சனி, 7 செப்டம்பர், 2019

6. உமா மகேச மூர்த்தி

திருக்கைலையில்  பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும்  தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே  அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய  இறைவனாகிய  சிவபெருமானின் என்னப்படியே  அனைத்துச்  செயல்களையும்  செய்து வருகின்றார்.  பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து  புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ  அதுபோல் இவர் சிவத்திடம்  ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவர்  ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார்.  முறையே

1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
2. ஆதிசக்தி - பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
3. இச்சா சக்தி - ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
4. ஞானசக்தி - இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
5. கிரியாசக்தி - ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

இதில் பராசக்தி பக்குவமடைந்த  ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி  திருஷ்டித் தொழில் செய்து நம்மை  சிருஷ்டிப்பவர்.  கிரியாசக்தி  உலகப் படைப்பை செய்பவர்.  மேற்க்கண்ட  இந்த  ஐந்து சக்திகளும்  ஒன்றினைந்து  ஒரு செயல்  செய்யும் போது  ஒன்றாகி  சதாசிவமூர்த்தியாகி  விடுகின்றது.  எனவே  சிவன் - சக்தி பிரிக்க முடியாத  ஒன்று. இத்தகைய   சிறப்பு வாய்ந்த   உமா மகேஸ்வர மூர்த்தியை  நாம் தரிசிக்க வேண்டிய தலம் கும்பகோணம் அருகேயுள்ள  கோனேரி ராஜபுரம் தான் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்ட மூர்த்தியே  உமாமகேஸ்வரர் ஆவார்.  இறைவி பெயர்  தேகசௌந்தரி என்பதாகும். இங்குள்ள தீர்த்தத்தில்  நீராடி இறைவி, இறைவனுக்கு  இளநீர், பால், தேன் அபிசேகம் செய்ய  கடுமையான  குஷ்ட நோயும் தீரும். இத்தல இறைவனின்  மற்றொரு திருநாமம்       பூமிநாதர்  என்பதாகும்.  பெயர்க்கேற்றார் போல் எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும்  இந்த பூமிநாதரை வணங்கி  இங்கிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தொழில் செய்யும் இடத்தில் வைத்தால்  தொழில்  சிறப்படையும்.  புதன் தோறும்  சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வராது. இருந்தாலும் விலகும்.இங்குள்ள மண்ணால் வினாயகர் செய்து நம் வீட்டில் வைத்து வழிபட எந்தவொரு காரியத்தடையும்  அகலும்.
----------------------------------------------------------------------------
7. சுகாசன மூர்த்தி
வெள்ளிமலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட  ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் ஜோதி மயமான சிவபெருமான் நடுவே நாயகனாக வீற்றிருக்க, அவரைச்  சுற்றிலும்  மும்மூர்த்திகளும் தேவகணங்களும், தேவலோக வாழ் அனைத்துமே அங்கே கூடியிருக்கின்றன. சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருக்கிறார். நேரம் கடந்தது. அனைவரும் தங்களது பணிக்கு, இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.

சற்றைக்கேல்லாம் உமாதேவியார் அங்கே பிரசன்னமாகி இறைவனின் தால் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின்  உண்மைகளை, விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்கிறார். உடன் சிவபெருமான்  சிவாகமங்களின்   உண்மைகளையும் ,  விளக்கங்களையும், ஐவகை  பந்த பாசங்களின்  நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும்  நன்மைகளையும், சிவாகமங்கள்  பற்றிய அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கின்றார். அச்சமயம்  அவர்  சுகாசன நிலையில்  அமர்ந்த படி  உறைக்கிறார். அருகே உமாதேவியார் நின்று கொண்டுள்ளார்.  சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி உறைத்த காரணத்தால்  இவரை நாம் சுகாசன   மூர்த்தி  என்கிறோம். இவரது கரங்களில் மான், மழு உள்ளது. தேவியார் அருகே இல்லை.

இத்தகைய  சுகாசன மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சீர்காழியாகும். இங்கு  கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம்  பிரம்மபூரிஸ்வரர், சட்டைநாதர், தோணியப்பர் என்று மூன்று திருநாமங்களை உடையவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி யாகும். இங்கு   அருள்பாலிக்கும் சுகாசன மூர்த்தியை மனமுருக வேண்டி அர்ச்சிக்க வியாழன் சார்ந்த அனைத்து குறைகளும் தீரும். மேலும் தொழில் துறை நிர்வாகம் நல்ல முறையில்  நடைபெற இவர் நமக்கு அருள்புரிவார். வில்வ அர்ச்சனையும், கற்கண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில்  செய்தோமானால் நிர்வாகம் செழிப்பாகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு  உகந்த அபிசேகம் பலாப்பழத்தால் செய்யப்படுகிறது. இதனால் யோக சித்திகள் கைகூடும் என்பது ஐதீகம்.
----------------------------------------------------------------------------
8.உமேச மூர்த்தி
முன்பொருமுறை நான்முகன் படைத்தல் தொழிலுக்கு நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். அந்த நால்வரும் படைத்தல் தொழிலை  மேற்க்கொள்ளாமல்  தவச்சாலையை நோக்கிச்  சென்றுவிட்டனர். பின்னர் நான்முகன் விஷ்ணுவை கானச்சென்றார். அவர்தம் குறைகளைச் சொன்னார். இக் குறைகளைப் போக்குபவர் சிவபெருமான் ஒருவரே, எனவே அவரைச் சென்று பார்ப்பதே உசிதமென நான்முகன், விஷ்ணு, நான்கு புதல்வர்கள் சகிதம் வெள்ளிமலையை அடைந்தனர். அவர்களை நெற்றிக்கண்ணால் சிவபெருமான் நோக்க, அவர்களனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அப்பொழுது  தனிமையில் இருந்த சிவபெருமான் தன் தோளைப்பார்க்க  அவரது  சக்தியே உமாதேவியாக  வடிவம் கொண்டு வெளிவந்தது. உடன்  உமாதேவியை தன் இடபுறமாக இருக்க  செய்தார்.  பின்னர் எரிந்து சாம்பலானவர்களை  முன் போலவே படைத்தார்.  அவர்கள் அனைவரும்  இவர்கள்  இருவரையும் வணங்கி நின்றனர்.  இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார்.  உலகமே செழித்தது.   உலகிலுள்ள அனைத்து உயிர்களையும்  படைத்து, காத்து, துயர்துடைத்து அனைத்தையும் வாழவைக்கும் சக்தியை  உமையவளாக  இடது பாகத்தில்  வீற்றிருந்தக் கோலத்தைக் கண்டவர்கள் ஆனந்தப்பட்டனர். ஆகவே சிவபெருமானது பெயர்களில்  உமேச மூர்த்தியும் சேர்ந்துக் கொண்டது. பொதுவாக சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே  உமேசமூர்த்தி யானது என்றும் சொல்லலாம்.  இத்தகைய சிறப்பு பெற்ற உமேசமூர்த்தியை தரிசிக்க  நாம் செல்ல வேண்டியத் தலம் திருஇடைமருதூர் ஆகும். கும்பகோணம் அருகே அமைந்துள்ள இத்தலத்தில்  கோயில் கொண்டுள்ள  உமேசமூர்த்தியை காவிரி நீரால் அபிசேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக  அமைய அருள்புரிவார்.

இவரை திங்கள் அல்லது புதன் கிழமைகளில் செந்தாமரைப் பூவினால்  அர்ச்சனையும், நெய்யன்னத்தால் நைவேத்தியமும் செய்ய கடனில்ல பெருவாழ்வு வாழலாம். இங்குள்ள சிவபெருமானுக்கு நன்னீர்  அபிசேகம் செய்ய  அகஉடல்  தூய்மையடையும் என்பது திண்ணம்.
----------------------------------------------------------------------------
9. சோமாஸ் கந்த மூர்த்தி
சூரபத்மனின்  கொடுமைகள்  எல்லைக்கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள் அனைவரும்  ஈசனிடம் சென்று  முறையிட்டனர்.   வல்லமைபெற்ற தங்கள் மகனால்  அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள்  விரும்பினர். சிவபெருமானும் அவர்களுக்காக  மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள  நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள்  அகிலமெல்லாம் பரவின. உடன் பார்வதி தேவியார் அவ்வெப்பம் தாளாமல் தம் கொலுசு மணிகள் ஒன்றோடொன்று  மோதி சிதறும் படி அந்தப்புரம்  நடந்தார்.  இதனால் தேவர்கள் சித்தம் கலங்கி, மனம் வருந்தினர். மகனைக் கேட்டால் இவர் நெருப்பு பொறிகளை கொடுக்கின்றாரென கலங்கினர். உடன் வாயு தேவனையும், அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளைக் கொடுத்து கங்கையில் விடச் சொன்னார்.  கங்கையோ  அப்பொறிகளை சரவணப்பொய்கையில் சேர்த்தது.

ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களுடனும்  பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர்.   பார்வதி தேவியின் கொலுசுமணியில்  இருந்து சிதறிய  நவரத்தினங்கள்  நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப்பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும், பார்வதியும் இடப வாகனத்தில் முன் செல்ல  தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு  ஆறு குழந்தைகளை பார்வதி  ஒன்றாக தூக்குகையில் அவை ஒரேக் குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும், பன்னிரு கரங்கள் கொண்டதாகவும்  விளங்கியது.  ஆறு முகங்களைக் கொண்டதால்  ஆறுமுகன் என்றும், கந்தன் என்றும்   அழைத்தனர்.  பின்னர் மூவரும் வெள்ளிமலையை  அடைந்தனர்.  அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றத்தையே நாம் சோமாஸ் கந்த மூர்த்தி என்கிறோம். சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிக்க திருவாரூர் செல்ல வேண்டும். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபம்  அருகே  சுரக்கும்  அமுத தீர்த்தத்தினால்  சோமாஸ் கந்தரை அபிசேகம் செய்ய உடல் வலிமை, அறிவு விரத்தி, தந்தைக்கே      உபதேசிக்கும் அளவு  புத்தி வலுவடையும்.  மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில்  வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் கொடுக்க   குரு ஸ்தானம் விரைவில் கைகூடும். எழுத்தாளர்களுக்கு திறமை வளரும். எனவே எழுத்தாளர்கள்  தொழ வேண்டியவர் இவர்.
----------------------------------------------------------------------------
10. சந்திரசேகர மூர்த்தி
நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே  இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு  திருமணம் செய்வித்தார்.  சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை, ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி, அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி  வைத்தார்.  சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.

சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான்முகனோ தன் வேலையில் மகனும்  மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை  என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே  இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே  அவரை  சரணடையிமாறு சொன்னார்.   அதன்படி சந்திரன் சிவபெருமானிடம்  சரணடைய  சிவனும் சந்திரனின்  ஒரு கலையை  எடுத்து தன் சடையில்  வைத்து இனி உன் ஒருக்கலைக்கு  அழிவில்லை  ஆனாலும்  தட்சனின் சாபத்தால்  தினமொரு  கலையாக  அழிந்தும்,  என்னிடம்  உள்ளதால்  தினமொரு கலையாக வளர்ந்தும் காணப்படுவாய் என அருளாசி கூறினார். சந்திரனைத் தன் சடையில் தரித்ததால் சந்திர   சேகரன் ஆனார். அவரது தலம்  திருவாரூர்(புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது.  இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் கோணபிரான்  மற்றும்  அக்னிபுரீஸ்வரர். இறைவி  கருந்தாழ்குழலி யாகும்.  நல்லவனவற்றை மட்டுமேக்  கொடுக்க கூடியவர்  இங்குள்ள சந்திர சேகர மூர்த்தி. இவரை வழிபட பித்தளையும் வைரமாகும். மேலும் வெண்தாமரை அர்ச்சனையும், நெய்யன்ன நைவேத்தியமும் சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கொடுக்க அறிவு வளர்ச்சி மிகுவதோடு நினைவாற்றல்  பெருகும்.மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு  குளிர்ந்த   சந்தனத்தால்  அபிசேகம் செய்தால்  நற்புகழ் அடையலாம்.
----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: