சனி, 23 மே, 2020

பத்மராக சிலா தர்ஸ பரிபாவி கபோலபூ! நவ வித்ரும பிம்ப ச்ரீ ந்யக்காரி ரதனச்சதா!!

அம்பாளின் கன்னம் எப்படி இருக்கிறது தெரியுமா!! .

பத்மராகக் கல் என்று ஒன்று உண்டு. அதனுடைய குணம் எதிரில் உள்ள பொருளை அப்படியே பிரதிபலிக்கும். இப்பொழுது இருக்கும் கண்ணாடியைப் போல். ஆனால் அம்பாளின் கன்னம்.

அந்த பத்மராகக் கல்லை ஒண்ணுமே இல்லாமல் செய்யக்கூடிய காந்தி படைத்தது. அவ்வளவு அழகு. நமது கண்ணை சிமிட்டாமல் அவள் அழகினில் நம்மை மயங்க வைப்பாள். அப்படி அவள் அழகினில் மயங்கினால் தானே குழந்தைக்கு தாயிடம் எப்படி அன்பு வழிகிறதோ அதுபோல் நமக்கும் அன்பு பெருகி, அவள் பால் நம்மை கவர்ந்து அவள் அருளினால் அவளிடம் இலையம் ஏற்படும்.

அந்த இரண்டு உதடுகளும் மேலும் கீழும் சிகப்பாக இருக்கும். எதைப்போல என்றால்.ஒரு உதடு செங்காந்தாள்(பிம்ப)மலர் போல சிகப்பாக இருக்குமாம். மற்றொரு இதழோ புத்தம் புதிதாக உருவெடுத்த பவழத்தின் சிகப்பு நிறத்தை ஒத்து இருக்குமாம்.

திரும்பி ஒருமுறை சகஸ்ரநாம வரிகளை படிக்கலாமா!!

பத்மராக சிலா தர்ஸ பரிபாவி கபோலபூ! நவ வித்ரும பிம்ப ச்ரீ ந்யக்காரி ரதனச்சதா!!

இதையே ஸெளதர்ய லகரியில் 59வது ஸ்லோகத்தில் சங்கரர் வர்ணிக்கிறார்.

ஸ்புரத்கண்டாபோக ப்ரதிபலித தாடங்க யுகளம்

சதுஶ்சக்ரம் மன்யே தவமுகமிதம் மன்மதரதம்

யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத மர்க்கேந்து சரணம்

மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே

கண்ணாடிபோல் பிரகாசிக்கிற கன்னப்பிரதேசத்தில் பிரதிபலிக்கின்ற இரண்டு தாடங்கங்களுடன் கூடின உன்னுடைய இந்த முகமானது நாலு சக்கரங்களுடன் கூடின மன்மதனின் தேர் என்று கருதுகிறேன். அதில் ஏறிக்கொண்டு மன்மதன் மஹாவீரனாக விளங்குபவனாய் சூரிய, சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட பூமியாகிய தேரில் போருக்குச் செல்லும் பிரமத கணங்களுக்கு அதிபதியான பரமேசுவரனையே வஞ்சிக்க எண்ணி எதிர்க்கிறான் என்கிறார்.

அவள் அழகை வர்ணிக்க எனக்கு இந்த ஆயுள் மட்டும் போதாது. அவளின் நாமம் தெகுட்டாத அமிர்தம். இதை எழுத எழுத உங்களுடன் நானும் அந்த தேவாமிருதத்தை அருந்துகின்றேன். நமோ தேவ்யை.

குமார் ராமநாதன்

கருத்துகள் இல்லை: