ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஒன்பது
கங்கை யாத்திரை சென்றபோது கோவிந்தன் சொன்னதைக்கேட்டு தப்பித்துச் செல்கிறார் இளையாழ்வான்.
🐚🐚 வேடுவன் வேடுவச்சி
இளையாழ்வான் வழி தெரியாமல், கால் சென்ற பாதையில் ஸ்ரீமந்நாராயணனை மனதில் தியானித்துக் கொண்டு செல்கிறார். இரவுப் பொழுதாகிவிட்டது. அப்போது ஒரு வேடுவ தம்பதியரைக் காண்கிறார். அவர்கள் பயங்கரமான தோற்றம் உடையவர்களாக இருந்தார்கள். இருந்தாலும் கண்களில் கருணை வெள்ளம் ததும்பி இருந்தது.
அவர்கள் யார் தெரியுமா?
இளையாழ்வான் யாருடைய மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே, யாரை நினைத்துக்கொண்டே சென்றாரோ அவர்கள் தான். உலகத்துக்கே படியளக்கும் காஞ்சி வரதராஜப் பெருமாளும், பெருந்தேவி தாயாரும் தான். இளையாழ்வான் வழி தெரியாமல் ஸ்ரீமந்நாராயணனை அழைத்துக் கொண்டே இருந்தார் அல்லவா?! தன்னை நம்பி தன்னுடைய திருநாமத்தை அழைத்த இளையாழ்வானுக்கு அருள் செய்ய வேண்டும் என்று நினைத்தார் பெருமாள். பெருந்தேவி தாயாருடன் தானும் அருள் செய்ய வந்துவிட்டார்.
"அவர்களிடம் சென்று காஞ்சிபுரம் போக வேண்டும். வழி தெரிந்தால் சொல்லுங்கள்" என்று கேட்கிறார். வேடுவனும் வேடுவச்சியும் "நாங்கள் அங்கே தான் செல்கிறோம். நீங்கள் எங்களுடன் சேர்ந்து வாருங்கள்" என்று சொல்ல, இளையாழ்வானும் அவர்களோடு நடந்து சென்றார். இருட்டு அதிகமாக இருந்ததால், பாதை தெரியவில்லை. இதனால் அனைவரும் இரவு தங்கிவிட்டு காலை எழுந்ததும் புறப்படலாம் என்று அங்கேயே படுத்து விட்டார்கள்.
அப்பொழுது வேடுவச்சி குடிக்க தண்ணீர் வேண்டும் என்று தன் கணவனிடம் கேட்கிறாள். உலக உயிர்களை எல்லாம் காக்கும் ஜகந்மாதா, தன் கணவனிடம் குடிக்க நீர் கேட்கிறாள். காஞ்சி வரதராஜரான வேடுவனோ தன் மனைவியிடம் "இங்கே ஒரு கிணறு இருக்கிறது. காலை எழுந்ததும் உனக்கு நீர் கொண்டுவந்து தருகிறேன்" என்று சொன்னார். இதைக்கேட்ட இளையாழ்வானோ, 'காலை விடிந்ததும் முதலில் இந்த பெண்ணிற்குக் குடிக்க நீர் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்' என்று மனதில் எண்ணிக் கொண்டு உறங்கிவிட்டார்.
காலை விடிந்ததும் இளையாழ்வான் அருகில் இருக்கும் கிணற்றில் நீர் கொண்டு வந்து, இரவு உறங்கிய இடத்தினைப் பார்த்தார். வேடுவன் வேடுவச்சியைக் காணவில்லை. அருகில் இருப்பவர்களிடம், "இது எந்த ஊர்?" என்று கேட்க, அவர்களோ "நீர் பிறந்த ஊரையே நீர் மறந்துவிட்டீரா? அதோபாரும், புண்ணிய கோடி விமானம் தெரிகிறது. அருகே கிணறு ஒன்று இருக்கிறது. இது சாலக்கிணறு. இங்கே காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாள் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார். நீர் அவரை உள்ளே சென்று சேவித்துவிட்டு வாரும்" என்றார்கள்.
இதைக்கேட்ட இளையாழ்வானுக்கு ஒரே திகைப்பு. வந்தவர்கள் வரதராஜரும், பெருந்தேவி தாயாரும் என்று உணர்ந்து கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். தரிசனம் செய்த பின் தன் அன்னை காந்திமதியிடம் சென்று யாத்திரையில் நடந்தவற்றையெல்லாம் கூறினார். காந்திமதியோ திருக்கச்சி நம்பிகளிடம் இதைப்பற்றி சொல்லி, அவர் சொல்லும் வழியைப் பின்பற்றுமாறு உரைத்தார். இந்த திருக்கச்சி நம்பிகள் யார் என்பதை நாளைய பதிவில் அறியலாம்
இன்னும் அனுபவிப்போம்...
🌷எதிராசர் வடிவழகு 🌷
பற்பமெனத் திகழ் பைங்கழல்
உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட
பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில்
ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள்
நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை
பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும்
கனநற்சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு
என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர்
இல்லை எனக்கெதிர்
இல்லை எனக்கெதிரே!
🌸 ஸ்ரீ எம்பார் இயற்றிய எம்பெருமானார் வடிவழகு
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி.
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக