சனி, 23 மே, 2020

"ரயிலைக் கோட்டை விட்ட ஒரு இண்டர்வியூ போன பெரியவா பக்தர்"

கம்பெனியின் உரிமையாளரே காரில் அழைத்துப்போய் வேலையும் கொடுத்த அதிசயம்

இது காஞ்சிமகானின் அருட்பார்வையல்லாமல் வேறென்ன?


ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன். வைதீக முறைப்படி தன் வாழ்க்கையை, அமைத்துக் கொண்டவர் அவருக்கு வேலை தேட வேண்டிய கட்டாயம்.

அவருக்கு திருப்பத்தூரில் வேலைக்கு ஒரு இண்டர்வியூவிற்காக அழைப்பு வந்தது. ஜோலார்பேட்டையில் டிரெயினைப் பிடித்துப் போக வேண்டும். ஸ்டேஷனுக்கு வந்தவர் டிக்கெட்டும் வாங்கிவிட்டார். ரயிலில் போனால்  குறித்த நேரத்தில் போய்ச் சேர முடியும்.

ஸ்டேஷனுக்குள் நுழையும் முன், அவர் கண் எதிரே ஒரு வயதான மனிதர், மயங்கிச் சுருண்டு விழுந்தார் லட்சுமணன் அருகில் போய், அவரைத் தாங்கிப் பிடித்து, வேண்டிய முதலுதவிகளைச் செய்து அவரை ஒரு வழியாக உட்கார வைத்தார். அதற்குள் ரயில் போய்விட்டது. அடுத்த ரயிலில் போவதற்குள் இண்டர்வியூ நேரம் முடிந்துவிடும். அதனால் இனி அங்கே போய் பலன் இல்லை என்கிற காரணத்தினால், ஊர்த் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார்.எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும் மகானின் திருவுள்ளந்தான் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். இது இல்லாவிட்டால் இன்னொரு வேலையை அவர் தராமலா போய்விடுவார் என்கிற நம்பிக்கை  அவர் மனதில்.

ரஸ்தாவில் எந்தவிதமான வாகனமும் வரவில்லை.ஒரு கார் அப்போது அங்கு வர, தைரியமாக அவர் கையைக் காட்டி நிறுத்தினார். கார் டிரைவரும் வண்டியை நிறுத்தினார். லட்சுமணன் நடந்ததைச் சொல்லி தான் ஊர் போய் சேர 'லிஃப்ட்' தரமுடியுமா என்று கேட்டார்.

"மயங்கிக் கிடந்தவருக்கு உதவி செய்யப்போக, நீங்கள் ரயிலைக் கோட்டை விட்டு விட்டீர்கள் இல்லையா?"

"ஆம்"

"சரி, எனக்கு திருப்பத்தூரில் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு,'உங்களை உங்கள் இண்டர்வியூ இடத்தில் இறக்கிவிடுகிறேன். போதுமா?"

பழம் நழுவி பாலில் விழுந்தது போலாயிற்று லட்சுமணனுக்கு. காரை ஓட்டி வந்தவர் பெரிய இடத்து மனிதர் போல் தோற்றமளித்தார்.காரில் போகும்போதே லட்சுமணனின் வரலாற்றைக் கேட்டுக் கொண்டே வந்தார். திருப்பத்தூரில் அவரது காரியாலயத்தில் இறங்கிவிட்டு, சற்றுப் பொறுத்து வருவதாகவும், அதுவரை, அவரை (லட்சுமணன்) ரெஸ்ட் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

லட்சுமணன் உள்ளே நுழையும் போதே காரியாலயத்தில், காஞ்சி மகானின் பெரிய உருவப்படம், அவரை வரவேற்றது. வணங்கியபின் ஒரு பக்கமாக அமர்ந்தார். அங்கிருந்த ஒரு சிப்பந்தியிடம், அந்தக் கம்பெனியின் பெயர் என்ன, தன்னை அழைத்துக் கொண்டு வந்தவர் யார் என்றெல்லாம் கேட்டார்.

கம்பெனியின் பெயரைக் கேட்டவுடன் வியந்து போனார். தான் இண்டர்வியூவிற்கு வரவேண்டிய கம்பெனி தான் அது. வண்டியை ஓட்டி வந்தவர் கம்பெனியின் உரிமையாளர். அவர் வந்தவுடன் லட்சுமணனை விசாரித்து சொல்கிறார்;

"எப்போ பிறருக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம்,ஒருவன் மனதில் இருக்கிறதோ, இதனால் தனக்கு வரும் துன்பங்களையும் அவன்  பொறுத்துக் கொள்கிறானோ....அவன் பக்திமான்களை விட மிகச் சிறந்தவன் என்று காஞ்சி மாமுனிவர் சொல்லியிருந்ததை, நீங்கள் நடந்த சம்பவத்தை விவரிக்கும்போதே புரிந்து கொண்டேன்..."

என்று சொன்ன அந்த நிர்வாகி,இண்டர்வியூவுக்கு வந்த லட்சுமணனுக்கு, வேலை போட்டுக் கொடுத்து விட்டார்.

இது காஞ்சி மகானின் அருட்பார்வையல்லாமல் வேறென்ன?.

கருத்துகள் இல்லை: