சனி, 23 மே, 2020

கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருடிய கதை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருட ஆரம்பித்த கதை மிகவுமே சுவாரசியமானது. கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது தாய் யசோதை கிருஷ்ணருக்கு அவ்வப்போது சிறிது வெண்ணெய் தருவாள். இதன் சுவை கிருஷ்ணருக்கு மிகவுமே பிடிக்கின்றது. வெண்ணெய் எங்கிருந்தோ வருவதால்தான் அம்மா நமக்கு சிறிதளவே வழங்குகின்றாள் என்று கிருஷ்ணர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒருமுறை கிருஷ்ணரும் பலராமரும் தவழ்ந்தவாறு விளையாடிக் கொண்டே ஒரு அறையின் பக்கமாக சென்றனர். அந்த அறை இருட்டாக இருப்பினும் உள்ளே சென்ற அவர்கள் பானைகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதில் என்ன இருக்கின்றது என்ற ஆவலில் அதனைப்பிடித்துக் கொண்டு எழுந்துநின்று, பானைக்குள் கைவிட, அது வெண்ணெயால் நிறைந்திருப்பதைக் கண்டு வியப்புற்று அள்ளி அள்ளி உண்டார்கள். இவ்வளவு வெண்ணெயை வைத்துக் கொண்டு அம்மா நமக்கு சிறிது சிறிதாகத்தானே தருகின்றாள் என்று எண்ணியாறு விளையாட்டையும் மறந்து வெண்ணெயை உண்டு கொண்டிருந்தார். அச்சமயத்தில் குழந்தையை தேடிக்கொண்டு அங்கே வந்த யசோதை கிருஷ்ணர் அணிந்திருந்த ஆபரணங்களின் ஒளியில் வெண்ணெய் மயமாக இருப்பதைக் கண்டார். என்ன கிருஷ்ண வெண்ணெய் திருடி உண்கின்றாயா என்றாள். உடனே கிருஷ்ணர் என்ன சொல்வதென்று தெரியாமல் இல்லையம்மா நீங்கள் என்னை உடல் முழுவதும் ஆபரணங்களால் நிரப்பியுள்ளீர்கள், இந்த ஆபரணங்கள் எனது உடலை மிகவுமே சூடுபடுத்துவதால் அதனை தணிக்கவே வெண்ணெய் பானைக்குள் கைவிட்டு குளிர்ச்சி செய்துகொண்டேன் என்றாள். உடனே அவள் உனது கன்னம் மற்றும் வாயில் வெண்ணெய் நிரம்பியுள்ளதே அது எப்படி என்றாள். மாட்டிக்கொண்டோமே என்று நினைத்த கிருஷ்ணர் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்தவர், இந்த அறையின் இருட்டில் எறும்புகள் என்மேல் ஏறியதே தெரியவில்லை, எறும்புகள் எனது கன்னத்தை கடித்தபோது, எனது வெண்ணெய் கையுடன் அதனை தள்ளிவிட்டேன், அதனால்தான் கன்னம் முழுவதும் வெண்ணெயாக இருக்கின்றது அம்மா என்றார். அடடா எனது கண்ணனை நானே தவறாக நினைத்துவிட்டேனே என்றவாறு அன்புடன் தூக்கியணைத்து கொண்டாள். அப்போதுதான் கிருஷ்ணர் ஆஹா விருந்தாவனத்தின் புத்திசாலி பெண்மணியான எனது அன்னையையே நான் ஏமாற்றிவிட்டேன் என்கின்றபோது இனி யார் வீட்டில் வேண்டுமானாலும் எளிதாக வெண்ணெய் திருடலாம் என்று முடிவு செய்தார். இவ்வாறாக கிருஷ்ணர் முதன்முதலாக தனது நவநீத சோரத்தை அதாவது வெண்ணெய் திருடிய லீலையை மிக அழகாக அரங்கேற்றினார்.

கருத்துகள் இல்லை: