புதன், 23 செப்டம்பர், 2020

ராமானுஜர் பகுதி மூன்று

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு மூன்று




இராமானுஜர் என்பவர் கடலைப் போன்றவர். அந்த கடலின் முழு சரித்திரத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அப்படி முயன்றால் மிக்க மகிழ்ச்சி. கடலுக்குள் போனால் நீந்தி கரை சேர முடியாது. ஆனால், அந்த கடலையும், கடல் அலைகளையும் நாம் ரசிக்கலாம் அல்லவா?! அந்த கருணைக் கடலின் அவதார நோக்கத்தையும், அவர் செய்த கைங்கர்யங்கள் பற்றியும், கடல் அலைகளைப் போல் அடியேனுக்குத் தெரிந்தவரை பதிவிடுகிறேன். நீங்களும் அந்த பெருங் கருணைக் கடலை ரசித்திடுங்கள்.

இராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம். பஞ்ச ஆயுதங்களின் அம்சமாகவே பிறந்தவர்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திலே குருபரம்பரை என்று சொல்வார்கள். முதலில் குருபரம்பரை பற்றி பார்ப்போம்.

🌻🌹 குருபரம்பரை:

நாமெல்லாம் பூமியில் பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புண்ணியங்களையும், பாவங்களையும் மாற்றி மாற்றி அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். புண்ணியம் அதிகமானால் அதைப் போக்க மறுபிறவி எடுக்கிறோம். பாவங்கள் அதிகமானாலும் மறுபிறவி எடுக்கிறோம். இப்படியே மாற்றி மாற்றி புனரபி ஜனனம், புனரபி மரணம் என மாற்றி மாற்றி பிறவி எடுத்துக்கொண்டே போகிறோம். இதையடுத்து அடுத்த பிறவியே வேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறோம். நாம் செய்த கர்மாக்களை இப்பிறவிலேயே அனுபவித்து விட்டால் அடுத்து நமக்கு வைகுண்டம் தான்.

அப்பேர்ப்பட்ட கர்மாக்களை அழிக்க, நித்ய அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி நித்ய அனுஷ்டாங்களைக் கடைப்பிடித்தால், பாவங்கள் அனைத்தும் தொலைந்துவிடும்.

வேதங்கள் தான் சட்ட திட்டங்கள். ரிக், யஜுர், சாமம், அதர்வண வேதங்களால் சாஸ்திரங்களை வகுத்துக் கொடுத்தார் இறைவன். நமக்கு சரீரம், சாஸ்திரங்கள், ஞானங்கள் கொடுத்தார். ஆழமான கிணற்றில் நாம் விழுந்துவிட்டால், நம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்று எதிர்பார்க்கிறோம் அல்லவா? அப்படி சம்சார சாகரத்தில் விழுந்து, தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்மைக் காப்பாற்ற இறைவனே வைகுண்டத்திலிருந்து முதலில் கீழிறங்கி வருகிறார். ஆனால், அப்படி அவர் கீழிறங்கி வந்தாலும் அவரால் நம்மைக் கரை சேர்க்க முடிவதில்லை.

ஏனெனில், கண்ணனாக இராமனாக தசாவதார பிறவிகள் எடுத்தார். இரண்டாவதாக நம்மை பகவத் பக்தியிலே ஆழ்த்த பன்னிரண்டு ஆழ்வார்கள் அவதாரம் செய்தார்கள். பெருமானிடத்திலே பக்தியைத் தூண்டி, பெருமானையே அடைய வேண்டிய வழியை, நாலாயிரம் பாசுரங்கள் மூலம் நமக்கு உரைத்தார்கள் ஆழ்வார்கள்.

ஆழ்வார்கள் பிறவி முடிந்தபின், மூன்றாவதாக நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தையே புத்தகமாகக் கொண்டு அதை உபதேசிக்க நித்யசூரிகளை ஆச்சார்யாரார்களாக அனுபவித்து வைத்தார் ஸ்ரீமந்நாராயணன்.

முதல் ஆச்சாரியனாக நாதமுனிகள் திருஅவதாரம் பண்ணினார். அவருக்கு குமாரர் ஈஸ்வர முனிகள் திருஅவதாரம் பண்ணினார். அவருடைய திருக்குமாரராக யமுனாச்சாரியார் திருஅவதாரம் பண்ணினார்.

நாதமுனிகள், யமுனாச்சாரியார் என்ற இந்த திருநாமத்தை வைத்துதான் குருபரம்பரை ஸ்லோகம் உண்டாக்கப்பட்டது. இதை பாடியவர் கூரத்தாழ்வார். குருபரம்பரையை வணங்குகிறேன் என்பது தான் அந்த ஸ்லோகம். ஆச்சார்யார்களையே முத்தாக, இரத்தினமாக செதுக்கப்பட்ட ஹாரம் தான் "குருபரம்பரா ஹாரம்" என்று சொல்வார்கள்.

குருபரம்பரையில் முதல் ஆச்சாரியன் ஸ்ரீமந்நாராயணனான பெரிய பெருமாள். நர நாராயணரில் நரனுக்கு தன்னுடைய திருமந்திரத்தை உபதேசித்தார் அல்லவா? அர்ஜுனனுக்கு ஆச்சார்யனாக இருந்து கீதையைக் கொடுத்த கீதாச்சாரியன் அல்லவா அவன்? அதனால் அவனே முதல் ஆச்சார்யன்.

இரண்டாவது மகாலக்ஷ்மியான பெரிய பிராட்டி - அந்த லக்ஷ்மிக்கு பெருமாள் ஸ்வயம் மகாமந்திரத்தை உபதேசித்தார். அவரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டதால் மகாலக்ஷ்மி இரண்டாவது ஆச்சாரியன்.

மூன்றாவதாக லக்ஷ்மியிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டது விஷ்வக்ஷேனர். அதனால் விக்வக்ஷேனர் மூன்றாவது ஆச்சாரியன். விஷ்வக்ஷேனரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டது நம்மாழ்வார். அதனால் அவர் நான்காவது ஆச்சாரியன். நம்மாழ்வாரிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டவர் நாதமுனிகள். அதனால் அவர் ஐந்தாவது ஆச்சாரியன்.

நாதமுனிகளின் சிஷ்யர்கள் - உய்யக்கொண்டார் மற்றும் மணக்கால் நம்பிகள்; மணக்கால் நம்பிகளின் சிஷ்யர் ஆளவந்தார்; அவரது சிஷ்யர் பெரிய நம்பிகள். ஆறாவது ஆச்சாரியராக நாதமுனிகளின் சிஷ்யர் உய்யக்கொண்டார். ஏழாவதாக பெரிய நம்பிகள்.

முதல் தலைவராக/ஆச்சாரியராக நாதமுனிகள். அதன் பின் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள். ஆளவந்தாரின் சீடர்கள் ஐந்து பேர் - 1. பெரிய நம்பிகள், 2. பெரிய திருமலை நம்பிகள், 3. திருக்கோட்டியூர் நம்பிகள், 4. திருக்கச்சி நம்பிகள், 5. திருமலையாண்டான்.

எட்டாவதாக இந்த ஹாரத்தில் இருப்பவர் தான் உலகமே போற்றும் ஸ்ரீ இராமானுஜர்.

இன்னும் அனுபவிப்போம்...

எங்கள் கதியே !
இராமானுச முனியே !

நாட்டியநீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம்களிப்புற்றது, தென்குருகைவள்ளல்
வாட்டமிலா வண்டமிழ்மறை வாழ்ந்தது, மண்ணுலகில்
ஈட்டியசீலத்து, இராமானுசன்றன் இயல்வுகண்டே

விளக்கவுரை :-

அறியாமையின் இடமாக உள்ள இந்தப் பூமியில்,
தான் பெற்றிருந்த பரமபதத்தை விடுத்து, இந்த உலகினரின் சிறுமையைக் பாராமல் எம்பெருமானார் அவதரித்தார். இவரது ஸ்வபாவம் மற்றும் உயர்ந்த குணங்களைக் கண்டு, சூரியனைக் கண்ட இருள் விலகுவது போன்று,
வைதிகம் அற்ற மதங்கள் அனைத்தும் நிர்மூலமாகச் சென்றன. இவரது அவதாரம் ஏற்பட்ட பின்னர் ஸர்வேச்வரனாகிய நாராயணனப் போற்றும் வேதங்கள் அனைத்தும், “நமக்கு இனி குறையில்லை”, என்று கர்வம் அடைந்தன.

மிகவும் உயர்ந்த இடமும், நம்மாழ்வாரின் அவதார இடமும் ஆகிய ஆழ்வார்திருநகரியில் உதித்த நம்மாழ்வார் அருளிச் செய்ததும், அனைத்து புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும், தமிழ் வேதமும் ஆகிய திருவாய்மொழி எந்தக் குறையும் இன்றி வளர்ந்தது.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்

திருவரங்கத்தமுதனார்  திருவடிகளே சரணம்

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!

கருத்துகள் இல்லை: