புதன், 23 செப்டம்பர், 2020

ராமானுஜர் பகுதி ஐந்து

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஐந்து

🌺🌺 ராமானுஜர் அவதாரம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலுக்குச் சென்று வந்தபின், ஓராண்டு கழிந்தது. காந்திமதி கருவுற்றார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, (கி.பி. 04/04/1017) சித்திரை மாதம் 12ம் தேதி, வியாழக்கிழமை, திருவாதிரை நட்சத்திரம், வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. காந்திமதியின் தங்கையான தீப்திமதியும் தன்னுடைய குழந்தையுடன் அக்காவைப் பார்க்க வந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது பரம சந்தோசம் என்று, பெரிய திருமலைநம்பிகள் ஸ்ரீ பெரும்புத்தூர் வந்தார்.

பெரிய திருமலைநம்பிகள் காந்திமதியின் குழந்தையைப் பார்த்தார். அவருக்கு எளிதில் புரிந்து விட்டது. குழந்தை பிறந்து பன்னிரெண்டாவது நாள் பெயர் சூட்டும் விழா நடத்தினார்கள். காந்திமதியின் குழந்தை 'லட்சுமணனின் அவதாரம்' என்பது புரிந்தது. பிறந்த குழந்தையின் தெய்வீகப் பொழிவு கண்டு வாழ்த்தி "லக்ஷ்மணோ லக்ஷ்மீ ஸம்பந்த!!" (திருநிறைச்செல்வன் தெய்வ மகன் இலட்சுமணன்) என்ற பெயருக்கு ஏற்ப, 'இளையாழ்வான்' என்று பெயர் வைத்தார். இளையாழ்வான் என்றால் இராமனுக்கு இளையவன் என்று பொருள்.

"அனந்த: பிரதமம் ரூபம் லக்ஷ்மணச்ச அத:பரம்
பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கச்சித் பவஷ்யதி"

என்பது ஆன்றோர் வாக்கு. திருமாலின் ஐம்படைகளின் (பஞ்ச ஆயுதங்களின்) அவதாரம் தான் இளையாழ்வான் என்றும் சொல்வார்கள்.

திருமலையிலிருந்து வந்து மருமகனுக்குப் பெயர் வைத்தவரோ சாமானியரான மனிதர் அல்ல. அக்காலத்திலேயே ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ வைஷ்ணவ பரமாச்சாரியாருள் அருமைச் சிஷ்யர்களுள் ஒருவர்.

தீப்திமதியின் குழந்தைக்கு கோவிந்தன் என்று பெயரிட்டார். தீப்திமதி சில காலம் கழித்து மற்றொரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு சிறிய கோவிந்தப் பெருமாள் என்று பெயரிட்டார் பெரிய திருமலைநம்பிகள்.

குழந்தைகள் பிறந்து நான்கு மாதம் கழித்து சூரியனைப் பார்த்தல் என்னும் சடங்கு செய்தார்கள். இராமானுனுக்கும், கோவிந்தனுக்கும் இந்த சடங்கு நடந்தது. பிறகு முதல் சோறு ஊட்டுதல், மொட்டை அடித்தல், காது குத்துதல், உபநயனம் என்று வரிசையாகச் சடங்குகள் நடத்தப்பட்டன.

நெடுநாள் பிள்ளைப் பேறின்றி இருந்த அசூரிகேசவாச்சாரியார், தன் பிள்ளைக்கு உரிய காலத்தில் உபநயாதிகளைச் செய்து அந்தணன் சிறுவன் பெற வேண்டிய தகுதிகளை இளையாழ்வானுக்கு செய்தார்.

இளையாழ்வானுக்கு இளம் வயதிலேயே கல்வியின் மீது ஆர்வம். நன்றாகப் பயின்றார், இறைவன் மீது கொண்ட அன்பும் தானாகவே வளர்ந்தது. வேதம் ஓதி முடித்த இளையாழ்வான், தத்துவ நாட்டத்துடன், காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள திருப்புட்குழி எனும் ஊரில் புகழ்பெற்ற ஆசிரியர் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார். கோவிந்தனும் பயிலச் சென்றார்.

யாதவப் பிரகாசரோ அத்வைதம் கற்பிப்பவர். இளையாழ்வானுக்கு இறைவனுக்கு திருமுகம் உண்டு, அனைத்து கல்யாண குணங்களும் உண்டு என்பவர். இவரிடம் ஏன் அசூரி கேசவாச்சாரியார் வேதம் பயில அனுப்பி வைத்தார் என்றால், அப்பொழுது தான் உண்மையான பரம்பொருள் யார் என்பதையும், பிரம்மம் எப்படிப்பட்டது என்பதையும் நன்றாக உணர முடியும்.

எந்த ஒரு நல்ல விசயம் தெரிந்து கொள்ளும் போதும், அதற்கு மாற்றுக்கருத்து யாரேனும் சொன்னால் அது உண்மையாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம். தவறாகக் கூறினால் வாதம் புரிந்தாவது உண்மையை நிலை நாட்ட முயற்சிப்போம் அல்லவா.

குருவான யாதவப்பிரகாசர், சிஷ்யனான இளையாழ்வான் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நாளை அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 ஸ்ரீ மதே பாஷ்யககாரர் நம :
ஸ்ரீ ஸ்வாமி திருவாதிரை
ஸ்ரீபெரும்பூதூர்

இந்த உடல் சிறைவிட்டு எப்பொதுழும் யான் ஏகி
அந்தமில் பேரிபத்துள் ஆகுவேன் - அந்தோ
இரங்காய் எதிராசா என்னை இனி உய்க்கை
பரங்காண் உனக்கு உணர்ந்து பார்.

இந்த உடல் என்பது கடுமையாக சிறை போன்று உள்ளது, இதனை
விடுத்து, எல்லையில்லாத இன்பம் அளிக்கவல்ல பரமபதத்திற்கு, அர்ச்சிராதி மார்க்கமாக
நான் எப்போது செல்வேன்? யதிகளின் தலைவரான எம்பெருமானாரே, என் மீது கருணை கொள்ள வேண்டும்,
என்னைக் காப்பது என்ற பாரம் உமக்கு உள்ளது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்,
கீதையில் கண்ணனும் - க்ஷிபாமி - என்று கைவிட்ட என்னைப்
போன்றவர்களை கரை ஏற்றதல் என்பது, பல்லுயிர்க்கும் வீடு அளிப்பானாய் அவதரித்த உனக்கே பொறுப்பு அல்லவா.

அடியேன் சுகுமாரா ராமாநுஜாய தாஸன்
 ஸ்ரீ மதே பாஷ்யககாரர் நம :
ஸ்ரீ ஸ்வாமி திருவாதிரை

வாழ் யெதிராசன் வாழி யெதிராசன்
வாழி யெதிராசன் வாழி என வாழ்த்துவார் - வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணைகள்
தாழ்த்துவார் விண்ணோர்தலை.

எம்பெருமானார் பல்லாண்டு வாழ்க எம்பெருமானார் பல்லாண்டு வாழ்க எம்பெருமானார் பல்லாண்டு
வாழ்க என்று வாழ்த்துபவர்கள் இவ்விதமான வாழ்த்துபவர்களை
வாழ்த்துபவர்களின் திருவடிகளில் பணிபவர்கள் நித்யஸூரிகளுக்கும் மேலானவர்கள் ஆவர்.

உய்ய ஒரே வழி! உடையவரின் திருவடி!!


கருத்துகள் இல்லை: