சனி, 7 செப்டம்பர், 2019

விஷ்ணு புராணம் முதல் அம்சம்(பகுதி-2)

9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும்

பராசரர் மேலும் தொடர்ந்து கூறலானார்;

மைத்திரேயரே! நீர் அறிந்து கொள்ள விரும்பிய பிராட்டியாரின் திருவவதார சரித்திரத்தை, நான் முன்பு மரீசி மாமுனிவரிடம் கேட்டறிந்தபடிக் கூறுகிறேன், கேளும். ருத்திரருடைய அம்சமான மிகவுங்கோபமுள்ள துர்வாச மஹாமுனிவர், பூமண்டலமெங்கும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு சமயம், மனிதர்கள் எளிதில் அடைய முடியாத வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது, அங்கே ஒரு வித்தியாதர மங்கை தென்பட்டாள். அவளது கையில் பரிமள மிகுந்த ஒரு மலர் மாலை இருப்பதைத் துர்வாச முனிவர் கண்டார். அவர் அந்த மங்கையை நோக்கி, பெண்ணே! இந்தப் பரிமளம் மிகுந்த மலர் மாலையை என்னிடம் கொடுப்பாயாக என்று யாசித்தார். அந்த மாலையை வித்தியாதர மங்கை அவரிடம் பக்தியோடு கொடுத்தாள். அந்த மலர் மாலையை துர்வாசர் தமது தலையிலே சுற்றிக்கொண்டு சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது, வழியிலே தேவேந்திரன் தன் வாகனமான ஐராவதத்தின் மீது பவனி வந்து கொண்டிருந்தான், அவனை துர்வாசர் கண்டதும் தமது சிரசில் சுற்றியிருந்த மலர் மாலையை அவிழ்த்து யானையின் மீது அமர்ந்திருக்கும் இந்திரன் மீது விட்டெறிந்தார். இந்திரன் அந்த மலர் மாலையை பிடித்து, ஐராவத யானையின் மத்தகங்கள் மீது போட்டான். அதனால் அந்த யானை மதங்கொண்டு, அந்தப் பூமாலையை தன் துதிக்கையால் எடுத்து, முகந்து பார்த்துத் தரையில் எறிந்தது. அதைக் கண்டதும் துர்வாசருக்கு மிகவும் கோபம் பொங்கியது. அவர் இந்திரனை நோக்கி, அடா, வாசவா! ஸ்ரீ ஐசுவரிய கர்வத்தால் ஸ்ரீமகாலக்ஷ்மியின் வாசஸ்தலமான மலர்மாலையை அங்கீகரிக்காமற் போனாய். சிரசில் நான் சூடிய மாலையை நீ மதிக்காமல் தரையில் எறிந்துவிட்டாய். ஆகையால் உன்னுடைய ஐசுவரியங்கள் சீக்கிரம் நாசம் அடையக்கடவது! என்னை அவமதித்த காரணத்தால் உன் உலகம் மகாலட்சுமியின் வாசம் ஒழிந்து துர்த்தசை அடையக் கடவது என்று சபித்தார். பிறகு இந்திரன் வெகு பரபரப்புடன் தன் யானையிலிருந்து இறங்கி, துர்வாச முனிவரின் பாதங்களில் வீழ்ந்து, தன்னை மன்னிக்கும்படி கெஞ்சினான். அப்படியவன் வேண்டிக்கொண்டும், துர்வாசரின் கோபம் அடங்கவில்லை.

தேவேந்திரா! தயையுடைய இதயமற்றவன் நான்! என்னிடம் மன்னிக்கும் சுபாவம் இல்லை. உனக்கு உட்பட்டுப் பின் பாட்டு பாடும் முனிவர்கள் வேறே இருக்கிறார்கள்! நான் துர்வாசன்! மற்ற முனிவர்களைவிட மாறுபட்டவன்! கவுதமர் முதலியவர்கள், நீ முன்பு செய்த துரோகத்திற்காக உன்னைச் சபித்துப் பிறகு உன்னுடைய விநயத்தின் காரணமாக உனக்கு தயவுசெய்தார்கள். அதுபோலவே என்னையும் நினைத்து விட்டாய்! நான் அப்படிப்பட்டவனல்ல வசிஷ்டர் முதலிய முனிவர்கள் உன்னைச் சிறப்பாகத் துதிப்பதாலேயே உனக்கு இவ்வளவு இறுமாப்பு! அதனால் தான் என்னை நீ அவமதித்தாய். குற்றஞ்செய்தால் தண்டிப்பது தான், நீதியே ஒழிய மன்னிப்பது என் வழக்கமல்ல! நீ ஏன் பயந்தவனை போலக் கபட நாடகம் ஆடுகிறாய்? வந்த வழியே செல்! என்று சொல்லி விட்டுத் துர்வாச முனிவர் சென்று விட்டார். இந்திரனும் தன் யானையின் மீது ஏறித் தேவலோகம் சென்று விட்டான். கேளும் மைத்ரேயரே! அன்று முதல் மூன்று உலகங்களும் லட்சுமி கடாக்ஷமற்று, தாவரங்களுங்கூட க்ஷீணித்தன. அன்று முதல் யாகாதி கர்மங்களும் நன்றாக நடைபெறவில்லை. தவமுனிவர்கள் நன்றாகத் தவஞ்செய்யவில்லை. தான தருமங்களில் மக்கள் கவனஞ் செலுத்தவில்லை. மக்களிடையே சத்துவகுணம் நலிந்து லோபம் மிகுந்தது. அற்ப விஷயத்திலும் பேராசை மிகுந்தது. அது ஏனென்றால், சத்துவகுணம் எங்கே இருக்குமோ, அங்கே தான் திருமகள் வாசம் செய்வாள். சத்வகுணமும் லட்சுமி கடாட்சத்தையே அனுசரித்திருக்கும் லட்சுமி கடாட்ச மற்றவர்களிடம் சத்துவ குணமும் இராது இந்தப்படியே திரிலோகங்களும் லட்சுமி கடாட்சம் குறைந்தவனாய் மிகவும் துர்தசையடைந்ததால், அரக்கர் கூட்டத்தினர் தேவர்களுக்கு தீங்கிழைக்கலானார்கள்.

அதனால் லோபாதி துர்க்குணங்களுடையவர்களாகவும், லட்சுமி கடாட்சமில்லாதவர்களாகவும் பலமும் சத்துவமும் இல்லாமலும் இருந்த அசுரர்கள் துள்ளியெழுந்து தேவர்களுடன் போர் செய்யத் துவங்கினர். தேவர்கள் தோற்று, பிருமதேவனைச் சரணடைந்தார்கள். தேவேந்திரன் தனக்கு அசுரர்களால் ஏற்பட்டுள்ள துர்த்தசையைக் கூறினான். அதைக்கேட்டதும் பிருமதேவன், தேவர்களே! பராபரங்கள் என்று சொல்லப்படும் உயர்ந்தவைகளுக்கும், தாழ்ந்தனவற்றிற்கும் ஈசுவரனும் அசுரரையெல்லாம் நாசஞ்செய்ய வல்லவனும் உற்பத்தி, ஸ்திதி, லயங்களுக்குக் காரணமானவனும் தனக்கு ஒரு காரணமின்றிதானே சுதந்தரமாக இருப்பவனும், பிரஜாபதிகளுக்கெல்லாம் அதிபதியாக விளங்குபவனும் ஒருவராலும் வெல்ல முடியாதவனும், முடிவற்றவனும் பிரகிருதி புருஷாக்களிடம் உட்புகுந்து காரியங்களைச் செய்பவனும், தனது திருவடிகளையடைந்தவரின் துன்பங்களை நீக்க வல்லவனுமான ஸ்ரீமகாவிஷ்ணுவை சரணமடையுங்கள். அவர் உங்களுக்கு ஷேமத்தைச் செய்தருளுவார்! என்று சொல்லி, அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு திருப்பாற்கடலின் வடகரையிற்சென்று ஸ்ரீயப்பதியை உத்தேசித்துத் தேவர்களுடன் துதி செய்யலானார். சர்வமயனும், சர்வ ஈசனும், முடிவற்றவனும் பிறப்பில்லாதவனும்; சுருங்கல் முதலியவையற்றவனும் உலக ஆதாரனும் தனக்கு வேறு ஆதாரமற்றவனும்; அப்பிரமேயனும்; பேதிக்க முடியாதவனும் சூட்சுமத்திலும் அதிசூட்சுமமானவனும் ஸ்தூலங்களில் அதிஸ்தூலமானவனும் ஆகிய ஸ்ரீமந் நாராயணனுக்குத் தண்டனிடுகிறேன்! அடியேன் முதலான சகல பிரபஞ்சமும் எவனிடமிருந்து தோன்றியதோ; எவனிடம் இருக்கின்றதோ; எவனிடம் லயமாகுமோ; சர்வ பூதங்களும் எவனுடைய சரீரமோ எந்தத் தேவன் மேலானவர்களுக்கும் மேலானவனோ; எவன் இருபத்து நான்கு தத்துவங்களுக்கும் பரனான புருஷனுக்கும் மேற்பட்டவன் என்று பரமான்மா என்னும் மோட்சத்தை அபேட்சிக்கிற யோகிகளால் மோட்சத்துக்காக நினைக்கப்படுகிறானோ எவனிடத்தில் பிராகிருதமான சத்துவாதி குணங்களில்லையோ, தூய்மையான சகல வஸ்துக்களுக்கும் மிகவும் தூயவனான அந்த ஆதிபுருஷன் அடியவரான எங்களுக்குப் பிரத்தியட்சமாக வேண்டும். கலை; காஷ்டை; நிமிஷம் முதலிய கால சூத்திரத்திற்குக் கோசரமான இடத்தில் பிராட்டி, திவ்விய மங்கள விக்கிர சமபரி ஜனம் முதலான விபூதிகள் இல்லையோ அப்படிப்பட்ட ஸ்ரீஹரி, எங்களுக்குப் பிரசன்னமாவானாக!

எவன் பரமேசுவரனாயும் அஜனுமாக இருந்தும் எல்லோருக்கும் அந்தர்யாமியாக இருப்பதால் முக்தியடைந்த ஆன்மாவாக உபசார வழக்காகச் சொல்லப்படுகிறானோ, அந்த ஸ்ரீமந்நாராயணனானவன் எங்களுக்குப் பிரசன்னமாவானாக! எவன் காரணமாகவும், காரியமாகவும், காரணத்திற்குக் காரியமாகவும், காரியத்திற்குக் காரியமாகவும் இருக்கிறானோ, அவன் பிரசன்னமாவானாக! பிரகிருதியின் காரியமான மகத்தின் காரியமான அகங்காரம் எது உண்டோ, அதன் காரியமான தன் மாத்திரைகளும் உண்டல்லாவா? அவற்றின் காரியமான பஞ்ச மகாபூதங்கள் உண்டல்லவா? அவற்றின் காரியமான பிரம்மாண்டத்தின் காரியமாக இருக்கிற பிரம்மனும், அவனிடத்தில் உண்டான தட்சாதிகளும் ஆகிய இந்த லோகப் பிரவாகம் எல்லாம் எவன் தானேயாக இருக்கிறானோ, அத்தகைய எம்பெருமானை நாங்கள் சரணடைகிறோம்! எவன் சப்தம் முதலிய சகல போக்கியங்களையும் அனுபவிப்பவனாகவும், சப்தம் முதலிய அனுபவப் பொருளாகவும், சகலப் பிரபஞ்சங்களுக்கும் சிருஷ்டி கர்த்தாவாகவும், சிருஷ்டி காரியமாகவும், சர்வ சரீரகனாவும் இருக்கிறானோ அப்படிப்பட்ட கர்த்தனை நாங்கள் வணங்குகிறோம்! விசுத்த ஞானமயமும் அஜமும் அட்சரமும் அவ்யயமும் அவ்யக்தமுமாய்த் தூலமும் சூட்சுமமுமல்லாமல், சகல விசேஷண வர்ச்சினமாக இருக்கிற அந்த பரமாத்மாவான விஷ்ணு சொரூபத்தை வணங்குகிறோம்! பரப்பிரும்ம சொரூபனான அந்தப் புரு÷ஷாத்தமனுடைய பதினாயிரத்தில் பதினாயிரம் அம்சமான ஏகதேசமான அம்சத்தில், சகல பிரபஞ்ச சக்தியும் இருக்கிறதோ, அந்த அவ்யனுக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்? எப்போதும் தியானத்தில் இருக்கிற யோகிகள் தங்களுடைய பாவ புண்ணிய ரூபமான கர்மங்கள் நசித்தவுடன் எந்தச் சொரூபத்தைப் பிரணவப் பொருளாகக் காண்கின்றனரோ, எந்த சொரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் நானும் சங்கரனும் அறியமாட்டாமோ, தனக்கு முன்பு யாரும் இன்றி தானே யாவற்றுக்கும் முன்னாக இருக்கிற எந்தத் தேவனுடைய சக்திகள் பிரம்ம விஷ்ணு சிவாத்துமகங்களாகி சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்யுமோ அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவினுடைய சொரூபத்திற்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம். சர்வேசுவரா! சர்வபூத சொரூபா! அச்சுதா! ஸ்ரீவிஷ்ணுபகவானே! உனது திருவடித்தாமரையை நம்பியிருக்கும் அடியோர்களுடைய கண்களுக்கு எதிரே பிரசன்னமாவீராக! என்று சதுர்முகப் பிருமதேவன் துதித்தார் மற்ற தேவர்களும் எம்பெருமானைத் தெண்டனிட்டு, தேவதேவ! எங்கள் முன் பிரசன்னமாகிச் சேவை சாதித்தருள வேண்டும்! எம்பெருமானே ! இரண்யகர்ப்பனும் ருத்திரனும் உன்னுடைய பரமசொரூபத்தை மெய்யாக அறியமாட்டார்கள். ஜகத்நிவாசனாய் எங்கும் நிறைந்தவனான உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! என்று துதி செய்தார்கள். அதைக்கண்ட பிருகஸ்பதி முதலான தேவரிஷிகளும் துதி செய்வாராயினர்.

ஆதியாயும், யக்ஞ புருஷனாயும், சகல யக்கியங்களால் ஆராதிக்கத் தக்கவனாயும், பூர்விகர்களுக்குப் பூர்விகனாவும், ஜகத்தை சிருஷ்டிக்கிற பரமேஷ்டிக்குத் தந்தையாயும், இன்னபடி என்று சிறப்பிக்கப்படக்கூடாதவனாயும் இருக்கிற ஸ்ரீயப்பதிக்குத் தெண்டன் இடுகிறோம். ஆறுகுண சம்பன்னனே! முற்பட்டவைகளுக்கும் பிற்பட்டவைகளுக்கும் அதிபதியானவனே! பாக்கிய சொரூபியே! அழிவற்றவனே! உன்னுடைய திருவடித் தாமரைகளைச் சரணமாகப் பற்றிய அடியேங்கள்மீது கிருபை கொண்டு சேவை சாதிப்பாயாக! எம்முன் இந்தப் பிரமதேவனும், ஏகாதச ருத்திரர்களுடன் இந்த மகாதேவனும், துவாதச ஆதித்தர்களுடன் இந்தப் பூஷாவும், திரேதாக்கினிகளோடு இந்த அக்கினியும் அசுவினி தேவதைகளும் வசுக்களும் மருத்துகளும், விசுவ தேவதைகளும், சாத்தியரும்; மற்றுமுள்ள தேவகணங்களுடன் இந்தத் தேவேந்திரனும் அசுர சேனைகளால் ஜெயிக்கப்பட்டு உன் திருவடித் தாமரைகளையே தஞ்சமாகப் பற்றித் தெண்டன் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கண்ணோக்கம் காட்டி அருள்செய்ய வேண்டும் பரமாத்மா! என்று தேவரிஷிகள் துதித்தார்கள். அப்போது எம்பெருமானான ஸ்ரீமகாவிஷ்ணு சக்கராதி லட்சணங்களுடன் அத்தேவ கணங்களுக்குப் பிரத்தியட்சமாகி சேவை தந்து அருளினார். இவ்விதம் திருவாழித் திருச்சங்குடன் திவ்விய மங்கள விக்கிரகாதிகளையுடையவராய், தேஜோராவியாய்ச் சேவை சாதித்த எம்பெருமானைச் சதுர்முகப் பிருமாவும் மற்ற தேவர்களும் சேவித்து ஆனந்தத்தால் கண்கள் மலர்ந்து, அதிசயத்தால் அடிக்கடி கீழே விழுந்து வணங்கி எம்பிரானைத் துதிக்கலானார்கள். சுவாமி! அநந்தமான தெண்டன் சமர்ப்பிக்கிறோம்! உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமின்றி சமமான அனுக்கிரகம் செய்பவன் நீ! பிரமனும் ருத்திரமூர்த்தியும் இந்திரனும் அக்கினியும் வாயுவும் வருணனும் ஆதித்தனும் யமனும் வசுக்களும் மருத்துக்களும் விசுவதேவர்களும் மற்றும் இங்கு வந்திருக்கிற சகல தேவர்களும் நீயே! ஏனெனில் நீயே அனைவரிடமும் இருந்து நடத்துகிறாய், ஆத்மாவுக்குக் கரணங்கள் போல எல்லோரும் உனக்குச் சேஷபூதராக இருக்கிறார்கள். அன்றியும் உன்னுடைய ஆராதனையான யாகங்களும் சகலவேத மூலமான பிரணவமும் நீ! இவ்விதமான சகல ஆராதனைகளையும் ஏற்று மனமிரங்கிக் காப்பவனும் நீ! எல்லாவற்றையும் அறிபவனும் நீயே! எல்லாவற்றாலும் அறியப்படுவதும் நீயே! உன்னிடமே அகிலப்பிரபஞ்சமும் நிற்கின்றது. அடியேங்கள் அசுரர்களால் ஜயிக்கப்பட்டு மிகவும் விசனமடைந்து, சர்வலோக கரணியனான உன்னைச் சரணமடைந்தோம். சகல பாபநாசகரனான உன்னைச் சரணமடையுமளவு தான் புருஷனுக்கு உபத்திரவமும் விஷயா பிலாஷையும் மோகமும் துக்கமும் உண்டாகியிருக்கும். தயா சமுத்திரனே! சரணாககரான எங்கள் முன் பிரசன்னமாக வேண்டும், என்று கைகூப்பித் தொழுதார்கள். அப்போது சர்வக்ஞனான எம்பெருமான் முகம் மலர்ந்து அனுக்கிரகம் புரிந்து அருள்புரியலானார்.

தேவதைகளே! எனது தேஜஸ் சிறப்பினால் உங்களுடைய பல, சத்துவ, தேஜோ தைரியங்களை அபிவிருத்தியடையச் செய்கிறேன். அசுர தைத்தியர்களோடு நீங்கள் ஓர் உடன்பாடு செய்து கொண்டு திருப்பாற்கடலில் சகல அவுஷதிகளையும் போட்டு, மந்தர மலையை மத்தாகவும் வாசுகியைக் கடையும் கயிறாகவும் செய்து கொண்டு அமிர்தத்தை அடையவேண்டிக் கடையுங்கள். அதனால் உண்டாகும் பயனை நாம் இரு தரத்தாரும் சரியாகப் பங்கிட்டுக் கொள்வோமென்று அந்த தைத்திரியர்களிடம் பேசி, அவர்களை உங்கள் வசம் செய்து கொள்ளுங்கள். இவ்விதமாக, நீங்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும்போது உண்டாகும் அமிர்தத்தை நீங்கள் பானஞ்செய்து நீங்களே மகா பலசாலிகளாகி அமரர்களாவீர்கள்! நான் அந்த அமிர்தம் அசுரர்களுக்குக் கிடைக்காதவாறு செய்கிறேன். இந்தச் செயலில் உங்களுக்கு வேண்டிய சகாயங்களைச் செய்கிறேன் என்று மகாவிஷ்ணு கூறினார். அதைக் கேட்டு தேவர்கள் மகிழ்ந்து, சுவாமியின் சன்னதியிலிருந்து விடைபெற்றுச் சென்று, தங்களுடைய விரோதிகளான அசுரர்களோடு சாம உபாயத்தினால் சமாதானம் செய்து கொண்டு, அமிர்தம் கடைவதில் ஒன்றுபட்டார்கள். இருதரப்பினரும் திருப்பாற்கடலில் அமிர்தம் கடைவதில் முனைந்தார்கள். சகல மூலிகைகளையும் கொண்டு வந்து, சரத்கால மேகத்தைப் போல மிகவும் வெண்மையாக இருக்கும். திருப்பாற்கடலில் போட்டு, மந்தரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு, அதிக உற்சாகத்தோடு கடையத் துவங்கினார்கள். அப்பொழுது எம்பெருமானான விஷ்ணு ஒரு தந்திரம் செய்து, வாசுகி சர்ப்பத்தின் வாலைத் தேவர்கள் பிடிக்கும்படியும் அசுரர்கள் அதன் தலையைப் பிடிக்கும்படியும் செய்தார். அதன் விளைவாக வலுவும் பராக்கிரமங்களும் மிக்க அசுரர்கள் விஷாக்கினிச் சுவாலையுடன் கூடிய வாசுகி என்ற பாம்பின் பெருமூச்சுக் காற்றினால் தேஜசு குறைந்து, பலவீனர்களானார்கள். அந்தக் கொடிய பாம்பின் சுவாச வேகத்தினால் மேகங்கள் அடித்துத் தள்ளப்பட்டு அதன் வால் பக்கமாகச் சேர்ந்த அம்மேகங்கள் பெருமழை பொழியவே, தேவர்கள் அம்மழைத் திவலைகளால் களைப்பு நீங்கிச் சுகமடைந்தார்கள். அப்பொழுது ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலின் மையத்தில் மகா கூர்மரூபந்தரித்து, (ஆமை உருவம் தரித்து) மந்திர மலைக்கு ஆதாரமாக இருந்து அதைச் சுழலச் செய்யச் சாதகமாக இருந்தார். மேலும் வேறொரு திருமேனியுடன் அசுரர்களின் பக்கத்திலே நின்று சங்கு, சக்கராதி திவ்விய ஆயுதங்களைத் தரித்து வாசுகியின் வாலையும், தலையையும் பிடித்து இடமும் வலமுமாக இழுத்துக் கடைந்தார். அதுமட்டுமல்ல, அவர் மிகவும் பெரியதான ஒரு திவ்விய உருவமெடுத்து, அந்த மந்த மலையின், மேற்புறத்தை ஆக்கிரமித்து, அதைப் பலப்படுத்தியருளினார். பின்னர் விஷ்ணுபகவான், தேவரும், அசுரரும் அறியமாட்டாத அதிரகசியமான வேறொரு சொரூபத்தால் தேவர்களுக்கும் தைரியவுற்சாகங்களை அபிவிருத்தி செய்து கொண்டிருந்தார். இவ்விதமாக ஸ்ரீயப்பதியின் சகாயத்தைக் கொண்டு, தேவர்களும் அசுரர்களும் கடைந்த திருப்பாற்கடலிலிருந்து சகல தேவர்களாலும் பூஜிக்கத்தக்க காமதேனு உற்பத்தியாயிற்று. அதை கண்ட அசுரரும் தேவரும் மகிழ்ந்தனர்.

பின்னர் சித்தர்களும் மோகத்தால் கலக்கமுற்று அதிசயிக்க சகலலோக மோகினியான வாருணிதேவி, மோனமயக்கத்தால் சுழலும் கண்களுடன் தோன்றினாள். மீண்டும் மந்திரமலையால் கடையப்பட்ட திருப்பாற்கடலிலிருந்து அபூர்வமான திவ்வியப் பரிமள சுகந்தத்துடன் பாரிஜாத விருட்சம் தோன்றியது. அதன்பிறகு ஜகன்மோகன ரூபலாவண்யமுள்ள அற்புதமான அப்சரஸ்திரீகளும், குளிர்ச்சியடைய கிரணங்களைக் கொண்ட சந்திரனும் தோன்றினர். அந்தச் சந்திரனை ருத்திரமூர்த்தி எடுத்துக்கொண்டார். பிறகு பாற்கடலில் உற்பவமான ஆலகால விஷத்தைச் சிவபெருமானும் நாகேந்திரர்களும் கிரகித்துக் கொண்டார்கள். அதன் பிறகு, பகவதம்சமான தன்வந்திரி என்ற தேவன் வெண்மையான ஆடைகளையும், மலர் மாலைகளையும் அணிந்து, அமிர்தம் நிறைந்த கமண்டலத்தைக் கையிலே ஏந்திய வண்ணம், அந்தத் திருப்பாற்கடலிலிருந்து உதயமானான். அமிர்த கலசத்தோடு தோன்றிய அந்தத் தேவனைக் கண்ட தேவர்களும் அசுரர்களும் மனக்களைப்பு நீங்கி மகிழ்ந்தார்கள். பிறகு அதியற்புதமாகவும், அபூர்வமாகவும், திவ்வியப் பிரகாசச் சிறப்போடும் மலர்ந்த செந்தாமரை மலரை ஆசனமாகக் கொண்டும், தாமரை மலர்களைத் திருக்கரங்களில் தரித்து கொண்டும், மகாலட்சுமி வடிவமான ஜகன்மாதாவான பெரிய பிராட்டியார் திருவவதாரஞ் செய்வதைக் கண்டு, முனிவர்களெல்லாம் மகிழ்ந்து ஸ்ரீசூக்தங்களைக் கொண்டு துதித்தார்கள். அப்போது பிராட்டியின் சன்னதியில் விசுவாவசு முதலிய கந்தருவர்கள் கீதங்களைப் பாடினார்கள். கிருதாகி முதலிய அப்சரசுகள் நடனமாடினார்கள். கங்கை முதலிய மகாநதிகள் தங்கள் தூய நன்னீரைக் கொண்டு, பிராட்டியின் திருமஞ்சனத்திற்குச் சேவை செய்தன. திக்கு கஜங்கள் நவரத்தின கசிதமான பொற்கலசங்களில் அந்த நத நீரை எடுத்து, பிராட்டிக்குத் திருமாலையொன்றைத் தாயாருக்குச் சமர்ப்பித்து விசுவகர்மன் ரத்தினாபரணங்களைத் தாயாரின் திருமேனியிலே சாற்றினான். இவ்விதமாக அவரவர் செய்த கைங்கரியங்களைத் திருவுள்ளம் பற்றிப் பிராட்டியார் திருமஞ்சனம் செய்தருளி, திருவாபரணம் திருமாலை முதலியவற்றைச் சாற்றிக்கொண்டு, மூவரும் தேவரும் பார்த்திருக்க விஷ்ணுபெருமானின் திருமார்பில் எழுந்தருளினாள். பிறகு பெரிய பிராட்டியார் அகங்குளிர்ந்து கடாட்சித்ததால் தேவர்கள் மகிழ்ந்தார்கள். அசுரர்களோ பெருமானிடத்தில் பக்தியற்றவர்களாக இருந்ததால் பிராட்டியாரின் கடாட்சத்தை இழந்து தீன ஸ்திதியை அடைந்தார்கள். இப்படியிருக்கும்போது அசுரர்களான தைத்திரியர்கள், தன்வந்திரியின் கரத்திலிருந்த அமிர்த கலசத்தைப் பலாத்காரமாகக் கைப்பற்றிக்கொண்டார்கள். அப்போது ஸ்ரீமந்நாராயணன் ஜகன்மோகனகரமான மங்கையுருவமெடுத்து, அசுரர்களை மயக்கியிழுத்து, வஞ்சித்து அமிர்தம் அவ்வசுரர்களுக்கு எட்டாதபடி செய்து அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தார். இவ்விதம் பகவத்கிருபையினால் கிடைத்த அந்த அமிருதத்தைத் தேவர்கள் அருந்தியதால் பலம் பெற்று விளங்கினார்கள். அதைக்கண்டு கோபங்கொண்ட அசுரர் தைத்ய தானவர்கள் பலவித ஆயுதங்களை ஏந்தித் தேவர்களுடன் போர் புரிந்தார்கள். அமிர்தபானஞ்செய்த அமரர்களோ, அசுரர்களுடன் தைரியமாகப் போரிட்டு, அவர்களைப் பாதாளத்திற்குத் துரத்தினார்கள். பிறகு தேவேந்திரனும் தேவர்களும் ஸ்ரீயப்பதியை வணங்கி விடைபெற்று தேவலோகம் சென்று சுகபோகங்களை இடையூறின் அனுபவித்து வரலானார்கள்.

முனிவரே! அப்போது சூரியன் பிரகாசமான கிரணங்களுடன் தன் வழியில் மாறாமல் சஞ்சரித்து வந்தான். மற்றுமுள்ள கிரகங்களும் நட்சத்திரங்களும் தம் வழியில் மாறாமல் சஞ்சரித்தன. அக்கினியும் வலஞ்சுழித்தது. சகல ஜனங்களும் தரும சிந்தையுடையவராய்ச் சுகமாக வாழ்ந்தார்கள். இவ்விதம் மூன்று உலகங்களும் லக்ஷ்மிகடாட்சம் பெற்றன. இப்படியிருக்குங் காலத்தில் தேவேந்திரன் தன் பதவியை அடைந்து மகாலட்சுமியான பிராட்டியைத் துதித்துத் தோத்திரம் செய்யலானான். சகல உலகத்திற்கும் தாயாராய், திருப்பாற்கடலில் திருவவதாரம் செய்தவளாய், மலர்ந்த தாமரையைப் போன்ற திருக்கண்களுடையவளாய், திருமாலின் திருமார்பில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன். தாமரை மலரில் வீற்றிருந்து, தாமரை மலரைத் திருக்கையில் தரித்து, தாமரை மலர் போன்ற திருவிழிகளுடன் தாமரை மலரையொத்த திருமுக மண்டலமுள்ளவளும், உந்தித் தாமரை பூத்தவனின் திருவுள்ளத்திற்கு உகந்தவளுமான ஸ்ரீதேவியைச் சேவிக்கிறேன்! உலகங்களைத் தூய்மை செய்து அருள்கின்ற தாயே, சித்தியும் சுவாகையும் சுதையும் சொதையும் சந்தியும் ராத்திரியும் பிரபையும் மேதையும் சிரத்தையும் சரஸ்வதியும் எல்லாம் நீயே! சகலமங்கள சொரூபிணியான தாயே! யக்ஞவித்தை என்கின்ற கர்ம மீமாம்சையும், மகாவித்தையென்கின்ற இந்திர ஜாலவித்தையும் குஹ்ய வித்தை என்கின்ற வேதாந்த வித்தையும் நீயே! தர்க்க வித்தையும், வேத வித்தையும் கிருஷிகோரக்ஷண வாணிப வித்தையும், தண்டநீதி வித்தையும் நீயே! இவ்விதம் சாந்தங்களாகவும் அசாந்தங்களாகவும் இருக்கிற உருவங்களைக் கொண்டு மூன்று உலகங்களையும் நீயே நிறைந்திருக்கிறாய். தாயே! சகல யக்ஞ சொரூபனாகவும், மகா யோகிகளுக்கும் தியானித்து அறியத்தக்க தேவதேவனுமான கதாதரனின் திருமேனியில் உன்னைத் தவிர வேறு யார்தான் வீற்றிருக்க முடியும்? உலகமாதாவே! உன் கடாட்சத்தை இழந்த போது மூன்று உலகங்களும் நாசமடைந்தவை போலாகித் திரும்பவும் உனது கடாட்சத்தைப் பெற்றதால் சவுபாக்கியங்களைப் பெற்றன. தாயே! கருணை நிறைந்த உனது கடாட்ச வீட்சண்யத்தாலே பிராணிகளுக்கு பாரியா, புத்திர, பந்து, மித்திர, கிருக, ÷க்ஷத்திர, தன வாகனாதிகள் எப்பொழுதுமே உண்டாகின்றன.

எம்பெருமாட்டியே! உன் கடாட்சம் பெற்றவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் அதிகாரமும் சத்துரு வெற்றியும் சுகமும் கிடைப்பது அரிதல்ல. பிராட்டியே! சகல பிரபஞ்சத்துக்கும் நீயே அன்னை! தேவதேவனான நாராயணனே தந்தை! தாயே! நீங்கள் இருவரும் சேர்ந்தே சராசர ஸ்வரூபமான இந்த பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கிறீர்கள். ஸ்ரீவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் தாயே! அடியேங்களது புத்திர, மித்திர வர்க்கங்களையும் பசுக்களையும், பூஷணங்களையும் ஒருநாளும் பிரியாது இருந்தருள வேண்டும். யாவற்றையும் தூய்மையாக்கவல்ல தாயே; எங்களுடைய தனகோசத்தையும் தொழுவத்தையும், இல்லங்களையும், உடலையும், களத்திரத்தையும், ஒருநாளும் பிரியாமல் இருந்தருள வேண்டும். நிர்மலையான தாயே! உன் கடாட்சம் தூரமானால் மக்கள் சவுசீல மகாகுணங்களும் தன தானியமும் இல்லாமற் போவார்கள். குணக்குறையுடையோராலும் உன் கடாட்சம் பெற்றவர்கள். எல்லா சவுபாக்கியங்களையும் பெற்றுப் பிரபுக்களாக வாழ்வார்கள். ஸ்ரீவிஷ்ணு வல்லபையான தாயே! உன் கருணைக்குப் பாத்திரமானவனே குணவான்; புண்ணியவான்; புத்திமான். சூரன், பராக்கிரமசாலியாவான்! ஜகத்தையெல்லாம் வளர்க்கும் தாயே! நீ வெறுத்தால், ஒருவனுடைய வாய்மை, சமதர்மம் முதலிய சற்குணங்களும் துர்க்குணங்களாகி விடும். உனது திருக்கல்யாண குணங்களை நான்முகப் பிரமனாலும் துதிக்க இயலாதே அப்படியிருக்க அடியேன் எப்படிப் புகழ்வேன்? ஆயினும் தாயே கருணை கூர்ந்து எம்மை விட்டுவிடாமல் காத்தருள வேண்டும் என்று தேவேந்திரன் துதித்தான். அப்பொழுது, எங்கும் நிறைந்தவளான ஸ்ரீதேவிப்பிராட்டியார் திருவுள்ளம் உவந்து புரந்தரன் முன்பு தோன்றி, தேவேந்திரா! நீ செய்த வழிபாட்டில் நான் மகிழ்ந்து உனக்கு வரமளிக்க வந்தேன். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள் என்று அருளிச்செய்தாள். தேவேந்திரன் உடனே ஸ்ரீதேவியை வணங்கித் தாயே, நீ திரிலோகத்திலும் இடைவிடாமல் எழுந்தருளியிருக்க வேண்டும். எவனருகிலும் இந்தத் தோத்திரத்தினால் உன்னைத் துதித்தால் அவனை நீ ஒருநாளும் கைவிடாமல் காத்து ரட்சிக்க வேண்டும்! என்று இரண்டு வரங்களைக் கொடுத்தருளும்படி வேண்டினான். அவன் வேண்டிய பிரார்த்தனையை  ஸ்ரீதேவிப்பிராட்டியார் ஏற்றுக்கொண்டு, அமரேந்திரா! நீ விரும்பிய வண்ணம் ஆட்சிபுரியும் உனது உலகத்தை விட்டு நான் நீங்குவதில்லை. எவன் தினந்தோறும் காலை மாலைகளில் இந்த ஸ்ரீ தோத்திரத்தால் என்னைத் துதிக்கிறானோ, அவனுக்கு நான் அருள்புரிகிறேன்! என்று இரண்டு வரங்களைத் தந்தருளினாள்.

மைத்ரேயரே! பூர்வத்தில் ஸ்ரீதேவி, பிருகு முனிவருக்கு கியாதி என்ற மங்கையினிடத்தில் அவதரித்தாள் என்று சொன்னேனல்லவா? பிறகு அமிர்தங்கடைந்த காலத்தில், திருப்பாற்கடலிலும் அவதரித்தாள். இதுமட்டுமல்ல, உலகநாதரான ஜனார்த்தனன் எப்போதெப்போது உலகங்களில் அவதரிப்பானோ, அப்போதைக்கப்போது ஸ்ரீதேவியும் அவனுடன்கூட, அந்த அவதாரப் பயன்பெற, அவதாரம் செய்து அருள்வாள். முன்பு ஸ்ரீமந்நாராயணன் அதிதியின் குமாரனாக அவதரித்தபோது ஸ்ரீதேவிப்பிராட்டியார் பதுமை என்ற திருப்பெயரோடு அவதரித்தாள். விஷ்ணு, பரசுராமனாக அவதரித்தபோது இவள் தரணியாக அவதரித்தாள், அவன் சக்கரவர்த்தித் திருமகன் ராமனாக அவதரித்தபோது இவள் சீதா பிராட்டியாக அவதரித்தாள். அந்த எம்பெருமான் கண்ணனாக அவதாரம் செய்த போது இவள் ருக்மணியாக அவதரித்தாள். இதுபோலவே மற்றைய அவதாரங்களிலேயும் இப்பிராட்டி, பெருமாளை விட்டு பிரியாமல் கூடவே அவதரித்துக் கொண்டிருப்பாள். எம்பெருமான் தேவதா சொரூபத்தோடு அவதரித்தால் ஸ்ரீதேவியும் அதற்கேற்ற தெய்வத் திருமேனியுடன் அவதரிப்பாள். மனுஷ்ய சொரூபத்தோடு பெருமாள் அவதரித்தால் தேவியும் மனுஷ்ய ரூபத்தோடு அவதரிப்பாள். மைத்திரேயரே! ஸ்ரீமகாலக்ஷ்மியின் இந்த திருவவதாரத்தை எந்த மனிதன் பக்தியுடன் பாராயணம் செய்கிறானோ, எவன் பக்தியோடு கேட்கிறானோ, அவனுடைய இல்லத்தில் பெரிய பிராட்டியாரான ஸ்ரீதேவி என்றும் பிரியாமல் எழுந்தருளியிருப்பாள். எந்தக் கிருஹங்களிலே இந்த ஸ்ரீதேவியின் சரித்திரம் தினந்தோறும் படிக்கப்படுகிறதோ, அந்தக் கிருகங்களில் கலகத்திற்கு ஆதாரமான வறுமை இராது. ஸ்ரீதேவி, முன்பு பிருகு முனிவரின் புத்திரியாகிப் பின்னர் மீண்டும் திருப்பாற்கடலில் அவதாரஞ்செய்த விதத்தை உமக்கு அறிவித்தேன். சகல ஐசுவரிய காரணமாக, இந்திரனால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை யாராகிலும் தினந்தோறும் பக்தியுடன் படிப்பார்களானால் அவர்கள் ஒருக்காலும் அசுபத்தை அடையமாட்டார்கள். சர்வாபீஷ்டங்களும் நிறைவேறி அவர்கள் சிறப்பாக வாழ்வார்கள்.
 

கருத்துகள் இல்லை: