வியாழன், 13 ஆகஸ்ட், 2020

அக்னி புராணம் பகுதி-1
 

18 புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் 15,000 ஸ்லோகங்கள் கொண்டது. நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் பகவான் ஸ்ரீஹரியைக் குறித்து ஓர் அற்புத யாகத்தைத் தொடங்கினர். அதைக் காண வந்த சூதமுனிவரைப் பார்த்து முனிவர்கள் பிரமம் எனப்படும் பரம்பொருளின் சொரூபத்தை விவரித்துக் கூறுமாறு வேண்ட, அவரும் விளக்கிக் கூற ஆரம்பித்தார். மகாவிஷ்ணுவே பிரமம், பரம்பொருள் ஆவார். இந்த அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தவர் அவரே. தன்னையே ஒருவன் பிரமமாக உணரும் போது பிரம்ம சொரூபத்தை அடைகிறான். இந்த ஞானம் பெற இரண்டு வழிகள் உள்ளன. 1) யாகம் முதலனா கர்மாக்களைக் கடைபிடிப்பது. 2) கேள்வி ஞானம். அதாவது, பரம்பொருளைப் பற்றிச் சாஸ்திரங்கள் மூலம் அறிந்து, பகவானின் அவதார ரகசியங்களைக் கேட்டும் அறிதல் என்றார். அக்னி தேவனால் சொல்லப்பட்ட புராணம் அக்கினி புராணம் முதலில் பரந்தாமன் ஹரி சாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றிக் கூறலானார். அவை மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, ஸ்ரீராம, கிருஷ்ண, புத்த, கல்கி அவதாரங்கள். முதல் ஐந்து பற்றி பல புராணங்களில் (குறிப்பாக விஷ்ணு, பாகவதம், மச்ச, கூர்ம, வராக, வாமன புராணங்களில் தனித்தனியே விளக்கப்பட்டுள்ளன. நரசிம்மாவதாரம் பிரகலாதன் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ராமாவதாரம் இராமாயணத்திலும், கிருஷ்ணாவதாரம் பாகவதத்திலும் விரிவாக கூறப்பட்டுள்ளன. கல்கி புராணம் தனியாக விவரிக்கப்படுகிறது. பரசுராம அவதாரமும் வேறொரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. புத்தர் அவதாரம் கவுதமபுத்தர் என்ற பவுத்த மத நிறுவனருடையதே. கல்கி அவதாரம் இனிவர உள்ளது. ஆனால், அது பற்றியும் பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது.எனவே, கல்கி புராணம் என்பதும் 18 புராணங்களில் ஒன்றாகப் பரிணமிக்கின்றது. 2. கிருஷ்ணாவதாரம்-குறிப்புகள் பாகவதம் தசம ஸ்கந்தத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணனைப் பற்றிய சில விவரங்கள் வெவ்வேறு நிலையில் விஷ்ணு புராணம், நாரத புராணம் ஆகியவற்றிலும் கூறப்பட்டுள்ளன. அக்னி புராணத்தில் அவை யாவும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணன் மனைவியர்களில் எழுவர்பட்ட மகிஷியாவர். அவர்களுள் சத்தியபாமைக்காக தேவலோகத்திலிருந்து பாரிஜாத மரம் கொண்டு வந்தது குருகுலவாசம் முடிந்து குரு தக்ஷிணையாக அவரது இறந்த மகனை உயிருடன் கொண்டுவந்தது, ருக்மிணியின் குமாரம் பிரத்தியுத்மன் அசுரனால் தூக்கிச் செல்லப்படல், அசுரனைக் கொன்று விட்டு அவன் மாயாவதியுடன் துவாரகை திரும்புதல், மற்றும் உஷை, அநிருத்தன் திருமணம், பிரம்பனையும், துவிவிதன் என்ற வானரனையும் பலராமன் வதம் செய்தது, பாண்டவர்களுக்குப் பல நேரங்களில் பலவிதமாக உதவி அருள் செய்தது, பாரதப் போர், அசுவத்தாமனால் உப பாண்டவர்கள் கொல்லப்படுதல், உத்தரை கர்ப்பம் அழியாமல் உத்தரையைக் காப்பாற்றியது. கடைசியில் அவர் தன் சோதிக்குத் திரும்பியது முதலியவை சுருக்கமாக கூறப்பட்டுள்ளன. 3. சுவயம்பு மனுவின் சந்ததி பகவான் விஷ்ணு தன் உந்திக் கொடி கமலத்தில் பிரமனைத் தோற்றுவித்து அவர் மூலம் அண்ட சராசரங்களை படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரம்மன் தம்முடைய தேகத்தை ஆண், பெண் என இரு கூறாக்கி மக்களை வளர்க்க முற்பட்டார். சுவயம்பு என்பவனாகிய முதல் மனு சதரூபை என்ற பெண்ணை மணந்து அவளிடம் பிரிய விரதன், உத்தானபாதன் ஆகிய இரண்டு பிள்ளைகளையும், உத்தானபாதன் சுருதி என்ற மனைவியிடம் உத்தமன் என்ற பிள்ளையையும், சுநீதி என்பவளிடம் துருவன் என்ற பிள்ளையையும் பெற்றான். துருவன் வரலாறு-(விஷ்ணு புராணத்தில் விரிவாக உள்ளது காண்க). இதற்குப் பிறகு இவர்கள் வம்சத்தில் பலர் தோன்றி வளர்ந்து மக்கள் பெருக்கத்தை உண்டாக்கியது. இவ்வம்சத்தில் வந்த பிரசேதசுர்கள் மரங்களைத் தீயிட்டு அழிக்க, சந்திரன் மகள் மாரீஷையை மணந்து மரங்களை வெட்டாமல் தடுத்தான். மாரீஷையிடம் தக்ஷன் பிறந்தான். தக்ஷனிடம் பிறந்தவர்களிலே சசிதேவியைப் பரமசிவனுக்கும், இருபத்தேழு விண்மீன்கள் அவன் மகள்களாகப் பிறக்க-அவர்களைச் சந்திரனுக்கும், பதின்மூன்று பெண்களைக் காசியப முனிவருக்கும் மணம் செய்து வைத்தான். 4. காசியபருடைய சந்ததி சாக்ஷúஷ மன்வந்தரத்தில் காசியபருக்கு அதிதியிடம் தேவர்களும், வைவசுவத மன்வந்தரத்தில் பன்னிரண்டு ஆதித்தர்களும் பிறந்தனர். காசியபருக்கு இரணியாட்சன், இரணியகசிபு என்பவர்களும், மற்றும் அநேக புத்திரர்களும் பிறந்தனர். காசியபரின் மனைவி சுரசை என்பவளுக்கு ஆயிரம் பாம்புகள் தோன்றின. கத்துரு என்பவளுக்கும் ஆயிரம் பாம்புகள் தோன்றின. குரோதை என்பவளுக்குக் கொம்புள்ள மிருகங்கள், தறை என்பவளுக்கு நீர் வாழ்வன, பறவைகள், சுரபிக்குப் பசுக்கள், எருமைகள், இலை என்பவளுக்குப் புல் பூண்டுகள், கவதை என்பவளுக்கு யக்ஷர்கள், ராக்ஷசர்கள், முனி என்பவளுக்கு அப்சரசுகள், அரிஷ்டை என்பவளுக்குக் கந்தர்வர்கள் ஆகியோர் பிறந்தனர். தாமரை காசியபரிடம் ஆறு பிள்ளைகளும் மற்றும் காகங்களும், குதிரைகளும், ஒட்டகங்களும் பிறந்தன. வினதை என்பவளுக்கு அருணனும், கருடனும் பிறந்தனர். பின் ஒவ்வொருவருக்கும் மேன்மேலும் பல குழந்தைகள் பிறந்திட காசியபரின் சந்ததி வளர்ந்தது. மருத்துக்களும் இந்த சந்ததியைச் சேர்ந்தவர்களே. 5. பிரமனிடமிருந்து தோன்றிய படைப்புக்கள் பிராகிருத சிருஷ்டியில், பிரமனிடமிருந்து தோன்றிய மகத் 1) தன் மாத்திரைகள் என்ற பூதங்கள். 2) வைகாசிகள் எனப்படும் இந்திரியங்கள். இந்த மூன்றுக்குப் பின் முக்கியமாக சிருஷ்டிகள். 3) திர்யச் சுரோதம் அசையாப் பொருள்கள். 4) பறவை, மிருகங்கள். 5) தேவர்கள் முதலியோர், தேவசர்க்கம். 6) அரோவச் சுரோதசுக்கள். 7) தமஸ், சத்வகுணங்கள் கூடி உண்டான அனுக்கிரங்கள். 8) 4 முதல் 8 வரை உள்ள ஐந்தும் வைகிருத சிருஷ்டியாகும். பிரமனுடைய படைப்புகளில் கவுமாரம் என்பது கடைசி ஒன்பதாவது சிருஷ்டியாகும். பிருகு, க்யாதி என்பவளையும், மரீசி, சம்பூதி என்பவளையும், அத்திரி அனுசூயையும், வசிஷ்டர் ஊர்ஜை என்பவளையும், அக்கினியின் பத்தினி சுவாஹை, அதர்மனின் மனைவி அம்சை, இத்தகைய சேர்க்கையால் மக்கள் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற்றன. பிரமன் கண்களில் நீர் விட ருத்திரன் தோன்றினான். 6. தெய்வ ஆராதனை முறை பலன்கள் வைணவத்தில் முதலில் விஷ்வக் சேனரைத் துதிக்க வேண்டும். விஷ்ணு ஆராதனையில் முதலில் அச்சுதனையும், அடுத்து ததா, விதாதா, கங்கா முதல் ஞானம், கர்மயோகம் ஆகியவற்றிற்கு வாழ்த்துக் கூற வேண்டும். பின்னர் சந்தோஷம், சத்தியம் முதல் வசுதேவன் மற்றவர்களையும் வாழ்த்துக் கூறி வணங்க வேண்டும். அடுத்து விஷ்ணுவை முடிமுதல் அடிவரை, மற்றும் பஞ்சாயுதம் ஆகியவற்றையும் போற்றிக் கொண்டாட வேண்டும். பிறகு திருமேனியில் உள்ள அலங்காரப் பொருள்கள் மற்றும் தேவதைகளை வணங்கித் துதிக்க வேண்டும். அடுத்து ஈசானன், அவரது ஆயுதங்கள், ரிஷபம் ஆகியவற்றை இந்த வட்டத்தில் துதிக்க வேண்டும். சிவனை ஆராதிக்கையில் நந்தி முதல் பலவித சக்திகள், தர்மம் மற்ற தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அடுத்து வாமை முதல் சிவை வரை உள்ள அம்பிகைகளை முறைப்படி துதிக்க வேண்டும். சூரிய ஆராதனையில் முதலில் திண்டி, உச்சைசிரவஸ் ஆகியோரைப் பின்னர் தீப்தை முதல் பிமலை ஆகியோருக்கு நமஸ்காரம் சொல்ல வேண்டும். பிறகு மந்திரம் கூறி சூரியனின் ஆசனம், கிரணம் போன்றவற்றை முறையே வணங்க வேண்டும். மந்திரங்களால் ஆராதித்தல் தெய்வ ஆராதனையின் போது முதலில் புறத்தூய்மை மிகமிக அவசியம். மந்திரங்களைச் சொல்லும் போதும் ஜபிக்கும் போதும் ஓம் சேர்த்தே சொல்ல வேண்டும். எள்ளால், நெய்யால் ஹோமம் செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரித்து நீராட வேண்டும். தியானம், ஜபம் ஆகியவற்றிற்கு முன் ஆசமனம், பிராணாயாமம் செய்ய வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும். கரநியாசம், அங்கநியாச முறைகளால் பகவானை வணங்கி, பின்னர் முத்திரைகளைக் காட்டி உபசாரங்கள் செய்ய வேண்டும். இதுவரை கூறப்பட்டவை விஷ்ணுவை மந்திரங்களால் ஆராதிக்கும் முறை. ஹோமம் செய்தல் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அளவுகளில் ஓமகண்டம் தயார் செய்து, கைப்பிடி நீளமாகவும் கரண்டிப் பகுதி குழிவாகவும் உள்ள மரக்கரண்டி கொண்டு அக்னியில் நெய்யை ஓமம் செய்ய வேண்டும். ஹோமம் தொடங்கும் முன் குண்டத்தினுள்ள நெருப்புக்கு அக்கினியின் சாந்நித்தியம் ஏற்படச் செய்ய வேண்டும். 
ஹரியைத் தியானித்து சமித்துக்களை எடுத்து அக்கினியில் சமர்ப்பிக்க வேண்டும். குண்டத்துக்குக் கிழக்கே மூன்று தர்ப்பங்களை வைக்க வேண்டும். ஓமத்துக்கான மரக்கரண்டி, நெய், அன்னம், தர்ப்பை ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். கும்பத்தில் நீரை மந்திரித்து அப்புனித நீரால் எல்லாவற்றையும் புரோக்ஷிக்க வேண்டும். அக்கினி குண்டத்தின் முன் நெய்யை வைக்கவும். தர்ப்பையால் நெய், ஹோமக் கரண்டி ஆகியவற்றைச் சுத்திகரித்த பின்னர் ஹோமத்தைத் தொடங்க வேண்டும். ஹோமம் செய்யத் தகுதி பெற்றவனே அதைச் செய்ய வேண்டும். ஹோமம் முடித்து பகவான் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும். விஷ்ணு பூஜைக்கு அறுபத்திநான்கு உபசாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 7. மனிதனுக்கான கர்மாக்கள் ஒவ்வொருவனுக்கும் விதிக்கப்பட்ட கர்மாக்கள் நாற்பத்தெட்டு. அவை முக்திக்குச் சாதகமானவை. திருமணம் முடிந்ததும் கர்ப்பாதானம், பும்சவனம், சீமந்தம்; குழந்தை பிறந்ததும் ஜாதகர்மம், நாமகரணம், அன்னப் பிரசானம்; குடுமி வைத்து உபநயனம் ஆகியவை. பிரம்மச்சாரி ஏழு வகை விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும். வைஷ்ணவி, பரிதி, பௌதிகி, ஸ்நௌதிகி முடித்து கோதானம். கிரகஸ்தாஸ்ரமவர்க்கு இவற்றுடன் யாக, யஜ்ஞமும் சேர்ந்து ஏழு ஆகும். ஆவணி, மார்கழி, சித்திரை, ஐப்பசி மாதங்களில் செய்யப்படும் பார்வண சிராத்தங்கள் எட்டு. ஆதானம், அக்னிஹோத்திரம், தசம், பவுர்ணமாசகம், சாதுர்மாஸ்யம், பசுவந்தனம், சவுத்திராபணி ஆகிய ஏழும் ஹரி யக்ஞங்கள். அக்குனிஷ்தோமம், அத்யக்கினி, ஸ்தோமம், உக்தம், சோடசம், வாஜ்பேயகம், அதிராத்திரம், அப்தயாமம் ஏழும் சோமஸம்ஸ்தம் ஆகும். மேலும் ஹிரண்யநங்ரி, ஹிரண்யம் போன்று ஆயிரக்கணக்கில் சொல்லப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறந்து விளங்குவது அசுவமேத யாகம். உயிர்களிடம் இரக்கம், பிழை பொறுத்தல், எளிமை, சுத்தம், சுறுசுறுப்பு, பிறர் நலம் பேணுதல், தாராளம், பொருளில் பற்றற்று இருத்தல் எனச் சீவம் எட்டு வகை ஆகும். கர்மாக்களைச் செய்து, பகவானை அர்ச்சித்து, பகவான் நாமத்தை உச்சரிப்பதால் ஒருவன் நற்கதி அடைகிறான். 8. ஆலயம் எழுப்புதல் இறைவனுக்கு ஆலயம் எழுப்புபவன் முற்பிறவிகளில் செய்த பாவங்களிலிருந்து விடுபடுகிறான். ஆலயம் எழுப்ப நினைத்தாலே பாவ விமோசனம் உண்டு. கிருஷ்ணனுக்குக் கோயில் கட்டுபவரை ஆதரிப்பவர்கள் பாப விமோசனம் பெற்று அச்சுதன் லோகம் அடைவர். ஹரிக்கு ஆலயம் எழுப்புவதனால் தன் வம்சத்தில் தனக்கு முன் தோன்றியவர்கள், பின் தோன்றுபவர்கள் ஆகிய அனைவரும் விஷ்ணுலோகம் அடைவர். ஆலயம் எழுப்புவதனால் பிரம்மஹத்தி பாவம் விலகும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். ஓர் ஆலயம் எழுப்பினால் சொர்க்கம், மூன்று எழுப்பினால் பிரம்ம லோகம், ஐந்துக்கு கைலாயம், எட்டு எழுப்பினால் வைகுந்தம் அடைவர். சகல சவுபாக்கியங்களுடன் வாழ்ந்து பிறவாப் பேரின்பம் அடைவர். ஏழை (அ) பணக்காரன், சிறிய (அ) பெரிய கோயில் கட்டுவோர்க்கும் ஒரே விதமான பலன்கள் கிட்டும். திருமாலுக்கு ஆலயம் எழுப்புவோரின் குடும்பம் வைகுந்தத்தில் ஆனந்தமாக இருக்கும். தான் ஈட்டிய பொருளில் ஒரு பகுதியைக் கொண்டாவது கிருஷ்ணன் கோயில் எழுப்ப வேண்டும். செல்வத்தை ஆலயம் எழுப்புவதில் செலவு செய்பவன் வைகுந்தம் அடைகிறான். அவனுக்கு மறுபிறவி இல்லை. 9. இறைவன் திருமேனி பிரதிஷ்டை ஆலய நிர்மானம் முடிந்த பிறகு அதில் இறைவன் திருமேனிகளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். மண், மரம், செங்கல், கருங்கல், ஐம்பொன், தங்கம் ஆகியவற்றினால் பிரதிமைகள் செய்யப்படுகின்றன. யமனுடைய ஆணை இறைவனுக்கு ஆலயம் எழுப்பியவனை, திருமேனியைச் செய்து அளிப்பவனை நரகத்துக்கு அழைத்து வரக்கூடாது. இறைவனைச் சிந்திப்பவர்கள், அவர் புகழ்பாடுபவர்களை, நாள்தோறும் அர்ச்சித்து வழிபடுபவர்களையும் தூரத்தில் காணும் போதே நெருங்காது விலகிவிட வேண்டும். ஆலயம் எழுப்பியவனது வம்சனத்தினரைக் கூட நெருங்கக் கூடாது. மத்திய தேசம், அதைச் சார்ந்த பிரதேசங்களில் உள்ள பிராம்மணர் ஆலய கும்பாபிஷேகம் ஆகிய காரியங்களைச் செய்யலாம். அவர்கள் தமது ஞானத்தால் பிரம்மனாகவே ஆகின்றனர். எனவே, அவர்களையே ஆச்சாரியனாகக் கொள்ள வேண்டும். பிரதிஷ்டை செய்யப்படும் இறைவன் திருமுகம் நகரத்தை நோக்கி இருக்க வேண்டும். விஷ்ணுவுக்கு எந்த இடத்திலும் ஆலயம் அமைக்கலாம். ஆலயம் எழுப்பவேண்டிய நிலத்தைச் சுத்தமாக்கி சமன்படுத்த வேண்டும். பூத பலிகர்மா செய்ய வேண்டும். தயிர், மாவு, கோதுமை, பொரி, உளுந்து, ஆகியவற்றை நிவேதனம் செய்து அஷ்டாக்ஷரி மந்தரத்துடன் பிரார்த்தனை செய்து நிலத்தை உழ வேண்டும். வாஸ்து பூஜை, மற்ற தேவதா பூஜைகள் செய்ய வேண்டும். புரோகிதருக்குப் பசு, ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றைத் தானம் செய்ய வேண்டும். வைஷ்ணவர்கள், சிற்பிகளைக் கவுரவிக்க வேண்டும். ஆலய நிர்மாணத்திற்கான செங்கற்கள் 12 விரல்கடை நீளமும், 4 விரற்கடை அகலமும் இருக்க வேண்டும். பொருள்களை மந்திரங்கள் கூறி தூய்மைப்படுத்தி உபயோகிக்க வேண்டும். ஹோமம் வளர்த்து முறைப்படி பூஜை செய்து, பிராயச் சித்தம் முதலான ஹோமங்களைச் செய்து முடிக்க வேண்டும். பூமாதேவி ஆராதனம், கடைக்கால் போட்ட பின் புரோகிதருக்கு தானங்கள் அளிக்க வேண்டும். வாஸ்து யஜ்ஞம் மறுபடியும் ஒருமுறை நடத்த வேண்டும். ஆலயத்தில் மண்டபங்கள், பிராகாரம், மதிற்சுவர் ஆகியவை முறைப்படி அமைக்கப்பட வேண்டும். இறைவன் திருஉருவங்கள் வடிவமைக்க மண், கம்பளி, இரும்பு, ரத்தினங்கள், கல், சந்தனம், மலர்கள் ஆகியவற்றில் ஒன்றை உபயோகிக்கலாம். மலைகளிலிருந்து பாறை கொண்டு வரப்பட வேண்டும். கிடைக்காவிடில் சிம்ம வித்தை என்ற கர்மாவை உரிய மந்திரங்களுடன் செய்யப்பட்டு, அகப்படும் பாறையைக் கொண்டு வர வேண்டும். ஒரு சிறு பந்தலில் பாறையை வைத்து பகவானை வேண்டிக் கொண்டு வேலையைத் தொடங்க வேண்டும். வேலை செய்யாத நேரங்களில் பாறைகளைத் துணியால் மூடிவைத்திருக்க வேண்டும். ஹயக்ரீவர் இறைவன் திருமேனியைப் பாறையிலே செதுக்குவதற்கான அளவு விவரங்களைக் கூறியுள்ளார். தேவியின் திருஉருவத்தைச் செதுக்குவதற்கான அளவுகளையும் கூறுகிறார். சாலக்கிராமங்கள் பற்றி விவரிக்கிறார். ஸ்ரீமந்நரநாராயணனின் திருநாமங்களில் சிலவற்றின் பெயரில் பலவகையாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு வகைக் கல்லுக்கும் நிறம், தோற்றம், அளவு, குறிகள் முதலியன தனித்தனியே சொல்லப்பட்டுள்ளன. 10. கடவுளர் திருமேனி அமைத்தல் 1. மச்சாவதாரம் : மீன் போன்ற உடலமைப்பு. 2. கூர்மாவதாரம் : ஆமை வடிவம். 3 அ. வராகம் : பன்றியின் முகம், மனித உடல்; வலது புறத்தில் கதாயுதம் மற்ற ஆயுதங்கள்; இடப்புறம் லக்ஷ்மி, சங்கம், தாமரைமலர், லக்ஷ்மி முழங்கையில் அமர்ந்திருக்க வேண்டும். பூமியும் அதனைத் தாங்கும் அனந்தாழ்வாரும் மூலத்தருகே இருக்க வேண்டும். 3 ஆ. வராக உருவத்தை அமைப்பதில் இரண்டாம் வகை : நான்கு கைகளில் ஒன்றில் வாசுகியைப் பற்றியிருத்தல்; இடக்கையினால் பூமியைத் தூக்கி இருத்தல்; காலடியில் லக்ஷ்மி அமர்ந்திருத்தல்; வலப்புறம் சக்கரம், வாள், தண்டம், அங்குசம், இடப்புறம் சிங்கம், தாமரை மலர்; கதை, பாசம் வலப்புறத்தில் கருடனது தோற்றம்; விச்வரூபத்துக்கு நான்கு முகங்கள் இருபது கைகள் அமைக்கப்பட வேண்டும். 4. நரசிம்மம் : மனித உடல், சிங்க சிரம்; நான்கு கைகள்-இரண்டில் கதையும், சக்ராயுதமும்; மற்ற இரண்டும் அசுரன் உடலைக் கிழித்துக் கழுத்தில் மாலையாக அணிவது போல் இருத்தல். மடியில் அசுரனின் உயிரற்ற உடல் கிடத்தப் பெற்றிருக்க வேண்டும். 5. வாமனன் : குள்ளமான தோற்றம். ஒரு கையில் தண்டம், மற்றொன்றில் குடை; நான்கு கைகளுடன் கூடியதாகவும் செய்வதுண்டு. 6. பரசுராமர் : கைகளில் கத்தி, கோடரி, வில், அம்புகளுடன் 7. ஸ்ரீராமர் : இருகைகளில் வில் அம்பு. நான்கு கைகளானால் மற்ற இரண்டில் கத்தியும், சங்கும் கொண்டிருக்க வேண்டும். 8. பலராமர் : இரண்டு (அ) நான்கு கைகள். இரண்டானால் ஒன்றில் கதை, மற்றொன்றில் கலப்பை. நான்கு கைகளானால் இடதுபுறம் மேல்கையில் கலப்பை, கீழ் சங்கும், வலப்புறம் மேற்கையில் முசலம், கீழே சக்கரம். 9. கிருஷ்ண பகவான் : இரண்டு கைகள், அல்லது ஒன்றில் புல்லாங்குழல் கொண்டை, அதில் மயிற்பீலி, மிக அழகிய வடிவம். 10. புத்தர் : எளிய அழகிய உருவம், சாந்தமுகம். இடுப்பில் சிறுதுணி. மேல்நோக்கிய இதழ்கள் கொண்ட தாமரையில் அமர்ந்திருத்தல், நீண்ட காதுகள், நிர்மல இதயம், முகம். 11. கல்கி : கையில் வில்லும், அம்புராத்துணியைத் தாங்குதல். அந்தணர் கோலம்-நான்கு கைகளில் கத்தி, சக்கரம், ஈட்டி, அம்பு-குதிரை மீது இருத்தல்-சங்கத்தால் போர் முழக்கம் செய்யும் அந்தணர். 12 அ. விஷ்ணு : வலப்புறம் மேல் கையில் கதையும், கீழ்க்கையில் சங்கும், இடப்புறம் மேல்கையில் சக்கரம், கீழ்க்கை அபயஹஸ்தம். இருபுறங்களில் பிரம்மனும் ஈசனும் இருக்கலாம். ஆ. எட்டுக் கைகளுடன் கருடன் மீது ஆரோகணம். வலப்புறம் மூன்று கைகளில் கத்தி, கதை, அம்பு. இடப்புறம் மூன்று கைகளில் வில், கடகம், கமலம் ஆகியவை. மற்ற இருகரங்கள் அபயம் அளித்தல், அருளுதல் நிலை. 13. பிரத்யும்னன் : வலப்புறக் கைகளில் வஜ்ராயுதம். சங்கும், இடப்புறக் கைகளில் வில்லும், அம்பும்-நான்கு கைகளில் கதையும் கூட இருக்கும் (பிரத்யும்னன்-கிருஷ்ணன், ருக்மிணி மகன்) 14. அநிருத்தன் : (கிருஷ்ணனின் பேரன்) தோற்றம் நாராயணன் போல். நான்கு கைகள். 15. பிரம்மன் : நான்கு கைகள், நான்கு முகம், நான்கு திக்குகளை நோக்கியவாறு அன்ன வாகனத்தில் அமர்ந்திருத்தல்; வலப்புறக் கைகளில் ஜபமாலை, ஹோமக் கரண்டி; இடக்கைகளில் கமண்டலம், சிறுநெய் பாத்திரம்-வலப்பக்கம். சரசுவதியும், இடப்பக்கம் சாவித்திரியும் அமைந்திட வேண்டும். 16. பள்ளிகொண்ட பரந்தாமன் : பாற்கடலில் பாம்பணை மீது சயனித்திருத்தல், முக்காலங்களைக் குறிக்கும் மூன்று கண்கள். நாபியில் இருந்து நீண்ட காம்பு. தாமரையில் நான்கு முகங்களொடு பிரமன், லக்ஷ்மி அருகில் பாதங்களை வருடிக்கொண்டு இருத்தல், விமலை தலைப்பக்கம் சாமரை வீசுவதாக அமைத்தல். 17. ருத்திரகேசவன் என்ற விஷ்ணு : வலப்பக்கம் மகாதேவர் உருவம். இடப்பக்கம் விஷ்ணுவின் உருவம். வலப்புறம் இரு கைகளில் சூலம், மண்டை ஓடு, இடப்பக்கம் கரங்களில் கதை, சக்கரம். வலப்புறத்தில் கவுரி, இடப்புறம் லக்ஷ்மி இருக்க வேண்டும். 18. ஹயக்ரீவர் : நான்கு கைகளில் சங்கும், கதை, தாமரைமலர், வேதங்கள், இடது பாதம் சர்ப்பராஜன் அனந்தன் மீதும்; வலது பாதம் ஆமையின் மீதும் இருக்க வேண்டும். 19. தத்தாத்ரேயர் : இருகரங்களோடு, இடது மடியில் லக்ஷ்மி அமர்ந்திருத்தல். 20. விஷ்வக்சேனர் : நான்கு கைகளில் சக்கரம், கதை, கலப்பை, சங்கம். 21. சண்டிகை : இருபது கரங்கள்; வலக்கரங்களில்-சூலம், கத்தி, ஈட்டி, சக்கரம், பரசம், ஜேதம், அபேதம், அபோதம், அபயம், டமரு, சக்திகம். இடப்பக்கம் கைகளில்-கடகம், கோடரி, அங்குசம், வில், மணி, கொடி, கதை, தண்டம், கண்ணாடி, முத்தாரம் ஆகியவை. பாதத்தின் அடியில் தலை துண்டிக்கப்பட்ட எருமை வடிவம்; துண்டிக்கப்பட்ட கழுத்திலிருந்து அசுரன் மிகுந்த கோபத்தோடு வாளை உருவிக்கொண்டு சீறிப் பாய்வதாக இருக்க வேண்டும். நின்று கொண்டிருக்கும் தேவி வலது பாதத்தைச் சிங்க வாகனத்தின் மீதும் இடது பாதத்தை அசுரன் தோளின் மீதும் வைத்து அழுத்திவளாய், அவளது கரத்திலே நாக பாசத்தை இறுக்கும் பாவனையாக அமைய வேண்டும். அசுரன் புஜத்தைச் சிங்கம் பாய்ந்த நிலையில் கவ்விக் கொண்டிருக்க வேண்டும். சண்டிகை உருவுக்கு மூன்று கண்கள் இருக்க வேண்டும். சண்டிகையின் உருவங்கள் நவதத்துவங்களை விளக்கும் வகையில் ஒன்பது வகையில் உள்ளன. அவை ருத்திரச்சண்டி, பிரசண்டி, சண்டோக்ரை, சண்டநாயகி, சண்டி, சண்டவதி, சண்டரூபி, ஆதி சண்டிகை, உக்கிர சண்டி. இவை அனைத்தும் சிங்க வாகனத்தின் மீது 16 கரங்களுடன் வடிவமைக்கப்பட வேண்டும். 22. துர்க்கை : துர்க்கையின் ஒன்பது தோற்றங்களும் நின்ற நிலையில் வலது முழங்கால் முன்புறம் எடுத்து வைக்கப்பட்டதாய், இடதுகால் பின்னால் இருப்பதாக அமைக்கப்பட வேண்டும். 23. சரசுவதி : சரசுவதியின் கைகளில் புத்தகம், ஜபமாலை, வீணை இருத்தல் வேண்டும். 24. கங்காதேவி : கையில் குடம், மற்றொரு கையில் தாமரை. மகரம் என்னும் நீர் வாழினம் அவளது வாகனம். 25. யமுனை : குடம் ஏறுநுதல், ஆமை, முதுகில் ஆரோகணம். 26. பிராம்மி : குண்டம், அட்சய பாத்திரம், ஜபமாலை, ஓமக்கரண்டி, நான்கு கைகள், அன்ன வாகனம். 27. சங்கரி : ஒரு கையில் வில் அம்பு; மற்றொன்றில் சக்கரம்; காளை வாகனம். 28. கவுமாரி : இரண்டு கைகள். ஒன்றில் ஈட்டி. மயில் வாகனம். 29. வராகி : வலப்பக்கம் தண்டம், கத்தி, கதை, சங்கும்; இடப்புறம் கைகளில் சக்கரம், பூமி, தாமரை மலர் ஆகியவை. எருமை வாகனம். 30. இந்திராணி : ஆயிரம் கண்கள். இடது கையில் வஜ்ராயுதம்.
சாமுண்டி-மனித உடல் மீது அழுத்திய பாதம், மூன்று கண்கள், மெலிந்த உருவம்; கோபத்தினால் மயிர்கள் குத்திட்டிருத்தல். இடுப்பில் புலித்தோல்; இடது கைகளில் ஈட்டி, மண்டை ஓடு, சூலம். வலப்பக்கம் இரு கைகளில் சிறு வாள்கள். 31. விநாயகர் : மனித உடல், யானை, தலை, பெரிய தும்பிக்கை, உருண்டை வயிறு, மார்பில் பூணூல் உபவீத நிலை. 32. முருகன் : இளைய தோற்றம். அழகிய உருவம். இரண்டு கைகள். மயில் வாகனம்-இரு பக்கம் இரண்டு தேவியர்-ஒன்று (அ) ஆறு முகங்கள். பன்னிரண்டு கரங்கள். கிராமம் (அ) வனத்தில் திருக்கோயில் அமைந்தால் இருகரங்கள், வலது கையில் சக்திஆயுதம், இடது கையில் (சேவல்). 33. ருத்திர சண்டிகை : எட்டுக் கரங்கள், வில், கேதம், குக்குடக்கொடி, மண்டை ஓடு, கட்டாரி, சூலம், பாசக்கயிறு ஆகியவை கரங்களில். இடதுபுறம் ஒரு கை அபயஹஸ்தம். இடுப்பில் யானைத்தோல்-மண்டை ஓடு, மேகலையாக சிறு சிறு முரசுகள்-கால்கள் நாட்டிய நிலை. ருத்திர சாமுண்டியும் அவளே. அ. மகாலக்ஷ்மி : உட்கார்ந்த நிலையில் நான்கு முகங்களான மகாலக்ஷ்மி. ஆ. சித்த சாமுண்டி : மூன்று கண்கள், பத்துக் கரங்கள் இருந்தால் சித்த சாமுண்டி. தோற்றம் : சிவந்த நிறம், கைகளில் பாசம், அங்குசம். 34. பைரவி : பன்னிரண்டு கைகள். க்ஷõமை தேவியின் உருவம், வயது முதிர்ந்த நிலை, இருகரங்கள், அகன்றவாய்-சுற்றிலும் நரிகள். 35. க்ஷõமதாரி : முழந்தாளிட்ட நிலை-நீண்ட பற்கள். 36. யக்ஷணிகள் : பணிப்பெண்கள்-சஞ்சலமற்ற கண்கள் அப்சரசுகள்-அழகிய மங்கையின் உருவம் 37. நந்தீசன் : ஒரு கையில் ஜபமாலை, மற்றொன்றில் சூலம்; தேவியின் பணியாளன். 38. மகாகாளி : சுத்தி, மனிதன் தலை, கதை, கட்கம் கரங்களில். 39. சூரியன் : ஒற்றை சக்கரத்தேர்; ஏழு குதிரை. இரு கரங்களில் தாமரை மலர்கள், வலப்புறத்தில் குண்டி எனும் அதிகாரி மைகூடு, பேனா கொண்டு புத்தகத்தில் எழுதுவது போல். இடப்புறத்தில் பிங்களன் என்ற காவலன் தண்டத்துடன். இருபுறமும் இரு பெண்கள் சாமரம் வீசுதல்; அருகில் சாயா÷வி. மற்றும் பாஸ்கரன், 12 மாதங்களில் 12 வித சூரியன் வடிவம். சந்திரன், செவ்வாய், புதன், பிரகஸ்பதி, சனி, ராகு, இந்திரன், அக்கினி, யமன், நிருதி, குபேரன், விஸ்வகர்மா, ÷க்ஷத்திரபாலகர்கள், யோகினிகள், எட்டுத் திக்குகளில் உள்ள தேவதைகள், பைரவன், கிருத்திவாசன், வீரபத்திரன், லலிதா எனப் பல்வேறு வடிவமைப்புகளும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. 11. லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல் லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம்; மையப்பகுதி விஷ்ணு பாகம், நுனிப்பகுதி சிவபாகம். இதில் சிவபாகம் சற்றுப் பெரியதாக இருக்க வேண்டும். லிங்கத்தை அமைத்தல் : 1) உப்பினாலும், நெய்யினாலும் செய்தல், 2) துணி, மண் ஆகியவற்றாலும் தற்காலிகமாக அமைத்து வழிபடல். 3) சுட்ட மண்ணினால் லிங்கம் அமைத்தல். 4) மரம், பாறை ஆகிய ஒன்றால் செய்யப்படுவது மிகச் சிறந்தது. 5) பவழம், தங்கம் ஆகியவற்றால் ஆன லிங்க வழிபாடு அதிக பலன்களைத் தரும். 6) வெள்ளி, பித்தளை, செம்பு, துத்தநாகம், பாதரசம் ஆகியவற்றால் ஆனவை புனிதமானவை. 7) உலோக நடுவில் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட லிங்கங்களை வழிபடுவோர் புகழ், வெற்றி அடைவர். அவர்கள் மனோரதம் நிறைவேறும். ஈசன் எங்கும் ஆராதிக்கப்படுவர். சாஸ்திர முறைப்படி, குறிப்பிட்ட அளவுகளில் லிங்கங்களை அமைக்க வேண்டும். பரமன் ஆராதனைக்கான இடம் ஆலயமுன் அமைதல் வேண்டும். பஞ்ச கவ்யத்தால் அனைத்தும் தூய்மைப்படுத்தல் படவேண்டும். ஆராதிப்பவர்கள் பவித்திரம், மோதிரம், கங்கணம் அணிந்திருக்க வேண்டும். முறையான மரக்கொம்புகளாலேயே பந்தல் அமைக்க வேண்டும். நரசிம்ம மந்திரத்தால் பூ பரிக்கிரகம் செய்த பின் சடங்குகளைச் செய்ய வேண்டும். பந்தலின் வடமேற்கு மூலையில் ஹோம குண்டம் அமைக்கப்பட வேண்டும். எந்தத் தெய்வம் பிரதிஷ்டை ஆனாலும் உடன் அரி, அயன், அஷ்டதிக் பாலகர்களையும் ஆராதனம் செய்து பூஜிக்க வேண்டும். முடிவில் சாந்தி ஹோமம் புரோகிதர்க்கு கோதானம், சுவர்ணதானம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் பஜனை, தியானத்தில் ஈடுபட வேண்டும். பக்தி, சிரத்தையுடன் பரமனை ஆராதிக்க வேண்டும். திருஉருவை பிரதிஷ்டை செய்பவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு வைகுந்தவாசத்தை அணிகிறார்கள். 12. ஆலயங்களுடன் திருக்குளங்கள் ஆலயத் தடாகங்கள் வருண சாந்நித்யத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதற்காக வருணன் திருஉருவைத் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் ஆகியவற்றால் அமைக்க வேண்டும். வலதுகரம் அபயஹஸ்தம், இடதுகையில் நாகபாசம்-அன்ன வாகனம்-அவரைத் தொடர்ந்து நதிகள், சர்ப்பங்கள் வருவதாக உருவாக்க வேண்டும். குடத்தில் வருணனை ஆவாகனம் செய்ய வேண்டும். வருண சாந்நித்தியத்தை உண்டாக்க வேண்டும். புரோகிதரைக் கொண்டு ஹோமகுண்டம் அமைத்து ஹோம காரியங்களைச் செய்ய வேண்டும். புனித குடங்களில், புனித நீர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். அக்குடங்களில் கிழக்குக் கடல் நீர், தென்கிழக்கு கங்கை நீர், தெற்குக்கு மழைநீர், தென் மேற்குக்கு ஊற்று நீர், மேற்குக்கு ஆற்று நீர், வடமேற்குக்கு நதி நீர், வடக்குக்குக் காய் கனிகள் பிழிந்த நீர், வடகிழக்குப் புனித தீர்த்தநீர் என்று நிரப்பி ஆராதிக்க வேண்டும் (எல்லாக் குடங்களிலும் ஆற்று நீரையும் நிரப்பலாம்.) விதிப்படி பூஜைகள் முடித்து குடங்களின் நீரை கிழக்கிலிருந்து தொடங்கி உரிய மந்திரங்கள் கூறி விஷ்ணுவின் அம்சமான வருண சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ÷ஷாடசோபசாரங்கள் சமர்ப்பித்து, சிலையைத் தடாகத்தின் நடுவே நீருக்குள் பூமியில் புதைத்து விட வேண்டும். அதனால் நீர் புனிதமாகும், வருணன் சாந்நித்தியமும் ஏற்படும். பஞ்ச கவ்யத்தை எடுத்து மந்திரத்துடன் தடாகத்தில் நீரில் சேர்க்க வேண்டும். குளம் வெட்டி புனித நீரை உண்டாக்குபவர் ஒரு நாளிலேயே பல அசுவமேத யாகங்கள் செய்த புண்ணியத்தை அடைவர். குளம் வெட்டுவது சிறந்த தானம். அத்துடன் நந்தவனத்தையும் அமைக்க வேண்டும். இதனால் சொர்க்க வாசம் ஏற்படும். 13. நீராடும் விதி முறைகள் நீரில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போது புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதாகத் தியானம் செய்து கொள்ள வேண்டும். ஸ்நானங்கள் பல வகை. தன் இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு கிழக்கு நோக்கி சிறிது நேரம் கண் மூடி நிற்க தேகம் சூரியக் கிரணங்களால் புனிதமடைகிறது. மழை நீரிலும் இந்த ஸ்நானம் செய்யலாம். இது அக்னயக ஸ்நானம். உடலை மண்ணைக் கொண்டு தூய்மை செய்து கொள்வது மலஸ்நானம் எனப்படும். அதன் பின்னர் நீராடல் விதிஸ்நானம் கோதூளி கொண்டு தூய்மை பெறுவது மகேந்திர ஸ்நானம் ஆகும். கலசமந்திரம் (அக்கினி (அ) வருணன்) எனப்படும் ஒன்பது மந்திரங்களை உச்சரித்து தலையில் நீர் ஊற்றி கொள்ளும் ஸ்நானம் மந்திர ஸ்நானம் எனப்படும். விஷ்ணுவுக்குப் புனிதமான மந்திரத்தைக் கூறி, தேவைப்படும் போதெல்லாம் மனத்தில் தியானித்தல் மனோஸ்நானம். மூன்று காலங்களிலும் சந்தியை வழிபட வேண்டும். பரம சந்தியை எனப்படும் சந்தியா தேவியை ஞானிகள் இரவில் தம் இதயத்தில் இருந்து தியானிப்பர். வலது கை ஆள்காட்டி விரல் நுனியில் பிதுருக்கள் இடம், சுண்டு விரலின் நுனிப்பகுதி பிரஜாபதியின் இடம், கட்டை விரல் நுனிப்பகுதி பிரமன் இடம். இடது உள்ளங்கை அக்கினிக்குப் புனித இடம். வலது உள்ளங்கை சோமனுக்கானது. விரல்கள் சேரும் இடங்கள் மகரிஷிகளுக்குப் புனித இடம். நீராடும் போது அகமர்ஷணம் என்னும் கர்மா செய்வதால் நம் தேகம் பாவம் நீங்கி புனிதமடைகிறது. மேலும், அக்கினிதேவன் வசிஷ்டருக்கு சிவன், சூரியன், கபிலைப் பசு ஆராதனை விவரம் கூறினார். ஆச்சாரியார் சீடனுக்கு தீøக்ஷ அளிக்கும் முறையையும் கூறினார். அதற்கு முன் அகார மந்திரத்தால் சாந்தி ஓமம் செய்ய வேண்டும். 14. சப்த த்வீபங்கள் (தீவுகள்) ஏழு த்வீபங்களும் ஏழு கடல்களால் சூழப்பட்டு உள்ளன. ஜம்புத்வீபம் உப்புக் கடலாலும், சால்மலி மதுக்கடலாலும், குசம் நெய் கடலாலும், கிரவுஞ்சம் தயிர்க்கடலாலும், சாகம் பாற்கடலாலும், புஷ்கரம் நன்னீர் கடலாலும் சூழப்பட்டுள்ளன. ஜம்புத்வீபத்தின் அதிபதி அக்னீத்திரன், பிலக்ஷத்தீவின் அதிபதி ? 

கருத்துகள் இல்லை: