வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ஸ்ரீ ராமரை பற்றிய சந்தேகங்களுக்கான கேள்வியும் பதிலும்.

ஸ்ரீ ராமரை பற்றிய சந்தேகங்களுக்கான கேள்வியும் பதிலும்.

கேள்வி: ஸ்த்ரிஹத்யா (பெண்களைக் கொல்லுதல்), பிரம்மஹத்யா (பிராமணர்களைக் கொல்லுதல்), நிரபராதிகளைக் கொல்லுதல், மாத்ருத்யாக, பித்ருத்யாக, சகோதரத்யாக (தாய்,தந்தை, சகோதரர்களைத் துறத்தல்) - இப்படி அனைத்து வித தோஷங்களும் உள்ளவே ஸ்ரீராமனிடம்?

பதில்:  ‘நற்குணங்களை மட்டுமே கொண்டவன், தோஷங்களே இல்லாதவன் - ஸ்ரீராமன்’ என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

கே: ‘அவத்யா: ஸ்த்ரி ஈத்யாஹு: தர்மஞா: தர்மனிஸ்சயே’ (மகாபாரதம் 1-147-29). பெண்களைக் கொல்லக்கூடாதென்று மகாபாரதம் சொல்கிறது. ஆனால் ஸ்ரீராமன் முதன்முதலில் கொன்றதே தாடகி என்ற பெண்ணைத்தான். இது தப்பில்லையா?

ப: நீங்கள் சொன்ன மகாபாரதத்தின் வசனம், துஷ்ட பெண்களைக் கொல்லக்கூடாதென்று சொல்லவில்லை. சமூகத்திற்கு ஆபத்து விளைவிப்பவராகவும், பற்பல சஜ்ஜனர்களை துன்புறுத்துபவராகவுமாக இருந்தால், அத்தகைய பெண்ணைக் கொல்வது தப்பல்ல.

கே: ஆனாலும், முதலில் பெண்ணையே கொல்ல வேண்டியிருந்ததா?

ப: இதற்குப் பின்னால் ஒரு உத்தமமான தத்துவம் உள்ளது. இன்றைய சமூகத்திற்கு இதில் ஒரு நீதிக்கதை இருக்கிறது. ஒரு பெண், தன் வீட்டினை கட்டிக் காப்பாற்றிக்கொண்டு, கணவனை / மக்களை நன்கு பார்த்துக் கொண்டு, ஸ்ரீஹரி மகிழ்ச்சியடையும்படி இருக்கவேண்டும். இதற்கு எதிராக நடந்துகொள்பவள், நல்ல மனைவியாக இல்லாமல், வீட்டை நாசம் செய்பவளாக ஆகிறாள். மேலும் இவளால், ஊர், நாடு ஆகியவையும் நாசமாகின்றன. இப்படிப்பவர்களை, பெண் என்று கருதி, திருத்தாமல் விடுவது தப்பாகும். ஸ்ரீராமன் தன் அவதாரத்தின் துவக்கக் காலத்தில் இதையே சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கே: அப்படியென்றால், சூர்ப்பணகையை ஏன் கொல்லவில்லை?

ப: கொல்லக்கூடாது என்றில்லை. ஆனால் அவளின் பின் இருக்கும் அனைத்து துஷ்டர்களையும் ஒருசேர கொல்லவேண்டும் என்பதால், ஸ்ரீராமன் செய்த தந்திரமே அது.

கே: ‘என்னைத் திருமணம் செய்துகொள்’ என்று சொன்னதற்காக, சூர்ப்பணகையின் மூக்கு, காதுகளை கத்தரித்து விடலாமா?

ப: சூர்ப்பனகை ஒரு விதவை. காமுகள். பொய் பேசுபவள். மோசடி செய்பவள். சீதையை கொன்று தின்பதற்கு வந்தவள். பற்பல ரிஷி முனிவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தவள். இப்படி எல்லாவற்றிற்கும் சேர்த்து ஸ்ரீராமன் அவளுக்கு தண்டனை கொடுத்தார்.

கே: வேடர்குல சபரியின் எச்சிலை ஸ்ரீராமன் எதற்கு தின்றார்?

ப: வால்மிகி ராமாயணத்தில் இப்படி சொல்லப்படவில்லை. ஆசார்யரின் தாத்பர்ய நிர்ணயத்திலும் இந்த விஷயம் இல்லை.

கே: தசரதருக்கு இஷ்டமில்லாதபோதும் ஸ்ரீராமன் ஏன் காட்டிற்குப் போக வேண்டியதாயிற்று?

ப: இப்படி கேட்பதே தவறு. இரு வரங்களைக் கொடுக்கிறேன் என்று தசரதன், கைகேயிக்கு வாக்கு கொடுத்திருந்தார். ஆகையால், தசரதனுக்கு இஷ்டமிருந்ததோ இல்லையோ, ஸ்ரீராமனை காட்டிற்கு அனுப்பவேண்டியதே ஆயிற்று. தந்தையின் வாக்கிக்கேற்ப ஸ்ரீராமனும் காட்டிற்குக் கிளம்பினார். தாய் தந்தையரிடம் எப்படிப்பட்ட பக்தியை காட்டவேண்டும் என்பதை ஸ்ரீராமன் செய்து காட்டினார்.

கே: தங்க மான் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று ஸ்ரீராமனுக்கு தெரிந்திருக்கவில்லையா? அற்பப் பொருளின் மேல் ஆசைகொண்டு ஏன் அந்த மானுக்குப் பின்னால் ஓடினார்?

ப: மாரீசன் என்னும் அரக்கனை கொல்வதற்காக ஓடினாரே தவிர, தங்க மானுக்காக அல்ல. மற்றும் மாயா-சீதையை ராவணன் கடத்தவேண்டும் என்பதற்காக ஓடினார்.

கே: ஸ்ரீராமனின் நற்குணங்களைப் பற்றி மாரீசன், ராவணனிடம் எடுத்துக் கூறினான். ஆகையால், மாரீசன் சாத்வீகன்தானே?

ப: சாத்வீகன் என்றிருந்தால், ராவணனை விட்டு ஓடிவந்து ராமனிடம் சரணாகதி அடைந்திருக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், உயிர் விடும்போது ‘ஹே சீதா, ஹே லட்சுமணா’ என்று ராமனின் குரலில் கூவினான். இவற்றினாலேயே மாரீசன் சாத்வீகன் இல்லை என்று நிரூபணமாகின்றது.

கே: ராவணன் சீதையை அபகரித்தான். அந்த சந்தர்ப்பத்தில், சீதை பரபுருஷனை (கணவன் அல்லாத பிற ஆண்களை) தொடுவதுபோல் ஆயிற்றா?

ப: ராமனின் மனைவியான சீதை, மாயாசீதை என்னும் பொம்மையை அக்னிதேவரிடமிருந்து செய்வித்து, வேதவதி என்ற பெயருடன் தனக்கு பதிலாக வைத்து, தான் கைலாசத்திற்குப் புறப்பட்டாள். ராவணன் அபகரித்தது சீதாதேவியை அல்ல. மாயாசீதையை.

கே: எப்படியிருந்தாலும், சீதை ராவணனிடம் இருந்தபோது ராவணன் சீதையை தொட முயற்சிக்கவில்லையா?

ப: இதற்கு புராணங்களில் சுவாரசியமான கதை உண்டு. ராவணன் மற்ற பெண்களை தொட்ட மாத்திரத்தில் மரணம் அடைவான் என்று சாபம் பெற்றிருந்தான். ஆகவே ராவணன் உயிரோடு இருந்த காரணத்தில், அவன் மாயாசீதையைக்கூட தொட்டிருக்கவில்லை என்று தெரிகிறது.

கே: அண்ணன் தம்பியான வாலி சுக்ரீவருக்கு நடுவில் ராமன் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும்?

ப: சுக்ரீவன் ராமனிடம் சரணடைந்தான். வாலியைக் கொல்லவேண்டும் என்று வேண்டினான். சரணாகதி அடைந்தவரின் வேண்டுதலை நிறைவேற்றுவது ஸ்ரீராமனின் இயல்பாகும்.

கே: நிரபராதியான வாலியை ஏன் ராமன் மறைந்திருந்து கொன்றார்?

ப: தேவைதைகள் தங்களின் அவதார நோக்கத்தை முடித்து, மறுபடி மூலரூபத்தை அடைவதற்கு ஆவலுடன் இருப்பார்கள். வாலியின் அவதார நோக்கம் முடிந்திருந்தது. ராமனின் சேவை மிச்சம் இருக்கவில்லை. ஆகையால், வாலியின் மகிழ்ச்சிக்காகவே ராமன் இப்படி மறைந்திருந்து கொன்று வாலிக்கு அருளினார்.

கே: உங்கள் பதில் மனதிற்கு திருப்தி அளிக்கவில்லை. வாலி-சுக்ரீவன் கதையை பார்க்கும்போது, ராமன் சுக்ரீவனை மட்டும் ஏன் ஆதரித்தார்?

ப: இதற்கு ஸ்ரீபுரந்தரதாசர் பதில் அளிக்கிறார். ‘அனுமன நம்பித சுக்ரீவ கெத்த, அனுமன நம்பத வாலியு பித்த’. எந்த பக்தன் ஜீவோத்தமரான வாயுதேவரை நம்புகிறாரோ, அவரை ஸ்ரீஹரி என்றும் கைவிடுவதில்லை. உத்தம ஜீவியாக இருந்தாலும், வாயுதேவரை வணங்கவில்லை என்றால், அவரை ஸ்ரீஹரி கைவிடுகிறான் என்று வாலி - சுக்ரீவன் கதையின் மூலம் ஸ்ரீராமன் தெரிவிக்கிறார்.

கே: அண்ணனுக்கு துரோகம் செய்த விபீஷணனை ஸ்ரீராமன் தன் பக்கம் சேர்த்துக்கொண்டது சரியா?

ப: விபீஷணன் அண்ணனை துறந்தான் என்பதைவிட ராவணனே விபீஷணனை துரத்தினான் என்பதே சரி. அந்த சமயத்தில் விபீஷணன் ராமனிடம் சரணடைந்தான். அனுமனை கலந்தாலோசித்துவிட்டு, ராமன் விபீஷணனை சேர்த்துக் கொண்டார். இதன்மூலம் ஒரு மிகப்பெரிய தத்துவத்தை எடுத்துக் காட்டினான். விஷ்ணுபக்தி யாரிடம் இருந்தாலும் அவர் வெல்வர். விஷ்ணுத்வேஷம் யாரிடம் இருந்தாலும் அவர் தோற்பர்.

கே: ராவணன் ஒரு பிராமணன். இவனைக் கொன்றதால் ராமனுக்கு பிரம்மஹத்யா தோஷம் வரவில்லையா?

ப: வர்ணம், தர்மம் எதுவும் முக்கியமில்லை. ஸ்ரீஹரி பார்ப்பது நல்ல நடத்தையை மட்டுமே. துஷ்டனான ராவணனிடத்தில் எந்தவித பிராமணத்வமும் இருந்திருக்கவில்லை. அவனைக் கொன்றதன் மூலம் ஸ்ரீராமனுக்கு கடுகளவு தோஷமும் வரவில்லை.

கே: மகாபதிவிரதையான சீதையை, ஸ்ரீராமன் ஏன் அக்னி பிரவேசம் செய்யுமாறு கூறினார்?

ப: அன்றைய காலத்தில் இது நடைமுறையிலிருந்த தண்டனையே ஆகும். யாராவது திருடிய குற்றத்தில் பிடிபட்டால், காய்ச்சிய இரும்புக் கம்பியை பிடிக்கச் செய்வது ஒரு தண்டனை. அப்படி அவன் திருடியிருக்கவில்லையெனில், நெருப்பு அவனை சுட்டிருக்காது. குற்றம் செய்திருந்தால் மட்டுமே சுட்டிருந்தது. ஸ்ரீராமனுக்கு சீதை ஒரு பதிவிரதை என்று தெரிந்திருந்தது. தோஷமற்றவளான சீதையை நெருப்பு சுடாது என்றும் தெரிந்திருந்தது. இதனை உலகிற்கு தெரியப்படுத்தவே, அக்னிப் பிரவேசம் செய்யுமாறு பணித்தார்.

கே: சீதை தோஷமற்றவள் என்று தெரிவிப்பதற்கு வேறெதுவும் வழி இருக்கவில்லையா?

ப: அக்னிபிரவேசம் செய்யச் சொன்னதற்குப் பின் இன்னொரு காரணமும் இருந்தது. அக்னிப் பிரவேசம் செய்ததும், மாயாசீதையின் உருவிலிருந்த வேதவதி, தன் தந்தையான அக்னி தேவனின் வீட்டிற்குச் சென்றாள். கைலாசத்தில் சிவன் பார்வதியிடம் பூஜை / மரியாதை பெற்றுக்கொண்டிருந்த சீதாதேவி அக்னியிலிருந்து வெளிவந்தாள். இதற்காக நடைபெற்றதே அக்னிப் பிரவேசம்.

கே: அனைவரும் ராம ராஜ்யத்தைப் புகழ்கின்றனர். ஆனால், சூத்ரரான சம்பூகனை கொன்று ஸ்ரீராமன், சூத்ரரிடம் விரோதம் கொண்டார். இது எப்படி சரியாகும்?

ப: ஆம். ஸ்ரீராமன் சம்பூகனை கொன்றார். ஆனால் சம்பூகனை சூத்திரன் என்பதற்காக கொல்லவில்லை. ராவணனை பிராமணன் என்பதற்காக கொல்லவில்லை. சம்பூகனிடமிருந்த கெட்ட நோக்கத்தைக் கண்ட ராமன் அவனைக் கொன்றார்.

கே: சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்பதற்காகவே அவனைக் கொன்றார். சரிதானே?

ப: சம்பூகன் தவம் செய்தது சரியே. பார்வதியின் வரத்தின் மூலம் ஒரு கல்பத்திற்கான ஆயுளை பெற்றிருந்தான். மறுபடி, தான் பார்வதியின் கணவன் ஆகவேண்டுமென்ற கெட்ட நோக்கத்துடன் தவத்தை செய்யத் துவங்கினான். அதற்காகவே ராமன் அவனைக் கொன்றார்.

கே: யாரோ ஒரு சலவைத் தொழிலாளியின் பேச்சைக் கேட்டு ஸ்ரீராமன் சீதையை ஏன் தியாகம் செய்தார்?

ப: ‘ஏவம் பஹுவிதா வாசோ வதந்தி புரவாஸின: | நகரேஷு ச சர்வேஷு ராஜன் ஜனபரேஷு ச’ என்று வால்மிகி ராமாயணம் சொல்வதைப் போல் அனைத்து வீடு, சாலை, நகரங்களிலும் அனைவரும் சீதையின் பதிவிரதத்தைப் பற்றி சந்தேகப்பட்டு பேசத் துவங்கினர். மக்களுக்கு இருந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது அரசனின் கடமை என்பதால், ஸ்ரீராமன் சீதையை உலகத்தின் பார்வைக்காக தியாகம் செய்தார். ஒரு அரசனுக்கு மனைவியின் நலனைவிட நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்பதை நிரூபித்தார்.

கே: தன் வாழ்க்கை முழுவதும் அண்ணனின் சேவை செய்த லட்சுமணனைக் கூட ஸ்ரீராமன் இறுதியில் விலக்கினார். இது தப்பில்லையா?

ப: ஸ்ரீராமன் சிவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, வேறு யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று லட்சுமணனிடம் சொல்லியிருந்தார். ஆனால், துர்வாசர் வந்தபோது லட்சுமணன் அவரை உள்ளே விட்டான். என் பேச்சை மீறினாய் என்று கூறி ஸ்ரீராமன் லட்சுமணனை விலக்கினான். இது உண்மையே. ஆனால், லட்சுமணனின் அவதார காலம் முடிவடைந்திருந்தது. லட்சுமணன் சாக்‌ஷாத் ஆதிசேஷன். ராமன் பரந்தாமத்திற்கு செல்வதற்கு முன் தன் படுக்கையான சேஷதேவரை தன்னிடத்திற்கு அனுப்பினார். அதற்காக செய்யப்பட்ட நாடகமே இதுவாகும்.

கே: இதுவரை கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் வந்த பதில்கள் திருப்திகரமாகவே இருந்தன. ஆனால், ராமனைப் பற்றிய பதில்களினால், ஸ்ரீராமன் ஒரு சிறந்த அரசன் என்று மட்டுமே தெரிகிறது. ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமன் என்கிற எண்ணம் வருவதில்லை. இதற்கு உங்கள் பதில் என்ன?

ப: ‘மர்த்யாவதாரஸ்தி ஹமர்த்யாசிக்‌ஷணம்’ என்கிற வாக்கியத்தின்படி ஸ்ரீஹரி அவதாரம் எடுக்கும்போது சாதாரண மனிதனைப் போலவே நடமாடுகிறார். ஆனாலும், அவ்வப்போது தன் பற்பல நற்குணங்களை நிருபிக்கிறார்.

கே: ராமாயணத்தைப் பற்றி அந்த காலத்தில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. லட்சுமணன் சீதையின் மேல் மோகம் கொண்டிருந்தான். சேதுவை ராமன் கட்டவில்லை. ராவணன் மற்றும் சீதைக்கு சம்பந்தம் இருந்தது - ஆகியன. இந்த கருத்துகளின் மேல் பல புத்தகங்களையும் எழுதியிருக்கின்றனர். இதற்கு உங்கள் பதில் என்ன?

ப: தம்மிடம் இருக்கும் தோஷங்களை ஸ்ரீஹரியின் மேல் போடுவது துஷ்டர்களின் லட்சணமாகும். ஆதாரமே இல்லாமல் சொந்த கற்பனையில் உருவான கட்டுக்கதைகள் ஆகையால் அவை நிரூபிக்கப்பட முடியாமல் தோற்றுப் போகின்றன. இவற்றிற்கு பதில் சொல்லவே தேவையில்லை. மற்றும் முன்னரே திரு. ஹயவதன புராணிகர் ‘சீதாயன’ என்னும் தனது புத்தகத்தில் இத்தகைய கட்டுக்கதைகளுக்கு பதில் அளித்திருக்கிறார். இன்னொரு வாரப் பத்திரிக்கையில் வந்திருந்த சில கெட்ட விமர்சனங்களுக்கு, நம் குருவான திரு. விஷ்வேச தீர்த்த ஸ்ரீபாதங்களவர் தம் ஒரு கட்டுரையில் பதில் அளித்து, கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கே: ராமனை எப்படி வணங்கவேண்டும்?

ப: ஸ்ரீராமனை நம் இதயக் கமலத்தில் நினைத்து, சரணாகதி அடைய வேண்டும். ‘ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே’, என்று ருத்ரதேவர் பார்வதிக்கு உபதேசித்த இந்த மந்திரத்தை தினமும், எந்நேரமும் ஜபித்தவாறே இருக்கவேண்டும்.

கே: நம் வாழ்க்கைக்கான பாடங்களாக ராமாயணத்தில் காணப்படும் பல்வேறு சம்பவங்களில் ஒரு உதாரணத்தை சொல்லுங்களேன்.

ப: நானும் காட்டிற்கு வருகிறேன் என்று சீதாதேவி ராமனிடம் அடம் பிடிக்கிறாள். ஸ்ரீராமன் திரும்பத்திரும்ப காட்டிற்கு வரவேண்டாம் என்றாலும், அவள் ஒப்புக்கொள்வதில்லை. நான் ஒரு பதிவிரதை. பதிவிரதைகளுக்கு கணவனை விட்டு வேறு யாரும் கதியில்லை.

ந பிதா ந ஆத்மஜோ ந ஆத்மான மாதா ந சகேஜன: |

இஹ ப்ரேத்ய ச நாரீணாம் பதிரேகோ கதி: சதா ||

தந்தை, மகன், தாய், உறவினர் இப்படி யாருமே ஒரு பெண்ணிற்கு ஆதரவளிப்பர் இல்லை. இந்த உலகத்திலும், பர உலகத்திலும் கணவன் ஒருவனே ஒரு பெண்ணிற்கு கதி. இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சீதை காட்டிற்குப் புறப்பட்டாள்.

இதே சமயத்தில், லட்சுமணனின் மனைவியான ஊர்மிளையும், தானும் வனவாசத்திற்கு காட்டிற்கு வருகிறேன் என்று லட்சுமணனிடம் அடம் பிடிக்கிறாள். சீதை சொன்னதைப் போல் எனக்கும் கணவனே கதி. என்னை விட்டு தனியே காட்டிற்குப் போகாதீர்கள் என்றாள். அப்போது லட்சுமணன், ஊர்மிளைக்குச் செய்த உபதேசம் மிகவும் அருமையானது.

ஹே ஊர்மிளா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை இருக்கின்றது. நீ என்னுடன் வனவாசத்திற்கு வந்தால், நான் உன் சேவை செய்யவோ? அல்லது அண்ணன் / அண்ணிக்கு சேவை செய்யவோ? வீட்டில் இருப்பதே உன் போன்ற பதிவிரதைக்கு அழகு. சீதைக்கு அண்ணனுடன் காட்டிற்குச் செல்வதே பதிவிரதம். அனைவரின் பதிவிரதமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. புரிந்துகொள். நான் ஸ்ரீராமனின் தாசன். நீ தாசனின் மனைவி. தாசியாக இருந்து, கணவனின் தாஸ்யத்திற்கு விரோதம் வராமல் நடந்துகொள்ளவேண்டியது உன் கடமை.

இந்த கதையிலிருந்து தெரிவது என்னவென்றால் - அவரவர் கடமைகளை சரிவர செய்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பதே.

கே: எல்லாவற்றையும் ஏன் சரியாகத் தெரிந்து கொள்ளவேண்டும்?

ப: சாக்‌ஷாத் மகாவிஷ்ணுவே ஸ்ரீராமனாக அவதரித்தார். இவர் பற்பல நற்குணங்களால் நிரம்பியவர். எந்தவித தோஷங்களும் அற்றவர். இவரது அவதாரத்தைப் பற்றி, அதன் கதைகளைப் பற்றி முழுவதுமாக அறியும் சாமர்த்தியம் சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதில்லை. ஆகவே எந்தவித களங்கங்களையும், தோஷங்களையும், பொறுப்பில்லாமல் ஸ்ரீஹரியின்மேல் செலுத்தக்கூடாது. ராமாயணம் முதலான புனிதமான கிரந்தங்களை சரியாகப் படித்து புரிந்துகொண்டால், மோட்சம் கிடைக்கும். இதையே தவறாகப் புரிந்துகொண்டால் தமஸ் (கெட்டது) கிடைக்கும்.

கே: ராமாயணத்திலிருந்து நமக்கான முக்கிய செய்தி என்ன?

ப: அனுமன் மூலமாக தன் மோதிரத்தை ஸ்ரீராமன் சீதைக்கு அனுப்பினார். தனது அபய ஹஸ்தம்(ஆசி) எப்போதும் இருக்கிறது என்னும் செய்தியை அனுப்பினார். சீதை அதே அனுமனின் மூலமாக சூடாமணியை கொடுத்து அனுப்பினாள். இதன் மூலம், தான் ராமனுக்கு எப்போதும் தலை வணங்குகிறேன் என்ற செய்தியை அனுப்பினாள். அதைபோல், நாமும் அனுமன் மூலமாக அனைத்தையும் ஸ்ரீஹரிக்கு சமர்ப்பணம் செய்தால், ஸ்ரீஹரி தனது அபய ஹஸ்தத்தை நமக்குக் காட்டி அருளுவார் என்பதே முக்கியமான செய்தியாகும்.

கே: தந்திரசார சங்க்ரஹத்தின்படி ஸ்ரீராமசந்திரனை எப்படி வணங்கவேண்டும்?

ப: ஷ்யாமம் ரவீந்திரமித தீதிதிகாந்தியுக்தம்

ஞானம் ஷரஞ்ச தததம் ப்ரியயா சமேதம் |

ஸ்வாத்மஸ்வ ரூபமமிதம் ஹனுமன்முகேஷு

சந்தர்ஷயந்தமஜிதம் ஸ்மரதோருகீர்பி: || 26 ||

பற்பல சூரியர்களைக் காட்டிலும் அதிகமாகப் பிரகாசிப்பவரும், பற்பல சந்திரர்களைக் காட்டிலும் அதிக ஒளி தருபவரும், ஞான முத்திரை, அம்புகளை கைகளில் தரித்திருப்பவரும், உயர்வான வேதவசனங்களால் அனுமன் முதலானோர்க்கு தன் ஸ்வரூபத்தை உபதேசித்துக் கொண்டிருப்பவரும், மற்றவர்களால் வெற்றி கொள்ளப்படாதவரும், ஸ்யாம வண்ணத்தவரும், சீதாதேவியுடன் கூடியவரான ஸ்ரீராமசந்திரனை தியானியுங்கள்.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

கருத்துகள் இல்லை: