சனி, 7 செப்டம்பர், 2019

19. பிரகலாதனின் பிரார்த்தனை

இரணியன் தன் புரோகிதர்கள் உண்டாக்கிய கிருத்தியை வீணானதைக் கேட்டுத் திகைத்தான். பிறகு அவன் தன் புத்தரனை அழைத்து, பிரகலாதா! உன் பிரபாவம் அதியற்புதமாக இருக்கிறதே! இதற்குக் காரணம் என்ன? இது மந்திரத்தால் உண்டானதா! இயல்பாகவே உள்ளதா? தெரியச் சொல்! என்றான். பிரகலாதன் தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு, ஐயனே! எனக்கு இந்தப் பிரபாவம் மந்திர தந்திரங்களால் உண்டானதல்ல! இயற்கையாகவே உள்ள சுபாவமுல்ல எவனெவன் இதயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு நிலையாகப் பிரகாசிப்பானோ, அவனவனுக்கெல்லாம் இத்தகைய பிரபாவம் உண்டு! யார் ஒருவன் தனக்குக் கேடு நினையாததைப் போலப் பிறருக்கும் கேடு நினைக்காமல் இருப்பானோ அப்படிப்பட்டவனுக்குப் பாவத்தின் காரியமாகிய பாவம் உண்டாவதில்லை. எவன் மனோவாக்குக் காயங்களினால் யாருக்கும் துரோகஞ்செய்யாமல் இருக்கிறேன். இப்படி நல்ல சிந்தையுள்ளவனான எனக்கு ஆத்தியாத் மிகம், ஆதி தெய்வீகம், ஆதி பவுதிகம் என்ற மூலகைத் துக்கமும் எப்படி உண்டாகும்? ஆகையால், விவேகமுள்ளவர்கள் ஸ்ரீஹரியே சர்வாத்துமகனாக இருக்கிறான் என்று நினைத்து, சகல பூதங்களிடமும் சர்வதேச, சர்வ காலங்களிலும் இடைவிடாமல் அன்பு செலுத்த வேண்டும்! என்று பிரகலாதன் சொன்னான். இரணியன் இன்னும் குரோதத்தால் பொங்கி, அங்கிருந்த அசுரகிங்கரர்களைக் கூவியழைத்து இந்த துஷ்டப்பையனான பிரகலாதனை இழுத்துகக் கொண்டு போய் நூறு யோசனை உயரமுள்ள உப்பரிகையின் மேலே இருந்து, கீழே தள்ளுங்கள். அந்த மலையின் மேல் விழுந்து இவனது உடம்பெல்லாம் சின்னாபின்னமடைந்து சிதையட்டும்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் கிங்கரர்களும் பிரகலாதனை இழுத்துப்போய் மிகவும் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள். ஆனால் பிரகலாதன் தனது இதயகமலத்தில் புண்டரிதாஷனான ஸ்ரீமந்நாராயணனையே நினைத்துக் கொண்டிருந்ததால் பூமிதேவி வெளிப்பட்டு சர்வபூத ரட்சகனின் பக்தனான பிரகலாதனை தன் கைகளால் ஏந்திக் கொண்டாள்.
அப்படிக் கீழே விழுந்தும் தனது அங்கத்தில் கிஞ்சித்தும் சேதமில்லாமல் சுகமாய் எழுந்துவந்த தன் மகனைப் பார்த்து, இரணியன் மனம் பொறாமல் மகாமாயவியான சம்பராசுரனைக் கூவி அழைத்து, அசுர உத்தமனே! துன்மார்க்கனான இந்தப் பையனைச் சாகடிக்க நான் எத்தனை உபாயம் செய்தும் இவன் சாகாமலே தப்பிவிடுகிறான்! ஆகையால் உமது மாயா சக்தியினால் இந்தத் துராத்மாவைச் சங்கரிக்க வேண்டும்! என்றான்.

அதற்கு சம்பராசுரன் இணங்கி, அசுரேஸ்வரா! எனது மாயாபலத்தைப் பாரும்! சஹஸ்ரகோடி மாயைகளைச் செய்து இந்த பிரகலாதனை நானே சாகடிக்கிறேன்! என்று சொல்லி விட்டு பிரகலாதன் மீது பலவகையான மாயைகளைப் பிரயோகித்தான். ஆனால் பிரகலாதனோ அந்த அசுரன் மீதும் வெறுப்படையாமல் ஸ்ரீமதுசூதனான விஷ்ணுவையே நினைத்துக் கொண்டிருந்தான். அப்போது ஸ்ரீமந்நாராயணனின் நியமனத்தால் அநேகமாயிரம் ஜ்வாலைகளோடு கூடிய திருவாழி புறப்பட்டு, பிரகலாதனை ரட்சிப்பதற்காக அதிவேகமாக வந்து, சம்பராசுரனின் மாயைகளையெல்லாம் தகித்துச் சாம்பலாக்கியது. பிறகு, இரணியன் இன்னும் பிடிவாதமான குரோதம் கொண்டு சம்சோஷகன் என்ற வாயுவைப் பார்த்து, சீக்கிரமாக இந்தத் துஷ்டனை நாசஞ்செய்வாயாக! என்று கட்டளையிட்டான். அந்த வாயு அசுரனும் அதிகுளிர்ச்சியும் அதிஉஷ்ணமும் கொண்டு, பிரகலாதனின் திருமேனியினுள்ளே பிரவேசித்தான். ஆனால் பிரகலாதன் தன் இருதயத்திலே ஸ்ரீமந்நாராயணனைத் தரித்திருந்தபடியால், அங்கு குடிகொண்டிருக்கும் ஸ்ரீமதுசூதனன் ரட்சகமூர்த்தியாய் எழும்பி, அந்தச் சம்சோஷகனை விழுங்கி ஒரே கணத்தில் நாசஞ்செய்தருளினார். அதைக்கண்ட இரணியன் பிரமித்தான். இதுபோல சம்பரனால் ஏவப்பட்ட மாயைகளும் சம்சோஷக வாயுவும் நாசமடைந்ததையறிந்த பிரகலாதன் மீண்டும், குருகுலத்துக்குச் சென்று அங்கே படித்துக் கொண்டிருந்தான். குருகுலத்தில் அவனுடைய ஆசாரியர், அவனுக்குத் தினந்தினம் சுக்கிர நீதியை உபதேசித்து வந்தார். சிலகாலம் சென்ற பிறகு அவர் தம்மிடம் பிரகலாதன் நீதி சாஸ்திரத்தை கற்றறிந்து விட்டதாக நினைத்து, அவனையும் அழைத்துக் கொண்டு, இரணியனிடம் சென்றார். அவர் இரணியனை நோக்கி, அசுரேந்திரனே! உனது புத்திரன் சுக்கிர நீதியை நன்றாகப் பயின்று சகல விஷயங்களிலும் சமர்த்தனாகி விட்டான்! என்றார். இரணியன் சிறிது மனச்சமாதானமடைந்து பிரகலாதனைப் பார்த்து, மகனே! அரசனானவன், நண்பர்களிடமும் பகைவரிடமும், நடுவரிடத்திலும், விருத்தி, சாமியம், க்ஷயம் என்பவை நேரிடும் சமயங்களிலும் எப்படியிருக்க வேண்டும்? புத்திசொல்லும் மந்திரிகளிடமும் காரியசகாயரான அமாத்தியரிடமும் பாகியர் என்னும் வரிவாங்கிச் சேர்க்கும் அதிகாரிகளிடமும், ஆப்பியந்தார் என்று சொல்லப்படும் அந்தப்புர அதிகாரிகளிடமும், தன்னுடைய குடிமக்களிடமும், தன்னால் ஜெயிக்கப்பட்டுத் தன்னிடம் சேவகம் செய்யும் பகைவரிடமும் மன்னன் என்போன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சந்தி, விக்கிரகம் முதலியவற்றில் எங்கே எதையெதைச் செய்ய வேண்டும்? தனக்குள்ளே இருந்து மர்மங்களை அறிந்து, பிறகு பிறராலே பேதப்படுத்திக் கொண்டு போக உடன்பட்டிருக்கும். தன் ஜனங்கள் விரோதமாகாமல் இருக்க அரசன் என்ன செய்ய வேண்டும்? சைலதுர்க்கம், வனதுர்க்கம், ஜலதுர்க்கம் முதலிய துர்க்கங்களை எப்படி அமைப்பது? அசாத்தியர்களால் வனத்தில் வாசஞ்செய்யும் மிலேச்சர்களை வசப்படுத்தும் உபாயம் யாது? திருடர் முதலிய துஷ்டர்களை நிக்ரஹிக்கும் விதம் என்ன? இவற்றையும் சாமதான பேதாதி உபாயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் நீதி சாஸ்திரத்திலே நீ கற்றிருப்பவைகளையும் சொல்வாயாக உன் மனதில் இருக்கும் கருத்தை நான் அறிய விரும்புகிறேன் என்றான்.

தந்தையே! ஆசாரியர் எனக்குச் சகல சாஸ்திரங்களையும் உபதேசித்தார்; நானும் படித்தேன். ஆயினும் இவையெல்லாம் எனக்கு அர்த்தமற்றதாகவும், அசாரமாகவுமே தோன்றுகின்றன. மித்திராதிகளை வசப்படுத்த, சாம தான பேத தண்டங்களைச் செய்யும்படி நீதி சாஸ்திரத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. ஐயனே கோபிக்க வேண்டாம்! ஜகத்திலே சத்துரு மித்திரர்களை நான் காணவில்லை. ஆகையால் சாமதானாதி உபாயங்கள் வீணானவையே! சாத்தியம் இல்லாதபோது வெறும் சாதனத்தால் பயன் என்ன? சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, ஜகத் ஸ்வரூபமாகவும் ஜகந்நாதனாகவும் கோவிந்தனே எழுந்தருளியிருக்கும்போது, இந்த ஜகத்தில் சத்துரு மித்துரு என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஸ்ரீவிஷ்ணுபகவான் உம்மிடமும் என்னிடமும் மற்றுமுள்ள சகல ஜகத்திலேயும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறாராகையால் சத்துரு மித்திரன் என்ற பேதம் எப்படி உண்டாகும்? இகலோக போகசாதனங்களாய் வீணான சொற்கள் விரிந்து, அவித்தைக்கு உட்பட்டிருக்கும் நீதி சாஸ்திரங்களால் என்ன பயன்? ஐயனே! பந்தங்கள் நீங்கும்படியான பிரமவித்தைப் பயிற்சிக்கே முயற்சி செய்ய வேண்டும். மின்மினிப் பூச்சியைப் பார்த்து அக்கினி என்று பாலகன் பிரமிப்பது போல் சிலர் அஞ்ஞானத்தால் அவித்தையை வித்தையென்று நினைக்கிறார்கள். எது சம்சார பந்தத்துக்குக் காரணமாகாதோ அப்படிப்பட்ட கருமமே கருமமாகும்! எது மோக்ஷத்துக் காரணமாகுமோ அப்படிப்பட்ட வித்தையே வித்தையாகும். மற்ற கருமங்கள் யாவுமே வீணான ஆயாசத்தை யுண்டாக்குமேயொழிய வேறாகாது. ஆகையால், நீதி சாஸ்திரத்தால் வரும் ராஜ்யாதி பயன்களைத் துச்சமாக நினைத்து, உத்தமமான விஷயத்தைச் சொல்கிறேன். பூமியில் ராஜ்ய அபேட்சையில்லாதவனும் தன அபேட்சையில்லாதவனும் உண்டோம். ஆயினும் பூர்வ புண்யவசத்தால் கிடைக்கத் தக்கதே கிடைக்குமேயல்லாது. நினைத்தது கிடைக்காது. கோபாக்கியமுடைய என் தந்தையே! ஜகத்தில் யாவரும் தமக்கு ஐசுவரியம் உண்டாக வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். ஆயினும் அது ஜன்மாந்திர பாக்கிய வசத்தாலன்றி முயற்சியால் உண்டாகாது. விவேகமில்லாதவர்களக்கும் முயற்சி செய்யாதவருக்கும் நீதி சாஸ்திர மறியாதவருக்கும் அதிர்ஷ்டவசத்தால் ராஜ்யாதிகள் உண்டாகின்றன. ஆகையால் ஐசுவரியத்தை விரும்புவோரும் புண்ணியத்தையே செய்ய முயலவேண்டும். தேவ மனுஷ்ய, மிருக பட்சி விருட்ச ரூபமுடைய பிரபஞ்சம் யாவும் ஸ்ரீஅனந்தனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றன. ஆனால் அஞ்ஞானிகளுக்கு அவை வேறு போலத் தோன்றுகின்றன. ஸ்ரீவிஷ்ணு பகவான் விசுவதா ரூபதரன். ஆகையால் தாவர சங்கமாதமகமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று நினைத்து விவேதியாக இருப்பவன் சகல பூதங்களையும் ஆத்மசமானமாகப் பாவித்திருக்க வேண்டும். இந்த ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவனிடத்திலே அனாதியாயும் ஷட்குண ஐசுவரிய சம்பன்னான அந்தப் புரு÷ஷாத்தமன் பிரசன்னமாவான். அவன் பிரசன்னனானால், சகல விதமான கிலேசங்களும் விலகிப் போய்விடும்! என்றான். பிரகலாதன் அதைக்கேட்ட இரணியன், சகிக்கமாட்டாமல் கோபத்துடன் தன் சிங்காதனத்திலிருந்து எழுந்து, தன் குமாரனின் மார்பிலே உதைத்து கையோடு கையை அறைந்து, அருகிலிருந்த அசுரர்களைப் பார்த்து, ஓ விப்ரசித்து! ராகுவே! ஓ பலனே! இந்தப் பயலை நாகபாசங்களினால் கட்டியிழுத்து, சமுத்திரத்திலே தூக்கிப் போடுங்கள் தாமதம் செய்ய வேண்டாம். இல்லையெனில் தைத்தியதானவ சமூகங்கள், மூடனான இந்தப் பாவியின் வழியில் சென்று கெட்டுப் போய்விடும். என்ன சொல்லியும் இவன் மாறவில்லை. இவனை நான் சொன்னபடிச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். தைத்யர்கள் அவனது கட்டளையை ஏற்று, பிரகலாதனை நாகபாசங்களாற் கட்டிக்கடலில் போட்டார்கள்.

பிரகலாதன் அதில் விழுந்து அசைந்ததும் கடல்நீர் எல்லை கடந்து, ஜகமெங்கும் வியாபித்தது. இவ்விதம் கடல்நீர் பொங்கிப்பூமியில் வியாபிப்பதைக் கண்ட இரணியன் தைத்யர்களை அழைத்து சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் அந்தத் துஷ்டன் மீது மலைகளை நெருக்கமாக அடுக்குங்கள்! அந்தப் பையன் பிழைப்பதால் யாதொரு பயனும் இல்லை. ஆகையால் ஜலராசியின் நடுவில், மலைகளால் நாலாபுறமும் அமுக்கப்பட்டுக் கொண்டே பல ஆண்டுகள் இருந்தானாகில் அவன் உயிரை விட்டுவிடுவான்! என்றான். பிறகு தைத்ய தானவர்கள் உயர்ந்த மலைகளைப் பறித்துக் கொண்டுவந்து பிரகலாதன் மீது போட்டு, அவனைச் சுற்றிலும் ஆயிரம் யோசனைக்கு மலைகளை அடுக்கினார்கள். இவ்விதம் பிரகலாதாழ்வான் சமுத்திர மத்தியில், அத்தனைத் தொல்லைகளிலும் ஏகாக்கிர சித்தனாய் அச்சுதனையே துதிக்கலானான்! புண்டரிகாக்ஷனே! உனக்கு எனது வணக்கம், புரு÷ஷாத்தமனே உனக்குத் தெண்டனிடுகிறேன். சர்வலோக ஸ்வரூபனே! உனக்கு நமஸ்காரம்! உக்கிரமான சக்கர ஆயுதமுடையவனே உனக்குத் தெண்டனிடுகிறேன். பிரமண்ணியம் என்று சொல்லப்பட்ட தவம் வேதம் முதலியவைகளுக்குத் தேவனாகவும், கோக்களுக்கும், பிராமணருக்கும் இதனாகவும், ஜகத்துக்கெல்லாம் ரக்ஷகனாயும், ஸ்ரீகிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்னும் திருநாமமுடைய உனக்கு மேலும் மேலும் தண்டனிடுகிறேன். பிரமரூபமாகி உலகங்களைப் படைத்துக் கொண்டும், தனது சொரூபமாகி ரட்சித்துக் கொண்டும், கல்பாந்தத்திலே ருத்திர ரூபமாகிச் சங்கரித்துக் கொண்டும், திரமூர்த்தியாக விளங்கும் உனக்குத் தெண்டனிடுகிறேன்! ஓ அச்சுதனே! தேவ அசுர கந்த வசித்த கின்னர சாத்திய பன்னக யக்ஷ ராக்ஷச பைசாச மனுஷிய பட்க்ஷ ஸ்தாவர பிபீவிகாதிகளும், பிரித்வி அப்பு, தேயு வாயு ஆகாயங்களுக்கும் சப்த ஸ்பரிச ரச கந்தங்களும், மனோ புத்தி சித்த அகங்காரங்களும், காலமும் அதன் குணங்களும் இவற்றின் பரமார்த்தமான ஆன்மாவும் இவையெல்லாம் நீயே! வித்தை அவித்தை சத்தியம், அசத்தியம் பிரவிர்த்தி, நிவர்த்தி ரோதோக்த்த சர்வகர்மங்களும் நீயே! விஷ்ணுபகவானே! சமஸ்த கர்மபோகத்தை அனுபவிப்பவனும் சர்வகர்ம பயன்களும் நீயே! ஓ மகாப்பிரபுவே! உன்னிடமும் இதரரிடமும் சேஷ பூதங்களான சகல உலகங்களிலே நீ வியாபித்திருப்பதும், உபதான நிமித்தகாரண ரூபமான ஐசுவரியும் அனந்த ஞானசக்தியும் உனது கல்யாண குணங்களைக் குறிக்கின்றன. பரமயோகிகள் உன்னைத் தியானிக்கின்றனர். யாகசீலர் உன்னைக் குறித்து யாகஞ்செய்கின்றனர். நீயே பிதுர் ரூபமும் தேவ ரூபமும் கொண்டு, ஹவ்ய கவ்யங்களைப் புசிக்கிறாய்! ஓ அச்சுதா! மகத்தகங்காரம் முதலான சூட்கமங்களும் பிரித்வி முதலிய பூதங்களும் அவற்றினுள்ளே அதிசூட்சுமமான ஆத்ம தத்துவமாகிய இந்தச் சூட்சும பிரபஞ்சமெல்லாம் எங்கேயிருக்கிறதோ, எங்கே உண்டாகிறதோ, அது சொரூப குணங்களிலே பெருத்த உனது மகாரூபமாக இருக்கிறது! சூக்ஷ்மம் முதலான யாதொரு சிறப்புமில்லாமல், சிந்திப்பதற்கும் அரியதாய் யாதொரு ரூபம் உண்டோ அதுவே உன்னுடைய பரமாத்ம சொரூபம்! இத்தகைய புரு÷ஷாத்தமனான உனக்குத் தெண்டமிடுகிறேன். சர்வாத்மகனே! சகல பூதங்களிலும் சத்வாதி குணங்களைப் பற்றியதாய் யாதொரு பிரகிருத சக்தி இருக்கிறதோ, ஜீவ ஸ்வரூபமான அந்தச் சக்தியை நான் வணங்குகிறேன்; வாக்குக்கும் மனதுக்கும் எது எட்டாததோ, யாதொரு விசேஷத்தினாலும் எது விசேஷப்படுத்தக் கூடாததோ, ஞானிகளுடைய ஞானத்தால் எது நிரூபிக்கப்படக்கூடியதோ அத்தகைய முந்தாத்தும ஸ்வரூபமாக இருக்கிற உனது மேன்மையான சக்திக்குத் தெண்டனிடுகிறேன்!

எவனுக்கு வேறானது ஒன்று இல்லையோ, எவன் எல்லாவற்றுக்கும் வேறாக இருக்கிறானோ, அத்தகைய பகவானான ஸ்ரீவாசுதேவனுக்குத் தெண்டனிடுகிறேன்! கர்மாதீனமான நாம ரூபங்கள் இல்லாமல் விலக்ஷணனாய் இருப்பதாக மட்டும் எவன் காரணப்படுவானோ அத்தகைய மகாத்மாவுக்கு எனது நமஸ்காரம்! சங்கர்ஷணாதி வியூகரூபியானவனுக்கு நமஸ்காரம்! தேவதைகளும் எவனுடைய பராத்பரமான ரூபத்தைக் காணமுடியாமல், மச்சகூர்மாதி அவதார ரூபங்களையே அர்ச்சனை செய்வார்களோ, அந்தப் பரமாத்மாவுக்கு வந்தனம்! எவன் ருத்திராதி சகல பூதங்களுக்கும் அந்தர்மியாகி சுபாசுபங்களை கண்டு கொண்டிருப்பானோ, அந்தச் சர்வசாட்சியும் பரமேஸ்வரனுமான ஸ்ரீவிஷ்ணுதேவருக்குத் தெண்டனிடுகிறேன்! காணப்படும் இந்தச் சகமெல்லாம் எவனோடு பேதமின்றி இருக்கிறதோ அந்த விஷ்ணுவுக்கு வந்தனஞ் செய்கிறேன்! யாவற்றுக்கும் ஆதியான அந்த ஸ்ரீஹரி எனக்குப் பிரசன்னனாகக் கடவன் அட்சரம் என்ற பெயருடையவனாக இருக்கும். எவனிடம் பிரபஞ்சமெல்லாம் நூலில் வஸ்திரம் கலந்திருந்திருப்பது போலக் கலந்தும், நூலில் மணிகள் சேர்க்கப்பட்டிருப்பது போலச் சேர்க்கப்பட்டும் இருக்கிறதோ, அந்தத் தியானசம்யனான அச்சுதன் என்னிடம் தோன்றக்கடவன்! சர்வ ஸ்வாமியாய் சர்வ சேஷயாய் இருக்கிற அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! எவனிடம் சகலமும் படைப்புக் காலத்தில் உண்டாகுமோ, எவன் சகல சரீரனாகவும், சகல ஆதாரமாகவும் இருக்கிறானோ, அந்த சுவாமிக்குப் பலமுறைகள் தெண்டனிடுகிறேன். யாவுமே எம்பெருமானது விபூதியாய், அவனைப் பற்றியே நிற்பதும் இயல்வதுமாய் சற்றேனும் சுதந்திரமில்லாமல் இருப்பதைப் பற்றியே எம்பெருமானை யாவும் என்றும் அவனன்றி வேறொன்றுமில்லை என்றும் அவனுள்ளேயே சொருகித் தன்னையும் அனுசந்தித்தபடியாகும். இதுவே விசிஷ்õத்துவைதம். ஸ்ரீஅனந்தன் எங்கும் ஆன்மாவாய், அகமும், புறமும் வியாபித்து ஞானானந்தமயனாய் நிறைந்திருப்பதால், நானும் அவனாகவே இருக்கிறேன். ஆகையால் என்னிடத்திலிருந்தே யாவும் உண்டாயிற்று. நானே யாவுமாக இருக்கிறேன். எப்போதும் இருக்கிற என்னிடத்திலே எல்லாம் இருக்கின்றன. நானே அவ்யயனாயும், நித்தியனாயும் வேறொரு ஆதாரமின்றி தன்னிலேயே தானாக இருக்கும் பரமாத்மாவாக இருக்கிறேன். நான் படைக்கும் முன்பு பிரமம் என்ற பெயரையுடையவனாக இருந்தேன். அப்படியே பிரளய காலத்திலும் எல்லாம் உள்ளே ஒடுங்கும்படியான பரமபுருஷனாக இருப்பேன்! என்று பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தான்.

கருத்துகள் இல்லை: