சனி, 23 மே, 2020

*தெளிவு பதிவு*

நாம்தான் பிரம்மம் என்று கூறுகிறது அத்வைதம். நாமே பிரம்மம் என்றால் அதனை நம்மால் ஏன் அறியமுடிவதில்லை. பிரம்மம் என்பது அறியக்கூடிய வஸ்து அல்ல.

அது அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஒன்று. அது எப்படி அறியப்படும் பொருளாக முடியும்? மற்ற பொருள்களுக்கு இனிப்பு சேர்க்க சர்க்கரை சேர்க்கிறோம்.

சர்க்கரைக்கே இனிப்பு ஊட்ட வேறு எதையாவது சேர்க்க வேண்டுமா என்ன? மெழுகுவர்த்தியை ஏற்றி சூரியனைப் பார்க்க வேண்டுமா என்ன? எல்லாவற்றையும் ஒளி ஊட்டக்கூடியது சூரியன்.

நமக்கு இரவு, பகல் உண்டு. சூரியனுக்கு இரவு உண்டா என்ன? அது எப்பொழுதும் ஒளி மயமானது. அது போல பிரம்மம் அறிந்தது அறியாதது என்ற நிலைகளுக்கு அப்பாற்பட்டது.

இப்படி பிரம்மத்தின் தத்துவத்தை கவிதை நயத்துடன் விளக்குகிறார் ஸ்ரீசங்கரர் தன் உபதேசஸாஹஸ்ரி என்ற நூலில்.

நாஹோராத்ரே யதாஸூர்யே ப்ரபாரூபாவிசேஷத: |
போதரூபாத் விசேஷாத் ந போதாபோதௌ ததாத்மனீ ||
இதே கருத்தைத்தான் கடோபநிஷத் இவ்வாறு கூறுகிறது.

அசப்தமஸ்பர்சமரூபமவ்யயம் ததாரஸந்தித்ய மகந்தவச்சயத் |
அநாத்யநந்தம் மஹத: பரந்த்ருவம் நிசாப்ய தந்ம்ருத்யுமுகான்முச்யதே ||

பரப்பிரம்மமானது சப்தம் ஸ்பர்சம், உருவம், சுவை, வாசனை ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்ப்பட்டது. அது மாறுதலற்றது. அதற்கு ஆரம்பமும் கிடையாது; முடிவும் கிடையாது.

எல்லா உற்பத்திக்கும் காரணமான ‘மஹத்’ தத்துவத்திலிருந்தும் அப்பாற்பட்டது பிரம்மம். இதனை அறிந்தவன் மரணத்தை வென்றவனாகிறான்.

கருத்துகள் இல்லை: