வால்மீகி வரலாறு தேவலோகத்தில் வருண பகவான் தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாராயண நாமத்தை சொல்லிக்கொண்டு நாரதர் அங்கு வந்தார். வருண பகவானோ நாரதர் வருவதைக் கவனிக்காமல் குழந்தையுடனே விளையாடிக் கொண்டிருந்தார். நாராயண நாமத்தை கவனிக்காத வருணன் மேல் கோவம் கொண்ட நாரதர் நீ உன் குழந்தையை பிரிவாயாக என்று சாபமிட்டார். நாரதரிடம் தன்னை மன்னிக்கும் படியும் சாப விமோசனம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டான் வருணன். அதற்கு நாரதர் இந்தச் சாபம் ஒரு வரம் இக்குழந்தை பூலோகத்தில் பிறந்து பிற்காலத்தில் விஷ்ணுவின் அவதாரப் புராணத்தை ஒரு இதிகாசமாகப் படைக்கும் என்று வாழ்த்திவிட்டு சென்றார். அக்குழந்தையே பிற்காலத்தில் வால்மீகி என்ற பெயர் பெற்று ராமாயணத்தை படைத்தார். மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாக வருண் பிரசேதாஸ் என்பவர் பிறந்தார். அந்த வருண் பிரசேதாஸிற்கு ரிக்சன் என்கிற ரத்னாகர் பத்தாவது குழந்தையாகப் பிறந்தார். ரத்னாகர் தனது மிகவும் ஏழ்மையான குடும்பத்தைக் காப்பாற்ற வழி தெரியாமல் திருட ஆரம்பித்தான். காட்டு வழியில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்துக் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய ஜென்ம காரணத்தினால் நாரதர் ரத்னாகர் இருந்த காட்டு வழியே வந்தார். அவர் வருவதைப் பார்த்துவிட்டு கத்தியை எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்றான். அவரை அருகில் சென்று பார்ததுமே அவன் மனதில் சிறிது சாந்தம் ஏற்பட்டது. அவரிடம் யார் நீங்கள்? எங்கு வந்தீர்கள்? இருப்பதையெல்லாம் கீழே வைத்துவிட்டு பேசாமல் ஓடிப்போங்கள் என்றான். அதற்கு அவர் என்னிடம் ஒன்றுமே இல்லை நான் நாராயண மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு பகவானை வணங்கிக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் தியானத்திலேயே ஆனந்தமாக இருக்கின்றேன் என்றார். அதற்கு ரத்னாகர் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சாந்தமாக ஆனந்தமாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை என்கின்றீர்கள். நான் நிறைய கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றான். நீ இப்படி சேர்த்து வைத்த பணமெல்லாம் பண மூட்டை இல்லையப்பா இதெல்லாம் பாவ மூட்டை. இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாய். இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சொர்க்கம் நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்து புண்ணிய காரியங்கள் செய்தால் சொர்க்கம் செல்வார்கள். பாவச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில் பலவிதமான தண்டனைகளைப் பெற்று அவதிப் படவேண்டியிருக்கும் என்றார் நாரதர். நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் என்னுடைய பாவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றான் ரத்னாகர். அப்படியானால் நீ அவர்களைப் போய் கேட்டுக் கொண்டு வா என்றார் நாரதர். முனிவரே தப்பித்துப் போக முயல்கிறீரா இதெல்லாம் என்னிடம் முடியாது என்றான். இல்லையப்பா நீ வேண்டுமானால் என்னைக் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டுச் செல். அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் என்றார் நாரதர். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். இந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து நாரத முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.
ரத்னாகர் அவனின் வீட்டுக்கு வந்து தன் அப்பா அம்மா மனைவி மற்றும் குழந்தைகளிடம் நான் நிறைய பாவம் செய்துவிட்டதாக ஒரு முனிவர் சொல்கிறார். அந்த பாவங்களை எல்லாம் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்கிறீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள் நாங்கள் எதற்காக உன் பாவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்? நீ நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியதுதானே? நீ ஏன் பாவ வழியில் சம்பாதிக்கின்றாய்? குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய கடமை. அதற்கு நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது உன்னுடைய தர்மம். அதை விட்டு விட்டு தவறான வழியில் சம்பாதிப்பது உன் தவறு. அதனால் உன்னுடைய பாவத்தை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டனர்.
இதைக் கேட்டவுடன் ரத்னாகருக்கு அகக்கண் திறந்துவிட்டது. திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் ரத்னாகர். ஓடி வந்து நாரதரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண் கலங்கியபடியே நாரதரின் கட்டுகளை அவிழ்த்து விட்டான். சுவாமி நீங்கள் சொன்னபடி என் மனைவி குழந்தைகள் பெற்றோர் என எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள் என்றான். அதற்கு நாரதர் அவர்கள் சொன்னதில் தவறில்லையே? மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல்வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றார் நாரதர். ஆமாம் சுவாமி அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் என்றான். நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் இராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே. இராம நாமத்தை ஜபம் செய்வது எல்லாப் பாவத்தையும் போக்கும் என்றார் நாரதர்.
ரத்னாகருக்கு ராம என்ற சொல் வாயில் நுழையவில்லை. இதனை பார்த்த நாரதர் அங்கிருக்கும் மரத்தை காட்டி இது என்ன மரம் என்று கேட்டார். இது மரா மரம் என்றான். நீ இந்த மரத்தின் பெயரான மரா என்பதைச் சொல்லிக் கொண்டிரு அது போதும் என்றார். நீங்கள் சொன்னபடியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான். நாரதரும் அவனை ஆசீர்வசித்து விட்டுத் தன் வழியே சென்றார். அவர் போனபின் ரத்னாகர் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். நாளடைவில் அது ராம ராம ராம என்று மறுவி ஒலித்தது. ரத்னாகர் இரவு பகலாய் பசி தாகத்தை மறந்து ராம ராம ராம என்று ஜபம் செய்து கொண்டே சமாதி எனும் நிஷ்டையில் இருந்தான். அசையாமல் அவன் இருந்ததால் நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.
சில காலம் கழித்து சப்தரிஷிகள் அந்தப் பக்கம் வந்தார்கள். அங்கே ராம நாம ஜபம் ஒரு புற்றுக்குள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு அதற்குள் இருப்பவரை தங்களின் ஞானக்கண்ணால் பார்த்து வால்மீகி என்று அழைத்தனர். சமஸ்கிருதத்தில் வால்மீகி என்றால் புற்றுக்குள்ளிருப்பவன் என்று பெயர். அவர்களின் அழைப்பினால் தவம் கலைந்து புற்றிலிருந்து ரத்னாகர் வால்மீகியாக வெளியே வந்தார். இடைவிடாத ராம நாம ஜெபத்தின் பயனால் நீங்கள் ஒரு மகரிஷியாகிவிட்டீர்கள். இன்றிலிருந்து உமக்கு வால்மீகி என்று பெயரே நிலைக்கும். ராம நாமத்தின் மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும் என்று கூறி ஆசீர்வதித்தனர். அவரும் ரிஷிகளை நமஸ்கரித்து விட்டு பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு ஒரு ஆசிரமத்தை தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டார். அவரிடம் சிஷ்யர்கள் எல்லாம் வந்து சேர்கிறார்கள். வால்மீகி தன்னுடைய தவத்தினால் ராமனின் வரலாற்றை தனது ஞானதிருஷ்டியில் கண்டார். இப்படிப்பட்ட குணாதிசயங்களோடு ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருப்பானா என்று அவருக்கு சந்தேகம் வந்தது.
ஒரு
நாள் நாரதர் அவரது ஆசிரமத்திற்கு வருகிறார். அவரை வரவேற்ற வால்மீகி
தன்னுடைய ஞான திருஷ்டியில் கண்ட மனிதனை பற்றி நாரதரிடம் கேட்கின்றார். இந்த
உலகில் சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல
குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா என்று நாரதரிடம் கேட்டார். அதற்கு
நாரதர் உண்டு அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத மன்னனின் குமாரர்
ஸ்ரீராமர் என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராம சரித்திரத்தை சுருக்கமாக
நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப இராமாயணம் எனப்படும். இதுவே
வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஆகும்.
ஒரு
நாள் வால்மீகி முனிவர் தமஸா நதியில் குளிக்க செல்கிறார். அப்போது அங்கு
இரண்டு அன்றில் பறவைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டு இருக்கின்றன.
அப்போது வேடன் ஒருவன் அம்பால் ஒரு அன்றில் பறவையை அடித்துவிடுகிறான். ஒரு
பறவை இறந்தவுடன் இன்னொரு பறவை தன்னுடைய ஜோடி பறவை இறந்த துக்கத்தில்
ஓலமிட்டது. பறவையின் துக்கத்தை கண்ட வால்மீகி தன் ஞான திருஷ்டியில் கண்ட
ராமனும் இப்படி தானே சீதையை பிரிந்து துக்கப்பட்டிருப்பான் என்று எண்ணி
திரேதாயுக விஷ்ணுவின் அவதாரமான ராமாயண இதிகாசத்தை 24000 சுலோகங்கள்
கொண்டதாக முழுமையாக இயற்றினார். யோக வாசிஷ்டம், அத்புத ராமாயணம்,
கங்காஷ்டகம் ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டவையே.
வால்மீகி
இயற்றிய ராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி உலகில் பல்வேறு
மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய ராமாயணமும்
அதன் பாத்திரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்
புவியியல் அமைவுகள் விவரிக்கப் பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள் அரசுகள்
போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே
ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என்று
தெரிந்து கொள்ளலாம். நான்கு வரிகள் கொண்ட சுலோகங்களால் எழுதப்பட்டுள்ள
வால்மீகியின் ராமாயணத்திலிருந்து ஒரு வரியைக் கூட மாற்ற முடியாது அல்லது
புதிதாக இடைச் செருகல் என்று சேர்க்க முடியாது என்பது மகாகவி பாரதியாரின்
வாக்கு.
பல
முனிவர்கள் வால்மீகி என்கிற இதே பெயரில் இருந்து சித்தி
அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது.
அவர் எழுதிய பாடல்கள் மூலம் அவர் பிற்காலத்தவர் என்று தெரிந்து கொள்ளலாம்.
திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம்
இப்படிப் பல கோவில்களில் வால்மீகநாதர் சந்நிதியும் வேறுபாடான திரு
உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வால்மீகி என்ற பெயரில் பல முனிவர்கள்
இருந்திருக்கின்றார்கள் என்பதற்குச் சான்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக