சனி, 4 ஜூலை, 2015

ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர்

{இச் செய்தி கொஞ்சம் பெரியது தான் இருந்தாலும் முழுமையாக படிக்கவும் நண்பர்களே
}
ஆன்மிக உலகில் விடை தெரியாத புதிர்கள் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன.செந்தனலைக் கக்கி வானத்தில் வலம் வரும் நம்மால் தினமும் வணங்கப்படும் நவகோள்களுள் ஒன்றான சூரியனின் வெப்பத்தையே தாங்க முடியவில்லை.கோடைக்காலத்தில் குமுறிப் போகிறோம்.ஆனால் மெய்ஞானமும் விஞ்ஞானமும் என்ன சொல்கிறது தெரியுமா?சூரியனையும் தாண்டிய பரவெளியில் சூரியனை விடவும் அதிக சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றனவாம்.
ஆன்மிகத்தை அறிவதே ஆனந்தம்.ஆராய்ச்சியில் இறங்கினால் ஆண்டுகள் போதாது.பரவெளியில் புதைந்து கிடக்கும் பிரமாண்ட ரகசியங்களைப் போன்றது தான் சித்தர்கள் வாழ்க்கையும்.மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரரும் ஷீரடி அவதார புருஷர் ஸ்ரீசாய்பாபாவும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே சமாதி கொண்டிருந்தாலும் அவர்களை நம்பித் தொழும் பக்தர்களுக்கு இன்றைக்கும் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்கள்.இது போன்ற சித்த புருஷர்களுள் ஒருவர்தான் ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர்.1980-களின் துவக்கத்தில் இவர் சமாதி கொண்டார்.ஒட்டன்சத்திரத்தில் நாகனம்பட்டி ரோட்டில் இவரது ஜீவ சமாதி இருக்கிறது.சுமார் 550 வருடங்கள் இவர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.இவர் சமாதி ஆகி சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும்.இன்றைக்கும் கேராளவில் ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைத் தரிசித்த பழநிவாசிகள் இருக்கிறார்கள்.ஒட்டன்சத்திரத்துல எல்லா பயலுகளும் நல்லா இருக்கானுங்களா?என்கிற விசாரிப்பைக் கேட்ட பக்தர்களுக்கும் உண்டு.திண்டுக்கல் பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம்.அதாவது திண்டுக்கலில் இருந்தும் பழநியில் இருந்தும் ஒட்டன்சத்திரம் 30 கி.மீ. தொலைவில் மையமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் பல ஊர்களுக்குக் காய்கறிகளை சப்ளை செய்து கொண்டிருக்கும் ஊர் இது. வர்த்தகர்கள் அதிகம்.எல்லாம் இருந்தும் ஒரே ஒரு குறை...ஒட்டன்சத்திரத்தில் உள்ள ராமசாமி சித்தரின் சமாதி கவனிப்பார் இல்லாமல் முறையான வழிபாடு இல்லாமல் காணப்படுவது பல பக்தர்களின் மனதைப் பிசைகிறது.இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர்கள் எப்போதாவது இங்கே வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.மற்றபடி இங்கே எந்த நடமாட்டமும் இருக்காது.எண்ணற்ற அற்புதங்களையும் ஸித்து விளையாட்டுகளையும் நிகழ்த்திய ஒரு மகான் ஒட்டன்சத்திரத்தில் குடி கொண்டிருக்கிறார் என்பது உள்ளூர்க்காரர்கள் பலருக்குக்கூடத் தெரியவில்லை.போகட்டும்...வேளை வரும்போது எல்லாமே வெளிப்படும் என்று நம்புவோம்.
ராமசாமி சித்தர் எங்கே பிறந்தார் பெற்றோர் யார்.எப்படி ஒட்டன்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே குடி கொண்டார் என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை.தான் ஒட்டன் சத்திரத்தில் வாழ்ந்த காலத்தில் மெயின் ரோட்டில் உள்ள சகுந்தலா பாத்திரக் கடை வாசலில் வசித்து வந்திருக்கிறார்.இதற்கு அருகில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவ்வப்போது டீயும் பிரியாணி பொட்டலமும் வந்துவிடும்.சித்தர்கள் பிரியாணி சாப்பிடுவாரா என்று தோன்றலாம் அவர்கள் அசைவம் சாப்பிடுவது என்பது அதை ரசித்து உண்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.தன்னை நாடிவரும் பக்தர்களின் பிணியைத் தீர்ப்பதற்கு.வருபவர்களிடமே பிரியாணி பொட்டலம் வாங்கி வா என்று அனுப்பி அதை சாப்பிடுவது போல் செய்து பிணியை அறுத்திருக்கிறார்கள்.அசைவம் சாப்படுவது என்பது ஒரு பாவனைதான் பசி அல்ல.
ஒரு முறை கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின் எந்தக் கோழி வயிற்றுக்குள் சென்றதோ அதே கோழியை உயிருடன் தட்டில் வரவழைத்துத் துரத்தி அனுப்பினார் ராமசாமி சித்தர்.ஆக ராமசாமி சித்தர் பிரியாணி சாப்பிட்டார் என்று சொல்ல முடியுமா?இனி ராமசாமி சித்திரைப் பற்றி பார்ப்போம்.இவரது பெயர் ராமசாமி என்பது.ஒரு முறை ரிஷிகேஷத்தில் இருந்து அறியப்பட்டது.அதுவரை உள்ளூர்க்காரர்களால் பெரியவர்.சாமீ சித்தர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தார்.ராமசாமி என்று இவர் அழைக்கக் காரணமான அந்த நிகழ்வைப் பார்ப்போம்.ஒட்டன் சத்திரத்தில் வசித்து வரும் சுமார் அறுபது பேர் வட இந்தியயாத்திரை புறப்பட்டார்கள்.உள்ளூர் வர்த்தக பிரமுகரான சோமசுந்தரம் பிள்ளை என்பவர் தலைமையில் இந்தக் குழு புறப்பட்டது.காசி ரிஷிகேஷ் ஹரித்வார் பத்ரிநாத் என்று அவர்களது பயணப் பட்டியல் இருந்தது.விடிகாலை மூன்று மணிக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணத்தைத் துவக்கினர்.புறப்படும்போது வழியில் இருந்த ராமசாமி சித்திரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.போங்கடா...போயிட்டு என்கிட்டதானே எல்லாரும் வருவீஙக...என்று தனக்குள் சொல்லி மானசீகமாக வாழ்த்தி அனுப்பினார்.
ரிஷிகேஷை அடைந்த ஒட்டன்சத்திரத்து பிரமுகர்கள் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு குரல் இவர்கள் அனைவரையும் ஈர்த்தது.ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவன்லாம் இங்க வாங்கடா என்று அதிகாராமாகக் கூப்பிட்டது அந்தக் குரல்.ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் திடுக்கிட்டார்கள்.பாஷையே புரியாத இந்த ஊரில் யார் நம்மை அதிகாரமாகக் கூப்பிடுவது என்று அவர்கள் திரும்பிப் பார்த்தால் ஒற்றைக் காலில் நின்றபடி தவக் கோலத்தில் சாது ஒருவர் இருந்தார்.வாங்கடா ஒட்டன் சத்திரத்து ஆளுங்களா...உங்களை எல்லாம் நான்தான் கூப்பிட்டேன்...ராமசாமி சித்தர் எப்படி இருக்கான் ஊர்ல?என்றார்(அதுவரை சித்தர் பெரியவர் என்றே அழைக்கப்பட்ட வந்த ராமசாமி சித்தரின் பெயர் அதன் பிறகுதான் பலருக்கும் தெரிய வந்ததாம்)யார் சாமீ...நீங்க சொல்ற பேர்ல யாரும் எங்க ஊர்ல இல்லியே?என்றனர் ஊர்க்காரர்கள். அடேய்...பாத்திரக் கடை வாசல்ல எந்நேரமும் உக்காந்திருப்பானே...அவன்தான் ராமசாமி சித்தர்.அவனுக்கு வயசு என்ன தெரியுமா?ஐந்நூத்தி ஐம்பது.சரி ஊருக்குப் போனதும்.அவன்கிட்ட போய் ரிஷிகேஷ்ல நடராஜ சாமீ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க என்றார்.தொடர்ந்து தவத்தில் இறங்கி விட்டார்.
ராமசாமி சித்தரின் வயதைக் கேட்டு ஒட்டன் சத்திரத்துக்காரர்கள் ஆடிப் போனார்கள்.தென்னிந்தியாவில் இருந்து வடக்கே வந்த நம்மை அடையாளம் கண்டுகொண்டு.நம்மூர் சித்தரை இவர் விசாரிக்கிறாரே என்று வியந்து பேசிக் கொண்டார்கள்.அங்கிருந்து அகன்றார்கள்.ஒரு வழியாக ஒட்டன் சத்திரத்துக்காரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பினார்கள்.தாங்கள் புறப்பட்ட இடத்தில் யாத்திரையை முடித்தவர்கள்.மெள்ளக் கலையை முற்படும்போது ரிஷிகேஷ் போனவன்லாம் இங்க வாங்கடா என்று பாத்திரக்கடை வாசலில் இருந்த ராமசாமி சித்தார் ஓங்கிக் குரல் கொடுத்தார்.அப்போதுதான் சோமசுந்தரம் பிள்ளைக்கு நினைவு வந்தது ரிஷிகேஷில் நடராஜ சாமீ சொன்ன விஷயம்.அனைவரும் சித்தருக்கு முன்னால் பவ்யமாக நின்றனர். ஒட்டன்சத்திரத்தில் சாதாரணமாக அதுவரை அவர்களுக்குத் தெரிந்த ராமசாமி சித்தரின் மகிமை இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது.ஏண்டா...அங்கே ஒத்தக்கால்ல தவம் செய்யுற நடராஜ சாமீ என்னை விசாரிச்சான்ல...ஏண்டா என்கிட்ட சொல்லாம போறீங்க?என்று ராமசாமி சித்தர் கோபமாகக் கேட்கவும் சற்று முன்னால் வந்தார் சோமசுந்தரம் பிள்ளை.சாமி எங்களை எல்லாம் மன்னிக்கணும்.அவசரத்தல மறந்துட்டோம் என்று சொல்ல...சிரித்தார் சித்தர்.போங்கடா.எல்லாரும் நல்லா இருப்பீங்க என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.பழநியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் சங்கரன்.மிகவும் ஆசாரமான அந்தணர் குடும்பம்.பூஜை புனஸ்கரம் என்று எந்நேரமும் இறைவழிபாட்டிலும்.மகான்கள் தரிசனத்திலும் திளைப்பவர்.மகான்களின் அதிஷ்டானங்களைத் தேடித் தேடித் தரிசிப்பார்.பழநியைச் சுற்றி உள்ள பகுதிகளில் எங்காவது மகான்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தால் அடுத்த கணமே அங்கு பயணப்பட்டு விடுவார்.இப்படித்தான் ஒரு முறை ஒட்டன் சத்திரம் ராமசாமி சித்தர் பற்றிக் கேள்விப்பட்டார்.
பழநியில் இருந்து புறப்பட்டு சித்தர் எப்போதும் காணப்படும் பாத்திரக் கடைக்கு வந்தார்.அங்கே படிக்கட்டில் சித்தர் அமர்ந்திருந்தார்.ராஜம்மாள் அங்கு வந்ததுமே வாம்மா...உன்னைத்தான் தேடுகிறேன் வா என்றார் சித்தர்.மனம் நெகிழ்ந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினார் ராஜம்மாள்.பிறகு பக்கத்துல ஒட்டல் இருக்கு.அங்கே போய் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வா என்றார்.அந்தணர் வீட்டுப் பெண்மணி திகைத்தார்.பிரியாணி என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்கு வாந்தி வரும் போல் இருந்தது.தயங்கியவாறே நின்றிருந்தார்.என்னம்மா...பிரியாணி வாங்கிட்டு வானு சொன்னேன்...அப்படியே நிக்கறே...பொறப்படு என்றார் சித்தர்.பிறகு நான் வேணா காசு தர்றேன் யாரையாவது அனுச்சு வாங்கிட்டு வரச் சொல்லலாமா?என்று குரல் கம்மக் கேட்டார் ராஜம்மாள்.அதெல்லாம் வேலைக்கு ஆகாதும்மா.நீயே கடைக்குப் போய் வாங்கிட்டு வா.சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் சித்தர்.ஒட்டல் வாசலில் தயக்கத்துடன் நின்றார் ராஜம்மாள்.இவரைப் பார்த்தவுடனேயே புரிந்து கொண்ட ஒட்டல் உரிமையாளர்.என்னமா...ராமசாமி சித்தர் பிரியாணிப் பொட்டலம் வாங்கிட்டு வரச் சொன்னாரா?யாகக்காரப் பொம்பளைம்மா நீ...உனக்கு இன்னிக்கு என்னென்ன அதிசயங்கள் காத்திருக்கோ என்று சொல்லி உள்ளே பிரியாணி பொட்டலத்தை பார்சல் செய்யச் சொன்னார்.காசைக் கொடுத்து விட்டு அந்தப் பொட்டலத்தை வாங்கிய ராஜம்மாள் ரொம்பவும் கூசிப் போனார்.ஐயர் வீட்டுப் பெண்மணியை அசைவப் பொட்டலத்தை சுமக்க வைத்து விட்டாரே என்று சித்திரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார்.பொட்டலத்தை அவர் அருகே வைத்து விட்டு அதன் நெடி உடலுக்கு ஒவ்வாததால் சற்றே நகர்ந்து நின்றார்.
பொட்டலத்தை இப்படி வெச்சிட்டா எப்படி?நீயே பிரி என்று சித்தர் சொன்னதும் அடுத்த இடி இறங்கியது ஐயர் வீட்டு அம்மணிக்கு.சித்தரின் குணத்தைப் பற்றி அறிந்தால்.இவரால் மறுக்கவும் முடியவில்லை. அழுகை உள்ளுக்குள் பொங்க...கண்களை மூடியபடி பழநி ஆண்டவரை மனதுக்குள் பிரார்த்தித்தபடி. பொட்டலம் சுற்றப்பட்டிருந்த நூலை மெள்ளப் பிரித்தார்.பிரியாணியின் சுவாசம் உள்ளுக்குள் போய் குமைச்சல் ஏற்படும் என்பதால்.அந்த வேளையில் சுவாசிக்கவும் மறந்தார்.பொட்டலம் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு விட்டது.இந்தாங்க சாமீ...என்று கண்களை மூடிய நிலையிலேயே குத்துமதிப்பாக சித்தர் இருக்கும் திசை நோக்கிப் பொட்டலத்தை நீட்டினார்.நீயே கண்ணைத் திறந்து பாரம்மா உன் கையில் இருக்கிற பொட்டலம் எந்த அளவுக்கு மணம் வீசுகிறதுன்னு.அதன் பிறகு என்னிடம் கொடு என்றார் சித்தர்.மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு கண்களைத் திறந்து தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம்.காரணம் பொட்டலத்தில் இப்போது இருப்பது பிரியாணி அல்ல...நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல்.சித்தரின் அருள் திறனை எண்ணி விம்மினார் ராஜம்மாள். முந்திரியும் திராட்சைகளும் ஏலமும் கலந்து சர்க்கரைப் பொங்கலின் மணம் ராஜம்மாளின் மூக்கைத் துளைத்தது.தன் கையில் இருந்த சர்க்கரைப் பொங்கலை கோயில் பிரசாதம் போல் மணக்கும் பொங்கலை நம்பவே முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்தார் ராஜம்மாள்.சாப்பிடும்மா...எடுத்துச் சாப்பிடு.ஐயர் வீட்டுப் பொம்பளைக்கு அசைவம் தருவேனாம்மா என்ற சித்தர் தானும் ராஜம்மாளின் கையால் ஒரு கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கு அந்த லாரி ஒட்டன் சத்திரம் வழியாகப் போய்க் கொண்டிருந்தது.அந்த லாரி முழுக்கக் கருவாடு லோடு செய்யப்பட்டிருந்தது.அப்போது ராமசாமி சித்தர் பாத்திரைக் கடை வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்.இவரது இடத்தைக் கடக்கும்போது அந்த லாரியில் இருந்து ஒரிரண்டு துண்டு கருவாடு சாலையில் விழுந்தது.ஜீவகாருண்யத்தை(அசைவம் சாப்பிடாதவர்கள்)எப்போதும் கடைபி டித்து வரும் உள்ளூர் அன்பர் ஒருவர் யதேச்சையாக அந்தப் பகுதியைக் கடந்தார்.சாலையில் சிதறிக் கிடக்கும் ஓரிரு கருவாட்டுத் தூண்டுகளைப் பார்த்து முகம் சுளித்தார்.ஓரமாக நடந்தார்.படிக்கட்டில் அமர்ந்திருந்த ராமசாமி சித்தர் இதைப் பார்த்தார்.டேய் இங்கே வாடா என்று அவரை அழைத்தார்.யாரோ ஒரு சாது போலும் என்கிற நினைப்பில் சித்திரை நெருங்கிய அன்பர் என்ன சாமீ?என்று கேட்டார்.கிழே விழுந்து கிடக்கிற கருவாட்டுத் துண்டை எடுத்துச் சாப்பிடுடா என்று அதிகாரமாகச் சொன்னார் அவ்வளவுதான்!முகம் கொதித்துப் போனார் அன்பர்.இத்தனை ஆண்டுகளாக ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்து என்னைப் பார்த்தா கருவாடு சாப்பிட்டுச் சொல்கிறீர்?நான் செத்தாலும் சாவேனே தவிர கருவாடு சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லிப்போயே விட்டார்.
சித்தர் மெதுவாகச் சொன்னார்:ஆமாடா...இன்னிக்கு சாயங்காலம் நீ சாகத்தான் போறே...உன்னைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன்...விதிதான்டா இன்னிக்கு ஜெயிச்சிருக்கு போடா...போய்ச் சேரு.ஆம்! அன்று மாலை சுமார் நாலேமுக்கால் மணிக்கு அந்த அன்பருக்குத் திடீர் மாரடைப்பு வந்து இறந்து போனார்.ஒருவேளை சித்தர் சொல்லி இருந்தபடி கருவாட்டுத் துண்டுகளை அவர் எடுத்துச் சாப்பிட்டிருந்தால் பிரியாணியை சர்க்கரைப் பொங்கலாக மாற்றியது மாதிரி இதையும் ஒரு சைவ பொருளாக சித்தர் மாற்றி இருக்கக் கூடும்.இதை உண்ட பலனால் அவரது ஆயுள் பலம் கூடி இருக்கலாம்.விதி ஜெயித்து விட்டது போலும்!பழநி கல்லுரியில் பேராசிரியராகப் பணி புரிந்த கண்ணன் என்பவர் சித்தர்கள் தரிசனத்தில் நெகிழ்பவர் பழநியில் இருந்து பல ஸித்துக்களைப் புரிந்த தங்கவேல் சுவாமிகளை அடிக்கடி சந்தித்து ஆன்ம ஞானம் பெற்றவர்.ராமசாமி சித்தர் சமாதி ஆனபோது அப்போது அவருடன் இருந்தவர் இவர்.
{இனி கண்ணன் சொல்லும் அனுபவத்தைப் பார்ப்போம்.}
ராமசாமி சித்தர் மாபெரும் மகான் என்பதை ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் பல காலம் வரை உணரவில்லை.அவ்வப் போது செட்டிநாட்டில் இருந்து ப்ளைமவுத் காரில் இவருக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள் சிலர்.யார் என்பது தெரியாது.பக்தர்கள் சிலர் கொடுக்கும் உணவுப் பொருட்களை விரும்பி ஏற்றுக் கொள்வார் சித்தர்.வேண்டாம் என்றால் தட்டி விட்டு விடுவார்.சில சமயங்களில் சிலரை கல் வீசி எறிந்து துரத்துவார்.1977-ஆம் வருடம் என்று நினைக்கிறேன்.நான் என் மனைவி இரு குழந்தைகள் ஆகியோர் முதல் முறையாக சித்தரைப் பார்க்கப் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம்.சித்தர் எங்கள் குடும்பத்தை ஊடுருவிப் பார்த்தார்.பிறகு நாலு டீ வாங்கி வருமாறு எனக்கு உத்தரவிட்டார்.உடனே பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்து சித்தரிடம் கொடுத்தேன்.எங்கள் நான்கு பேரையும் குடிக்கச் சொன்னார்.பிறகு ஒரு பீடிக்கட்டு மூன்று சிகரெட் ஒரு தீப்பெட்டி இவற்றைக் கொடுத்து பத்திரமா உன் வீட்டுல வெச்சுக்கோனு சொன்னார்.ரொம்ப காலம் பாதுகாத்து வந்தேன்.ஒரு முறை வீடு மாறும்போது அது எங்கோ தவறுதலாக மிஸ் ஆகி விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன கண்ணன் சித்தரின் சமாதி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
அது ஒரு சனிக்கிழமை...சித்தரை தரிசிப்பதற்காகப் போனேன்.சோமசுந்தரம் பிள்ளை வீட்டில் இருந்து ரசம் வாங்கி வரச் சொன்னார்.வாங்கி வந்து கொடுத்தேன்.குடித்தார்.பிறகு அவரைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது.பாதையை மறைக்காதடா...குழிக்குள் இறங்குடா என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.இதன் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் இதைச் சொன்னேன்.வேறொன்னுமில்லை.அவர் கூடிய சீக்கிரமே சமாதி ஆகப் போகிறார்.அதைத்தான் இப்படிக் குறிப்பால் சொல்லி இருக்கிறார் என்றார் அவர்.அதன்படி அடுத்த சனிக்கிழமையே ராமசாமி சித்தர் சமாதி ஆகிவிட்டார்.தகவல் கேள்விப்பட்டதும்.சித்தரின் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் குவிந்தனர்.சிங்கம்புணரி புலவர் பாண்டியன் என்கிற அன்பர் மலர் அலங்காரத்துடன் கூடிய பெரிய தேர் ஒன்றைத் தயாரித்தார்.சித்தர் அடக்கம் ஆவதற்கு காங்கிரஸ் பிரமுகரான பழநியப்பா நாகனம்பட்டி ரோட்டில் இடம் தந்தார்(இங்குதான் ராமசாமி சித்தரின் ஜீவ சமாதி இ ருக்கிறது)பெரிய குழி வெட்டி அதற்குள் நான் இறங்கினேன்.அப்போதுதான் குழிக்குள் இறங்குடா என்று சித்தர் போன சனிக்கிழமைஅன்று சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.விபூதி உப்பு வில்வம் புஷ்பங்கள் போன்றவற்றை நிரப்பி சித்திரை அடக்கம் செய்தோம்.நான் கொண்டு சென்ற ஒரு சிவப்புத் துண்டை அவரது மேலுடம்பில் போர்த்தினேன்.மாபெரும் சித்த புருஷரை அடக்கம் செய்த பேறு எனக்கு அன்று கிடைத்தது அவரது அருள்தான்.
எல்லா காரியங்களும் முடிந்து இரவு சுமார் 11 மணி வாக்கில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்குப் பேருந்தில் புறப்பட்டேன்.ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் விருபாட்சிமேடு என்கிற ஓர் இடம் வரும்.அந்த இடம் சற்று கரடுமுரடாக இருப்பதால் அதன் வழியாகப் பயணிக்கும் எந்த ஒரு பேருந்தும் நின்று நிதானித்துதான் செல்லும்.அதுபோல் நான் சென்ற பேருந்தும் விருபாட்சிமேட்டைக் கடக்கும்போது நிதானமாகச் சென்று கொண்டிருந்தது.அப்போது யதேச்சையாக சாலையின் இடப் பக்கம் கவனித்த நான் துணுக்குற்றுப் போனேன்.அங்கே ராமசாமி சித்தர் நடந்து போய்க் கொண்டிருந்தார்.அவரது மேலுடம்பில் நான் எப்படிப் போர்த்தினேனோ அதே நிலையில் அந்த சிவப்புத் துண்டு இருந்தது. சாமீ....சாமீ என்று குரல் எடுத்துக் கதறினேன்.பேருந்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.இதற்குள் பருந்தும் வேகம் எடுத்து விட்டது.மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.சற்று முன் குழிக்குள் அடக்கமான சித்தர்.எப்படி விருபாட்சிமேடு அரு கே நடந்து போனார் என்கிற கேள்வி என் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது எனவே பழநி பேருந்து நிலையத்தில் இறங்கிய கையோடு முதல் காரியமாக நள்ளிரவு வேளையில் தங்கவேல் சுவாமிகளின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன்.சுவாமிகளே வந்து கதவைத் திறந்து என்னப்பா... இந்த வேளைல?என்றார். எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னேன்.நாளைக்கு விடிகாலைல அவரை அடக்கம் பண்ண இடத்தைப் பார்த்துட்டு வந்து என்னிடம் சொல் அப்படின்னு படுக்கப் போய்விட்டார்.
இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை.விடிந்தும் விடியாத பொழுதில் வீட்டை விட்டுக் கிளம்பினேன். தங்கவேல் சுவாமிகள் சொன்னபடி அந்த சமாதியை நோட்டமிட்டேன்.அவரது சமாதியில் தலைப் பகுதிக்கு நேராக தலையில் அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு காணப்பட்டது.உடனே பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் சொன்னேன்.ராமசாமி சித்தர் தன்னோட அருள் ஆற்றலை மட்டும் அங்கே வைத்து விட்டு சரீரத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாரப்பா.அவர் இப்போது வேறு பிரதேசத்தில் உலவிக் கொண்டிருப்பார்.அவர் போன ஊர் புண்ணியம் பெறும் என்றார்.அதாவது, சித்தர்களுக்கு சமாதி என்பது ஒரு ஒரு சம்பிரதாயத்துக்குத் தான்.அவர்கள் என்றென்றும் நம்முடனே இருந்து ஆசிர்வதித்துக் கொண்டிருப்பார்கள்.ராமசாமி சித்தரும் அப்படித்தான்.சுமார் இரண்டு மாதங்கள் கழித்து.கேரளாவில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைப் பார்த்ததாக ஒரு நண்பர் சொன்னார் என்று முடித்தார்.கண்ணன்.ராமசாமி சித்தர் பெரும்பாலும் ஒரு குல்லா அணிந்திருப்பார்.முஸ்லிம் பக்தர் ஒருவர்.ஆசையுடன் கொடுத்ததாம் இது.சித்தரை சமாதி வைத்த இடத்தின் அருகே பிரமாண்டமான ஆலமரம் இருக்கிறது.இதன் அருகே ஒரு லிங்கம்.சமாதி ஆன இடத்தில் சில செங்கற்களின் மேலே வேங்கடாசலபதி ஸ்ரீசரஸ்வதிதேவி முருகப் பெருமான் ஆகியோரது திரு வுருவப் படங்கள் இருக்கின்றன.உள்ளே ஒரு நந்தி விக்கிரமும் உண்டு.மற்றபடி சமாதி ஆன இடத்தில் சிறப்பாக எதுவும் இல்லை.பள்ளிக்குச் செல்லும் சில மாணவர்கள் அவ்வப்போது இங்கே வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: