சனி, 23 மே, 2020

சந்தேகக் கோடு; அது சந்தோஷக் கேடு...

🌍மஹாபாரதத்தில் அதிகம் அறியப்படாக கதை;🌍

அஸ்வத்தாமனை சரியாக புரிந்து கொள்ளாத துரியோதனன்…

சந்தேகம் என்பது மிகவும் கொடிய நோய். சந்தேகம், சந்தோஷத்தின் எதிரி.

இதற்கு மஹாபாரதத்திலேயே உதாரணம் உள்ளது.

கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது. இதை நன்கு அறிந்த கிருஷ்ண பரமாத்மா, துரியோதனிடம் சமாதான துாது சென்றான். யுத்தம் வந்தால், கவுரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என, பரமாத்மாவுக்கு தெரியும்.

அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான்.

அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், எனப் பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான்.

அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன். கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் ஏதோ பேசினான்,

அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான் கிருஷ்ணன் சொன்னதை ஆமோதித்தது போல ஆம் என்று தலையை ஆட்டினான். பின், கிருஷ்ணனின் விரலில், மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.

இதைப் பார்த்த துரியோதனன், ‘"நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்’ என, கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான்".

இந்த சந்தேகத்தால், அவனை, கடைசி வரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை.

17ம் நாள் யுத்தத்தில், துரியோதனன் பீமனால் தாக்கப்பட்டு, கால்கள் தொடைகள் உடைந்து, யுத்த களத்தில் இருந்தான், அப்போது, அவனை அஸ்வத்தாமன் சந்தித்தான்,

‘நான் சிரஞ்சீவி வரம் பெற்றவன்; என்னை  சேனாதிபதியாக நியமித்திருந்தால், யுத்தத்தின் முடிவு மாறியிருக்கும்’ என்றான் அஸ்வத்தாமன்.

அதற்கு துரியோதனன், "நீதான், பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என கிருஷ்ணனிடம் சத்தியம் செய்து கொடுத்தாயே’ என, கேட்டான்.

‘யார் எப்போது எங்கே சத்தியம் செய்தது ?’ என, கேட்ட அஸ்வத்தாமனிடம், கிருஷ்ணன் துாது வந்த போது நடந்த சம்பவத்தை தெரிவித்தான் துரியோதனன்.

இதைக் கேட்ட அஸ்வத்தமான் விரக்தியில் சிரித்தான்.

‘கிருஷ்ணனின் விரலில் இருந்த மோதிரம் கீழே விழுந்தது. அதைத் தான் எடுத்து கொடுத்தேன். இன்று வெய்யில் அதிகமா என்று என்னிடம் வானத்தைச் சுட்டிக் கட்டி கேட்டான். நான் "ஆமாம்" என்று தலையசைத்தேன். பின்னர் மரியாதை நிமித்தம் கிருஷ்ணனின் விரலில் மோதிரத்தை மாட்டி விட்டேனே தவிர  சத்தியம் எதுவும் செய்யவில்லை.

தேவையின்றி  என் மீது சந்தேகப்பட்டு, நீயே உன் தோல்வியை தேடி கொண்டாய். அப்போதே இது பற்றி என்னிடம் கேட்டிருந்தால், நடந்தது என்ன என்று உனக்குத் தெரிந்திருக்கும்.

இதுவும், அந்த கிருஷ்ணனின் விளையாட்டுதான்’ என்றான் அஸ்வத்தாமன்.

உண்மைதான்; சந்தேகம் ஏற்பட்டால், அது பற்றி சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் துரியோதனன் போல், தோல்வியை தழுவ வேண்டியது தான்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

கருத்துகள் இல்லை: