வரதட்சணை
கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என யுகங்கள் நான்கு வகைப்படும்.இந்த நான்கு யுகங்களிலும் யுகத்திற்கு ஏற்றவாறு செய்யவேண்டிய தர்மங்களை நமது இந்து மத நூல்கள் கூறிகின்றன.இந்த நான்கு யுகங்களிலும் மனிதர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விஷயங்கள் அநேகமாக ஒன்றாகத்தான் இருக்கும்.ஆனால் சில விஷயங்களில் சில மாறுதல் இருக்கும்.
வேண்டிய விஷயங்கள் அநேகமாக ஒன்றாகத்தான் இருக்கும்.ஆனால் சில விஷயங்களில் சில மாறுதல் இருக்கும்.
மனிதர்களுக்கு பிரம்மச்சரியம் கிருஹஸ்தம் வானப்பிரஸ்தம் சன்யாசம் என நான்கு ஆஸ்ரமங்கள் உண்டு.இதில் கலி தவிர மற்ற மூன்று யுகங்களிலும் பிரம்மச்சரியத்துடனேயே தன் வாழ்நாள் பூராவும் இருக்கலாமென்று மதநூல்கள் கூறுகின்றன.இது ஆண்களுக்கான விதி.
பெண்களுக்கோவெனில் கன்னிகா சுமங்கலி விதவா என்று மூன்று நிலை மாத்திரமே.இந்த மூன்று நிலையில் கன்னிகா நிலையிலேயே ஒரு மாது தன் வாழ்நாள் முழுவதும் இருக்கக் கூடாது என்பது நியதி.சீக்காளியாகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ கல்யாணம் நடப்பது அரிது என்று தெரிந்தால் அது சமயம் சாளிக்கிராமத்தை வைத்து அதற்குக் கல்யாணத்திற்குச் செய்யவேண்டிய அத்தனை சடங்குகளையும் செய்து அந்த சாளிக்கிராமத்திலுள்ள பகவானையே பர்த்தாவாக கணவனாக கொண்டு பூஜித்து வழிபட்டு தன் காரியங்களையும் செய்து கொண்டே சுமங்கலி நிலையில் அவள் வாழ வேண்டும்.இரண்டாவதாக வாழை மரத்திற்கு எல்லா வைதீக கல்யாண சடங்குகளையும் செய்து பிறகு அந்த வாழை மரத்தை வெட்டி விட வேண்டும்.இது விதவா நிலையைக் குறிக்கும்.
அன்று முதல் விதவா நிலையை அடைந்து விதவா தர்மத்தைக் கடைபிடித்து வாழவேண்டும்.இந்த இரண்டையும் தவிர கன்னிகா நிலையிலேயே வாழ்ந்ததாக வரலாறும் கிடையாது.எந்த நூலிலும் சொல்லப்படவில்லை.
தற்காலத்தில் பலர் வரதட்சணைக் கஷ்டத்தினாலோ அல்லது குடும்பத்தைப் பராமரிப்புச் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையினாலோ அல்லது சந்தோஷமாக உல்லாசமாக சுதந்திரமாக இருக்கவேண்டுமென்ற எண்ணத்தாலோ கல்யாணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறார்கள்.
வரதட்சணை என்பது உண்டு.ஆனால் வரனுக்கு மாப்பிள்ளைக்கு தட்சணை கொடுப்பது என்பதல்ல!.வரன் புருஷன் பெண்ணை தானமாகப் பெறுகிறான்.அந்த தானத்திற்குப் பிரதிபலனாக புருஷன் பெண்ணுக்குக் கொடுப்பது என்ற பழக்கம் உண்டு.அதை வைத்துத்தான் வரன் கொடுக்கும் தட்சணை வரதட்சணை என்றாயிற்று.ஆனால் அது மாறி, இன்று வரனுக்குக் கொடுக்கும் தட்சணை வரதட்சணை என்று நடை முறையில் வந்துவிட்டது.
அதே போல் கன்னிகாதானம் என்பதனால் கன்னிகையை தானம் செய்யும்பொழுது சக்திக்கு ஏற்றவாறு பெண்ணை நன்றாக அலங்கரித்து தட்சணையுடன் கூட தானம் அளிப்பது வழக்கம்.இதெல்லாம் வெறும் வழக்கங்களே தவிர வரதட்சணை என்பதற்கு சாஸ்திரங்களில் ஆதாரம் ஒன்றும் கிடையாது.
அதே போல் ஜானுவாசம் என்று சொல்லக் கூடிய மாப்பிள்ளை அழைப்பு ஒன்று. அதாவது கல்யாணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை முதலியவர்களை வரவழைப்பது என்பது மரபு.ஆனால் இப்பொழுது போல் மாப்பிள்ளைக்கு புதிய உடை ஊர்வலம் கச்சேரிகள் எல்லாம் பழக்கத்தை ஒட்டியும் பொருளாதாரத்தை ஒட்டியும் வளர்ந்ததே.
கல்யாணம் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொண்டது.அதற்கும் பெரிய பெரிய கல்யாண மண்டபங்கள் தேவையல்ல.வீட்டிலேயே அதைச் செய்து விடலாம்.நண்பர்களுக்கு பந்து வர்க்கத்தினருக்குத் தெரிவிக்க வேண்டி மாலையில் ஏதோ ஓர் இடத்தில் வரவேற்பு வைத்துக் கொண்டு விடலாம். மாப்பிள்ளை அழைப்புச் செலவு கல்யாணச்செலவு இவைகளை கணிசமாக குறைத்துக் கொண்டு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இதில் பெண்கள் தான் முக்கிய பங்கு எடுத்து நடத்த வேண்டும். நடத்தவும் முடியும்.
அதாவது தங்கள் கல்யாண காலத்திலே 'தங்கள் தகப்பனார் என்ன கஷ்டத்துக்கு உள்ளானார்.எவ்வளவு பணச் செலவு செய்தார்.அதனால் கண்ட பலன் என்ன? என்பதை எல்லாம் சிந்தித்து தங்கள் பிள்ளைகளின் கல்யாணங்களை இவ்விதம் நடத்தவேண்டும்.அதே நேரம் பெண்களுக்கு கல்யாணம் என்று வரும்போது முடிந்த அளவு பொருளாதார சௌகரியம் செய்து கொடுத்து கல்யாணத்தை கட்டாயம் முடித்து விட வேண்டும்.
ஆகவே பெண்கள் கல்யாணத்தைத் தாமதப்படுத்தாமல் பையன்களை மேற்சொன்ன முறையில் தயாரிக்க வேண்டும்.இதன் பொறுப்பு பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருடைய கையிலும் இருக்கிறது.பெண்கள் கண்ணீர்விடுவது நாட்டிற்கு நல்லதல்ல.ஆகவே எந்த ஒரு காரியத்திலும் பெண்கள் மனம் கலங்கும்படி கண் கலங்கும்படி வாழக் கூடாது.சமுதாயம் அப்படி வாழ விடவும் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக