீதிகளையும் வீடுகளையும் கட்டிக்கொண்டார்கள். மழை, காற்று, வெய்யில் இவற்றின் உபத்திரவங்களை நீக்கிக் கொள்வதற்கான உபாயங்களை உண்டாக்கிக் கொண்டார்கள். பிழைப்பிற்காகப் பயிர்த்தொழில்கள், ஆடு மாடுகள் வளர்த்தல் வாணிபம் முதலியவற்றைச் செய்தார்கள். பயிர்த்தொழிலால் விளைந்த சம்பா முதலிய நெல், யவம், கோதுமை, சோளம், கேழ்வரகு, தினை, உளுந்து, பயிறு சிறு கடலை, துவரை, மொச்சை, கொள்ளு, கடலை, சணல் ஆகிய தற்காலிக பயன்களை அனுபவித்தார்கள். இந்தப் பதினேழு வகையான தானியங்களும் கிராமியங்கள் என்று வழங்கப்படும். நெல், யவம், உளுந்து, கோதுமை, சிறுதானியம் என்ற பிரியங்கு, கொள்ளு, சாமை; செந்நெல், காட்டு எள், கெவீது, மூங்கிலரிசி, மற்கடகம் என்ற பதினான்கு விதமான தானியங்களும் கிராமிய ஆரணியங்கள் என்று பெயர் பெற்று யாகங்களுக்குப் பயன்பட்டன. இவை யக்கியங்களுக்கும் பிரஜா அபிவிருத்திக்கும் காரணமாயின. எனவே, அவற்றைக் கொண்டு, பராபரவிவேகமுள்ள ஞானிகள் நாள்தோறும் பாவங்களைப் போக்கதக்க பஞ்ச மகா யாக்கியங்களைச் செய்வார்கள். முனிவரே! தினமும் யாகாதி கர்மங்களைச் செய்வதால், புருஷர்கள் சகலபாவ விமுக்தராய்ப் பரம சுகத்தை அடைவார்கள். ஆதிகாலத்தில் எவருடைய மனமானது கால வசத்தால் பாபதூஷிதமாயிற்றே, அவர்கள் யக்கியாதி நற்கருமங்களில் விசுவாசமில்லாமல் பாதங்களை அபிவிருத்தி செய்து; வேதங்களையும் நற்கருமங்களையும் நிந்திக்கலானார்கள். யாகங்களுக்கு இடையூறுகளைச் செய்தார்கள். தேகத்தைப் போஷிப்பதற்கான செயல்களை மட்டுமே செய்தார்கள். லோக விருத்திக்கு விரோதிகளாய், துராத்மாக்களுமாய்; துராசாரமுடையவர்களுமாய்; குடில் புத்தியை உடையவர்களானார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

பிரம; க்ஷத்திரிய: வைசிய; சூத்திராதி (நான்கு) வருணங்களையும் நான்கு ஆசிரமங்களையும் இரண்யகர்ப்பன் நிர்மித்து, வர்ணாசிரமத்திற்கு உரிய மரியாதைகளையும் ஏற்படுத்தி; அவரவரது தாரதம்மானு குணமாகப் புண்ணிய லோகங்களையும் ஏற்படுத்தினார். ஸ்வதர்ம அனுஷ்டான பராயணரான பிராமணர்களுக்குப் பிரஜாபத்திய லோகத்தையும், போரில் புறங்கொடாத க்ஷத்திரியர்களுக்கு; இந்திரலோகத்தையும், ஸ்வதர்ம நிரதரான வைசியருக்கு மருத்துக்களின் லோகத்தையும்; பணிவிடைக்காரரான சூத்திரர்களுக்கு கந்தர்வலோகத்தையும், குரு பணிவிடை செய்வதில் ஊக்கமுடைய பிரம்மச்சாரிகளுக்கு ஊர்த்தரே தஸரான எண்பத் தெண்ணாயிரம் யதீச்சுவர்கள் வாசம் செய்யும் திவ்விய லோகத்தையும்? வானப்பிரஸ்தருக்கு சப்தரிஷி லோகத்தையும், கிரகஸ்தருக்குப் பிரஜாபத்திய லோகத்தையும்; சந்நியாசிகளுக்குப் பிரமலோகத்தையும் தோற்றுவிக்க சங்கல்பம் செய்தார். இவையாவும் கர்ம மார்க்கத்தினால் உண்டான புண்ணிய லோகங்களாகும். இனி ஞானியருக்குக் கிடைக்கும் உலகங்களைச் சொல்கிறேன்; கேளுங்கள். ஆத்மத் தியானிகளான யோகீசுரர்களுக்கு அமிர்தஸ்நானம் உண்டாம். (அமிர்த ஸ்நானம் என்பது துருவலோகத்துக்கு மேலே; கங்கை தோன்றும் இடம்.) தினமும் யோகப்பயிற்சிகளைச் செய்தும்; பிரமத் தியானத்தை செய்து கொண்டும் இருக்கிற மகாத்மாக்களுக்கெல்லாம்; நித்திய சூரிகளாலே காணப்பட்ட பரமபதம் உண்டாகும். சந்திர சூரியாதி கிரகங்களும் காலக்கிரமத்தில் அதனதன் இடம் விட்டு; பலமுறைகள் நீங்குகின்றன. துவாதசாக்ஷர மந்திரத்தை ஜெபிக்கிற மகான்மாக்கள் என்றைக்கும் திரும்பி வராமல்; பரமனாந்தத்தை அனுபவிக்கிறார்கள். இனிப் பாபஞ்செய்கிற கெட்டவர்கள் அடையத்தக்க லோகத்தை அறிவிக்கிறேன். தாமிஸ்வரம்; அந்தாமிஸ்ரம்; ரௌரவம்; மகா ரௌரவம், அசிபத்ரவனம்; காலசூத்திரம்; அவீசிமத்து என்ற மகாகொடிய நரகங்கள் எல்லாம்; வேதங்களை நிந்தித்து; யக்கிய விக்னஞ்செய்கிற பாபாத்துமாக்களுக்கு உண்டாகும்.

கருத்துகள் இல்லை: