வியாழன், 21 மே, 2020

அம்பாள் எப்படிப்பட்டவள்? - ஸ்ரீ பெரியவா

அவள் அழகே உருவானவள் என்பதுபோல அன்பே உருவானவளும்!அன்பே அழகாக ஆகி உருவானவள். எந்த பக்ஷணமானாலும் அதற்குத் தித்திப்பைத் தருவது சர்க்கரை என்கிறமாதிரி, நாம் எங்கெங்கே எந்தெந்த அழகைக் கண்டாலும் அதையெல்லாம் அழகாக்கும் தாய்ச் சரக்கு அவள்தான்!பிரம்ம சக்தியான அவளுடைய பூர்ண அழகின் துளித்துளிதான் மற்ற அழகுகளிலெல்லாம் தெறித்திருக்கிறது. இப்படியே நாம் பார்க்கிற அத்தனை அன்புகளுக்கும் மூலமாயிருப்பதும் அவள்தான்
ஸ்ரீவித்யா அதிதேவதையான த்ரிபுரஸுந்தரியாயிருக்குகம் அம்பாளின் ரூபம். திரிலோகத்திலும் அவள்தான் மஹா அழகு என்பதால்தான் த்ரிபுரஸுந்தரி என்று பேர். பச்சையாயிருப்பாளா, சிகப்பாயிருப்பாளா, கறுப்பாயிருப்பாளா?இந்த எல்லாக் கலரிலும்தான் அவளுக்கு ரூப பேதங்கள் சொல்லியிருக்கிறது. இரண்டு கை மீனாக்ஷியிலிருந்து பதினெட்டுக் கை மஹிஷாஸுரமர்த்தினி வரை அவளுக்குப் பல ரூபம், காருண்யம் தானப்பா லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒரு அழகல்ல. கொஞ்சம் கோபம் வரட்டும், அழுகை வரட்டும். அப்போது கண்ணாடியில் நம் மூஞ்சி தட்டுப் பட்டால் நமக்கே பார்க்கப் பிடிக்கவில்லை. துளி ஜ்வரம் வந்தால் சரீர அழகு போய்விடுகிறது. கோபம், அழுகை, நோய், நொடி எதுவுமில்லாமல் அன்பே உருவாயிருக்கிற அம்பாளுடைய சரீரமொன்றுதான் நிஜ அழகு. ஆனதால் நம் கல்பனையில் அன்பை எத்தனை உத்க்ருஷ்டமாக [உயர்வாக]உருவமாக்கிப் பார்க்கமுடிகிறதோ அப்படிப் பாரப்பா!அதுதான் அம்பாள் ரூபம் என்று வைத்துக்கொள்.
நம்முடைய காம க்ரோதாதி அழுக்குகள், அழுகை, பயம் - எல்லா பயங்களிலும் பெரிய ஸம்ஸார பயம் - ஆகியவற்றை அடித்துக் கொண்டு போய்விடும் ஸெளந்தர்ய வெள்ளமாக அம்பிகை இருக்கிறாள். அந்த அழகே நமக்கு ஸகல ஸெளபாக்யங்களையும் அளித்துவிடுகிறது

கருத்துகள் இல்லை: