சனி, 7 செப்டம்பர், 2019

7. ருத்திர சிருஷ்டியும் ஸ்ரீதேவி வைபவமும்

பராசரர் தொடர்ந்து மைத்ரேயரை நோக்கிக் கூறலானார். மைத்ரேயரே! நான்முகனான பிரம்மதேவன் தாமச சிருஷ்டியைச் செய்தான் என்று முன் சொன்னேன் அல்லவா? அதைச் சொல்கிறேன்; கேளுங்கள். கல்பாதி காலத்திலே இரணியகர்ப்பன் தனக்குச் சமமான ஒரு குமாரனைப் பெற வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, அவனுடைய மடியில், கறுப்புஞ்சிவப்பும் கலந்த நீலலோகிதனான குமாரன் ஒருவன் தோன்றினான். அவன் இனிய குரலுடன் அழுதுகொண்டு ஓடினான். பிதாமகன் அவனை நோக்கி, மகனே! ஏன் ரோதனம் செய்கிறாய்? என்று கேட்க, அவன் எனக்கு நாமதேயம் கொடும் என்று கூறினான். அதைக் கேட்ட பிரும்மா, தேவனே நீ ருத்திரன் என்ற பெயர் பெற்று புகழ் அடையக் கடவாய்! ரோதனம் செய்யாமல் தைரியமாய் இரு என்று சொன்னார். அப்படிச் சொல்லியும் ருத்திரன் மீண்டும் ஒருதரம் ரோதனஞ் செய்ததால், பிரமன் அவனுக்குப் பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்கிரன், மகாதேவன் என்ற ஏழு பெயர்களைச் சூட்டி, அப்பெயர்களையுடைய ருத்திர மூர்த்திகளுக்கு வெவ்வேறு ஸ்தானங்களையும், பத்தினிகளையும், புத்திரர்களையும் கொடுத்தார். அந்த எழுவரின் ஸ்தானங்களாவன? சூரியன், ஜலம், பூமி, அக்கினி, வாயு, ஆகாயம், தீட்சிதனான பிராமணன் சந்திரன் என்பனவாகும் அவன் அங்கு இருப்பதால் அதுவே சரீரமாயின. ருத்திராதி நாமமுடைய அந்த எட்டு மூர்த்திகளுக்கும் முறையே சுவர்ச்சலை, உஷை சுகேசி, சிவை சுவாகை. திசை, தீட்சை, ரோகிணி என்ற எட்டு பெண்களும் பத்தினிகளாவார்கள். இவர்களுக்கு சனி, சுக்கிரன், அங்காரகன், மனோஜவன், கந்தன், சொர்க்கன் சந்தானன், புதன் ஆகிய எண்மரும் பிள்ளைகள் இவர்களுடைய புத்திர பவுத்திராதி பரம்பரையினரால் கலகம் நிறைந்தது. இவ்விதம் அஷ்டமூர்த்தியாகிய ருத்திரன் தக்ஷப் பிரஜாபதியின் புத்திரியான சசிதேவியைக் கல்யாணம் செய்துகொண்டான். அந்தச் சசிதேவியும் தன் தந்தையின் கோபத்தால் தானும் கோபித்துத் தன் சரீரத்தை விட்டுவிட்டாள். பிறகு அவள் இமவானுக்கு மேனை என்ற மனைவியிடம் உமை என்ற பெயரோடு மறுபடியும் பிறந்தாள். சிவபெருமான் தன்னையே நினைத்துக் கொண்டிருந்த அந்தக் கன்னியை மீண்டும் திருமணஞ்செய்து கொண்டார். இது இப்படியிருக்க, முன்பு சொன்னபடி, பிருகு முனிவர் தம் மனைவியான கியாதியிடம் தாதா விதாதா என்ற பிள்ளைகளையும், ஸ்ரீமந்நாராயணனுக்குப் பிரிய பத்தினியான ஸ்ரீதேவி என்பவளையும் பெற்றார்.

இதைக் கேட்டதும் மைத்ரேயர், முனிவரே! அமிருதமதன காலத்தில் ஸ்ரீமஹாலட்சுமியானவள் திருப்பாற்கடலில் அவதரித்தாள் என்பது உலகம் அறிந்ததாயிற்றே! அப்படியிருக்க பிருகு முனிவரின் மகளாக ஸ்ரீதேவி பிறந்தாள் என்பது எவ்விதம் பொருந்தும்? என்று கேட்டார். அதற்குப் பராசரர் கூறலானார்; மைத்ரேயரே! உலக மாதாவான பிராட்டியானவள் என்றைக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானை விட்டுப் பிரியாதவளாய், நித்யையாக இருப்பவள் அவளுக்கு பிறவிகள் இல்லை. ஆயினும் எம்பெருமானைப் போலவே, அவளும் அவதரிப்பதும் மறைவதுமாக இருப்பாள். எம்பெருமானைப் போலவே, ஸ்ரீதேவிப் பிராட்டியும், சகல கலியாண குணங்களோடு விளங்குவாள். சகல பூதங்களுக்கும் தாயும் தந்தையுமான அந்தத் திவ்வியத் தம்பதிகளுடைய விபூதி வைபவத்தைக் கூறுகிறேன், கேளும். சொல்லுக்குப் பொருள் அந்தப் பெருமாள். அந்தப் பொருளைத் தெரிவிக்கும் சொல் இந்தப் பிராட்டி; நீதி இவள்; அந்த நீதியின் உபாயமான நயம் அவன் இவள் புத்தி; அந்தப் புத்தியாலாகும் போதம் அவன். தருமம் அந்த ஸ்ரீமந்நாராயணன்; அந்தத் தருமத்திற்குச் சாதகமான சத்கிரியை ஸ்ரீதேவி; படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப்படைப்புச் சக்தி ஸ்ரீதேவி; படைப்பவன் ஸ்ரீவிஷ்ணு; அந்தப் படைப்புச் சக்தி ஸ்ரீதேவி; இவன் பூமி; இந்தப் பூமியை தரிப்பவன் விஷ்ணு; அந்தப் பகவான் சந்தோஷம்; அதை உண்டாக்கும் சந்துஷ்டி ஸ்ரீதேவி; இச்சை என்பது ஸ்ரீதேவி; காமம் என்பது பகவான்; யக்ஞம் ஜகந்நாதன். தக்ஷிணை ஜகன்மாதா! புரோடாசம் சனார்த்தனன்; ஆச்சியாகுதியானது கமலை. பிராக்கு வம்சம் என்பது மதுசூதனன்; பத்தினிச் சாலை என்பது ஸ்ரீதேவி யூபஸ் தம்பம் ஸ்ரீஹரி; யாகவயனம் ஸ்ரீலக்ஷ்மி! எம்பெருமான்-தர்ப்பை: பிராட்டியே சமித்து! சாமவேதம்-பகவான்; அதில் சேர்ந்த உத்கீதி என்பது லக்ஷ்மி! வாசுதேவன் அக்னி; இந்திரையானவள் சுவாகா தேவி.

ஸ்ரீவிஷ்ணு பகவானே சங்கரன்; ஸ்ரீ மகாலக்ஷ்மியே கவுரி. கேசவனே சூரியன்; அவனது பிரபையே கமலை! விஷ்ணுதேவன் பிதுர்தேவதா சொரூபி; ஜகன் மாதாவோ ஆகாயம் அதி விஸ்தாரமான அதன் பரப்பே விஷ்ணு அந்த ஸ்ரீயப்பதியே சந்திரன். அந்தச் சந்திரனின் காந்தியாகிய நிலவே ஸ்ரீதேவி! சர்வாக்தனான ஸ்ரீஹரியே வாயு; அந்தச் சந்திரனின் காந்தியாகியே நிலவே ஸ்ரீதேவி! சர்வக்தனான ஸ்ரீஹரியே வாயு; அந்தக் காற்றின் செய்கையே திருமகள்! சமுத்திரம் கோவிந்தன்; அந்தச் சமுத்திரத்தின் அலை முதலான விகிருதியெல்லாம் ஸ்ரீதேவி! மதுசூதனனே தேவேந்திரன்; இந்திரையே இந்திராணி சக்கரதரனான பகவானே யமன்; கமலாயையே யமபத்தினியான தூமார்னே! ஸ்ரீதரனே குபேரன்; ஸ்ரீதேவியே அந்தக் குபேரனின் பெருஞ்செல்வம்! விஷ்ணுவே வருணன் லக்ஷ்மியே வருணனின் பத்தினியான கவுரி! கோவிந்தனே தேவ சேனாதிபதியான கந்தன்; இந்திரையே தேவசேனை! கதாதரனே பிடிப்பு; அதற்கு காரணமான சக்தியே ஸ்ரீதேவி! நிமிஷம் நாராயணன் காஷ்டை லக்ஷ்மி! முகூர்த்தம்-வாசுதேவன் அந்த முகூர்த்தத்தின் அவயவமான கலை ஸ்ரீ லோகமாதா! திருவிளக்கு-சர்வேசுவரன்; அதன் காந்தி-லோகநாயகி! ஸ்ரீ மகாவிஷ்ணு விருட்சம்; ஸ்ரீதேவி கொடி! சக்கரதரன் பகல் ஸ்ரீகாந்தை இரவு! விஷ்ணுவே மணமகன்; ஸ்ரீதேவியே மணமகள்! பகவான் நதி! சொரூபன்; ஸ்ரீதேவி நதி சொரூபை நாராயணன் லோபம்; லக்ஷ்மியே ஆசை! கோவிந்தன் ராகம்; ஸ்ரீதேவியே அதன் காரணமாகிய காதல்! மைத்ரேயரே! இப்படி அநேக வாக்கியங்களைச் சொல்லிப் பயன் என்ன? அந்தத் திவ்விய தம்பதிகளின் விபூதியைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள். தேவதைகளுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும் திரியக்குகளிலும், மற்றுமுண்டான பொருட்களிலும் உள்ள ஆண் தன்மையான பெயரையுடையனவெல்லாம் ஸ்ரீஹரியே; பெண் லிங்கமான பெயருடையனவெல்லாம் ஸ்ரீதேவியே; என்று நினைப்பீராக! இவ்விருவரினும் வேறான வஸ்து ஒன்றும் இல்லை. எல்லாம் அவர்களில் வியாபிக்கப்பட்டு அவர்களது விபூதியாகவே இருக்கின்றன

கருத்துகள் இல்லை: