சனி, 23 மே, 2020

கலைவாணியின் அருள் கிடைக்க   சியாமளா தண்டகம் - ஸ்ரீ சியாமளா தேவி.

தயமான தீர்க்க நயநாம் தேசிகரூபேண தர்சிதாப்யுதயாம்
வாம குச நிஹித வீணாம் வரதாம் ஸங்கீத மாத்ருகாம் வந்தே||

கருணை பொழியும் கண்களை உடையவளும் தேசத்திற்கே குருவாக இருந்து உபதேசம் செய்பவளும் இடது பக்கம் வீணையை வைத்திருப்பவளும்பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுபவளும், சங்கீதத்திற்குத்  தாயுமான ஸ்ரீ சியாமளா தேவியை நமஸ்காரம் செய்கிறேன்.

மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
மஹாகவி காளிதாஸர்.

'சியாமளா' என்றும், 'ஸ்ரீ ராஜ சியாமளா' என்றும், 'ஸ்ரீமாதங்கி' என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத‌ மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே 'சியாமளா நவராத்திரி' யைக் கொண்டாடி வழிபடுகிறோம். இந்த அம்பிகையைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்,
"மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம: என்று போற்றுகிறது. மேலும் 'கதம்பவனவாஸினீ' என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான‌ ஸ்ரீ நகரத்தில் ,சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்த திருநாமம்.
மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு 'கடம்பவனம்' என்ற ஒரு பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில்( ஏழு தட்டுக்கள் உள்ள ரதம்) இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.

'கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா'(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்)
சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே 'பண்டாசுரன்' (உலகாயத)விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே 'விஷங்க வதம்' செய்கிறாள்.
'மந்த்ரிண்யம்பா -விரசித- விஷங்கவத- தோஷிதாயை நம:(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்).

ஸ்ரீ லலிதோபாக்கியானம், 'சங்கீத யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர நாயிகா' என்று துவங்கி அம்பிகையைப் போற்றுகிறது.

அம்பிகையின் திருவுருவம்:

வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.
கவி காளிதாஸர் அருளிய ஸ்ரீ சியாமளா தண்டகம், தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது.

இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

சில தாந்த்ரீக நூல்களில், ஸ்ரீ ராஜ சியாமளா தேவி, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, நெற்கதிர், தாமரை, பாசம், அங்குசம், ஜபமாலை, புத்தகம், வீணை முதலியவற்றைத் தாங்கியவளாக சித்தரிக்கப்படுகிறாள். தேவியின் திருத்தோள்களில் கிளியும் இருப்பதாகக் குறிக்கப்படுகிறது.

இதில், நெற்கதிர், ஜீவனின் முந்தைய கர்மவினைகளையும், பாசம், ஆசையையும், அங்குசம் கோபத்தையும், ஜபமாலை புத்தகம் முதலியவை அறிவையும், வீணை யோகத்தையும் குறிக்கிறது.

அம்பிகையின் திருக்கரத்திலிருக்கும் கிளியே 'ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியாக' அவதரித்து, ஸ்ரீமத் பாகவதம் முதலான நூல்களை அருளியதாக ஐதீகம்.
தாந்த்ரீக முறையில் ஸ்ரீ ராஜசியாமளா தேவி.

முதலில் தாந்த்ரீக முறை என்றால் என்னவென்பதைப் பார்க்கலாம். யந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவற்றின் துணை கொண்டு ஓர் உயரிய இலக்கை அடையும் முறைக்கு 'தாந்த்ரீகம்' என்று பெயர்.
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். தசமாஹவித்யா தேவியரின் தோற்றம் குறித்து பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை பின்வருமாறு.

தாக்ஷாயணியாக அம்பிகை திருஅவதாரம் புரிந்த சமயத்தில், தேவி, தன் தந்தை தக்ஷன், சிவனாரை மதிக்காமல் துவங்கிய யாகத்திற்கு சென்று அவனுக்குப் புத்தி புகட்ட விரும்பினாள். சிவனார் அதைத் தடுத்ததும் அம்பிகையின் கோபம் பன்மடங்காகப் பெருகியது. அந்த உணர்ச்சி நிலையே பத்து மஹாவித்யைகளாகப் பிரிந்து, எல்லாத் திசைகளிலும் சிவனாரைச் சுற்றி நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, வடமேற்குத் திசையில் நிலைகொண்ட மஹாவித்யையே ஸ்ரீமாதங்கி.

தசமஹாவித்யா தேவியரின் ஒன்றிணைந்த வடிவமாக, ஸ்ரீ தத்தாத்ரேயரின் தர்மபத்தினியான ஸ்ரீ அனகாதேவி போற்றப்படுகிறார். கீழ்வரும் ஸ்லோகம் அதைச் சொல்கிறது.

"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ
மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ
கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி
அனகாதேவீ நமோஸ்துதே.'

மற்றொரு புராணக்கதையின்படி, மதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அளித்த வரத்தின் பலனாக, அவருக்கு மகளாக வந்துதித்தவளே ஸ்ரீ மாதங்கி. மதங்க முனிவரின் மகளாக வந்துதித்த காரணத்தாலேயே 'மாதங்கி' என்ற திருநாமம் அம்பிகைக்கு ஏற்பட்டது. கிராமப்புறங்களில், 'பேச்சி', 'பேச்சாயி' 'பேச்சியம்மன்' என்ற திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஸ்ரீ தேவிபாகவதத்தின் படி, தசமஹாவித்யைகளும் ஸ்ரீ லலிதா தேவியின் பரிவார தேவதைகளாகப் போற்றப்படுகிறார்கள்.

எல்லைகளற்ற கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதை பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

பாட்டு, நடனம், நினைத்த பொழுதில் கவி இயற்றும் திறன் போன்ற நுண்கலைகள் அம்பிகையின் அருளாற்றலாயே ஒருவருக்குக் கிடைக்கிறது. சரஸ்வதி தேவியின் விரிந்த, பேராற்றலுள்ள வடிவமே ஸ்ரீ மாதங்கி தேவி எனக் கொள்ளலாம். சரஸ்வதி தேவியை மொழி, கலைகள், கற்கும் திறன் இவற்றின் அதிதேவதையாகக் கொண்டால், மாதங்கி தேவியை மனதை உள்முகமாக திருப்பி, தான் யார் என்பதை அறியும் ஆற்றலுக்கும், ஆத்மவித்தைக்கும் அதிதேவதையாகக் கொள்ளலாம்.

சியாமளாவிற்கு மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி என்பவர்களே அவர்கள்.

நவக்கிரகங்களில் புதபகவான் இந்த தேவியின் அம்சத்தோடு கூடியவராகக் கருதப்படுகிறார். ஸ்ரீமாதங்கி தேவி, தசாவதாரங்களில் புத்த அவதாரத்தோடு தொடர்புடையவராகவும் கருதப்படுகிறார் (பத்து மஹா வித்யா தேவியரும் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு தொடர்புடையதாக கொள்ளலாம்.)

சில சோதிடர்கள், ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஜாதகரின் பலன்களைச் மிகச் சரியாகச் சொல்வதைக் காணலாம். இதற்கு, 'கர்ணமாதங்கி' என்கிற, மாதங்கி தேவியின் திருவடிவைப் போற்றும் மந்திர உபாசனையே காரணம். இந்த மந்திரத்தை முறையாக‌ உபாசிப்பவர்களின் கேள்விகளுக்கு, அவர்களின் காதுகளில் தேவியே வந்து பதிலை உச்சரிப்பதாக ஐதீகம்.

தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்து கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி.
ஸ்ரீ நகரத்தில் அம்பிகையின் இருப்பிடம்.

ஸ்ரீ லலிதாம்பிகையின் வாசஸ்தலமாகிய ஸ்ரீ நகரத்தில், பலவிதமான கோட்டைகள் அமைந்துள்ளன. அவற்றுள், தங்க, வெள்ளிக் கோட்டைகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள கதம்பவனத்தில்,(ஸ்ரீ சக்ரத்தில், இந்த இடம், த்ரிகோணம், பஞ்சகோணம்,அஷ்டதளபத்மம், ஷோடச தள பத்மம், உள் பத்து கோணம், வெளிப்பத்து கோணம், சதுரம் என்ற ஏழு ஆவரணச் சக்கரங்கள் கூடும் இடமாக உள்ளது) தங்கத்தினாலான படிகள் உள்ள, மாணிக்கத்தால் ஆன மண்டபங்கள் உள்ள விசாலமான ஆலயத்தில், ரத்தினம் இழைத்த அழகான சிம்மாசனத்தில், ப்ரஹ்ம வித்தையின் 98 அக்ஷரங்களின் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ சியாமளா தேவி வீற்றிருந்தருளுகிறாள்.

கஸ்தூரி திலகம் அணிந்து, மூன்று கண்களுடனும், தாம்பூலத்தால் சிவந்த திருவாயில் தவழும் புன்சிரிப்புடனும், சந்திரகலை சிரசில் மின்ன,கதம்ப மாலை துளசி மாலை முதலியன அணிந்து, கிளி, தாமரை மலர் முதலியவற்றைத் தாங்கிய திருக்கரங்களுடன், வீணா கானம் செய்து கொண்டு, சிருங்கார ரஸம் ததும்பும் கருணா கடாக்ஷத்துடன், 'ஸங்கீத மாத்ருகை' எனப் போற்றப்படும் மந்திரிணீ தேவியாகிய ராஜ மாதங்கி தேவி தன்னைத் தொழுவோருக்கு அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறாள்.
நம் உடலில் அமைந்துள்ள ஆதாரச்சக்கரங்களில், தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள 'விசுத்தி' சக்கரத்தில் பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள். விசுத்தி சக்கரத்தினைப் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.

ஆதார நூல்கள்: ஸ்ரீ தேவி பாகவதம், தசமஹாவித்யா தேவியர், ஸ்ரீவித்யையும் ஸ்ரீ சக்கரமும், சாக்த மஹா பாகவத புராணம்.

கருத்துகள் இல்லை: