புதன், 23 செப்டம்பர், 2020

ராமானுஜர் பகுதி எட்டு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு எட்டு

 இளையாழ்வானின் திருமண வாழ்க்கை

இளையாழ்வாருக்கு தஞ்சம்மாள் என்ற பெண்மணியுடன் அவரது 16வது வயதில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற ஒரு மாதத்திலேயே அவரது தந்தை அசூரிகேசவாச்சாரியார் இறந்துவிட்டார். இதனால், அவரது அன்னை காந்திமதி கவலையில் மூழ்கினார்.

🌻🌻 யாத்திரை புறப்படுதல்

இளையாழ்வானைக் கொல்ல வேண்டும் என்று அத்வைத ஆச்சாரியார் யாதவப் பிரகாசர் சதித்திட்டம் தீட்டியிருந்தார். அதை தன் சிஷ்யர்களுடன் கலந்து ஆலோசித்தார். வட நாட்டிற்கு கங்கை யாத்திரை போகலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

யாதவப் பிரகாசர் இளையாழ்வானை யாத்திரைக்கு வருமாறு அழைக்க இளையாழ்வானும் தன் அன்னையிடம் யாத்திரைக்குச் செல்ல அனுமதி வாங்கினார். இளையாழ்வானின் அன்னையோ "தந்தையை இழந்துவிட்டோம் என்று கலங்கிக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் நீயும் என்னவிட்டு பிரிந்து செல்கிறாயா?" என்று கவலையுடன் கூறினார். இளையாழ்வான் தன் அன்னையை சமாதானப் படுத்திவிட்டு வடநாட்டிற்கு யாதவப் பிரகாசருடன் குழுவாக கங்கை யாத்திரை சென்றார். யாத்திரைக்கு இளையாழ்வானின் மருமகனான கோவிந்தனும் சென்றார்.

🌻🌻 கோவிந்தன் இளையாழ்வான் சம்பாஷணை

கங்கை யாத்திரை செல்லும் வழியில், யாதவப் பிரகாசரின் சில சீடர்கள் ஒன்றாக கூடி கூடி இளையாழ்வானை கங்கையில் தள்ளி விட்டு கொல்வது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இதனைக் கோவிந்தன் கேட்டுவிட்டார். உடனே, பதற்றத்துடன் இளையாழ்வானிடம் ஓடிச்சென்று "உங்களை இங்கே கங்கையில் தள்ளி விட்டுக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள். நீங்கள் உடனே வேறு எங்காவது புறப்பட்டுச் செல்லுங்கள். வேறு எங்கேயாவது சென்று உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என்று கூற, இளையாழ்வானும் புறப்படுகிறார்.

இளையாழ்வான் காடு, மலைகள் என எல்லாவற்றையும் கடந்து, பாதை எங்கே செல்கிறது என்று கூட தெரியாமல் நடந்தார். இரவுப் பொழுது வந்தது. இளையாழ்வானுக்கு வழி தெரியவில்லை.

அப்போது இளையாழ்வான் ஒரு வேடுவன், வேடுவச்சியைக் கண்டார். இளையாழ்வான் கண்டவர்கள் யார்? என்பதை நாளைய பதிவில் அறியலாம்.

நாளை மகாளய பட்சம் அமாவாசை 17.09.2020

இளையாழ்வார் என்றிருந்த கற்பகத்தை அற்புதன் செம்மை இராமானுசனாக ஆக்கி நாரயணனை காட்டிய வேதங்கள் களிப்புற செய்த நன்நாள் இன்று

மதுராந்தகத்திலே அன்றொருநாள் கிழக்கில் உதிக்கும் திவாகரனைவிடவும் மேலும் ஒளிபொருந்தியதாய் ஒரு ராமாநுஜ திவாகரன் அவதரித்த நன்நாள்
தெற்கே திருவரங்கத்திலிருந்து வந்த குணபூரணரான ஸ்ரீ பெரியநம்பிகளும் வடக்கே காஞ்சியிருந்து வந்த இளையாழ்வாரும் சக்ரவர்த்தி திருமகன் திருமுற்றத்திலே சேர
மந்திரம்கொண்டு மாமறை வேள்வி காத்தவன் திருமுன்பே வேள்வி வளர்த்து
பண்டைமாவலிதன் பெருவேள்வியில் அண்டமும் நிலமும் அடியொன்றினால் கொண்டவன் எம்பெருமான்.
இராமாநுஜன் என்னும் திருப்பெயர்பெற்று உடையவராய் இருநிலத்திற்கும் உடையவராய் திகழும்  எம்மிராமானுசன் உதித்த நன்நாள் இன்று..

ஆண்டுகள் நாள்திங்களாய் காத்துக்கிடந்தார்  இளையாழ்வார் தன்குருவை அடைய, அதேபோல இளையாழ்வாருக்கு உபதேசிக்க பலகாலம் காத்துக்கிந்த பெரியநம்பிகளும் ஆவணி மாத சுக்லபக்ஷத்திலே மதுராந்தகத்தில் சந்திக்க அங்கேயே இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் வைபவம் நடைபெற அடியேற்கு இன்று தித்திக்குமே என்னும்படியான நன்நாள் இன்று..

கே.13:−  இளையாழ்வார் என்னும் இராமானுஜரின் உடன் பிறந்தோர் எத்தனைப் பேர்? அவர்களின் பெயர்கள் என்ன?.

விடை:− இராமானுஜருக்கு இரண்டு இளைய சகோதரிகள் இருந்தார்கள்.
அவர்களது பெயர் பூமிநாச்சியார், கமலாம்பாள் என்பதாகும்.

கே.14:− இராமானுஜரின் சிற்றன்னையாகிய பெரிய பிராட்டியின் முதல் குழந்தைக்குப் பெயர் சூட்டியது யார்? என்ன பெயர் சூட்டினார்?

விடை:− பெரியபிராட்டியின் முதல் குழந்தைக்கு, "கோவிந்தன்" என்ற திருநாமத்தை,  தாய்மாமன் ஆகிய பெரிய திருமலை நம்பிகளே சூட்டியருளினார்.

கே.15:− குழந்தைக்கு அந்தப் பெயரிடக் காரணம் என்ன?

விடை:− சத் ஆத்ம குணங்களை உடைய அக்குழந்தை, சர்வ வித்தைகளிலும் தேர்ந்தவனாய், வைதிக பட்சத்தில் நிலை நிற்பான் என்கிற தீர்க்க த்ருஷ்டியால், இப்பெயர் இடப்பட்டது.

கே.16:− குழந்தை "கோவிந்தன்" யாருடைய அம்சம்? அவர் எப்போது அவதரித்தார்?

விடை:− குழந்தை "கோவிந்தன்" கருடனின் அம்சமாகும்.
அவர் இராமானுஜர் அவதரித்து எட்டு,ஆண்டுகளுக்குப் பின்னர், கலியுகம் 4127,  குரோதன ஆண்டு (1025ம் ஆண்டு), தைத்திங்கள், பௌர்ணமி திதி, திங்கட்கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.

கே.17:− இராமானுஜரின் சிற்றன்னையின் இரண்டாவது குழந்தையின் பெயர் என்ன? அவரது திருநட்சத்திரம் என்ன?

விடை:− இரண்டாவது குழந்தையின் பெயர் சிறிய கோவிந்தன் என்னும் சிறிய கோவிந்தப் பெருமாள் ஆகும்.
அவர் மாசிமாதம் அச்வினி நட்சத்திரத்தில் அவதரித்தார்

கே.18:− இளையாழ்வார் இராமானுஜர் இளமையில் யாரிடம் வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றார்? எந்த வயது வரை?

விடை:− இராமானுஜர், தமது தந்தை கேசவ சோமாயாஜியிடம், தமது பதினைந்தாவது வயது வரையிலும் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்தார்.

கே.19:− இராமானுஜரின் கைங்கர்யங்களால் ப்ரீதி அடைந்த ஶ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள், இராமானுஜருக்கு இட்ட திருநாமம் என்ன?

விடை:−  "ஶ்ரீபூதபுரீசர்"

கே.20:− இராமானுஜரின் தங்கைகள் யாருக்கு வாழ்க்கைப் பட்டனர்?

விடை:− முதல் தங்கை பூமிநாச்சியார், புருஷமங்கலம் என்று கொண்டாடப்படுகின்ற மதுரமங்கலம் வாதூல கோத்ரம் அனந்த தீட்சிதருக்கும்,
இரண்டாவது தங்கை கமலாம்பாள், திருக்கச்சி நடாதூர் அக்ரஹாரம் ஶ்ரீவத்ஸ கோத்ரம், குருகைக் காவலப்பரின் திருக்குமாரர் மஹாதயாதீசருக்கும் வாழ்க்கைப்பட்டனர்.

கே.21:− இளையாழ்வார் இராமானுஜருக்கு எந்த வயதில் திருமணமானது?

விடை:− இராமானுஜருக்கு, அவரது 16வது வயதில், தஞ்சாம்பாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தேறியது.

கே.22:− இராமானுஜரின் திருத்தகப்பனார் எப்போது திருநாடு அலங்கரித்தார்? (பரமபதித்தார்?)

விடை:− இராமானுஜருக்குத் திருமணமான மறுமாதமே, அவரது திருத்தகப்பனார் பரமபதித்தார்.

கே.23:− திருத்தகப்பனாரின் மறைவுக்குப் பிறகு, இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றிய இரு நம்பிகள் யார்?

விடை:− பெரிய திருமலை நம்பிகளும், திருக்கச்சி நம்பிகளும் இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றினர்.

கே.24:− தந்தை மறைந்த சோகத்திலிருந்து விடுபட, இராமானுஜரும், அவரது தாயாரும் செய்தது என்ன?

விடை:− ஶ்ரீபெரும்புதூரை விட்டு, திருக்கச்சி என்னும் காஞ்சீபுரம் வந்து குடியேறினார்கள்.

கே.25:− இராமானுஜர் யாரிடம் தமது வேதாந்தக் கல்வியைத் தொடர்ந்தார்?

விடை:− "வேத விருட்சம்"  "வேத சாகரம்" என்றெல்லாம் தொண்டை மண்டலத்திலும், அண்டை மண்டலங்களிலும் புகழ் பெற்றவரான, காஞ்சிக்கு மேற்கே சுமார்
9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருப்புட்குழியின் "யாதவப்ரகாசர்" என்னும் அத்வைத வேதாந்தியிடம், தமது கல்வியை இராமானுஜர் தொடர்ந்தார்.

கே.26:− இராமானுஜர் கூடவே தங்கியிருந்து, உடன்சென்று, யாதவப்ரகாசரிடம், வேதாந்தக் கல்வியைப் பயின்றவர் யார்?.

விடை:− இராமானுஜரின் சிற்றன்னையின் முதல் புதல்வரான கோவிந்தன்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்னும் அனுபவிப்போம்.

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


கருத்துகள் இல்லை: