சனி, 23 மே, 2020

நாமெல்லாம் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித்தனியாக உண்மையாக இருப்பதை நினைக்கின்றோம். அவற்றிடம் ஆசை, துவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக் கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கின்றோம்.

இந்தக் கர்மத்தை அனுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கின்றோம். அம்பாளை உபாசித்து ஞானம் வந்து விட்டாலும் நானாவிதமான இத்தனையையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறுவேறு தோற்றங்கள் தான் என்று அபூர்மாகத் தெரியும். நாமும் அப்படி ஒன்றே. தோற்றங்கள் இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும். உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்து கொண்ட பின் வெளியே மாற்றிக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது. இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கின்ற பேரறிவோடு அறிவாக நம் மனதைக் கரைத்து விடுவோம். அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அது- அதாவது மாயைதான். அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.

மாயைக்கு காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள் தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம்.  இத்தனை     மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கின்ற   கருணையும், அவளுக்கே  பூரணமாக இருக்கின்றது.  மாயாலோகத்தில்   நாம்  உண்டாக்கிக் கொள்ளும்  கஷ்டங்களும், துக்கங்களும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும் தான். இந்திரிய சுகங்களின்  வழியிலேயே மனதை செலுத்தி நம்முடைய சுவபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கின்றோம்.

ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டி படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி,  இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனசின் ஓயாத சஞ்சலங்களிலிருந்தும்  ஜீவனை விடுவிப்பதற்காக  சாஷத் காமாக்ஷி யாகவே வருகிறாள். காமாக்ஷியின்  நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால்  ஆனவை   சாதாரணமாக கெட்டியான   இரும்பினால்  வில் அமைந்திருக்கும்.

இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்கு பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கின்றார்கள். அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிக்கும். மதுரமான மனம் படைத்த அம்பாள் நம்மனங்களையெல்லாம் இந்த வில்லைக்காட்டி வசப்படுத்திக் கொண்டு வருகின்றாள்.அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும், நம் ஐம்புலன்களை ஆகாஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை.

மனோ ரூபேஷ கோதண்டா – பஞ்சதன்மாத்ர ஸாயகா என்று,  இதையே லலிதா ஸஹஸ்ர நாமம் கூறுகிறது.

நம்முடைய மனோ விருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷி யாகி கரும்பு வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி வந்திருக்கின்றாள். இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கின்றாள். பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக்குத்தி அடக்குவதற்காக, பௌதீக பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களைச் சொல்கிற கவர்ச்சி, விலக்கல் என்பன தான், மனித வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. அவற்றை    அடக்கி    சம்சாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாக பாசாங்குசங்களைத் தரித்திருக்கின்றாள். 

ராக ஸ்வரூப பாசட்யா க்ரோதாகாராங்குசோஜ்வலா என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும்,(ராகம்)    அங்குசத்தை துவேஷமாகவும்     (குரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று
அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்.           

இப்படியாக, நாலு கைகளில் கரும்புவில் , புஷ்பபாணம்,  பாசம், அங்குசம் இவற்றை தரித்துக் கொண்டு நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்குமப்பூ மாதிரி, செம்பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக  நிமித்தம் தோன்றியிருக்கின்றாள்.

கருத்துகள் இல்லை: