சனி, 7 செப்டம்பர், 2019

விஷ்ணு புராணம் முதல் அம்சம்(பகுதி-3)

15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும்
பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே கேளும்! பிரசேதசர்கள் கடல் நீரில் மூழ்கிக் கடுந்தவஞ் செய்துவந்த காலத்தில் அவர்களது தந்தையான பிராசீனபரிஹி, நாரத முனிவரின் உபதேசத்தைப் பெற்று அரசாட்சியைத் துறந்து, யோக நிஷ்டை புரியலானார். அதனால் அராஜகமாகி ஜனங்கள் பயிர்த்தொழிலைக் கைவிட்டனர். ஆகையால் பூமியில் உண்டான விருட்சங்களில் கிளைகள் அதிகமாகி மிகவும் நெருங்கிப் பூமியையும் வானத்தையும் மூடிக்கொண்டன. அதனால் காற்றுக்கூட வீச முடியாமற் போயிற்று. இவ்விதமாக மரங்கள் எல்லாம் வானளாவ இருந்ததால், பதினாயிரம் ஆண்டுகள் காற்றுஞ் சஞ்சரிக்க இடமில்லாமல் இருந்தது. சகல ஜனங்களும் அசையவும் முடியாமல் நாசமடைந்தனர். பிறகு பிரசேதசர்கள் ஜலத்திலிருந்து வெளிப்பட்டு வந்து, மரங்கள் வளர்ந்து உலகை மூடியிருப்பதால் பிரஜாக்ஷயமுண்டானதைக் கண்டு மிகவும் கோபங்கொண்டார்கள். உடனே, தங்கள் முகங்களிலிருந்து வாயுவையும், அக்கினியையும் உண்டாக்கினார்கள். அந்தப் பெருங்காற்று, மரங்களை எல்லாம் வேரோடு வீழ்த்தியது. காலாக்கினிக்குச் சமமான அந்த அக்கினி அவற்றை எரித்தது. இதனால் மரங்கள் யாவும் ஏககாலத்தில் நாசமாகத் துவங்கின. ஆங்காங்கே ஒன்றிரண்டு மரங்கள் நின்றன. தவிர, மற்றவையெல்லாம் நாசமடைந்தன. அதைக்கண்டு ஓஷதிகளுக்கு அதிபதியான சந்திரன் கலங்கி, பிரசேதசர்களிடம் வந்து கூறலானான். அரசகுமாரர்களே; நீங்கள் கோபத்தை விட்டு என் வார்த்தையைக் கேளுங்கள். மரங்களுக்கும் உங்களுக்கும் இடையே ஓர் உடன்பாடு செய்து நட்பை ஏற்படுத்துகிறேன். மரங்களுக்கெல்லாம் மகளான மாரிஷை என்ற கன்னியை, நான் எதிர்காலத்தையுணர்ந்து எனது கிரணங்களால் வளர்த்து வந்திருக்கிறேன். ஜகன்மோகன ரூபலாவண்ய மிகுந்த அந்தப் பெண் மாரிஷையை உங்களுக்குப் பாரியையாகத் தருகிறேன். அவள் உங்கள் வமிசத்தை அபிவிருத்தி செய்யத்தக்கவள். அந்தப் பெண்ணிடம் உங்கள் தேஜஸின் பாதியினாலும், எனது தேஜஸின் பாதியினாலும், மகா பண்டிதனான தக்ஷன் என்ற பிரஜாபதி பிறப்பான். அவன் அக்கினிக்கு ஈடான தேஜஸையுடையவனாக, வெகுவான பிரஜாவிருத்தி செய்வான். அந்தக் கன்னிகையின் உற்பத்தி விவரத்தைக் கூறுகிறேன்; கேளுங்கள்.

பூர்வத்தில் வேதசாஸ்திரங்களை நன்றாக அறிந்தவரான கண்டு என்ற மாமுனிவர்; கோமதி என்ற அழகிய நதிகரையில் அருந்தவஞ்செய்து கொண்டிருந்தார். இந்திரன் அவருடைய தவத்தைக் கெடுக்க நினைத்து பிரமிலோசை என்ற தேவலோக மங்கையை அனுப்பினான். அந்தப் பொற்கொடியாள் மாமுனிவரின் ஆசிரமத்துக்கு வந்து மனோகரலாவண்ய ஆடல்களால் அவரை மோகிக்கச் செய்தாள். கண்டு மாமுனிவர், அவளுடைய அழகில் மனங்கலங்கியவராய், அவளுடன் கூடி மந்திர பருவதத்தில் நூறு ஆண்டுக்காலம் கிரீடித்துக் கொண்டிருந்தார். பிறகு அந்தப் பெண்ணரசி, முனிவரை நோக்கி பிராமண உத்தமரே! நான் இனி தேவலோகம் போகிறேன். எனக்கு விடைகொடுத்து அனுப்புங்கள் என்றாள். கண்டுமா முனிவரோ அவளைப் பிரிவதற்கு மனமில்லாமல், நல்லவளே! நீ இன்னும் சில நாட்கள் இங்கேயே இருக்க வேண்டும் என்று கெஞ்சினார். அதனால் பிரமிலோசையாள்; மீண்டும் நூறு ஆண்டுகள் அம்முனிவரின் இஷ்டபோகங்களுக்கு இசைந்து அவருக்குத் திருப்தியுண்டாக்கினாள். பிறகு, அவள் அவரை நோக்கி; மகாத்மாவே! நான் சுவர்க்கத்திற்குப் போகிறேன். உத்தரவு கொடுங்கள் என்றாள். அப்போதும் கண்டுமா முனிவர் அவளைப் பிரிய மனமில்லாமல் அடி; கட்டழகி போகலாம் இரு! என்றார். அதன்படியே தெய்வப்பெண் பிரமிலோசையும் மீண்டும் நூறு ஆண்டுகளுக்கு மேல் அவருடன் இருந்து பிறகு ஒருநாள் அவரை நோக்கிப் புன்னகையுடன் நான் இனியாகிலும் தேவலோகம் செல்ல அனுமதி கொடுங்கள் என்று கேட்டாள். அப்போது கண்டு முனிவர் காமப் பரவசத்தால், அவளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, அழகிய புருவமுடையவளே! இன்னும் ஒரு கணம் இரு, நீ போய்விட்டாய் என்றால் நெடுங்காலம் வரமாட்டயல்லவா? என்றார். கட்டழகி பிரமிலோசை தன்னை முனிவர் சபித்து விடுவாரே என்று பயந்து, சிறிது நாள் குறைய இருநூறு ஆண்டுகள் அவருடன் கூடியிருந்து, பிறகு மீண்டும் தேவருலகம் செல்ல வேண்டும் என்று முனிவரிடம் விடை கேட்டாள். அப்போதும் கண்டுமாமுனிவர் போகத்தில் திருப்தியடையாமல், மேலும் சிலகாலம் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார். இவ்விதம் பிரமிலோசை பிரிவுவிடை கேட்கக் கேட்க இன்னும் சில நாள் இரு! சிலநாள் இரு! என்று கண்டுமாமுனிவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். பிரமிலோசையும் சாப பயத்தாலும் தாட்சண்யத்தாலும் அவருடைய பரிதாப நிலையைக் கண்டு இரங்கியும், தன்னைப் பிரிந்தால் அவர் மிகவும் வருந்தி வாடுவாரே என்ற பச்சாதாபத்தாலும், அவரைப் பிரிய மனமில்லாமலும், பிரிவதற்கு மார்க்கமில்லாமலும் தவித்தாள். எத்தனையோ வகையான இன்பங்களை எத்தனையோ ஆண்டுகள் அனுபவித்த கண்டுமாமுனிவரின் காதல் நாளுக்கு நாள் வலிமை பெறலாயிற்று.

இப்படியிருக்கும் போது ஒரு சமயம் கண்டுமாமுனிவர், அவசர அவசரமாக எழுந்து, தமது ஆசிரமத்தை விட்டு எங்கோ புறப்பட்டுச் சென்றார். அப்போது தெய்வ அழகி பிரமிலோசை அவரைத் தடுத்து, இப்போது நீங்கள் இவ்வளவு அவசரமாக எங்கே போகிறீர்கள்! என்று கேட்டாள். அதற்கு முனிவர், பெண்ணே! மாலைப்பொழுது முடிந்து சந்தியா காலம் நெருங்கி விட்டது. ஆகையால் நான் சந்தியாவந்தனம் செய்யப்போகிறேன். அப்படிச் செய்யவில்லையென்றால் என் கடமையில் ஒன்றை நிராகரித்ததாகி விடும் என்றார். அதைக் கேட்டதும் பிரமிலோசை புன்னகையுடன் அவரை நோக்கி, சர்வ தர்மக்ஞரே! சந்திப்பொழுது விரைவது இப்பொழுது தானா உங்களுக்குத் தெரிந்தது. எத்தனையோ ஆண்டுகளெல்லாம் உங்களுக்கு ஒரே நாளாக இருப்பது அனைவருக்குமே வியப்பைத் தருமே? இதை யாரிடத்திலாவது சொல்லிப்பாரும்! என்றாள். அவளை நோக்கி முனிவர், பெண்ணே! நீ அதிகாலையில் நதிக்கரையிலிருந்து வந்தாய். அப்போது உன்னைப்பார்த்த நான் என் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தேன். இப்போது இன்றைய நாள் முடிந்து, சாயங்காலமானபடியால் சந்தியாவந்தனம் செய்யப் போகிறேன். இதற்கு நீ ஏன் என்னைப் பரிகாசம் செய்கிறாய்? உண்மையைச் சொல் என்றார். அதற்குப் பிரமிலோசை, பிராமணோத்தமரே! நான் அதிகாலையில் நதிக்கரைக்கு வந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் இன்று அதிகாலையில் அல்ல! எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒருநாளின் அதிகாலையில் நான் வந்தேன். நான் உம்மிடம் வந்து எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்து விட்டன என்றாள். அதைக்கேட்டதும் கண்டுமா முனிவர் மிகவும் பயந்து நடுநடுங்கி பிரமிலோசையை நோக்கி, பெண்ணே! நான் உன்னுடன் கூடி எத்தனை காலம் சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்? அதை நீயே சொல்வாயாக! என்று கேட்டார். அதற்கு அவள், முனிவரே! நான் வந்து தொள்ளாயிரத்து ஏழு ஆண்டுகளும் ஆறுமாதமும் மூன்று நாட்களும் ஆயின! என்றாள். அந்தத் தேவமங்கையைப் பார்த்து கண்டு மாமுனிவர் குழப்பத்துடன், பெண்ணே! நீ சொல்வது யதார்த்தமோ அல்லது பரிஹாசமோ? உண்மையைச் சொல். நான் உன்னுடன் கூடியிருந்தது ஒரே நாள் தான் என்று நினைக்கிறேன் என்றார். பிரமிலோசை தலையாட்டி அந்தணரில் உயர்ந்தவரான உம்மிடம் நான் ஏன் உண்மையில்லாததை சொல்கிறேன்? அதுவும் அறவழியை அனுசரித்து நீங்கள் கேட்கும் இந்த விஷயத்தில் நான் பொய் சொல்வேனா? ஆகையால் நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்றாள்.

உடனே தவமுனிவர் தன்னைத்தானே கடிந்துகொண்டார். சை! என் தவம் எல்லாம் நஷ்டமாயிற்றே! நான் என்ன செய்வேன்? பிரமவித்துக்களான பிராமணர்களுக்குக் குலதனமாகிய வேதத்தியனம் வீணாயிற்றே! என் விவேகம் எல்லாம் பறிபோய் விட்டதே! என்னை வஞ்சிப்பதற்காக எவனோ ஒருவன் இந்த வனிதையை என்னிடம் அனுப்பிவிட்டானோ? பசி, தாகம், சோகம், மோகம், வார்த்திக்யம், மரணம் ஆகிய ஷடூர்மி! என்று சொல்லப்படும். இந்த ஆறு விகாரங்களும் இல்லாமல் நிர்மலமாக இருக்கும் பரப்பிரமத்தை அறியும் பொருட்டு மனதையடக்கியாள வேண்டும் என்று நிச்சயஞ் செய்த எனது விவேகத்தை அபகரித்து, என்னை யோகப் பிரஷ்டனாகச் செய்த காமம் என்னும் மாபெரும் பூதத்தை தகிக்க வேண்டும். சாந்திராயாணதி விரதங்களும் வேதாப்பியாசமும் மற்றுமுண்டான மோட்ச காரணங்களான புண்ணியங்களும் நரகத்திற்கு வழியான துஷ்ட சகவாசத்தால் பாழாக்கப்பட்டனவே? என்று கண்டு மாமுனிவர் தன்னைத்தானே நிந்தித்துக்கொண்டே; தேவமங்கையான பிரமிலோசையை நோக்கி, அடி பாதகீ! நீ இனிமேலாவது என்னை விட்டு உன்னிச்சையாகப் போய்விடு. நீ வந்து உன்னுடைய நடையுடை பாவனைகளால் என் சித்தத்தை கலக்கி, என் தவத்தைக் குலைத்து இந்திரனுக்கு சாதகமான காரியங்களைச் செய்து விட்டாய். இத்தகைய உன்னை என் கோபாக்கினி சுவாலைகளினால் சாம்பலாக்கிவிட வேண்டும். ஆயினும் சத்புருஷடன் ஏழடி உடன் நடந்தவர்கள் கூட நண்பர்கள் ஆவார்கள். ஆகையால் இத்தனைக் காலமும் என்னுடன் நீ கூடியிருந்ததை எண்ணி உன்னை மன்னித்தேன். நியாயமாக விசாரித்தால் உன்னைக் குறைசொல்லி ஒரு பயனும் இல்லை. நான் எனது ஐம்புலன்களையும் வெல்லமாட்டாமல் காமமோக பரவசமானதால், குற்றமே என்னுடையதாகின்றது. தேவேந்திரனுக்குப் பிரீதியாக என்னுடைய தவத்துக்கு ஊறு விளைத்த உன்னுடைய மாமோகத்திற்கு இருப்பிடமான மாயையைத் தகிக்க வேண்டும்! என்று கோபித்தார். உடனே தெய்வப்பெண் பிரமிலோசை பயத்தால் நடுநடுங்கி, தன் உடல் வியர்க்க கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடல் வியர்க்க, மெய் சிலிர்த்துக் கொடிபோல நிற்கும் அந்தப்பெண் கொடியை நோக்கி மாமுனிவர் கோபத்துடன் போ, போ! என்று உரக்கக் கூவினார். உடனே, அவரது கோபத்திற்குப் பயந்து பிரமிலோசை அந்த ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டு, வானத்து வழியே செல்லும்பொழுது, அவள் தனது சரீரத்தில் உண்டான வியர்வையை மரங்களின் நுனியிலிருந்த துளிர்களினாலே துடைத்து, விருட்சங்களில் போட்டு, மரத்தின் மேல் மரமாகத் தாண்டிச் சென்றாள்.

பிரமிலோசை என்னும் அந்தத் தெய்வ மங்கையிடம் கண்டு மாமுனிவரால் உண்டான கர்ப்பமானது அவளுடைய ரோம கூபங்களிலிருந்து வியர்வையாகக் கசிந்து வந்ததால்; அந்தக் கர்ப்பத்தை விருட்சங்கள் தரித்தன. பிறகு, அவ்வியர்வையெல்லாம் வாயுவினால் கூட்டப்பெற்று ஒன்றாய்த் திரண்டன. அவற்றை சந்திரனாகிய நான் எனது கிரணங்களினால் வளர்த்து வந்தேன். இவ்விதமாக அந்த கர்ப்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வர, அதிலிருந்து மிகவும் அழகிய கன்னி ஒருத்தி தோன்றினாள். அவள் தான் இப்பொழுது மாரிஷை என்ற பெயருடன் வளர்ந்து கொண்டிருக்கிறாள். இந்த மரங்களே இந்த மங்கையை உங்களுக்குத் தருவதால், உங்களுடைய கோபத்தை விட்டு விடுங்கள். இந்த மாரீஷையானவள் கண்டுமாமுனிவர் பிரமிலோசையிடம் விட்ட வீரியத்தாலே, தருக்களிலே தரித்து, வாயுவும் நானும் வளர்த்ததால், கண்டு முனிவருக்கும் மரங்களுக்கும் எனக்கும் வாயுவுக்கும் பிரமிலோசைக்கும் மகளாகிறாள். இது நிற்க, கண்டு மகரிஷியானவர், பிரமிலோசை சென்ற பிறகு தமது தவம் க்ஷீணித்ததற்காக மிகவும் மனம் வருந்தி, ஸ்ரீவிஷ்ணு தேவனின் நிவாஸ ஸ்தானமான ஸ்ரீபுரு÷ஷாத்தமம் என்று வழங்கப்படும் ஒரு மலைக்கு வந்து அங்கே ஏகாக்கிர சித்தத்தோடு ஹரியை ஆராதித்தவண்ணம் மகாநிஷ்டையிலிருந்து வந்தார் இவ்வாறு சந்திரன் கூறி முடித்தான். அதைக்கேட்ட பிரசேதசர்கள் சந்திரனை நோக்கி, மகாத்மாவே ஸ்ரீமந்நாராயணன் திருவுள்ளம் உவக்கும்படி கண்டு மகரிஷி செய்த அந்தப் பிரமபார ஸ்துதியை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அதை நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். உடனே சந்திரன் கூறினான்.

முடிவற்றதும், தாண்டக் கூடாததும் காமக் குரோத மோகாதி திமிங்கலங்கள் நிறைந்ததும் பயங்கரமானதுமான சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு ஒரு தெப்பத்தைப் போல இருப்பவனும், இதற்குப் பரமமான முடிவாக இருப்பவனும், உபதேச பரம்பரையினால் அறியப்பட்டவனும் அளவற்ற சக்தியுடையவனும், தேச, கால, பொருள்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாதவனும் நிறைவு பெறாத கர்மாதிகளைத் தனது திருநாம சங்கீர்த்தனத்தினாலே நிறைவேற்றுகிறவனும், பிரம்மாதிகளான சகல ஆன்ம கோடிகளுக்கும் மேம்பட்டவனாய் காரணமாய் நிரதிசய ஆனந்தரூபனாய் இருக்கிறவனும், பிரம்மாதிகளைப் போல், காலவசத்தாலே அகப்படாமல் சகல சக்திகளோடுங்கூடி நித்தியமாய்த் தேஜோமயமாய் விளங்கும் திவ்யமங்கள விக்கிரகமுடையவனாய் ஆனந்த ஸ்வரூபியாய் இருப்பவனும், முக்கியத்துக்கு முடிவிடமாயும் வேத வைதீகங்களைப் பரிபாலிப்பவனாயும் பிரதானமும் சீவனும் பிரளய காலத்தில் லயமடைகிற ஸ்தானமாயும், யாவற்றுக்கும் கலப்புண்டாகாமல் இருக்கும்படி ஏற்பட்ட அணையாயும், முக்தியடைந்தவர்களுக்கும் மேம்பட்டவன் என்று சொல்லும்படியான காரணத்துவ சேஷித்துவங்களையுடையவனாகவும், பிரபஞ்சத்துக்கு பரிய வசானமான காலத்துக்கும் ஸ்தானமாயும் ஆகாயம் முதலான விபுத்திர வியங்களையும் நிறைப்பவனாயும், சகல ரக்ஷகர்களும் ரக்ஷகனாயும் இருக்கிற ஸ்ரீவிஷ்ணுதேவா! ஜகத்துக்குக் காரணமான விராட் புருஷனும் அவனுக்கு காரணமான அகங்காரமும் அதற்குக் காரணமான மகத்தத்துவமும் அதற்குக் காரணமான பிரகிருதியும் இந்தத் தத்துவங்களின் முக்கிய காரியங்களும் ஆகி, காரிய காரண ரூபமாகக் காணப்பட்டுக் கொண்டு, சுவாபாவிகங்களும் அனந்தங்களுமான ஞானம், பலம், ஐசுவரியம், வீரிய சக்தி தேஜசவுசீரிய, வாதசல்லய சௌரிய, தைரியாதி சகல கலியாண குணங்களுக்கும் ஆசிரயனாகி கிரியா சொரூபங்களாலேயும் கர்த்துரு சொரூபங்களாலே÷யும், சேதனா சேதனங்களையெல்லாம் ரட்சித்து வருகின்றான். வேதங்களுக்கு அதிபதியும் வேத வேதாந்தங்களினால் அறியப்படுவோனும், வேத வேதாந்த சாஸ்திரங்களும், அந்த ஸ்ரீவிஷ்ணுவேயன்றி வேறல்ல. சாஸ்திர ஜன்யம், விவேக ஜன்யம் என்று வழங்கப்படும் இரண்டுவித ஞானமும், முதல் வேத பிரவர்த்தனான பிரமாவும் ஸ்மிருதி பிரவர்த்தகரான மனு முதலானவரும், இந்த அச்சுதனேயாவன். அபக்ஷயாதி தோஷங்களை அடையாமல் ஜனன ரகிதமும் அட்சரமும் நித்தியமுமான பரப்பிரமம் அந்த ஸ்ரீவிஷ்ணுவேயாகும்! அந்தப் பிரமமே, பக்த பரிபாலானார்த்தமாக இந்தப் புனிதப் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரத்தில் சகல கல்யாண குணங்களும் பூரணமாக விளங்கும்படி புரு÷ஷாத்தமன் என்கின்ற அரீச்சாரூபியாய்த் திருவவதாரஞ்செய்தருளி விளங்கா நின்றது. ஆகையால் அந்தக் கேசவனைச் சிந்தித்து சரணடைந்து நிற்கிற அடியேனிடத்தில் சத்கிரியா யோகங்களுக்குப் பங்கம் ஏற்படும்படி உண்டாகும். ராகத்து வேஷலோப மோகாதி துர்க்குணங்கள் சாந்தமாகக் கடவன! என்று கண்டு முனிவர் பரமமான பிரமபார ஸ்துதியை ஜபித்து கேசவனை ஆராதித்து சித்திபெற்றுப் பரமபதத்திற்குச் சென்றார்.

இனி மாரிஷை என்னும் கன்னிகையின் முந்திய பிறவியின் சரிதத்தைச் சொல்கிறேன், கேளுங்கள், இதைச் சொல்வதால் எனக்குப் பெரியதொரு காரிய சித்தியும் இதைக் கேட்பதால் உங்களுக்கு மேன்மையான பல சித்தியும் உண்டாகும். உருவின் கர்ப்பத்தில் ஜனித்த இந்த மாரிஷை பூர்வஜன்மத்தில் ஓர் அரசனின் பத்தினியாக இருந்தாள். புத்திரப் பேறடையாமலேயே இளவயதில் விதவையானாள். பிறகு பக்தியுடன் ஸ்ரீமந்நாராயணனை ஆராதித்து வந்தாள். அதனால் அந்த எம்பெருமான் திருவுள்ளம் உவந்து, பிரத்யட்சமாகி அந்தப் பெண்ணைப் பார்த்து, பெண்ணே! உனக்குப் பிரியமான வரத்தைக் கேள் என்றார். அதற்கு ராஜபத்தினியும் சுவாமியைப் பார்த்து, சுவாமி! அடியேன் இளவயதிலேயே வைதவ்யத்தையடைந்து சந்தானமற்ற துர்த்தசையில் இருக்கிறேன். இதனால் எனது இந்தப் பிறவியே வீணாயிற்று! இனி உம்முடைய கருணையால் அடியேனுக்கு ஜன்ம ஜன்மங்களிலேயும் சர்வ ஜகத் பூஜ்யர்களான புருஷர்களும் பிரமனுக்கு இணையான புத்திரனும் உண்டாக வேண்டும். நானும், சகலஜன இருதயானந்தகரமான அழகோடு, அயோநிஜையாய்ப் பிறக்க வேண்டும். தேவரீர், கிருபை கூர்ந்து இந்த வரங்களை எனக்கு வழங்கியருள வேண்டும் என்று வேண்டினாள். வணங்கி வழிபட்டாள். தன் முன்பு வழிபாடு செய்த அந்த வனிதையை விஷ்ணு பகவான் தமது தாமரை மலர்க்கரங்களால் எடுத்து; பெண்ணே! உனக்கு வேறொரு பிறவியிலே பிரசித்தியும் புகழும் உடையவர்களாய் மகா உதாரகுணமுள்ள கணவர்கள் பத்துப்பேர் உண்டாவார்கள். மகாத்மாவாகவும்; பலபராக்கிரமத்துடன் பிரமனுக்கு சமானமாகவும் உள்ள மகன் ஒருவனும் பிறந்து, திரிலோகமும் நிறையும் படியான சந்தானத்தையுடையவனாய் அனேக வமிசங்களுக்குக் கர்த்தாவாக இருப்பான். நீயும் பேரழகும் நற்குணங்களும் கொண்ட பதிவிரதையாய் அயோநிஜையாய், சகல ஜனங்களுக்கும் இருதய ஆனந்தமுண்டாகும்படி இருக்கக் கடவாய்! என்று அருளிச் செய்து அந்தர்த்தானமானார். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணனுடைய கிருபையால் இச்சித்த வரங்களைப் பெற்ற அந்த ராஜபத்தினியே இப்பொழுது மாரிஷையாக பிறந்திருக்கிறாள். ஆகையால் பிரசேதசர்களே; அந்தக் கன்னிகையை நீங்கள் ஏற்பீராக என்று சந்திரன் சொன்னான். உடனே பிரசேதசரர்கள் தங்கள் கோபத்தை விட்டுச் சாந்தமடைந்தார்கள். மரங்களும் தங்கள் கன்னிகையான மாரிஷையை கொடுக்க, அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு அந்த மங்கையிடம் பிரசேதசரர்கள் பதின்மராலும் மகானுபாவனான தக்ஷப் பிரஜாபதி பிறந்தான். இந்தப் பிரஜாபதியே பூர்வத்தில் பிரமாவினுடைய தக்ஷிண அங்குஷ்டத்திலிருந்து பிறந்திருந்தான். மகா தபசியாசியான அந்தத் தக்ஷன், பிரஜைகளைச் சிருஷ்டிக்க நினைத்து சரங்களும் அசரங்களும் இருபாதங்களும், நான்கு பாதங்களுமான ஐந்து ஜாதங்களைப் படைத்து பிரமாவின் ஆக்ஞையைப் பரிபாலித்தான். அந்த விவரத்தைக் கேளுங்கள்.

தக்ஷன் ஐம்பது பெண்களைப் பெற்றான். அவர்களில் பத்துப்பெண்களைத் தருமனுக்கும் பதின்மூன்று பெண்களை காசியபருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் கொடுத்தான். அப்பெண்களிடம் தேவ; தைத்ய, தானவ புசங்க, கந்தர்வ, தேவர்கள் ஜனித்தார்கள். மைத்ரேயரே! அது முதலாகத்தான் பிரஜைகள் ஆண் பெண் உடலுறவினால் பிறந்து வருகின்றனர். அதற்கு முன் பூர்வ காலத்திலே தவம் மிகுந்த மகாத்மாக்கள் வெறும் தரிசன ஸ்பரிச சங்கல்பத்தினாலேயே சந்தானங்களை உண்டாக்கி வந்தனர். இவ்வாறு பராசரர் கூறி நிறுத்தினார். அப்போது மைத்ரேயர், அவரை நோக்கி, முனிவரே பூர்வத்தில் தக்ஷன் என்பவன் பிரும்மாவின் வலது பாதத்தின் கட்டை விரலில் பிறந்தான் என்று கேட்டிருக்கிறேன். இப்போது பிரசேதசர்களால் பிறந்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்த விஷயம் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. சந்திரனுக்குப் பாட்டனான தக்ஷன், திரும்பவும் அவனுக்கு எப்படி மாமனானான்? என்று கேட்க பராசரர் கூறலானார். சகல பூதங்களுக்கும் உற்பத்தியும் அழிவும் நித்தியம்! ஆகையால் திவ்ய ஞானமுடைய முனிவர்களுக்கு இதில் சந்தேகம் உண்டாவதில்லை. அவர்கள் மயங்குவதுமில்லை தக்ஷன் முதலான சகல தேவ முனிவர் கூட்டமும் யுகந்தோறும் பிறந்து லயத்தை அடைந்து வருகின்றனர். ஆகையால் இதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. பூர்வகாலத்தில் வயதும் இல்லை. பெரியவன் சிறியவன் என்று வேறுபாடும் இல்லை. தவத்தாலும் ஞானத்தாலும் உயர்ந்தவர்களே மேலானவராகக் கருதப்பட்டார்கள்! என்றார் பராசரர். முனிவரே! தேவர்கள்; தானவர்கள், கந்தருவர்கள், ராக்ஷசர்கள் முதலானவர்களின் உற்பத்தியை எனக்குத் தெளிவாகக் கூறவேண்டும் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். கமலாசனான பிருமனின் நியோகத்தால் முன்பு தேவர்கள் ரிஷிகள்; கந்தர்வர்கள்; அசுரர்கள், பன்னகாதி பூதங்கள் முதலானவர்களைத் தக்ஷன் தனது சங்கற்பமாத்திரத்தாலேயே சிருஷ்டித்தான். அவை அபிவிருத்தியாகாமல் நசித்துப் போனதைக் கண்டு, அவன் மீண்டும் பிரஜாசிருஷ்டியில் முயன்றான். அதற்காக வீரணப் பிரஜாபதியின் மகளான அசிக்கினி என்பவளை மணந்து அவளிடம் ஐயாயிரம் பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் அரிய சுவர்கள் என்கிற பெயரால் புகழ்பெற்று, பிரஜாவிருத்தி செய்ய எத்தனித்தார்கள். அப்போது நாரத முனிவர் அவர்களிடம் வந்து, அரிய சுவர்களே! பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்த நீங்கள் ஒரு காரியத்தை முன்னதாகச் செய்ய வேண்டும். அதாவது பூமியின் நிலப்பரப்பையும் உயர்வையும் தாழ்வையும் அறிய வேண்டும். நீங்கள் பாலியர்கள் ஆகையால் அதனை அறியமாட்டீர்கள். அப்படியிருக்க நீங்கள் பிரஜைகளைச் சிருஷ்டிப்பது எப்படி? தடையில்லாமல் எங்குமே செல்லும் திறமையுடைய நீங்கள் பூமியின் அளவு பரிமாணங்களை ஏன் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் பூமி பரிமாணத்தை அறிந்து வருகிறோம் என்று கூறிவிட்டு நான்கு திக்கிலும் சென்று, சமுத்திரத்தில் சேரும் நதிகளைப் போல் திரும்பி வராமலேயே மறைந்து விட்டார்கள். அவ்வாறு அரியசுவர்கள் நாசமடைந்ததைப் பிரசேதசனான தக்ஷன் கேட்டுத் திரும்பவும் வீரண புத்திரியான அசிக்கினியிடத்தில் ஆயிரம் மக்களைப் பெற்றான். அவர்கள் சபளாசுவர்கள் என்ற பெயருடன் பிரஜா சிருஷ்டி செய்ய எத்தனித்தனர். அப்போது முன்போலவே நாரத முனிவர் வந்து முன் சொன்னது போல அவர்களிடம் சொன்னார். உடனே அவர்கள் சரிதான் என்று தங்கள் மூத்த சகோதரர்கள் சென்ற மார்க்கத்திலேயே பூமியின் பரிமாணத்தை அறிந்து வரச்சென்று திரும்பி வராமலே போய்விட்டார்கள். அதுமுதல், தூரதேசதனான சகோதரனைத் தேடிக்கொண்டு ஒருவன் சென்றால் நாசமடைவான்! என்பது சொல் வழக்காயிற்று.

பிறகு சபளா சுவர்களும் நாசம் அடைந்ததைத் தக்ஷன் கேள்விப்பட்டு மிகவும் கோபங்கொண்டு நாரதரை அழைத்து, நாரதா! எங்குமே நிலைபெறாமல் திரிந்து கொண்டேயிருப்பாயாக என்று சபித்தான். மீண்டும் தக்ஷன் பிரஜா சிருஷ்டி செய்ய நினைத்து, அசிக்கினியிடத்தில் அறுபது பெண்களைப் பெற்றான். அவர்களிலே பத்துப்பெண்களைத் தருமனுக்கும், பதின்மூன்று பெண்களைக் காசியபருக்கும், இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் திருமணம் செய்து கொடுத்தான். அரிஷ்டநேமிக்கு நால்வரையும், வெகு புத்திரனுக்கு இருவரையும், ஆங்கிரசுக்கு இரண்டு பெண்களையும், பிருசாசுவனுக்கு இரண்டு பெண்களையும் கொடுத்தான். முதல் பத்துப் பெண்களாகிய அருந்ததி, வசு, ஜாமி, லங்கை, பானு, மருத்வதி, சங்கல்பை, முகூர்த்தை, சாத்தியை, அசுவை என்று சொல்லப்பட்ட கன்னிகளைத் திருமணஞ்செய்து கொண்ட தருமன், விசுவையின் மூலம் விசுவ தேவதைகளையும், சாத்தியையிடம் சாத்தியர்களையும், மருத்துவதியிடம் மருத்தவத்தர்களையும், முகூர்த்தையிடம் முகூர்த்தர்களையும், பானுவிடம் பானுக்களையும், லங்கையிடம் சகோஷனையும், ஜாமியிடம் நாகவீதி என்ற திவ்யமார்க்க அபிமானியையும், அருந்ததியிடம் பூமியைச் சேர்ந்த பொருள்கள் அனைத்தையும் சங்கல்பையிடம் சங்கல்ப்பன் என்பவனையும் பெற்றான். அவர்களில் அபாரமான பலமும் தேஜஸும் உடையவர்களாய் விளங்கும் அக்கினி முதலான வசுக்களின் வமிசத்தை விவரமாகச் சொல்கிறேன்; கேளுங்கள். ஆபன், துருவன், சோமன், அனிலன், பிரத்தியூஷன், பிரபாசன் முதலான வசுக்கள் எண்மர் ஆவர். அவர்களில் ஆபனுக்கு வைஸ்தப்த்தன், சிரமன், சிராந்தன், துனி என்ற பிள்ளைகள் உண்டானார்கள். துருவனுக்கு சகல உலகங்களையும் நடத்தும் காலன் உற்பத்தியானான். சோமனுக்கு வர்ச்சன் என்ற மகன் பிறந்தான். அவனால்தான் ஜனங்களுக்கு வர்ச்சஸ் என்ற பிரகாசம் உண்டாகிறது. தருமனுக்கு மனோகரை என்பவளிடம் திரவிணன், உதவகன், சிசிரன், பிராணன், ரமணன் என்னும் பிள்ளைகள் பிறந்தார்கள். அனலனுக்கு சிவை என்பவளிடத்தில் புரோசவன், அவிக்தி, யாதகதி என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். அனலன் என்றால் அக்கினியாகும். ருத்திர வீரியத்தை அக்கினியே ஏற்றுக்கொண்டு வழியில் நாணற் புதரில் விட்டதால், சுப்ரமணியரை அக்கினி புத்திரன் என்றும் இங்கு கூறப்படுகிறது. சாகன் முதலியோர், குமாரனின் தம்பியர் ஆவர். அனலனுக்கு நாணற்புதரிலே குமாரன் என்று சொல்லப்படும் சுப்பிரமணியன் உண்டானான். அவனுடைய முதுகிலிருந்து, சாகன், விசாகன், நைகமேஷன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுப்பிரமணியன் கிருத்தைகளின் ஸ்தன்ய பானஞ் செய்ததால் அவர்களுக்குப் பிள்ளையாகிக் கார்த்திகேயன் என்ற பெயரைப் பெற்றான். பிரத்யூஷனுக்கு தேவன் என்ற முனிவன் ஜனித்தான். அவனுக்க பொறுமையும் புத்தியும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் ஒருவன் பிரகஸ்பதி, அந்தப் பிரகஸ்பதிக்குச் சகோதரியான ஒருத்தி யோக சித்தியுடையவளாய், விரக்தியடைந்து பிரமசரியத்தோடு உலகமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் வசுக்களில் எட்டாவதான பிரபாசனனுக்கு மனைவியாகி விசுவகர்மாவைப் பெற்றாள். அவன் விசித்திரங்களான அநேக சிற்பக்கலைகளை அறிந்தவனாய் தேவதச்சனாகி அநேக திவ்ய ஆபரணங்களையும் விமானாதிகளையும் நிர்மாணஞ் செய்தான்.

அவன் செய்த சிற்பங்களில் சிலவற்றை அறிந்துதான் பூவுலகிலுள்ள ஜனங்கள் வேலை செய்து பிழைக்கிறார்கள். மேலும் அந்தப் பெண்ணரசியிடம், அனஜகபாத், அகிர்ப்புத்தினியன், துவஷ்டா, ருத்திரன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் துவஷ்டாவுக்கு விசுவரூபன் என்னும் மகாதவசியான புத்திரன் ஒருவன் பிறந்தான். அறிஞனான ருத்திரனுடைய அமிசமாய் அரண்பகுரூபன், திரியம்பகன், விருஷாகபி சம்புகபர்த்தி, ரைவதன், மிருக வியாழன், சர்வன் கபாலி என்னும் பதினொருவர் பிறந்து, ருத்திரன் என்ற பெயரைப் பெற்று, திரிலோகாதிபதிகளாய் விளங்குகிறார்கள். இவர்களிடமிருந்து அளவற்ற தேஜஸ் வாய்ந்த நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். இது இவ்விதமிருக்க காசிபருக்கு மனைவியாக இருந்த அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரசை, கஷை சுரபி, வினதை, தாம்பிரை, குரோதவசை, இளை, கத்துரு, முனி என்ற பெயருடைய பதின்மூன்று பத்தினிகளில் அதிதி என்பவளுக்குப் பூர்வத்தில் சாட்சுஷ மன்வந்தரத்திலே துஷிதர் என்ற பன்னிரண்டு தேவதைகள். வைவஸ்வத மனுவந்தரம் வரும்போது நாம் யாவரும் அதிதியின் கர்ப்பத்திலே ஜனிக்க வேண்டும்! என்று நிச்சயித்து கொண்டே பிறந்தார்கள். அவர்கள் இந்திரன் விஷ்ணு அரியமன் தாதா; துவஷ்டா, பூஷா, விவசுவான், சவிதா, மித்திரன், வருணன், அமிசு, பகன் என்ற பெயர்களைப் பெற்று, துவாச ருத்திரர்கள் என்று வழங்கப்படுகின்றனர். இப்படியாக வைவஸ்வத மனுவந்தரத்திலே ஆதித்தியர் என்று சொல்லப்படுவோர், சாட்சுஷ மனுவந்தரத்தில் துஷிதர் என்று வழங்கப்பட்டனர். சந்திரனுக்கு மனைவியான அசுவினி முதலான இருபத்தேழு பெண்களுக்கும் காந்தியுள்ள மக்கள் உண்டானார்கள். அரிஷ்டநேமியின் பத்தினிகள் நால்வருக்கும் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள். வெகுபுத்திரனுக்கு பத்தினிகளான இருவரிடத்திலும் காற்று, வெயில், மழை, துர்ப்பிஷம், இவற்றுக்கு ஏதுக்களாய் கபில வர்ணமும் இரத்த வர்ணமும் அரித்ராவர்ணமும், நீலவண்ணமும் கொண்ட நான்கு மின்னல்கள் உண்டாயின. ஆங்கிரசுக்கு பிரம ரிஷிகள் துதிக்கத்தக்க மேன்மை பெற்ற பிரதியங்கிரகங்கள் என்ற மந்திரங்கள் உதித்தன. பிருசாசுவனுக்கு, திவ்விய பாணங்கள் பிறந்தன. இவ்விதமாகக் கல்பாதி காலத்திலே உண்டான முப்பத்து முக்கோடி தேவதைகளும், தினந்தோறும் சூரியன் உதயமாகி மறைவதைப் போல ஒவ்வொரு மனுவந்தரத்திலும் பிறந்து கொண்டே வருவார்ரகள். இவர்கள் சுயஇச்சைப்படி பிறப்பார்கள். திதி என்பவளிடத்தில் காசிபருக்கு இரணியகசிபுவும், இரணியாக்ஷனும், விப்ரசித்தி என்ற ராக்ஷதனுக்குப் பாரியையான சிம்மிகை என்ற பெண்ணும் பிறந்தார்கள். அவர்களில் இரணியகசிபுக்கு அனகிலாதன், ஹிலாதன், பிரகலாதன், சம்கிலாதன் என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே பிரகலாதன் ஜீதேந்திரியனும், மகா பாகவதனுமாய் ஸ்ரீமந்நாராயணனிடத்தில் பக்தியுடையவனாய் விளங்கி வந்தான்.

தைத்திய ராஜனான இரணியகசிபுவின் கட்டளையினால், அசுரர் கொளுத்திய அக்கினியும் ஸ்ரீவாசுதேவனது இதயகமலத்தில் வசித்ததால் மகாத்மாவான பிரகலாதனைத் தகிக்கமாட்டாமற் போயிற்று. பிரகலாதன் என்னும் அந்த மகானுபாலன், பாசங்களினால் கட்டப்பட்ட கடலின் நடுவேயிருந்து அசைந்த போது அநேக மலைகளும் காடுகளும் நடுங்கின. பூமண்டலமே நடுங்கியது. எங்குமே எம்பெருமானைப் பாவித்ததால், அந்த மகானின் உடல் மலைபோலக் கடினமாயிற்று. அதனால் அசுரர்கள் பிரயோகித்த பாணங்கள் அவரைப் பாதிக்கவில்லை. இரணியகசிபு ஏவிய லிஷாக்கினிச் சுவாலை வீசும் சர்ப்பங்கள் அந்த மகாத்மாவை பீடிக்கவில்லை. பர்வதங்களால் அமுக்கப்பட்ட போதும், ஸ்ரீவிஷ்ணு ஸ்மரணை என்ற கவசத்தால் பிரகலாதன் காக்கப்பட்டு, மரணமடையாமற் போனான். சொர்க்கத்தின் உயரமான இடத்திலிருந்து, பிரகலாதனை இரணியகசிபு கீழே தள்ளியபோதும் அந்த மகாத்மாவை பூமாதேவி ஏந்திக் கொண்டாள். அதன்பிறகு இரணியகசிபு மிகவும் ஆத்திரமடைந்து சம்சோஷகன் என்ற வாயுவை ஏவினான். ஆனால் மதுசூதனான விஷ்ணுவின் இருதயத்திலே பிரகலாதன் இருந்ததால், அந்த வாயு பிரகலாதனிடம் புகுந்து நாசமடைந்து போயிற்று. திக்கு கஜங்கள் எல்லாம் இரணியகசிபுவின் உத்தரவினால் பிரகலாதன் மீது பாய்ந்து தந்தங்கள் ஒடிந்து, மதமழிந்தன. நைத்தியப் புரோகிதர்களால் நிருமிக்கப்பட்ட கிருத்தியைகள். கோவிந்த சரணாரவிந்தங்களில் மனதைச் செலுத்தியிருந்த அந்த மஹா யோகிந்தனைப் பாதிக்காமற் போயின. மகாமாயாவியான சம்பராசுரன் என்பவன், புண்ணிய புருஷனான பிரகலாதன் மீது ஏவிய அனந்த மாயைகளும் ஸ்ரீவிஷ்ணுவின் திருக்கையால் விடப்பட்ட சக்கராயுதத்தால் சாம்பலாயின. இரணியகசிபுவின் சமையற்காரர்கள் ஆலகாலம் என்ற கொடிய விஷத்துடன் கலந்து வைத்த அன்னமானது பிரகலாதனின் உதரத்தில் ஜீரணமாகி விட்டது. சர்வ பூதசமனும் சர்வ உயிர்களுக்கும் மித்திரனான அந்த மகாத்மா, தன் சரீரத்தைப் போலவும் தன் பிள்ளைகளைப் போலவும், சர்வ பூதங்களையும் லாலனை செய்து வருவான். அந்த ஞானி சத்புருஷர்களுக்கெல்லாம் உபமானமாகப் புகழ்பெற்று விளங்கினான்.

கருத்துகள் இல்லை: