வியாழன், 21 மே, 2020

#சேஷாத்ரி_பரப்பிரும்மம்

திருவண்ணாமலையில் பெரும்புகழோடு உலவிக் கொண்டிருந்த காலம். அவர் ஏதாவதொரு கடையின் உள்ளே நுழைந்து எதையாவது வாரி இறைத்தால் அன்று கடையில் வியாபாரம் அமோகமாக நடக்கும்! இதனால் அவர் தங்கள் கடைக்கு வரமாட்டாரா என்று பலரும் காத்திருப்பார்கள். ஆனால் அவர் பெரிய மகான் என்று தெரியாமலேயே அவர்மேல் மட்டற்ற தாய்ப்பாசம் செலுத்தி வந்தார் ஒரு மூதாட்டி. அவர் சேஷாத்ரி பரப்பிரும்மத்தின் பால்வடியும் திருமுகத்தைப் பார்த்துப் பரவசப்பட்டார். இந்தப் பிள்ளை லோ லோ என்று தெருக்களில் அலைகிறதே, பசிக்காதோ என்று வருத்தப்பட்டார்.

அவரைத் தன் வீட்டு வாயிலில் பார்த்தால், உள்ளே வந்து ஒருவாய் சாப்பிட்டு விட்டுப் போ என்று அதட்டுவார். பரப்பிரும்மம் அந்தத் தாயன்புக்குக் கட்டுப்படுவார். தன் முகத்தைப் பாசத்தோடு பார்த்தவாறே கையில் பிசைந்து தன் வலக்கரத்தில் மூதாட்டி வைக்கும் தயிர் சாதத்தை அன்போடு சாப்பிடுவார்.

ஒருநாள் அவர் மூதாட்டியிடம் கேட்டார், பாட்டி! உனக்கு பட்சிகளைப் பார்க்கும் ஆவலுண்டா? மூதாட்டி நகைத்தாள். நீதான் என்னென்னமோ வித்தையெல்லாம் காட்டுகிறாயாமே? இன்று எனக்கு வித்தை காட்டப் போகிறாயா? சரி காட்டு. பறவைகளைப் பார்க்கிறேன்! என்றார் பாட்டி.

பரப்பிரும்மம் தன் வேட்டியிலிருந்து ஒரு நூலைப் பிரித்துப் கீழே போட்டார். மறுகணம் கூடமெங்கும் காடை, குருவி, மைனா, புறா, மயில் என எண்ணற்ற பறவைகள் கீச் கீச் எனக் கத்தியவாறு அங்குமிங்கும் பறந்தன. பாட்டி வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிதுநேரம் சென்றது. பரப்பிரும்மம் நகைத்தாவறே, பாட்டி! பட்சிகளைப் பார்த்தது போதுமா? என்று கேட்டார். மூதாட்டி அடிப்படையில் ஒரு தாயல்லவா? வியக்க வைக்கும் ஒரு பதிலைச் சொன்னார் அவர், போருண்டா சேஷாத்ரி. இதுகள் எங்கிருந்து வந்ததோ அங்கேயே அனுப்பிடு. இதுகளோட அப்பா அம்மாவெல்லாம் இதுகளைக் காணோமேன்னு தேடமாட்டாளோ?

மறுகணம் பரப்பிரும்மம், வேட்டியிலிருந்து மற்றொரு நூலைப் பிரித்துக் கீழே போட்டார். பறவைகள் அனைத்தும் காட்சியிலிருந்து மறைந்தன.

கருத்துகள் இல்லை: