வியாழன், 13 ஆகஸ்ட், 2020

சாலிவாகனன்

சாலிவாகனன்

விக்கிரம சகாப்தம் சாலிவாகன சகாப்தம் என இரண்டு பெயர்களைப் பஞ்சாங்கங்களில் பார்த்திருப்போம்.

இவற்றில் விக்கிரம சகாப்தம் என்பது விக்கிரமாதித்தன் பெயரால் வழங்கப்படுகிறது.

சாலிவாகன சகாப்தம் என்று தன் பெயரில் ஒரு சகாப்தத்தையே உருவாக்கிய அந்த மாவீரர்
சாலிவாகனன்
அச்வ சாஸ்திரம், அலங்கார சாஸ்திரம், நவரத்தின சாஸ்திரம் எனும் நூல்களை உருவாக்கிய அறிவாளி.

தென்னிந்தியாவில் மட்பாண்டங்கள் செய்யும் குலால சமூகத்தினர்,

சாதவாகனனை தங்கள் குலத்த்தின் முன்னவர் எனப் போற்றி கொண்டாடுகிறார்கள்.

சாலிவாகனன் குறித்த செய்திகள் பவிஷ்ய புராணத்தில் குறிப்புகள் உள்ளது.

சாலிவாகன வரலாறு

பைடணபுரியில் சுலோசனன் என்பவர் வாழ்ந்து வந்தார்.

மனைவியை இழந்த அவர்,
தன் மகள் சுமித்ரையை தாயன்போடு வளர்த்து வந்தார்.

நாட்டியமாடுவதில் வல்லவளான சுமித்ரையின் பேரழகிலும், கலைத்திறமையிலும் மோகம் கொண்ட ஆதிசேஷனான நாகராஜா, அவள் மீது காதல் கொண்டான்.

அவளை காந்தர்வ விவாகமும் செய்துகொண்டான்.

இருவரும் நெருங்கிப்பழகியதால் சுமித்ரை கருவுற்றாள்.

இவ்விஷயம் ஊரில் பரவியது. அரண்மனைக்கும் விஷயம் சென்றது.

அரசன் சுலோசனனையும், சுமித்ரையையும் ஊரை விட்டு விலக்கி வைக்க உத்தரவிட்டான். தந்தையும், மகளும் செய்வதறியாது திகைத்தனர்.

சுமித்ரை தன் நிலைக்கு காரணமான ஆதிசேஷனை நினைத்து வணங்கினாள்.

ஆதிசேஷன் அவள் முன்தோன்றி, “”பெண்ணே! உன் வயிற்றில் இருக்கும் குழந்தை சாதாரண குழந்தை அல்ல! தெய்வீகம் நிறைந்த அப்பிள்ளை அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்குவான். இந் நாட்டை ஆளப்பிறந்தவன் அவன். பெரும் புலவன் என்றும் புகழ் பெறுவான். மன்னனின் ஆணையை ஏற்று வெளியூருக்குச் செல். எல்லாம் நலமாய் நடக்கும்,” என்று ஆசி அளித்துவிட்டு மறைந்தான்.

சுலோசனன் சுமித்ரையை அழைத்துக் கொண்டு புரந்தரபுரம் என்னும் ஊருக்குச் சென்று ஒரு குயவர் வீட்டில் தங்கினான்.

அங்கு சுமித்ரை ஆண்குழந்தை பெற்றெடுத்தாள்.

பிள்ளைக்கு “சாலிவாஹனன்’ என்று பெயரிட்டனர்.

பிள்ளையிடம் அவனுடைய தந்தை ஆதிசேஷன் என்பதை தெரிவித்து நல்லமுறையில் சுமித்ரை வளர்த்து வந்தாள்.

சாலிவாஹனன் மண் பொம்மைகளைச் செய்ய கற்றுக் கொண்டான்.

சாலிவாகனனுக்கு ஐந்து வயது. அங்குள்ள மற்ற குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போதே, அதிகாரமும் கட்டளையும் கொடிகட்டிப் பறந்தது. “நான்தான் ராஜா, நீ மந்திரி, நீ சேவகன், நீதான் படை தளபதி...ம்! ராஜாங்கம் நடக்கட்டும்...’’ என்றுதான் அவன் விளையாட்டு இருக்கும்.

சுமத்திரையையும், சாலிவாகனனையும் பராமரித்து வந்த மண்பாண்ட கலைஞர்களுக்கு அந்த விளையாட்டைப் பார்த்து ஆச்சரியம் தாங்கவில்லை.

“பானை, சட்டியோடு விளையாடாமல், இப்படி ராஜாவைப்போல் விளையாடி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறானே! இவன் எப்போது ராஜா , மந்திரியை எல்லாம் பார்த்தான்?” என்று சொல்லி வியந்தார்கள்.

அவனுடைய விளையாட்டை மேலும் அங்கீகரிக்கும் வகையில் அரசர், மந்திரி, தளபதி, சேவகர், படைகள் என மண் பொம்மைகள் செய்து சாலிவாகனனுக்கு விளையாடக் கொடுத்தனர்.

சாலிவாகனன் தன் வழக்கப்படி அரச பரிபாலன விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கையில், வேதியர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.

“ஆஹா! சிறு குழந்தை, என்ன அழகாக அரச பரிபாலனத்தை, பொம்மை விளையாட்டாகச் செய்து கொண்டிருக்கிறது! ராஜ சபையென்றால், தினந்தோறும் பஞ்சாங்கம் படிப்பார்களே... இந்த பொம்மை ராஜசபையில் இன்று நாம் பஞ்சாங்கம் படித்து விடுவோம்” என்று தீர்மானித்து, சாலிவாகனனின் விளையாட்டில் நுழைந்து பஞ்சாங்கம் படித்தார்.

சாலிவாகனன் மனம் மகிழ்ந்தான். தன்னருகில் இருந்தவனை நோக்கி, “மந்திரி! நம் ராஜசபையில் பஞ்சாங்கம் படித்த இந்த அந்தணருக்கு, ஒரு பொன்குடம் கொடுங்கள்!’’ என உத்தரவிட்டான்.

அந்தப் பையனும் மெல்ல சிரித்துக் கொண்டு சிறு மண்குடம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தான்.

குடத்தை வாங்கிக்கொண்டு அந்தணர் வீடு திரும்பினார்.

மறுநாள் பொழுது விடிந்ததும் அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.

அவர் பெற்ற மண்குடம், தங்கக்குடமாக மாறியிருந்தது! மகிழ்ச்சி தாங்கவில்லை. நடந்த சம்பவங்களை அவர் பிறரிடம் விரிவாக சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

சாலிவாகனனை பார்க்காதவர் இதயங்களில் கூட சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் அவன்.

சாலிவாகனனை பற்றிய தகவல்கள் எல்லாம் மன்னன் விக்கிரமாதித்தனுக்குத் தெரிவிக்கப்பட்டன.

அவனுக்கும் சாலிவாகனனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

புரந்தபுரத்தில் இருந்த தனஞ்ஜயன் எனும் வியாபாரி படுத்த படுக்கையாய் இருந்தார்.

கடைசி காலம் நெருங்குவது அவருக்குத் தெரிந்தது. தன் பிள்ளைகள் நால்வரையும் அழைத்தார். “பிள்ளைகளா! இந்தக் கட்டில் கால்கள் நான்கிற்கும் கீழே வைத்திருக்கும் பொருட்களை, நீங்கள் நால்வரும் பங்கிட்டுக்கொண்டு சுகமாய் வாழுங்கள்!’’ என்று சொல்லிவிட்டு இறந்தார்.

பிள்ளைகள் நால்வரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளையெல்லாம் செய்தார்கள்.

அதன்பிறகு, தந்தை சொன்னபடியே கட்டில் கால்களின் கீழே தோண்டிப் பார்த்தார்கள். ஒன்றில் மண், ஒன்றில் உமி, ஒன்றிலே மிகச்சிறு தங்க மணி, ஒன்றில் சாணம் என இருந்தன.

நால்வரும் திகைத்தார்கள்.

“இவை எப்படி பொருட்களாகும்? இவற்றை எப்படிப் பங்கு போடுவது?’’ அவற்றை தனித்தனி பைகளில் போட்டுக் கொண்டுபோய் ஊரில் இருந்த அறிவாளிகளிடம் காட்டி, தந்தை சொன்னதையும் சொல்லி விளக்கம் கேட்டார்கள்.

ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை.

வேறுவழியில்லாமல் நால்வரும் அரசர் விக்கிரமாதித்தனிடம் போய் நடந்ததையெல்லாம் சொல்லி, பைகளில் இருந்த பொருட்களையும் காட்டினார்கள்.

விக்கிரமாதித்தன் தன் மந்திரிகளோடு சேர்ந்து, அப்பொருட்களை ஆராய்ந்து பார்த்தான். ஒன்றும் புரியவில்லை.

“விக்கிரமாதித்த மகாராஜாவாலேயே முடியவில்லை எனும்போது, என்ன செய்வது?’’ என்று மனம் வருந்திய பிள்ளைகள் நால்வரும் பைகளோடும் ஏமாற்றத்தோடும் திரும்பினார்கள்.

அவர்கள் சாலிவாகனன் இருந்த இடத்தின் வழியாகப் போனார்கள். குழப்ப முகங்கள், கவலைக் கண்களுடன் நால்வரும் வந்து கொண்டிருந்ததை சாலிவாகனன் பார்த்தான்.

 கவலைக்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டான்.

பிறகு, “இதற்காகவா இவ்வளவு அலைச்சல் பட்டீர்கள்! நான் விளக்கம் கூறுகிறேன்,’’ என்ற அவன் அந்தப்  பைகளில் இருந்த பொருட்களை, ஒருசில விநாடி பார்த்தான்.

உடனே தீர்ப்பைச் சொன்னான்:

“மண் பையில் இருப்பது நிலங்களைக் குறிக்கும். ஒருவன் நிலங்களை எடுத்துக்கொள்ளட்டும்.

உமி, தானியங்களைக் குறிக்கும்; இரண்டாமவர் தானியங்களை எடுத்துக்கொள்ளலாம்.

தங்கம் இருக்கும் பை ஆபரணங்களைக் குறிக்கும். ஆகவே மூன்றாமவனுக்கு ஆபரணங்கள்.

நான்காவது பையில் சாணம்; ஆடு, மாடுகளைக் குறிக்கும். அதனால் நான்காமவன் கால்நடைகளை பெறட்டும்.

உங்கள் தகப்பனார் சூட்சுமமாகப் பங்கீடு செய்து இருக்கிறார். அதன்படியே பங்கிட்டுக் கொண்டு நலமாக வாழுங்கள்!’’ என்றான் சாலிவாகனன்.

நால்வரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். “ஆஹா! விக்கிரமாதித்தனால் கூடச் சொல்ல முடியாத தீர்ப்பு. என்ன புத்திக் கூர்மை!’’ என்று சாலிவாகனனைப் புகழ்ந்தார்கள்.

சாலிவாகனனின் புகழ் பரவியது. விக்கிரமாதித்தனுக்கும் தகவல் எட்டியது.

உள்ளம் குமைந்தான். “நம் புகழுக்குப் பங்கம் வந்து விட்டதே! சிறுவன் ஒருவனால் நம் சிறப்பு சிதைந்து விட்டது. ஊஹும், சாலிவாகனனை விட்டு வைக்கக்கூடாது” என்று கறுவினான்.

பொறாமை கொண்ட மன்னன் விக்கிரமாதித்தன் சாலிவாகனனை அழிக்கப் படைகளுடன் புறப்பட்டான்.

விக்கிரமாதித்தன் வருவதையும் சாலிவாகனன் அறிந்தான்.

அவனுக்கும் அவன் அன்னைக்கும் ஆதரவு தந்து வளர்த்து வந்த குயவர் தலைவர் உட்பட அனைவரும் பயந்தார்கள்.

ஆனால், சாலிவாகனன் பயப்படாமல் அனைவருக்கும் ஆறுதல் சொன்னான்,
“பயப்படாதீர்கள். என்னால் விளைந்த இதை, நானே நீக்குவேன்.’’  உடனடியாக நடவடிக்கைகளிலும் இறங்கினான்.

ஆதிசேஷனை வணங்கிவிட்டு
தன்னிடம் இருந்த நால்வகை பொம்மைப் படைகளுக்கும் உயிரூட்டி, தானே தலைமை தாங்கிப் போர்க்களம் புகுந்தான்.

கடும் போர் மூண்டது. சாலிவாகனனிடம் தோற்றுப்போய், விக்கிரமாதித்தன் ஓடினான். சாலிவாகனன் வெற்றி வீரனாகத் திரும்பினான்.

சற்று காலம் கழித்து, விக்கிரமாதித்தனிடமிருந்து தான் கைப்பற்றிய பகுதிக்கு, சாலிவாகன சகாப்தம் என்று பெயரிட்டான்.

விக்கிரமாதித்தனை தேடிப் பிடித்து போரிட்டு அவனைக் கொன்றான் சாலிவாகனன்.

நர்மதைக்கு அந்தப் பக்கமாக உள்ள பகுதி ‘விக்கிரம சகாப்தம்’ என்றும் நர்மதைக்கு இந்தப்பக்கமாக உள்ள பகுதி ‘சாலிவாகன சகாப்தம்’ எனவும் வழங்கப்படலாயிற்று.

மைசூர் மன்னர் பரம்பரையினர், சாலிவாகனன் பரம்பரையில் வந்தவர்கள்.

பஞ்சாங்கங்களில் நாம் பார்க்கும் சாலிவாகன சகாப்தம் என்பதை உருவாக்கியவனின் வரலாறு இது.

சாலிவாகனன் விக்கிரமாதித்தியனை வென்றதை கொண்டாடும் வகையில், அந்த ஆண்டு முதல் சாலிவாகன ஆண்டு
கி பி 78 முதல் தொடங்குவதாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: