செவ்வாய், 21 ஜனவரி, 2014

சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்

அவனிபாஜன பல்லவேஸ்வரம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சீயமங்கலம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து செல்ல சேத்துப்பட்டு வழியாக தேசூர் அடைந்தவுடன் 2 கி.மீ. தொலைவில் சீயமங்கலம். விழுப்புரத்திலிருந்து செல்ல விரும்பினால், திண்டிவனம் சென்று காஞ்சிபுரம் சாலையில் 20 கி.மீ. பயணித்தால் தெள்ளாரினை அடையலாம். அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் சீயமங்கலம் நம்மை வரவேற்கும்.

எந்த தடத்தில் சென்றாலும் வழிநெடுக வறண்ட பூமி தான் என்றாலும் செல்லும் வழியெங்கும் நிலக்கடலை சாகுபடியில் செழித்த வயல்வெளிகளின் மரகத வண்ணம் மனதினை அள்ளும். அதையும் தாண்டி மரங்களற்ற பொட்டல்வெளி, வான்வெளியினையும், மலைமுகட்டினையும் தடையின்றிக் காணச் செய்து நமது பயணத்தினை இனிமையாக்கும்.

சீயமங்கலம், அவனிபாஜன குடைவரையை ஒன்றுமே தெரியாமல் 03.6.2010 அன்று ஒருமுறையும், கொஞ்சம் தெரிந்த பின் 20.6.2010 அன்று மறுமுறையும் சென்று வந்தேன். இவ்விரண்டு முறையும் நிகான் D90 மாடல் காமிராவை பயன்படுதினேன். குடைவரையின் குறை வெளிச்சத்தில் எடுத்த படங்கள் மணிரத்தினம் படங்கள் போல மங்கலாகத் தெரிந்ததால், கெனான் 7D காமிராவுக்கு மாறினேன். எனவே, 16.10.2010 அன்று 7D. கெனான் 5D Mark IIIக்கு மிகக்குறைந்த வெளிச்சமே போதும் என்று கேள்விப்பட்டதால் 19.9.2013 அன்று கடைசி தடவையாக 5D Mark III காமிராவைப் பயன்படுத்தினேன். (செயற்கை வெளிச்சத்தை (Flashgun) தவிர்ப்பது எனது முடிவு). ஒவ்வொரு முறையும் சென்று வரும் போது எதையோ பதிவு செய்யத் தவறி விட்டோமென்ற குற்ற உணர்வு கூட எனது நான்கு முறை படையெடுப்பிற்குக் காரணமாயிருக்கலாமோ என்னவோ!

சீயமங்கலம் குடைவரையை பார்க்க வேண்டும் என்று முதல் முறை திடீரென்றுதான் புறப்பட்டேன். பயணத்தை முன்னதாக திட்டமிடுவதென்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் எல்லா பயணங்களும் திடீர் பயணங்கள் தான். புத்தகங்களும் கேமராவும் எந்த நேரமும் என்னோடு பயணிக்கும். திட்டமிடக் கூடிய விஷயங்கள், குடவரையின் திசை, சூரிய வெளிச்சத்தின் திசை என்ன? கேமராவுடன் நான் எப்படி செயல்பட வேண்டும்....? என்பவை மட்டுமே. குடைவரை அல்லது கோவில் எந்த திசை நோக்கி அமைந்திருக்கிறதோ அதற்கேற்ப எனது பயணம் காலையிலா அல்லது மாலையிலா என்று மட்டும் முடிவு செய்வது வழக்கம்.

சீயமங்கலம் சிற்றூரின் அமைவிடத்தை தெரிவித்து அக்குடைவரையைக் காண உதவி செய்தவர் அவ்வூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் திரு. அன்பழகன் ஆவார். தனது ஊரில் சரித்திரப் பின்னணியுடைய கோவில் ஒன்று இருப்பதையும், அதைக் காண நான் வந்திருப்பதையும் அறிந்து மிகவும் வியப்பிலாழ்ந்தார். கோவில் அர்ச்சகரை வரவழைத்து கோவிலைத் திறக்க ஏற்பாடு செய்து ஒவ்வொரு முறையும் சலிப்பின்றி அத்தனை உதவிகளையும் செய்து தந்தார். டாக்டர் அவர்கள் கையொப்பமிட்டுத் தந்த "மகேந்திரர் குடைவரைகள்" நூலை வாங்கிப் படித்து வந்தார்.

குடைவரை என்றால் என்னவென்றே தெரியாமல் முதன் முதலில் கோவில் வளாகத்தினுள் நுழைந்தேன். காலடியில் பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் புல்தரை, எதிரே நீலவான பின்னணியில் மரகத உடனுறை தூணாண்டார் திருக்கோவில் வளாகம். நான்கு நிலை கோபுரம் கடந்து சென்றால் கண்முன்னே விரிவது அவனிபாஜன பல்லவேஸ்வர வளாகம்!!

சற்றேறக்குறைய ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதோ நான் நின்று கொண்டிருக்கும் இடம் எத்தனை சீரும் சிறப்புடன் விளங்கியிருக்கும்? சமண, சாக்கிய சமயங்களின் பிடியிலிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சி மனதில் விரவ, தங்களூரில் எடுப்பிக்கப்பட்டுள்ள புதிய சிவாலயம் நோக்கிச் செல்லும் ஆடவர்கள்; கலகலவென சிரிப்பொலி கட்டியம் கூற, மேனியில் பலவண்ண பட்டாடை மின்ன, வகிடெடுத்து இறுக்கிப் பின்னிய நெடுங்கூந்தலில் செருகி வைத்த மலர்களின் மணம் மெல்லிய காற்றில் மிதந்து வர, விடையேறும் பாகர் பூசனைக்கு தங்கத்தட்டில் தாமரை மலர்களையும், தமது நெஞ்சில் நம்பியின் நினைவையும் சுமந்து செல்லும் அழகு மங்கையர், தங்கள் தாய்மார்களின் கரம் பற்றி நடை பயிலும் சிறார்கள் என எத்தனை வண்ணமயமாய் இவ்வளாகம் ஜொலித்திருக்கும்!!

அரண்மனை மாந்தரின் குதிரை பூட்டிய இரதங்களின் ஒலியும், விரைந்து செல்லும் குதிரைகளின் குளம்போசையும் அடிக்கடி பரபரப்பினை தெரிவிக்கும். பல்லவப் பேரரசர் மகேந்திரரும் தமது வெள்ளைப் புரவியில் கம்பீரமாய் ஆரோகணித்து வந்து இறங்கியிருப்பார் இல்லையா? அவருடன் நரசிம்ம பல்லவரும் உடன் வந்து தானிருப்பாரில்லையா? அந்நேரம் மக்கள் விண்ணை முட்டும்படி எழுப்பிய வாழ்த்தொலி இதோ என் காதில் ஒலிக்கிறது. நான் நிற்கும் இந்த பூமி மட்டுமல்ல... இந்த வளாகம் முழுக்க அப்பேரறிவாளரின் பாதம் பட்டிருக்கும் இல்லையா?

சரி... மீண்டும் தற்காலத்திற்கே திரும்பி வருவோம்! இவ்வளாகம், வடமேற்கில் நுழைவாயில் கோபுரத்தையொட்டி ஒரு மண்டபம், வடபுறம் மேற்குப் பார்வையாய் இரண்டு சிறிய கோவில்கள், தென்புறம் பெரிய பாறையின் மீது அமைந்த சிறிய கோவில், மையப்பகுதியில் பலிமேடை, கொடித்தளம், மற்றும் நந்தி மண்டபத்தினை முன்னதாகக் கொண்டு மேற்குப் பார்வையாய் அவனிபாஜன பல்லவேஸ்வரம். தென்புறப் பாறை மீதேறினால் மேற்கில் ஒரு பேரேரி அமைந்திருப்பதைக் கண்டேன்.

வெளிமண்டபத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றால், அரை இருளினூடே திருநிலை அழகியின் மண்டபம். அதற்கு அடுத்து அடவி மண்டபம். குகைக்கோவில் என்றார்கள், இருள் இருக்கும். சரி... குகையைக் காணோமே என்ற வினாவுடன் வடபுறத்துப் படியேறி முக மண்டபத்தை அடைந்த பின்னர் தான் நான் ஒரு குகைக்கோவிலின் முன் நின்று கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. தனியே நிற்கும் குன்றொன்றின் மேற்குப்புறச் சரிவின் கீழ்ப்பகுதியினைக் குடைவித்து அழகியதொரு கோவில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. குகைக்கோவிலின் முன்புறத்தில் மூன்று பக்கங்களிலும் மண்டபம் ஒன்று எழுப்பியுள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன்.

கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டம் என மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் குடைவரை முகப்பில் பெரிய அளவில் இரண்டு முழுத்தூண்களும், பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு அரைத்தூண்களின் இரு மருங்கிலும் உள்ள கோட்டங்களில் வீரர்களின் அழகிய சிற்பம் காணப்படுகிறது.

அர்த்தமண்டபத்திலிருந்து கருவறையை அடைய பக்கவாட்டு அணைவுடன் சிறிய படிக்கட்டுகள். கருவறையின் இரு புறத்திலும் வாயிற்காவலர்கள் நின்றிருக்க கருவறையில் லிங்கத் திருமேனி. வாயிற்காவலர்களின் உடல்மொழி அதிசயமானது. அவர்களின் முகபாவங்களில் உயிர் மின்னியதைக் காண முடிந்தது. மகேந்திரர் உண்மையிலேயே அனுபவித்துதான் இக்குடவரையை அகழ்ந்திருக்க வேண்டும்.

நெடுங்காலமாக என்னுள் தங்கியிருந்த ஒரு கேள்வி இது. ஆதியும் அந்தமும் இல்லாத சிவத்தின் ஆடலுக்கு ஆனந்த தாண்டவம் (நடராஜ வடிவம்) என்றழைக்கப்படும் அந்த அழகிய வடிவத்தினை முதன் முதலில் எவர் அளித்திருப்பார்கள்?

இதற்குச் சரியான விடை அவனிபாஜனத்தில் கிடைத்தது. முகமண்டபத்தின் தென்புறத்து அரைத்தூணில் உள்ள சிறிய கோட்டத்தில் களி நடனம் புரியும் சிவபெருமானின் அற்புதமான சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காணப்படும் அனைத்து ஆனந்த தாண்டவ வடிவங்களுக்கும் இந்தச் சிற்பம்தான் முன்னோடி. இங்குதான் அது சிற்ப வடிவில் முதன்முதலில் பதிவாகியிருக்கிறது என்று டாக்டர் கலைக்கோவன் மூலம் அறிந்து கொண்ட போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மற்றொரு அரைத்தூணில் சிறிய கோட்டத்தில் இருக்கும் நந்தியணுக்கரின் (ரிஷபாந்திகர்) சிற்பமும் மிக அழகானதே. இதில் இறைவன் மற்றும் தேவியின் உடல்மொழி அலாதியானது. மஹேந்திர பல்லவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் விருதுப் பெயர்கள் அனைத்துமே அர்த்தமுள்ளவைதான்!

ஊருக்கு வெளியே நிசப்தமாய் கோவில் வளாகம். மேற்குப் புறத்தில் அழகிய குன்றுகள். கோயிலின் அருகாமையில் பரந்து விரியும் ஏரி. இத்தகைய இனிமையான இடத்தினைத் தனது குடைவரைக்காகத் தேர்வு செய்த மாமன்னர் மகேந்திரர் சிறந்த வடிவமைப்பு, திட்டமிடல், திட்டமிட்டவற்றைச் செயல்படுத்தும் மனோதிடம், கடுமையான உழைப்பு ஆகிய சிறப்பியல்களால் காலம் கடந்து நிற்கின்றார். அவரது காலத்தில் வளர்ந்து கொண்டு வந்த பல்லவப் பேரரசினை பகைவரிடமிருந்து காப்பதோடன்றி விரிவாக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இத்தகைய கலைப்பணிகள் எப்படி சாத்தியமானது என்னும் பெருவியப்போடு கோயிலை விட்டு வெளி வந்தேன்.

திருக்கோயில் வெளிப்புறம்:திரும்பி வருகையில் போதிய வெளிச்சமின்றி மோசமாகப் பராமரிக்கப்பட்டு வரும் அழுக்கடைந்த ஆலய வளாகம் மனதில் ஒரு நெருடலாய் நிழலாடி மனது வலித்தது. முடிந்தவரை பராமரிப்புப் பணிகளைச் செய்து வரும் அர்ச்சகரும், இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத்துறையும், அரசும் மட்டிலும் என்ன செய்திட இயலும்? தமிழர் ஒரு காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை அவர்தம் கலாச்சாரம் பேசும் சிற்பக் களஞ்சியங்களைக் கொண்டு விளங்கும் கோயில் வளாகங்களை விளைந்த நெல்லை உலர வைக்கும் களமாகவும், சேமிப்புக் கிடங்குகளாகவும், ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும் மாற்றிந் தானம் செய்து விட்டு,

மெல்லப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் – பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்ல....

மாக்கள் பின்னே மக்கள் செல்லத் துவங்கி விட்ட நிலை பெரும் கவலையளிக்கிறது. எங்கெங்கோ சுற்றியலைவதை விட்டுவிட்டுப் போற்றிப் புரக்கப்பட வேண்டிய சரித்திரப் பின்னணி பெற்ற கோயில்களை நோக்கி மக்கள் தங்களது உள்முகப் பயணத்தினை துவங்கினால் மட்டுமே இந்த அவல நிலையினை மாறும்.

மாறவேண்டும்.
(6 photos)

கருத்துகள் இல்லை: