புதன், 23 செப்டம்பர், 2020

ராமானுஜர் பகுதி இரண்டு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு இரண்டு....

நம்மாழ்வார் 32 வருடங்கள் வாழ்ந்தார். அவர் குழந்தையாகப் பிறந்த 16வது நாளில் குழந்தையை ஆழ்வார் திருநகரியிலுள்ள பொலிந்து நின்ற பிரானின் திருக்கோவிலில் ஆலமரத்தின் அருகில் பெற்றோர் இருந்தனர். குழந்தை தவழ்ந்து மெல்ல மரம் ஏறி புளிய மரத்தில் தவம் செய்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அப்போதிலிருந்து 16 வயது வரை தவத்தில் இருந்தார். அதன் பின் 16 ஆண்டுகள் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களில் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி பாசுரங்களைப் பாடினார்.

அவரது சீடர் தான் மதுரகவி ஆழ்வார். அவர் தன் குருவையே இறைவனாகக் கொண்டு பாசுரங்கள் பாடி அனுபவித்தார். அவர் கண்ணிநுண் சிறுதாம்பு பாசுரங்கள் பாடினார்.

குருவான நம்மாழ்வாருக்கு சேவை செய்து வரும் பொழுது, ஒரு நாள் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாரிடம் "நான் வைகுண்டத்திற்குப் புறப்படும் வேலை வந்துவிட்டது" என்றார். இதைக்கேட்ட மதுரகவி ஆழ்வாருக்கு பயங்கர மனவருத்தம். "சுவாமி தாங்கள் இங்கே எங்களுக்காக இருக்கக்கூடாதா?" என்றார். நம்மாழ்வாரோ மதுரகவி ஆழ்வாரிடம், "தாமிரபரணி ஆற்றில் நீர் எடுத்து வாரும்" என்றார்.

மதுரகவி ஆழ்வாரும் நீர் எடுத்து வந்தார். அந்த நீரை காய்ச்சுமாறு நம்மாழ்வார் கூற, மதுரகவி ஆழ்வாரும் காய்ச்சினார். நீரிலிருந்து ஒரு விக்கிரகம் வெளிவந்தது. அதைக்கண்ட மதுரகவி ஆழ்வார், "நான் உங்களுடைய சிலையைக் கேட்டால் நீங்கள் வேறு யாருடைய சிலையைக் கொடுக்கிறீர்கள்" என்றார். நம்மாழ்வாரோ அந்த சிலையைப் பெற்று மறைத்து வைத்துக் கொண்டு, இந்த சிலை உனக்கல்ல என்று கூறி, மறுபடியும் தாமிரபரணி நீர் எடுத்து காய்ச்சச் சொன்னார். மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி நீர் எடுத்து காய்ச்சினார், அப்போது நம்மாழ்வார் விக்கிரகம் வெளிவந்தது. மதுரகவி ஆழ்வாருக்குச் சந்தோசம். நம்மாழ்வார் வைகுண்டம் சென்றபின் இந்த சிலையையே தொடர்ந்து பூஜித்தார். இந்த சிலை இன்னும் ஆழ்வார் திருநகரியில் புளிய மரத்தின் அருகில் நம்மாழ்வார் சன்னிதியில் உள்ளது.

ஒரு சிலையை மறைத்தார் அல்லவா நம்மாழ்வார். அந்த சிலை தான் இராமானுஜர். நாதமுனிகள் வந்து பாசுரங்கள் கேட்கும் பொழுது, அவர் பாடிய பாசுரங்களையும் கொடுத்து, மற்ற ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும் கொடுத்து, "பொலிக! பொலிக!" என்று கூறி இந்த விக்கிரகத்தையும் நாதமுனிகளிடம் கொடுத்தார் நம்மாழ்வார்.

நாதமுனிகள் பூஜித்து, அவர்களுக்குப்பின் பின் பல சீடர்கள் தொடர்ந்து அந்த விக்கிரகத்தை பூஜித்து வந்தார்கள்.

தான் அவதரிக்கும் முன்பே பூஜிக்கப்பட்ட ஒரே குரு இராமானுஜர் தான். இதுவரையில் யாருக்கும் இப்படி பாக்கியம் கிடைக்கவேயில்லை. அந்த சிறப்பு இராமானுஜர் அவதரிக்கும் முன்னமே கிட்டியதால் தான் இராமானுஜரை தெய்வாம்சம் பொருந்தியவர், அந்த இறைவனே இராமானுஜர் என்றெல்லாம் சொல்லலாம். நாளை குரு பரம்பரை பற்றி அறியலாம்.
"
ஶ்ரீமதே சடகோபாய நம
ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"நம்மாழ்வாரும்.... மதுரகவியாழ்வாரும்..."

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியை .... பட்டோலை கொண்டு பாவின் இன்னிசை பாடித் திரிபவர்.... மதுரகவி ஆழ்வார்...
நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள கருத்துக்களை.... தாம் பாடிய "கண்ணிநுண் சிறுத்தாம்பு" பிரபந்தத்தில் அருளிச்செய்தவைகளைக் காண்போம்.....

நம்மாழ்வார் பாடிய ...." நலங்கொள் நான் மறைவாணர்கள்" என்பதை....

"நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்"

என்று பாடியுள்ளார்....

2. நம்மாழ்வார் பாடிய....." அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதமே" என்றதை....

"அண்ணிக்கும் அமுதூறும் " என்றும்...

3. "அடிக்கீழ் புகுந்தேனே" என்பதை

"மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே.... "என்றும்....

4. "பாடி இளைப்பிலும் " என்பதை

"பாடித் திரிவனே" என்றும்....

5. " உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் " என்பதை

"நம்பிக்கு ஆள் உரியன்" என்றும்...

6. "இங்கே திரிந்தேற்கு " என்பதை...

"திரி தந்தாகிலும் " என்றும்....

7. "தாயாய்த் தந்தையாய் " என்பதை...

"அன்னையாய் அத்தனாய்.. " என்றும்.....

8. "ஆள்கின்றான் ஆழியான் " என்பதை....

"என்னை ஆண்டிடும் தன்மையான் " என்றும்....

9. "எமர் கீழ்மேல் எழுபிறப்பும்" என்பதை....

"இன்று தொட்டு எழுமையும்.... " என்றும்....

10." பேரேனென்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்..." என்பதை....

"நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினார்..." என்றும்...

11." வழுவிலா அடிமை செய்ய வேண்டும்" என்பதை....

"ஆட்புக்க காதல் அடிமைப் பயனன்றே " என்றும்....

12."பொருளல்லாத என்னை அடிமை கொண்டான் " என்பதை....

" பயன் அன்றாகிலும், பாங்கு அல்லாராகிலும்.... செயல் நன்றாகத் , திருத்திப் பணிகொள்வான்" என்றும்...

13. "மலர் பாவைக்கன் என் அன்பேயோ..." என்பதை....

" தென்குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய்.. " என்றும்....

14." வைகுந்தமாகும் தம்முரெல்லாம்..." என்பதை....

"நம்புவார்பதி வைகுந்தம் காண்மினே..." என்றும் பாடியுள்ளார்....

இவ்வாறு நம்மாழ்வார் பகவத் விஷயத்தை அனுபவித்த முறையிலேயே... ஆழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வாரும் அடியொற்றி.... அனுபவித்து இருப்பதை அடியோங்களும் படித்து இன்புறுவோம்.....

"நம்மாழ்வார் திருவடிகளே சரணம்"

"மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்"

"ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

காரிமான் உடையநங்கை தம்பதிகளுக்கு புத்திரப்பேறுக்காக ஸ்ரீ அழகிய நம்பியிடம் பிரார்த்திக்கும் சமயம் தாமே ஆழ்வார்திருநகரியில் அவதரிப்போம் என்று சாதித்து அங்ஙனமே அவதரித்தார்.  அவரே திருக்குறுங்குடியில் நம்மாழ்வார் திருக்கோலத்தில் சேவைசாதிக்கும் அற்புதக்காட்சி பல்லக்கு சேர்வையில் சேவிக்கலாம்.
இன்னும்
தொடர்வோம்...

*ஓங்கி உலகளந்த உத்தமன்!*

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்கிறாள் என் தாயார். திருவிக்கிரம அவதாரத்தின் போது தனது திருக்கால்களை எவ்வளவு வேகமாக ஓங்கியிருப்பார் திருவிக்கிரமன் என்று உணர்ந்து ஓங்கி சப்தத்தால் வியக்கவைக்கிறாள்! பின்பு அடுத்தடுத்த நாட்களில் பாஸுரங்களை பாடிக்கொண்டிருந்தாலும், இந்த வியப்பு ஆண்டாளின் திருவுள்ளம் விட்டு அகலவில்லை. அதனால்தான் மீண்டும் 17 வது பாஸுரத்தில், ஓங்கி உலகளக்கும்போது, இந்த அண்டத்தின் மேல் உள்ள ஆவரண ஜலத்தை திருவிக்கிரமன் தன் திருப்பாதத்தால் அறுத்த வைபவத்தை வியந்து *"அம்பரமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே"* என்று மீண்டும் வியக்கிறாள்!

24 ஆம் பாஸுரத்திலும் "அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!!!" என்று வியப்பு நீங்காத ஆண்டாள் உலகளந்த திருவடிகளின் மேன்மையைப் போற்றிப் பாடுகிறார்! இந்தப் "போற்றி"
களிலும் உலகளந்த திருவடிகளுக்குத் தான் முதல் வந்தனம்!!

நாச்சியார் திருமொழியிலும் 2 ஆம் பாஸுரம், 5 ஆம் பாஸுரம், 8 மற்றும் 9 ஆம் பாஸுரங்களில் உலகளந்தானை பாடி வியக்கிறாள்!

நம்மாழ்வார் திருவிக்கிரம ப்ரபாவத்தை 6 ஆம் பத்து 6 ஆம் திருவாய்மொழியில், திருவேங்கடவனிடம் சரணாகதி அனுஷ்டிக்கும் போது, *"எந்நாளே நாம் மண் ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று"* என்கிறார்! திருவிக்கிரம விபவத்தின் போது, எம்பெருமான்தான் ஓங்கி உலகளந்து விட்டாரே! ஆக, இந்த லோகத்திலாகட்டும், அந்த லோகத்திலாகட்டும்.. எவரும் இரண்டு திருப்பாதங்களையும் ஒன்றாக தரிசிக்கவில்லையன்றோ? அதை எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பது? என்கிறார்! நம்மாழ்வாரின் திருவுள்ளம், திருவேங்கடவனை திருவிக்கிரமனாக பற்றியதால், திருவேங்கடவனின் திருக்கமல பாதங்களை தரிசித்தால் போதும்.. திருவிக்கிரம இணைத்தாமரைகளை தரிசித்ததிற்கு ஈடாகுமாம் போலே....குறையும் தீருமாப்போலே!
🙇‍♀🙇‍♀🙏🙏
உய்ய ஒரே வழி! உடையவரின் திருவடி!!
ஓம் ராமானுஜாய :


கருத்துகள் இல்லை: