வியாழன், 13 ஆகஸ்ட், 2020

அயோத்தி ராமர் கோவில்

161 அடி உயரம், 318 தூண்கள், 300 கோடி... பிரமாண்டமாகத் தயாராக இருக்கும் அயோத்தி ராம் மந்திர்!


சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் உலகின் மூன்றாவது பெரிய இந்துக் கோயிலாக அயோத்தி ராம் மந்திர் அமைய உள்ளது.

உலகில் மிகப்பெரிய கோயில்களில் பெரியது கம்போடியா, அங்கூர்வாட்டில் சுமார் 401 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விஷ்ணு ஆலயம். இரண்டாவதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் 155 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிந்து காணப்படுகிறது. இந்த இரண்டு கோயில்களுக்கும் அடுத்த பெரிய கோயிலாகத் திகழப்போகிறது அயோத்தியில் உருவாகும் ராம் மந்திர். சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் வளாகம் அமைய இருக்கிறது.

நாகர் கட்டடக் கலை வடிவில் அமைய இருக்கும் இந்தத் திருக்கோயில் சுமார் 84,000 சதுர அடி பரப்பளவில் அமைய இருக்கிறது. 5 குவி மாடங்களோடும் மூன்று தளங்களோடும் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் நீளம் 300 அடியாகவும் அகலம் 280 அடியாகவும் உயரம் 161 அடியாகவும் இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட வரைபடத்தில் உயரம் 141 அடியாக இருந்தது. தற்போது அது 20 அடிகள் உயர்த்தப்பட்டு 161 அடியாக மாற்றப்பட்டுள்ளது.

மூன்று தளங்களாக அமையவிருக்கும் இந்தக் கோயிலில் ஒவ்வொரு தளத்திலும் 106 தூண்கள் வீதம் மொத்தம் 318 தூண்கள் அமைய உள்ளன.

பூமி பூஜை செய்யப்படும் நிலத்தில் சேர்ப்பதற்காக நாடு முழுவதும் உள்ள புனிதத் தலங்களிலிருந்து மண் மற்றும் புனித நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி ஆகியவற்றிலிருந்து தீர்த்தம் அயோத்திக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கோயில் கட்டிமுடிக்க 300 கோடி ரூபாயும் கோயிலைச் சுற்றியிருக்கும் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தேவையான வசதிகளை உருவாக்க 1,000 கோடி ரூபாய் வரையிலும் செலவாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, விமான நிலையம், சாலை வசதி விரிவாக்கம் போன்ற பல்வேறு நலத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

கோயில் கட்டிமுடிக்க சுமார் 3.5 ஆண்டுகள்வரை ஆகலாம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோயிலின் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. இதில் 135 சாதுக்கள் உட்பட மொத்தம் 170 முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான முகூர்த்தமாக 32 நொடிகள் குறிக்கப்பட்டுள்ளது. நாளை (5.8.2020) பிற்பகல் 12.44.08 முதல் 12.44.40 வரை இந்த முகூர்த்தம் அமைகிறது.

அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பூமி பூஜை அன்று விநியோகம் செய்வதற்காக 1.25 லட்சம் லட்டுகள் தயாராக உள்ளன. இதற்கு ரகுபதி லட்டு என்று பெயரிட்டுள்ளனர். இவற்றில் 50,000 லட்டுகள் ராம் ஜன்ம பூமி டிரஸ்ட் மூலம் சீதையின் ஜன்ம பூமி என்று கருதப்படும் சீதாமர்கி எனப்படும் பீகாரில் இருக்கும் ஆலயத்துக்கும் அதைச் சுற்றியுள்ள புனிதத் தலங்களுக்கும் அனுப்பப்பட இருக்கிறது.

நிகழ்வையொட்டி அயோத்தி மின் ஒளியில் ஜொலிக்கிறது. எனவே, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

1989-ம் ஆண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதைய விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராக விளங்கிய எஸ்.சி.தீக்‌ஷித், நாடுமுழுவதும் உள்ள மக்களின் உதவியை நாடினார். ஸ்ரீராம் என்று பொறிக்கப்பட்ட செங்கல்களை அயோத்திக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் செங்கல்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டன. 31 ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் கோயில்கட்டும் பணி தொடங்க உள்ளது.

நாளை நடைபெற இருக்கும் பூமி பூஜை நிகழ்வு தூர்தர்ஷன் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று ராம் ஜன்ம பூமி டிரஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தோடு பஜனை செய்து வழிபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரே ஸ்லோகத்தில் ஒட்டுமொத்த ராமாயணம்

ராமாயண பாராயணம் என்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுவது. ராமாயணத்தின் ஒரு பகுதியைப் பாராயணம் செய்தாலே புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், ஒரு ஸ்லோகம் சொன்னால் முழு ராமாயணமும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் சான்றோர்கள். அந்த ஸ்லோகம் இதோ...

பூர்வம் ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்

வைதேஹி ஹரணம் ஜடாயுமரணம் சுக்ரீவ ஸம்பாஷணம்

வாலி நிர்தலனம் ஸமுத்ர தரணம் லங்காபுரி தாஹனம்

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத் ஹி ராமாயணம்

நாளை பூமி பூஜை நடக்கும் நேரத்தில் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து ராமபிரானின் அருளுக்குப் பாத்திரர் ஆவோம்.

கருத்துகள் இல்லை: