செவ்வாய், 21 ஜனவரி, 2014

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

மூலவர்:வரதராஜப்பெருமாள்
அம்மன்/தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
பழமை:500 வருடங்களுக்கு முன்
ஊர்:கச்சிராப்பாளையம்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா:வைகாசி பிரமோற்சவம், சித்திரை மாதம் சுவாதியில் நடைபெறும் தேர்த்திருவிழா

தல சிறப்பு:பொதுவாக பல கோயில்களில் பெருமாளின் வலதுகரம் மேலுயர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல் இருக்கும். ஆனால், இங்கு பெருமாள் மாறுபட்டு, தனது வலது திருக்கரத்தை பூமியை நோக்கி நீட்டிய வண்ணம், திருப்பதியைப் போல் அருள்பாலிப்பது தனி சிறப்பு.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் கச்சிராயப்பாளையம் விழுப்புரம் மாவட்டம்.

பொது தகவல்:இக்கோயிலை சுற்றி திசைக்கு ஒன்றாக விநாயகர் கோயில், மருதையான் கோயில், நாகபுரத்து மாரியம்மன், சப்தகன்னிமார், பெரிய நாயகி அம்மன், அங்காளம்மன், பாலமுருகன், சங்கிலி சாமியார், தியாகப்பாடி அம்மன், கங்கையம்மன் கோயில்கள் உள்ளன.

நேர்த்திக்கடன்:பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள பெருமாளை வழிபடுகின்றனர்.பெருமாளுக்கும், தாயார்களுக்கும் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:இம்மலையில் யானைக்குகை என்னும் ஒரு சுரங்கக் குன்றும் உள்ளது. யானை ஒன்றைப் பின்னாலிருந்து பார்ப்பது போன்ற அமைப்பில் உள்ளது. இச்சுரங்கத்தின் தலைப்பகுதி சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. காரணம் கச்சிராய மன்னனின் எல்லையில் நுழையும் இடம் தலைவாசல் என்று அழைக்கப்படுவதால், இந்த சுரங்கப்பாதையும் அதுவரை நீண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலிற்கு ராஜகோபுரம் இல்லை. முன்பகுதியில் கருட ஸ்தம்பம் மிக உயரமாக உருளை வடிவ தூணாக நிற்கிறது.

தல வரலாறு:கி.பி. 15ம் நூற்றாண்டில் கச்சியராயன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்த பகுதி, அவன் பெயராலேயே கச்சிராய பாளையம் என்று அழைக்கப்பெற்று, தற்போது கச்சிராப்பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் மையப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள அழகிய மலைக்குன்றின் மேல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தென்பகுதியை ஒட்டி கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கோமுகி என்கிற புண்ணிய நதி ஓடுவது சிறப்பானது. அருள்ஞான சித்தரும், தில்லை அருள் ஜோதிலிங்க சுவாமிகளும் வாழ்ந்து அருளாசி புரிந்த ஞானமலைக் குன்று இதுவாகும். வள்ளலார் வாழ்ந்த புண்ணிய பூமியான வடலூரில் உள்ள சத்திய ஞானசபையில் ஆசிரமம் அமைத்து சமாதி நிலையை அடைந்தார் ஜோதிலிங்க சுவாமிகள் இப்போதும் அங்கே கச்சிராயப்பாளையம் சுவாமிகள் என்றே அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஆய்வு செய்தவர்கள் முற்காலத்தில் இப்பகுதியில் அரசாட்சி செய்த முஷ்குந்த சக்கரவர்த்தியால் இக்கோயில் கட்டப்பட்டு பின்னர் நாயக்க மன்னர்களாலும் அதன்பிறகு கச்சிராய மன்னனாலும் புனரமைக்கப்பட்டு, நித்திய கால பூஜைக்கு பல ஏக்கர் நிலங்களும், வெகுமதிப்புள்ள பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வெட்டுச் சான்றுகள் மூலம் கூறுகின்றனர்.

அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக பல கோயில்களில் பெருமாளின் வலதுகரம் மேலுயர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல் இருக்கும். ஆனால், இங்கு பெருமாள் மாறுபட்டு, தனது வலது திருக்கரத்தை பூமியை நோக்கி நீட்டிய வண்ணம், திருப்பதியைப்போல் அருள்பாலிப்பது தனி சிறப்பு.

கருத்துகள் இல்லை: