சனி, 7 செப்டம்பர், 2019

20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்

சர்வ காரணனும் சர்வாத்மகனுமான ஸ்ரீவிஷ்ணுதேவன் தன்னையே சரீரமாகக் கொண்டு உள்ளும்புறமும் வியாபித்துப் பூரணமயமாக இருப்பதால் விஷ்ணுமயமாகத் தன்னையே பிரகலாதன் நினைத்து, விஷ்ணுவல்லாத பொருள் எதையுமே காணாமையால், திரிகுணாத்மகமாய் அனாதிப் பிரகிருதி வாசனாமலினமாய், மற்றக் காலத்திலே தோன்றுகின்ற ஆன்ம ஸ்வரூபத்தை மறந்தான். தான் அவ்யயனும் நித்தியனுமான பரமாத்மாவுக்குச் சரீர பூதராய், தன்மயர்ணனை நினைத்தான். இவ்விதமான யோகாப்பியாசப் பிரபாவத்தால் கிரமக் கிரமமாகச் சகல சருமங்களிலிருந்தும் விடுபட்டவனாய் அந்தியந்த பரிசுத்தனான பிரகலாதனின் அந்தக்கரணத்திலே ஞானமயனும் அச்சுதனுமான பகவான் ஸ்ரீவிஷ்ணுவே பிரகாசித்தருளினான். யோகப் பிரபாவத்தினாலேயே பிரகலாதன் விஷ்ணு மயமானதால், அந்தப் பாலகனின் உடல் கட்டியிருந்த நாகபாச பந்தங்கள் அனைத்துமே கணத்தில் சின்னாபின்னமாகச் சிதறுண்டு விழுந்தன. பிறகு சமுத்திரமானது கரைகளை மூழ்த்தியது. அப்போது, பிரகலாதன் தன்மீது போடப்பட்டிருந்த மலைகளையெல்லாம் விலக்கித் தள்ளிக்கொண்டு, சமுத்திரத்தை விட்டு வெளியில் வந்து, ஆகாயங்கவிந்த உலகத்தைப் பார்த்தும் லவுகித் திருஷ்டியினால், தான் பிரகலாதன் என்றும் இரணியனின் மகன் என்றும் நாமசாதிபாதி விசேஷண சமேதனாக மறுபடியும் தன்னை நினைத்தான். புத்திசாலியான அந்த அசுர சிகரமணி ஏகாக்கிர சித்தமுடன், மனோவாக்குக் காயங்களைச் சுவாதீனமாக்கிக் கொண்டு, வியாகுலத்தை விட்டு, அநாதிப் புரு÷ஷாத்தமனான அச்சுதனை மீண்டும் துதித்தருளினான். பரமார்த்த பிரயோஜனமானவனே! ஸ்தூல சூட்சுமரூபனே வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருப்பவனே! பஞ்சேந்திரியாதிக் கலைகளையெல்லாம் கடந்தவனே! சகலேசுவரனே! நிரஞ்சனனே குணங்களைத் தோற்றுவித்தவனே! குணங்களுக்கு ஆதாரமானவனே! பிராகிருத குணம் இல்லாதவனே! சகல சற்குணங்களையும் கொண்டவனே! மூர்த்தமும் அமூர்த்தமும் ஆனவனே! மஹாமூர்த்தியான விசுவரூபமும், சூத்ம மூர்த்தியான வியூக ரூபமும், வெளிப்படையாகத் தோன்றும் விபவ ரூபமும் அப்படி தோன்றாத, பரஸ்வரூபம் உடையவனே! சத்துரு சங்கார காலங்களில் குரூரமாகவும் சுபாவத்தில் சாந்தமாகவும் விளங்கும் உருவமுடையவனே! ஞான மயனாயும் அஞ்ஞான மயனாயும் இருப்பவனே! நன்மையாய் இருப்பவனே! உண்மையும் இன்மையும் கற்பிப்பவனே! நித்திய அநித்திய பிரபஞ்ச ஆத்மகனே! பிரபஞ்சங்களுக்கம் மேற்பட்டவனே! நிருமலர் ஆஸ்ரயிக்கப்பெற்றவனே! அச்சுதனே! உனக்குத் தண்டனிடுகிறேன். ஏகா! அநேகா வாசுதேவா! ஆதிகாரண! உனக்கு வணக்கம்! எவன் ஸ்தூல ரூபத்தால் தோன்றுபவனும், எவன் சூட்சும ரூபத்தால் தோன்றாதவனுமாக இருக்கிறானோ, எவன் சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, யாவற்றிலும் தானே விலக்ஷணமாக இருக்கிறானோ, இந்த உலகம் யாவும் விஷம சிருஷ்டி காரணமாகாத எவனிடமிருந்து உண்டாயிற்றே அந்தப் புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன் என்று பலவாய்த் தோத்திரஞ்செய்த பிரகலாதனிடம் ஸ்ரீஹரி பகவான் பிரசன்னனாய்ப் பீதாம்பராதி திவ்ய லக்ஷணங்களோடு அவனுக்குப் பிரத்யட்சமாய் சேவை சாதித்தான். அப்போது அந்தப் பரம பாகவதனான பிரகலாதன் பயபக்தியுடன் எம்பெருமானைத் சேவித்து மகிழ்ச்சியினால் நாத்தடுமாற ஸ்ரீவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! என்று பலமுறைகள் சொல்லிப் பிரார்த்தித்தான்.

சுவாமீ! சரணாகதி செய்தோரின் துக்கத்தைப் போக்கடிப்பவரே! ஸ்ரீகேசவா! அடியேனிடத்தில் பிரசன்னமாகி இந்தப் படியே எக்காலமும் பிரத்யக்ஷமாய்ச் சேவை தந்து ரட்சித்து அருள்செய்ய வேண்டும்! என்று பிரகலாதன் வேண்டினான். அப்போது விஷ்ணுபகவான் அப்பாலகனைப் பார்த்து பிரகலாதா! நீ இதர பயன்களை இச்சிக்காமல் என்னிடத்திலேயே பரமமான ஏகாந்த பக்தியைச் செய்தபடியால், உனக்குப் பிரசன்னமானேன். உனக்கு இஷ்டமான வரங்களை வேண்டிக்கொள் என்று அருளிச்செய்தார். சுவாமி! அடியேன் தேவ, திரியக், மனுஷ்யாதி ஜன்மங்களிலே எந்த ஜன்மத்தை எடுத்தாலும் அந்த ஜன்மங்களில் எல்லாம் உன்னிடம் இடையறாத பக்தியுடையவனாக இருக்க வேண்டும். மேலும் விவேகமில்லாத ஜனங்களுக்கு நல்ல சந்தன வனிதாதி போக்கிய வஸ்துக்களில் எத்தகைய ஆசையுண்டாகுமோ அத்தகைய பிரீதிச் சிறப்பானது, உன்னை ஸ்மரிக்கின்ற அடியேனுடைய மனத்தினின்றும் நீங்காமல் இருக்க வேண்டும்! என்று பிரகலாதன் வேண்டிக் கொள்ளவே எம்பெருமான் அந்தப் பக்த சிகாமணியைக் கடாட்சித்து, பிரகலாதா! முன்னமே என்னிடம் பிரியாத பக்தி உனக்கு உண்டாயிருக்கிறது. இன்னமும் அப்படியே அது அபிவிருத்தியாகும். அதிருக்கட்டும் இப்பொழுது உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்று அனுக்கிரகம் செய்ய, பிரகலாதாழ்வான் பிரார்த்திக்கலானான். எம்பெருமானே! உன்னைத் துதிக்கும் அடியேனிடத்தில் மாச்சரியம் பாராட்டியதால், அசஹ்யமான அபசாரம் பண்ணினவரானாலும் இரணியன் என்னுடைய தகப்பனார் என்பதால் அவரைப் பாவமில்லாதவராகும்படி அனுக்கிரகஞ்செய்ய வேண்டும்! மேலும் ஆயுதங்களால் அடிக்க வைத்தும், நெருப்பிலே போட்டும், சர்ப்பங்களைக் கொண்டு கடிக்கச் செய்தும் போஜனத்திலே விஷத்தைக் கலந்தும், நாக சர்ப்பங்களைக் கட்டி சமுத்திரத்திலே போடுவித்தும், பர்வதங்களால் துவைத்தும் இவ்வாறு மற்றும் பலவிதங்களான தொல்லைகளைச் செய்து உன் பக்தனான அடியேனை அழிக்கப் பார்த்த என் தகப்பனுக்குச் சம்பவித்திருக்கின்ற அளவற்ற மகாபாவங்கள் உனது கடாட்சத்தினாலேயே நாசமாக வேண்டும். இதுதான் அடியேன் வேண்டும் வரமாகும்! என்றான் பிரகலாதன். உடனே மதுசூதனன் புன்முறுவலுடன் பிரகலாதா! என் அனுக்கிரகத்தால் நீ கேட்டவாறே ஆகும். சந்தேகமில்லை இன்னமும் உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்றான். புரு÷ஷாத்தமனே, உனது திருவடித் தாமரைகளிலே பிரியாத பக்தி உண்டாகும்படி அனுக்கிரகித்தால், அடியேன் கிருதார்த்தனானேன். சகல ஜகத்காரண பூதனான உன்னிடத்தில் எவனுக்கு அசஞ்சலமான பக்திச் சிறப்புண்டாகுமோ அவனுக்கு சர்வ உத்தமமான மோட்சமும் உண்டல்லவா? அப்படியிருக்க, அவனுக்குத் தர்மார்த்த காமங்களால் ஆகவேண்டுவது என்ன? என்றான் பிரகலாதன்.

குழந்தாய்! உன் இதயம் என்னிடம் பக்தியுடன் எப்படிச் சஞ்சலமற்று இருக்கிறதோ, அப்படியே எனது அனுக்கிரகத்தால் பரமமான மோக்ஷõனந்தத்தையும் பெறுவாயாக! என்று ஸ்ரீபகவான் அருளிச் செய்து பிரகலாதன் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, அந்தர்த்தானமானார். பிரகலாதன் மீண்டும் நகரத்துக்கு வந்து தன் தந்தையை வணங்கி நின்றான். இரணியன் தன் பாலகனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, உச்சிமோந்து, கண்களில் கண்ணீர் ததும்ப, அடா குழந்தாய்! நீ பிழைத்து வந்தாயா? என்று அன்போடும் ஆசையோடும் கொஞ்சினான். பரமதார்மீகனான பிரகலாதனும், தன் தகப்பனுக்கும் ஆசாரியாருக்கும் பணிவிடை செய்துகொண்டு சுகமாக இருந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு, இரணியன் முன்பு நேர்ந்த பிரம்மசாபவசத்தால் பகவானிடம் துவேஷம் முற்றி, மறுபடியும் தன் மகனான பிரகலாதனைக் கொல்ல முயன்றபோது, ஸ்ரீஹரிபகவான், அந்த அசுரனைச் சங்கரிக்க தீர்மானித்தார். தேவராலோ, மனிதராலோ, மிருகங்களாலோ தனக்கு மரணம் விளையக்கூடாது என்று இரண்யன் முன்பு வரம் பெற்றிருந்தானாகையால், மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் நரசிம்ம உருவமெடுத்த இரண்யனைக் கொல்ல வேண்டுமென்று விஷ்ணு கருதினார். இரண்யன் கோபத்துடன் தன் மகன் பிரகலாதனை நோக்கி, உன் ஆண்டவன் இந்தத் தூணிலும் இருப்பானோ! என்று ஒரு தூணைச் சுட்டிக்காட்டி ஏளனமாகச் சிரித்து அந்தத் தூணை எட்டி உதைத்தான். உடனே ஹரிபகவான் நரசிம்மரூபியாக அவ்வரக்கன் சுட்டிக் காட்டிய தூணிலிருந்து தோன்றி அவ்வசுர வேந்தனைச் சங்கரித்து அருளினார். பிறகு பரம பாகவதனான பிரகலாதன், தைத்ய ராஜ்யத்தில் முடிசூட்டிக்கொண்டு, அந்த ராஜ்ய போகத்தினால் பிராரப்த கர்மங்களைக் கழித்து புத்திர பவுத்திராதிகளைப் பெற்று பிராரப்த கர்ம அனுபவமாகிற அதிகாரங்கழிந்தவுடன், இரண்டையும் விட்டு மோக்ஷத்தையடைந்தான்.

மைத்ரேயரே! பரமபக்தனான பிரகலாதனின் மகிமையை வணக்கமாகச் சொன்னேன். எவன் மகாத்மாவான பிரகலாதனின் சரிதத்தை ஒருமித்த மனத்துடன் கேட்பானோ, அவனுக்கு அப்போதே சகல பாவங்களும் தீர்ந்து போகும். பிரகலாதனின் சரிதத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும், அகோராத்திர கிருதங்களான பாவங்கள் நீங்கப்பெறுவர். இதில் ஐயமில்லை. எவன் இந்தச் சரிதத்தைப் படிக்கிறானோ, அவன் பவுர்ணமியிலும், துவாதசியிலும், அஷ்டமியிலும் புனிதமான தோத்திரத்திலே சூரிய கிரகண புண்ணிய காலத்தில் சுவர்ண சிருங்கம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட உபயதோமுகியான பசுக்களை சற்பாத்திரத்திலே பூரண மயமான தக்ஷணைகளோடு தானஞ்செய்த பயனையடைவான். உபயதோமுகி என்பது இருபுறத்தும் முகத்தையுடையது. கன்றையீன்று கொண்டிருக்கும்போதே, பசுவைத் தானம் செய்வது. எவன் ஒருவன் பக்தியுடன் இந்தப் பிரகலாதாழ்வானின் திருக்கதையைக் கேட்கிறானோ, அவனை ஸ்ரீமந்நாராயணன் பிரகலாதனைக் காத்தது போலவே, சகல ஆபத்தையும் விலக்கிச் சர்வகாலமும் ரட்சித்து அருள்வான்.

கருத்துகள் இல்லை: