புதன், 23 செப்டம்பர், 2020

ராமானுஜர் பகுதி ஒன்று


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 1

"பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் பல்கலையோர்
தாம்மன்னவந்த விராமானுசன் சரணாரவிந்தம்
நாமன்னிவாழ நெஞ்சே!
சொல்லுவோம் அவன் நாமங்களே!"

- இராமானுஜ நூற்றந்தாதி 1

நாம் அன்னி வாழ நெஞ்சே சொல்லு என் உடையவரின் நாமங்களை. ஏனெனில், ஆழ்வார்கள் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வைணவம் மங்கிய காலம். நாதமுனிகள் நம்மாழ்வார் பாசுரங்களை திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோவிலில் ஆராவமுதன் முன் பாடினார். நம்மாழ்வார் பாசுரங்களை பாடி முடிக்கும் பொழுது, ஆராஅமுதன் கூட்டத்தோடு கூட்டமாக பக்தன் போல் வந்து, இவ்வளவு பாசுரங்களே இப்படி அழகாக இருக்கிறது என்றால் மீதமுள்ள மற்ற பாசுரங்கள் கேட்கும் பொழுது எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

நாதமுனிகள் பிரமித்து போய்விட்டார். ஏனெனில் அவருக்குத் தெரிந்தது நம்மாழ்வார் பாசுரங்கள் தான். அதுவும் 100 பாடல்கள் வரைதான். இவ்வாறு கூட்டத்தில் ஒருவர் மற்ற பாசுரங்கள் பற்றி கூறியதும், உடனே விசாரிக்கத் தொடங்கிவிட்டார் நாதமுனிகள். மற்ற பாசுரங்கள் பற்றி எங்கே சென்று அறிந்து கொள்வது என்று கேட்டுக் கொண்டிருக்க, கூட்டத்தில் ஒருவரோ ஆழ்வார் திருநகரி சென்றால் அனைத்து பாசுரங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்.

நாதமுனிகளோ ஆராவமுதனை வணங்கி உடனே ஆழ்வார் திருநகரி புறப்பட்டு, நம்மாழ்வாரை வணங்கினார். நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார் காலத்துக்குப் பின், வரிசையாக பல சீடர்கள் தொடர்ந்து ஆழ்வார் திருநகரியில் வழிபட்டனர். அவர்களிடம் நாதமுனிகள் நம்மாழ்வாரின் மற்ற பாசுரங்கள் பற்றி கேட்டார். அவர்களோ நம்மாழ்வார் விக்கிரகம் முன் பாசுரங்கள் பாடினால் நம்மாழ்வாரே நேரில் தோன்றி அளிக்கலாம்.. எங்களிடம் அவரது சில பாசுரங்கள் தவிர இல்லை என்று சொன்னார்கள்.

பிறகு நம்மாழ்வார் விக்கிரகம் முன் அமர்ந்து நம்மாழ்வாரின் பாசுரங்களை 12000 முறை பாடினார். அவர் பாடி முடிக்கையில், நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் காட்சி கொடுத்தார். அவருக்கு 4000 திவ்விய பிரபந்தங்களையும் அருளினார். இதைக்கண்ட நாதமுனிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நம்மாழ்வார் தன் மடியிலிருந்த ஒரு அழகான சிறிய சிலையைக் கொடுத்து நாதமுனிகளிடம் இதை தினமும் பூஜிக்கச் சொன்னார். நாதமுனிகளிடம் இந்தச் சிலையைக் கொடுக்கும் பொழுது "பொலிக! பொலிக!" என்று சொல்லிக் கொடுத்தார். கி.பி.1017ல் பிறக்கப்போகிற இராமானுஜருக்குக் கலியுகம் தொடங்கிய போதே கட்டியம் கூறியவர் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் கொடுத்த விக்கிரகம் தான் இன்றும் உலகைக் காத்துவரும் ஸ்ரீ இராமானுஜர். நாதமுனிகள் தான் அறிந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களை உலகறிய வெளியிட்டார். நாதமுனிகள் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைத் தொகுத்தார்.

அந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களையும் உயிர் மூச்சாக மதித்து, அதை நம்மிடையே எளிய முறையில் பரப்பியவர் இராமானுஜர்.

நம்மாழ்வாருக்கு இராமானுஜரின் சிலை எப்படி கிடைத்தது? அதை நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!

ஸ்ரீ இராமானுஜர் சரணம்

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த
ப்ரபந்த காயத்ரி
என்னும்
ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி

பாசுரம் 2
கள்ளார் பொழில் தென் அரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக்* குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு* ஒன்றறியேன் எனக்கு உற்ற பேரியல்வே.

...........தேன் வழியும் சோலைகளால் சூழப்பட்ட
அழகான திருவரங்கத்தில், அந்த உயர்ந்த
திவ்யதேசம் மூலம் மட்டுமே தனது பெருமைகள்
அனைத்தும் வெளிப்படும்படியாக அழகியமணவாளன்
சயனித்துள்ளான்.  தாமரைமலர் போன்ற
அழகும் செம்மையும் கொண்ட அவனது
திருவடிகளைத் தங்கள் மனதில் நிலை நிறுத்தாமல்
உள்ளவர்களும் இந்த உலகில் உண்டு.  
கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிட்டியும்,
அதற்கு ஏற்ற பாக்கியம் பெறாத இந்த மனிதர்களை
[பெரியபெருமாளின் திருவடிகளைத் தங்கள்
நெஞ்சத்தில் எண்ணாதவர்களை], நான் விலக்க வேண்டும்.  திருக்குறையலூர் என்னும் திவ்யதேசத்தில்
அவதரித்த திருமங்கையாழ்வாரின் திருவடிகளின்
கீழே, எப்போதும் அகலாதபடி பக்தியுடன் இருப்பவர்
எம்பெருமானார் ஆவார்.  அவருடைய மிகவும்
உயர்ந்த குணங்கள் தவிர வேறு எதனையும்
என் மனம் சிந்திப்பதில்லை.  மிகவும் தாழ்ந்தவனாகிய
என் போன்றவனுக்கு இத்தகைய உயர்ந்த நிலை
ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று அறியமுடியவில்லை.......

கருத்துகள் இல்லை: