புதன், 23 செப்டம்பர், 2020

ராமானுஜர் பகுதி ஏழு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஏழு

🌺🌺 குருவை மிஞ்சிய சிஷ்யன்

சீடர்களுக்கு காலை நேரப் பாடங்களை போதித்த பின் எண்ணெய்க் குளியல் எடுக்க எண்ணினார். அந்தக் கால குருகுல வாசத்தில் சீடர்களே குருவுக்குத் தேவையான சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். குரு ஆணையிடுவார். சீடர்கள் மறுக்காமல் சிரம் மேற்கொண்டு செய்வர். எண்ணெய்க் குளியலுக்கு ஆச்சாரியாரின் பாதாதி கேசம் இளையாழ்வான் எண்ணெய் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு மாணவரும் உடனிருந்தார்.

மாணவன்: தேவரீர்! இன்று காலையில் தாங்கள் நடத்திய பாடத்தில் பொருள் விளங்கிக்கொள்ள சற்றுக் கடினமாக உள்ளது.

யாதவ பிரகாசர்: எந்தப் பாடம்?

மாணவன்: சந்தோக்ய உபநிடத்தில் ஆறாவது பகுதியில் வரும் ஏழாவது மந்திரம்.

யாதவ பிரகாசர்: எங்கே அந்த மந்திரத்தை ஒருமுறை கூறு.

மாணவன்: தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக -மேவமக்ஷிணி

யாதவ பிரகாசர்: இதில் உனக்கு என்ன சந்தேகம்?

மாணவன்: இதில் வரும் கப்யாசம் என்ற பதத்தின் பொருள் என்ன?

யாதவ பிரகாசர்: கப்யாசம் என்ற சொல்லை கபி + ஆசாம் என்று பிரி. கபி என்றால் குரங்கு என்று பொருள். ஆசாம் என்றால் பிருட்ட பாகம். அதாவது குரங்கின் ஆசனவாயானது தாமரையைப் போல மலர்ந்திருக்கும். அப்படிப்பட்ட சிவந்த கண்களையுடைய மகாவிஷ்ணு என்று பொருள்.

இந்த விளக்கத்தை இளையாழ்வான் கேட்கிறார். அவருக்கு ஒரே அழுகை. எம்பெருமானுடைய கண்களை குரங்கின் பிருட்டபாகத்துடன் ஆச்சாரியார் உவமை கூறியவுடன் தாங்க முடியாத துக்கம் இளையாழ்வானுக்கு. அந்தத் துக்கம் கண்களில் கண்ணீராக உடைத்துக் கொண்டு வந்தது. அப்படிப் பீறிட்டுக் கொண்டு வந்த கண்ணீர் சூடாக ஆச்சாரியாரின் தொடையில் பட்டது. ஆச்சாரியார் நிமிர்ந்து பார்க்கிறார். எம்பெருமானின் மீது இருந்த மாளாத காதல் காரணமாக இளையாழ்வான் அழுது கொண்டிருந்தார்.

யாதவ பிரகாசர்: இளையாழ்வானே, நான் அப்படி என்ன சொல்லி விட்டேன் என்று நீ அழுகிறாய்?

இளையாழ்வான்: மன்னிக்க வேண்டும் குருவே. எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நித்ய கல்யாண குணங்களைக் கொண்டவன். எனவே அவனுடைய கண்களைக் குரங்கின் பிருட்ட பாகத்துடன் தாங்கள் ஒப்பிட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

யாதவ பிரகாசர்: இது நான் கூறிய விளக்கமில்லை. வழி வழியாக பல ஆச்சாரியர்கள் கூறி வரும் விளக்கம். ஆதிசங்கரர் கூட இதற்கு இப்படித் தான் விளக்கமளிக்கிறார்.

இளையாழ்வான்: மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் கூறட்டும். என் பிரபுவை நான் குறைத்து ஒப்பிட மாட்டேன்.

யாதவபிரகாசர்: அப்படி என்றால் இந்த செய்யுளுக்கு நீயே விளக்கம் கொடு.

இளையாழ்வான்: கப்யாசம் என்ற சொல்லை இப்படியும் பிரிக்கலாம். கம் + பீபதி + ஆசம். இதில் கப் என்றால் தண்ணீர் என்று பொருள். பிபதீ என்றால் குடித்தல் என்று பொருள். எனவே, இதனை "கம் ஜாலம் பிபதீ கபி: ஸுர்ய:" என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் சூரியனால் மலர்ந்தது என்ற பொருள் வரும். எனவே, சூரியனால் மலரும் தாமரையைப் போன்ற கண்களை உடையவன் எம்பெருமான் என்ற அருமையான விளக்கம் கிடைக்கும்.

யாதவ பிரகாசர்: உன் இலக்கண அறிவு பளிச்சிடுகிறது. என்றாலும் நீ அத்வைதத்தை மறுக்கிறாயோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இளையாழ்வான்: நான் அத்வைதத்தை மறுக்கவில்லை. சாஸ்திரத்திலுள்ள, வேதத்திலுள்ள உண்மையான ஒன்றைத்தான் சொன்னேன். மற்றவர்கள் வாய்க்கு வந்தபடி எல்லாவற்றையும் மறை பொருளாகக் கூறுகிறார்கள். நான் வேதத்தில் சொல்லப்படட்டுள்ளதையே இங்கு சொன்னேன்.

அவ்வளவுதான். யாதவப்பிரகாசருக்கு கோவம் தலைக்கேறிவிட்டது. அவரை தீர்த்துக்கட்டி முடித்துவிட வேண்டும் என்று எண்ணினார். அதற்கு ஒரு திட்டம் தீட்ட முடிவு செய்தார்.

இளையாழ்வானின் திருமண வைபவத்தைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 வாழியெதிராசன் வாழியெதிராசன்

திருக்கோட்டியூர் நம்பி உடையவருக்கு அருளிய 18 வார்த்தைகள்

1, மோக்ஷத்தில் ஆசை உடைய ஜீவன், வாழ்க்கையில் ஆசையை துறக்க வேண்டும்.
2, வாழ்க்கையில் ஆசையை துறந்தால், அஹங்காரம் மமகாரம் நீங்கும்.
3, அஹங்காரம் மமகாரம் நீங்கினால் தேஹ அபிமானம் நீங்கும்.
4, தேஹ அபிமானம் நீங்கினால் ஆத்ம ஞானம் பிறக்கும்.
5, ஆத்ம ஞானம் பிறந்தால்
ஐஸ்வர்ய போகத்தில் வெறுப்பு ஏற்படும்.
6, ஐஸ்வர்ய போகத்தில் வெறுப்பு ஏற்பட்டால் எம்பெருமானிடம்  பற்று ஏற்படும்.
7, எம்பெருமானிடம் பற்று ஏற்பட்டால் மற்ற விஷய ஆசை நீங்கும்.
8, மற்ற விஷய ஆசை நீங்கினால்
பாரதந்த்ரிய ஞானம் உண்டாகும்.
9, பாரதந்த்ரிய ஞானம் உண்டானால் அர்த்த, காம , ராக துவேஷங்கள் நீங்கும்,
10, அர்த்த, காம , ராக துவேஷங்கள் நீங்கினால் ஸ்ரீ வைஷ்ணத்வம் கைகூடும்.
11, ஸ்ரீ வைஷ்ணத்வம் கைகூடினால்
சத்சங்கம் ஏற்படும்.
12, சத்சங்கம் ஏற்பட்டால்  பாகவத சம்பந்தம் ஏற்படும்.
13, பாகவத சம்பந்தம் ஏற்பட்டால் பகவத் சம்பந்தம் ஏற்படும்.
14, பகவத் சம்பந்தம் ஏற்பட்டால் மற்ற பலன்களில் வெறுப்பு ஏற்படும்.
15,  மற்ற பலன்களில் வெறுப்பு ஏற்பட்ட ஜீவன்  எம்பெருமானுக்கு அடிமை ஆவான்
16,  எம்பெருமானுக்கு அடிமையாகும் ஜீவன் , எம்பெருமான் ஒருவனை மட்டுமே சரணமடைவான்.
17, எம்பெருமான் ஒருவனை மட்டுமே
சரணமடைந்த ஜீவன், திருமந்திரத்தையும் அதன் பொருளையும் ஏற்க  தகுதி பெறுகின்றான்
18,  அவ்வாறு தகுதி பெற்ற அதிகாரிக்கே திருமந்திரம் கை புகுரும்.

ஆச்சார்யான் திருவடிகளில் சரணம் !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!


கருத்துகள் இல்லை: