செவ்வாய், 21 ஜனவரி, 2014

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை...

ஒரு வீட்டு வாசலில் ஒரு மரம் இருந்தது. அதன் கீழ் ஒரு துறவி அமர்ந்திருந்தார். அந்த வீட்டில் ஒரு வேசி இருந்தாள். அவருக்கு வேசியின் மேல் மிகவும் அக்கறை. "ஐயோ, இவள் இந்தத் தீய தொழிலைச் செய்து இப்படி வீணாகப் போகிறாளே" என்று. ஒரு ஆசாமி உள்ளே போனதும் ஒரு சிறிய கல்லை எடுத்துப் போடுவார். அப்படிப் போட்டதில் மலைபோலக் குவிந்துவிட்டது.

வேசிக்கோ துறவியைப் பார்த்துப் பொறாமை. "ஆஹா, இவர் எப்போதும் தெய்வத்தைநினைத்துத் தியானத்திலேயே இருக்கிறாரே, நாம் இந்தப் பாவத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கிறோமே" என்று எப்போதும் நினைத்து வருந்தியபடி இருந்தாள்.

ஒரு நாள் அவள் இறந்துபோனாள். பார்த்தால் தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் அவளை அழைத்துப் போவது துறவிக்குத் தெரிந்தது.

துறவிக்கு ஒரே ஆச்சரியம்...

சிறிது நாட்களில் துறவி இறந்தார். அவரை யம தூதர்கள் வந்து நரகத்துக்கு அழைத்துப் போனார்கள். துறவிக்கு வந்ததே கோபம். "என்ன இது அநியாயம். நான் எப்போதும் இறை நினைவாகவே இருந்தேன். எனக்கு நரகம், அதோ கல்குவியல் அளவுக்கு ஆண்களோடு சுகித்த வேசிக்குப் புஷ்பக விமானமா?" என்றார்.

அவர்கள் கூறினர் "ஐயா! அவள் இறைவனைத் தியானம் செய்யமுடியவில்லையேஎன்று இரவும் பகலும் எண்ணியபடியே தன் தொழிலைச் செய்தாள். நீங்களோ இந்தக் கல்குவியல் அளவுக்கு அவளது பாவத்தையே நினைத்துப் பாவம் சம்பாதித்துக் கொண்டீர்கள்" என்று.

கருத்துகள் இல்லை: