சனி, 7 செப்டம்பர், 2019

11. துருவன் கதை

பராசரர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேய முனிவரே! சுவாயம்புவ மநுவுக்குப் பிரியவிரதன் உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களிலே உத்தானபாதனுக்கு சுருசி, சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தார்கள். அப்பத்தினிகளில் சுருசி என்பவள் தான் உத்தனபாதனுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு உத்தமன் என்று வழங்கப்பட்ட மகன் ஒருவன் இருந்தான். அவன் தகப்பனுக்கு மிகவும் பிரிய மகனாக இருந்தான். சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு பிரியமில்லை. அந்தப் பெண்ணுக்குத் துருவன் என்ற மகன் பிறந்தான். அவன் நற்குண நற்செய்கைகளைக் கொண்டவன். ஒருநாள் சின்னஞ்சிறுவனான துருவன் தன் தந்தையான உத்தானபாத மன்னனின் அந்தப்புரத்திற்குச் சென்றான். அங்கே தனது தகப்பனது மடியில் தன் சகோதரன் உத்தமன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். தானும் அவனைப் போல, தன் தகப்பன் மடியில் உட்கார வேண்டும் என்று துருவன் ஆசைப்பட்டு, தந்தையின் அருகே சென்றான். அப்போது சுருதி தன்னருகில் இருந்ததால், துருவனின் விருப்பத்தை அரசன் ஏற்கவில்லை. இவ்விதமாகத் தகப்பன் மடியின் மீது உட்கார வந்த சக்களத்தி மகனான துருவனைப் பார்த்து, சுருசி ஏளனமாகச் சிரித்து, பாலனே! நீ ஏன் வீண் முயற்சி செய்கிறாய்! என் வயிற்றில் பிறக்காமல் வேறொருத்தியின் வயிற்றில் பிறந்த நீ, இத்தகைய உயர்ந்த சிம்மாசனத்தில் இருக்க நினைப்பதா? விவேகமல்லாத நீ இந்த அரசனின் மகன் தான் என்றாலும், ராஜ்யலட்சுமி வாசம் புரியும் இந்தச் சிங்காசனத்துக்கு நீ தகுந்தவனல்ல. என் மகனே அதற்குத் தகுதியுடையவன், வீணாக ஏன் வருந்த வேண்டும். பாக்கியமில்லாத சுநீதி வயிற்றில் நீ பிறந்ததை நினைக்க வேண்டாமா? இங்கிருந்து போ! என்று இழிவாகக் கூறினாள். அவள் பேசியதைக் கேட்ட துருவன் கோபங்கொண்டு, மனக்கலக்கமடைந்து, சரேலென்று தன் தாய் வீட்டுக்குச் சென்றான்.

கோபமாகக் கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க வந்த துருவனை அவனுடைய அன்னை சுநீதி தனது மடியில் உட்கார வைத்துக்கொண்டு, மகனே! உன் கோபத்துக்குக் காரணம் என்ன? உன்னை யார் சமாதானஞ் செய்வார்கள்? உன் தந்தையை யாராவது அவமதித்தார்களா? என்று கேட்டாள். அதற்குத் துருவன், தன் மாற்றாந்தாயான சுருசி கூறியவற்றையெல்லாம் தன் தாயிடம் சொன்னான். அதைக்கேட்ட சுநீதி, மகனே! சுருசி சொன்னவைகள் யாவும் உண்மைதான். நீ சொற்ப பாக்கியமுடையவன். ஏனென்றால் மிகவும் புண்ணியமுள்ள குழந்தை சத்துருக்களால் இப்படி தூற்றப்படுமோ? இத்தனையும் உன்னுடைய பூர்வ ஜன்ம நற்பலனை யாராவது அபகரிக்க முடியுமா? செய்யாத கர்ம பலனைக் கொடுக்கத்தான் யாரால் முடியும்? பாக்கியவான்களுக்கே, மகாராஜயோக்கியமான சிம்மாசனமும், ரதகஜதுரகபதாதிகள் போன்ற நால்வகை சேனைகளும் சுகபோகங்களும் கிடைக்கும். சுருசியானவள் பாக்கியசாலி! புருஷன் தன்னிடத்திலேயே பிரியமாக இருப்பதற்குப் பாக்கியஞ் செய்திருக்கிறாள். நானோ அவருக்கு மனைவி என்ற பெயரை மட்டுமே உடையவளாய் துக்கப்படுகிறேன். உத்தமன் புண்ணியம் செய்தவன். அதனால் தான் அவன் சுருசியின் மகனாகப் பிறந்தான். சொற்ப பாக்கியமுடைய நீ என் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்தாய் மகனே! இதற்கு நாம் என்ன செய்யலாம்? எவனுக்கு எந்த மட்டும் அதிர்ஷ்டமோ அந்த மட்டிலே அவன் மகிழ்ந்திருக்க வேண்டும். இதுதான் புத்திமான்களின் செயல். ஆகையால் ஐசுவரியத்தை நினைத்துத் துக்கப்படாமல் இரு! சுருசி சொன்னவைகளைக் கேட்டு உன் மனம் பொறுக்காவிட்டால் உனக்கும் அத்தகைய மேன்மையுண்டாவதற்குச் சகல முயற்சிகளையும் புண்ணியத்தையும் செய்ய எத்தனஞ்செய். தர்மாத்மாவாய், நல்ல நடத்தையுடையவனாய், சர்வபூத தயாபரனாகவும், சர்வஜனமித்திரனாகவும் இருந்து கொண்டு நல்லவற்றைச் செய்து வந்தால், தண்ணீர் பள்ளத்தை நாடிச்செல்வது போல், சம்பத்துக்களும் குணவானான மனிதனிடத்தில் தானாகவே வந்து சேர்கின்றன என்று சொன்னாள். அதைக்கேட்ட துருவன், தாயே! நீ சொன்ன வார்த்தைகள் சுருசி சொன்ன கொடிய நஞ்சினால் பிளந்த என் இதயத்தில் பதியவில்லை. ஐசுவரிய கர்வத்தால் அவளால் நிராகரிக்கப்பட்ட நான், மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய எத்தனஞ் செய்கிறேன். பார்! புண்ணியசாலி என்ற சுருசியின் கர்ப்பத்தில் பிறவாமல், உன்னுடைய ரத்தத்திலே நான் பிறந்தவனானலும், என்னுடைய ஆற்றலைப் பார் என் அண்ணன் உத்தமனே என் தந்தையின் ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். நான் என்னுடைய சுயசக்தியினாலே அதைவிட உயர்ந்த பதவியை அடைவேன். ஒருவர் கொடுத்ததைப் பெற்று மகிழாமல் நானே முயன்று, என் தகப்பனுக்கும் அசாத்தியமான மிகவும் உயர்ந்த பதவியை எனது தவத்தினால் சம்பாதிக்கிறேன்! என்று சொல்லி தாயாரின் அனுமதியைப் பெற்று அங்கிருந்து அதிவிரைவாகப் புறப்பட்டு தலைநகரைக் கடந்து, அருகிலிருந்த ஒரு காட்டுக்குள் சென்றான்.

அங்கே, கறுப்பு மான் தோல்களைத் தரித்து குசப்புல்லை ஆசனமாகக் கொண்டு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட துருவன் வணங்கி, முனிவர்களே! நான் மன்னன் உத்தானபாதனுக்குச் சுநீதி வயிற்றில் பிறந்த மகன். துருவன் என்பது என் பெயர். நான் மிகவும் மனக்கவலையோடு தங்களது திவ்யசன்னதிக்கு வந்தேன் என்றான். ராஜகுமாரனே! நீயோ நாலைந்து வயதுள்ளவனாகவே இருக்கிறாய். இவ்வளவு சிறியவனான உனக்கும் மனக்கிலேசம் உண்டாகக் காரணம் என்ன? உன் தந்தை வாழ்ந்து கொண்டிருப்பதால் உன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பாரமில்லையே! உன் ஆசைக்கு உரியபொருள் அகப்படவில்லையே என்று மன்னன் மகனான நீ வருந்த வேண்டியுமிராது! உன் உடம்பில் எந்தவிதமான நோயும் இருப்பதாக உன் தோற்றத்திலேயே தெரியவில்லை! அப்படியிருக்க உன் மன வெறுப்புக்குக் காரணம் என்ன? என்று சப்தரிஷிகள் கேட்டார்கள். என் தாய்க்குச் சக்களத்தியாகிய சுருதி சொன்ன வார்த்தைகளால் எனக்கு வெறுப்புண்டாயிற்று. அந்த அவமானத்தாங்காமல் இங்கு வந்தேன் என்றான். துருவன் அதைக் கேட்டதும் ஏழு முனிவர்களும் ஒருவருடன் ஒருவர் கலந்து இந்த சிறுவன் மாற்றாந்தாயின் பேச்சைப் பொறுக்கமாட்டாமல் இங்குவந்து விட்டான். இவனது ராஜகளையைப் பார்த்தீர்களா? இவ்வளவு சிறிய பையனுக்கும் அவமானம் பொறுக்க முடியவில்லையே, என்று பேசிக்கொண்டு, துருவனை நோக்கி, ராஜகுமாரனே, நீ மனஸ்தாபங்கொண்டு மனம் நொந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறாய்! உனக்கு எங்களால் ஆகவேண்டிய உதவி என்ன? என்று கேட்டார்கள். துருவன் அவர்களை நோக்கி, முனிவர்களே! அடியேன்ராஜ்யத்தையோ அல்லது மற்ற பொருள்களையோ விரும்புகிறவன் அல்ல. ஆனால் பூர்வத்தில் ஒருவனாலேயும் அனுபவிக்கப்படாததாய், அபூர்வமானதாய், சகல ஸ்தானங்களுக்கும் உன்னதமானயிருக்கிற ஸ்தானத்தை நான் அடைய விரும்புகிறேன். இந்த மனோரதம் நிறைவேறுவதற்காக உபாயத்தை எனக்கு கூறியருள வேண்டும் என்றான். அதற்குச் சப்தரிஷிகள் ஒவ்வொருவராகப் பின்வருமாறு கூறினார்கள்.

அரசகுமாரனே! ஸ்ரீகோவிந்தனுடைய சரணாரவிந்தங்களையடைந்து ஆராதனை செய்யாதவர்களுக்கு, சர்வ உத்தமமான பதவி கிடைக்காது. ஆகையால் நீ பக்தியுடன், அச்சுதனை ஆராதிப்பாயாக! என்றார் மரீசி முனிவர். ராஜகுமாரனே! உலகநாயகனாக ஜனார்த்தனன் யாரைக் கடாட்சிக்கிறானோ அவனே, அக்ஷயமான திவ்விய ஸ்தானத்தை உடையவனாவான். என் வாக்கு சத்திய வாக்கென்று நினை! என்றார். அத்திரி முனிவர் ஆங்கிரசர், சராசராத்மகமான சகல பிரபஞ்சமும் எவனுடைய குட்சியில் இருக்கிறதோ, அந்தக் கோவிந்தனுடைய சரண கமலங்களை அர்ச்சனை செய்! சர்வ உன்னதப் பதவியை அடைவாய்! என்றார். பிறகு, புலஹ முனிவர், எவன் பரப்பிரமமும், பரமப்பிராப்பியமாகவும் சர்வ வியாபகனுமாக இருக்கிறானோ அந்த ஸ்ரீஹரியை ஆராதனம் செய்வதால், அத்தியந்தம் அசாத்தியமான மோட்சத்தையும் அடையலாம் என்றால் இதர ஸ்தானங்களை அடைவதற்கு என்ன சந்தேகம்? என்றார். அப்புறம் கிருதுமாமுனிவர் எவன் யக்ஞங்களாலே ஆராதிக்கப்படும் புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும், யக்ஞங்களுக்கு அதிபதியாகவும் இருக்கும் மகா புருஷனே, அந்த ஜனார்த்தனன் திருவுள்ளங்கொண்டானானால் அடையத் தகாத ஸ்தானமும் உண்டோ? என்றார். அதன் பிறகு, புலஸ்திய முனிவர், பூர்வத்திலே இந்திரன் ஜகத்பதியான எவனை ஆராதித்து சர்வ உன்னதமான இந்திரப்பதவியை அடைந்தானோ. அப்படிப்பட்ட யக்ஞேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவை ஆராதனை செய்! என்றார். பிறகு வசிஷ்ட முனிவர், குழந்தாய், ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதனை செய்வாயாகில் இதுவரையில் இல்லாத நூதனமான ஸ்தானம் ஒன்றை நீ மனத்தால் நினைத்தாலும், அதையும் சித்தமாக அடைவாய், அப்படியிருக்க முன்பே படைக்கப்பட்ட மூன்று உலகங்களுக்கும் உட்பட்ட மேலான ஸ்தானத்தை அடைவதற்குச் சந்தேகம் என்ன? என்று கூறினார். மாதவர்களே! தாங்கள் ஆராதக்க வேண்டிய அச்சுதனை அடியேனுக்குத் தெரியும்படி செய்தீர்கள், அவ்வெம்பெருமான் கிருபை செய்யும்படி ஜெபிக்க வேண்டிய மந்திரத்தையும் ஆராதனை செய்யும் முறைகளையும் அடியேனுக்கு அறிவிக்க வேண்டும் என்று துருவன் கேட்டான்.

ஓ ராஜபுத்திரனே! ஸ்ரீவிஷ்ணுவிடம் பக்தி செய்ய விரும்பும் மனிதன் முதலாவதாக விஷய அபிலாøக்ஷகளை நீத்து விட்டு மனதை நிர்மலமாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மனதை முகுந்தனுடைய சரணாரவிந்தங்களிலே தன்னுள்ளே நிச்சலமாகச் சேர்ந்து, வேறு நினைவில்லாமல் அந்தத் திருவடிகளையே பாவித்துக்கொண்டு, தூயவனாய், வியஷ்டி சமஷ்டி ரூபமாய் பிரகிருதியும் புருஷனும் சரீரமாகவுமுள்ள சுத்த ஞானமயனான வாசுதேவனுக்கு தெண்டன் சமர்ப்பிக்கிறேன் என்ற பொருளையுடைய மகாமந்திரத்தை ஜெபிக்க வேண்டும். உனது பிதாமகனான சுயாம்புவமநுவானவர் இந்த மகாமந்திரத்தினாலே ஜனார்த்தனனை உபாசித்தார். அதனால் பகவான் திருவுள்ளம் உகந்து, அந்த மநுவுக்கு அவர் விரும்பியபடியே திரிலோக துர்லபமான ஐசுவரியத்தைப் பிரசாதித்து அருளினார். நீயும் அப்படியே அந்த மகாமந்திரத்தை ஜெபித்து ஸ்ரீயப்பதியை ஆராதனை செய் என்று மகரிஷிகள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை: