சனி, 23 மே, 2020

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே

திருநீற்று மேனியனாய், கீளொடுவெண்கோவணம் தரித்துத் தண்டினைக் கையில் ஏந்தி, பழனி வெற்பில் பொலிவுடன் விளங்கும் தண்டாயுதபாணியாகிய அவன்தனை நான் என்றும் மறவேன்

மஹாசய, வ்யாசத்தைப் வாசிப்பதெல்லாம் அடுத்த பக்ஷமே. வேலேந்திய புன்சிரிப்புடன் கூடிய பழனிப்பதிவாழ் பாலகுமாரனின் சித்திரம் இந்த வ்யாசத்தை வாசி வாசி என தூண்டியது என்றால் மிகையாகாது.

அவனை நினைவிலிருத்தி படிக்கப் படிக்க மேற்கண்ட வாசகத்தை வாசிக்குங்கால் தேசாந்திரியான எமக்கு எம் குலதெய்வத்தைப் படியேறி தரிசித்தது போன்ற ஒரு உணர்வுடன் கண்கள் பனித்ததற்கு தலையல்லால் கைமாறறியேன்.

வள்ளிச்சன்மார்க்க வ்யாசமளித்த தேவரீரிடமிருந்தே இப்படி ஒரு வாசகம் எதிர்பார்க்கவியலும் போலும்.

\\\\ மக்களைத் தாம் சென்று தீண்டுவதைக் காட்டிலும் மக்கள் தாமாகவே வந்து தம்மைத் தீண்டுதலே பேரின்பம்\\\\

எங்கள் திருப்புகழ் சபையில் “முத்துக்குமாரனடி அம்மா” என்றொரு பாடல் பாடுவதுண்டு. பாடல் புனைந்த அருளாளர் யார் அறியேன். முன்னமும் இது பற்றி பதிவு செய்துள்ளேன். கீழே திரும்ப கொடுத்துள்ளேன்.

நெஞ்சம் உருகி நின்று நீயே துணை என்று
கெஞ்சி அழைத்தால் வருவான் குமரன்
கேட்பதெல்லாம் தருவான்

இதை எந்த இடத்தில் கேட்டாலும் மீனுலவு க்ருத்திகை குமாரன் புள்ளிமயிலிலேறி வருவதுபோலேன்றோ தோன்றும். கேழ்க்குமிடம் மறந்து அதுவே பழனியாகவும் திருச்செந்தூராகவும் திருத்தணிகையாகவும் ஆகிவிடுமன்றோ.

அப்படி அடியார் நெஞ்சுருகப் பாடுகையில் முந்தைவினை தீர்க்க வரும் முத்துக்குமரன் என்னவெல்லாம் செய்தான் என அருளாளர் (பெயர் மறந்தேனே!) பாடுகிறார் :-

கன்னத்தை தொட்டான்
கையைப் பிடித்தான்

கந்தன் பிஞ்சுத் தளிர் கரங்களால் பிடித்த கையை விடவும் தோன்றுமோ, ஆகவே கேட்கிறார் :-

கைவிட்டு விடுவாயோ என்றேன் கந்தனிடம்
கைவிட்டு விடுவாயோ என்றேன்

அடியார்க்கு நல்ல பெருமாள் சொல்கிறானாம் :-

கைவிடேன் கைவிடேன் கைவிடேன் என்றான்
முத்துக்குமாரனடி அம்மா

பின்னும் சொல்கிறான்

தீராத வினை தீர திருவருள் துணையுண்டு
திருப்புகழைப் பாடென்று சொன்னான்
அருணகிரி திருப்புகழைப் பாடென்று சொன்னான்

யாக்கையில் பிறவாத சிவபரம்பொருளை ஒழித்துப் மகவாகப் பிறந்த கதைகளையுடைய அனைத்துத் தெய்வங்கட்கும் பிள்ளைத் தமிழ்நூல்கள் தோன்றின. சிவபெருமானுக்கு உண்டா என்று அறியேன்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

ஓயாது ஒழியாது அவன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவான் முருகா என்பதில் ஐயம் ஏதுமில்லை.

கருத்துகள் இல்லை: