சனி, 23 மே, 2020

#மூன்று_கர்ப்பூராரத்திகள்

#தெய்வத்தின்குரல் பாகம் 1

இங்கே முகுந்த ப்ரஹ்மேந்திரர்களின் கிரீடப் பிரகாசம் [அம்பாள் பாதத்திற்கு] நீராஜனம் செய்கிறதாகச் சொல்பவர் ஏழெட்டு ச்லோகம் தள்ளி1இன்னோரிடத்திலும் ஜீவாத்மா பராசக்தியோடு ஐக்யமாகிறதைச் சொல்லி, அந்த அபேத மோக்ஷ ஸ்தானத்தை அடைந்தவனுக்கு மஹாப்ரளய காலாக்னி என்ற ஸர்வ ஸம்ஹார ஊழித் தீயே நீராஜனம் செய்வதாகச் சொல்கிறார்:

மஹா ஸம்வர்தாக்நிர்-விரசயதி நீராஜன விதிம்

ஸ்ருஷ்டி, காலம் முதலான எல்லாவற்றையும் கடந்து ஸத்யா தத்வமான ‘அம்பாளாகவே ஆகிறான் என்று அர்த்தம் அங்கே சொல்லப்படும் அந்த ஆஸாமி எவனோ ஒருத்தனான “ய:” இல்லை. பக்தியுடன் பாண்டித்யமும் சேர்ந்த லெவலில் இருக்கிறவனுங்கூட இல்லை. அதற்கும் உசந்த லெவலில் அம்பாளை அத்வைதமாக உபாஸித்துப் பார்ப்பவனாக அவனைச் சொல்லியிருக்கிறார்.

இங்கே [“பவாநி த்வம்” ச்லோகத்தில்] நான்-நீ-ஆகிற-விஷயம் தற்செயலாக அது பாட்டுக்குக் கவியின் பார்வையில் வந்ததுதான்; அந்த ஆஸாமி உத்தேசித்ததில்லை.

அங்கே அப்படியில்லை. அவனை “ய:” என்கிறபோது, அதோடு விட்டுவிடாமல், எப்படிப்பட்ட “ய:” என்கிறார். நன்றாக அறிந்து, “நீதான் நான்” என்று ஸதாவும் பாவித்துக் கொண்டிருப்பவனவன் – “த்வாம் அஹம் இதி ஸதா பாவயதி ய:” என்று சொல்லியிருக்கிறார்.

தாஸோஹம் என்றில்லாமல் ஸோஹம் என்றே உபாஸிகிற அவனுக்கு ப்ரளய காலாக்னியும் வெறும் கர்ப்பூராரத்தி ஆகிவிடுகிறது என்கிறார். மற்ற ஸகலமான பேரையும் பஸ்மம் பண்ணுகிற அது இவனுக்குப் பூஜோபசாரமாக தீபாராதனை காட்டி பக்தி பண்ணுகிறதாம்.

சௌந்தர்ய லஹரியில் மூன்று நீராஜனம் வருகிறது. பிரம்ம-விஷ்ணு-இந்திரர்களின் கிரீடம் அம்பாள். பாதத்தில் பண்ணும் நீராஜனம் ஒன்று. அம்பாளுடன் அத்வைதமாக ஆசைப்பட்டு அப்படியே ஆக்கிக் கொண்டவனுக்கு – இப்படிச் சொன்னால் அம்பாளுக்கு என்றேதான் அர்த்தம்- அவளுக்கு, மஹா ப்ரளயத்திலும் அழியாத பரப்ரஹ்ம சக்தியாக இருக்கப்பட்டவளுக்கு அந்த ப்ரளயாக்னி சக்தியாக இருக்கப்பட்டவளுக்கு அந்த ப்ரளயாக்னி பண்ணும் நீராஜனம் இரண்டாவது ஸ்தோத்ரத்தைப் பூர்த்தி பண்ணுமிடத்தில் [நூறாவது ச்லோகத்தில்] மூன்றாவது நீராஜனம் வருகிறது.

வாக்சக்தியிலே ஸுர்ய ப்ரகாசமாக ஜ்வலிக்கிற அம்பாளுக்கு ஆசார்யாள் இந்த சௌந்தர்ய லஹரி என்ற வாக்லஹரியையே கர்ப்பூரமாக்கி அங்கே நீராஜனம் காட்டுகிறார்.

இந்த மூன்றும் ஸ்ருஷ்டிக்கொன்று, ஸ்திதிக்கொன்று, ஸம்ஹாரத்திற்கொன்று என்று இருக்கின்றன. ஆனால் க்ரமம் மாறி முதலில் ஸ்திதி, அப்புறம் ஸம்ஹாரம், கடைசியில் ஸ்ருஷ்டி என்று வருகிறது.

ஸ்திதி – கருணையோடு கட்டிக் காத்துப் பரிபாலிப்பது – தான் அம்பாளுக்கு முக்யம். அதனால்தான் ப்ரணவத்திலே முறையாக ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைக் குறிக்கும் அ, உ, ம என்ற அக்ஷரங்கள் வந்தாலும், தேவீப்ரணவம் என்கிற ‘உமா’ நாமத்திலே ஸ்திதி அக்ஷரமான ‘உ’ முதலில், அப்புறம் ஸம்ஹாராக்ஷரமான ‘ம’, கடைசியில் தாயாக முடிக்கிற விதத்தில் ஸ்ருஷ்ட்யக்ஷரமான ‘அ’ என்று இருக்கிறது. இங்கேயும் மூன்று நீராஜனங்கள் இந்தப்படியே வருகின்றன.

முகுந்த ப்ரஹ்மேந்திரர்கள் தங்கள் கிரீடத்தில் பண்ணும் நீராஜனம் ஸ்திதி. அவர்கள் இருக்கிறார்கள், லோகத்தைப் பரிபாலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதாலேயே இது ஸ்திதி காலம் என்று தெரிகிறது.

ஸ்வாரஸ்யமாக இன்னொரு internal evidence – உட்சான்று கூட – ச்லோகத்தில் தெரிகிறது: ‘ப்ரஹ்ம, விஷ்ணு’ என்றுதான் சொல்வது வழக்கமானாலும் இங்கே ஸ்திதிக்கு ஸ்வாமியான விஷ்ணுவை முதலில் முகுந்தன் என்று சொல்லிவிட்டு அப்புறந்தான் ப்ரஹ்மாவைச் சொல்லியிருக்கிறது! ஸம்ஹார கர்த்தாவான ருத்ரனைச் சொல்லவேயில்லை; இந்திரனைத்தான் சொல்லியிருக்கிறது.

மஹா ப்ரளயாக்னி செய்கிற நீராஜனம் என்பது ஸம்ஹாரத்தைச் சொல்வது. இது யாருக்குமே ஸ்பஷ்டமாகப் புரியும்.

கடைசி ச்லோக நீராஜனம் ஸ்ருஷ்டி. எப்படியென்றால்: ஆசார்யாள் இந்த ஸ்தோத்ர ஸ்ருஷ்டிக்கு அம்பாளே காரணம் என்று சொல்லித்தான் அதைக் கொண்டே அவளுக்கு அங்கே நீராஜனம் காட்டுகிறார்.

அம்பாள் தான் கற்பனையாக ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்திருக்கிறாற்போலத்தான் ஒரு கவியும் தான் கற்பனையால் காவ்யம், ஸ்தோத்ரம் என்று ஸ்ருஷ்டிக்கிறேன். இப்படித் தம் ஸ்ருஷ்டியாகத்தெரியும்
இந்த ஸ்தோத்ரத்திற்கும் மூலச் சரக்கு அம்பாள்தான்; ஸுர்ய மண்டலமாக இருக்கும் அந்த மூலச் சரக்கிலிருந்து ஒரு கர்ப்பூர வில்லையில் ஏற்றிய சுடரின் அளவுதான் இந்த ஸ்தோத்ரம் என்று அங்கே ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.

இப்படி மூன்று நீராஜனம் கொடுக்கும் பரம மங்களமான வழிபாடாக ஸௌந்டர்ய லஹரி இருக்கிறது.

இங்கே நாம் பார்க்கிற முதல் நீராஜனம் பிரம்ம, விஷ்ணு, இந்திரர்களின் கிரீடப் பிரகாசமாக இருக்கிறது.

1 ச்லோ. 3௦

கருத்துகள் இல்லை: