புதன், 23 செப்டம்பர், 2020

ராமானுஜர் பகுதி நான்கு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு நான்கு

🌺🍁 அவதாரத்தருணம்:

குருபரம்பரை ஹாரத்தில் எட்டாவதாக இருப்பவர் ஸ்ரீ இராமானுஜர் என்று பார்த்தோம் அல்லவா? முதலில் ஸ்ரீமந்நாராயணன் பல அவதாரங்கள் எடுத்து நமக்கு நாம் நம் கர்மவினைகள், பாவங்கள் இவற்றை அனுபவித்து முடிவில் மோட்சம் அடைவது வரை கீதைகள் மூலம் உபதேசித்தார்.

இரண்டாவது நம் வாழ்க்கைக்கு ரிக், யஜுர், சாமம், அதர்வணம் வேதங்களைப் படைத்தார். மூன்றாவதாக அந்த வேதங்களை நல்ல முறையில் நாம் பயில சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். நான்காவதாக ஆழ்வார்கள் மூலம் நம் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களைக் கொடுத்தார். ஆனால், ஆழ்வார்கள் அவனது கல்யாண குணங்களை மட்டுமே அனுபவித்து அனுபவித்து அவனிடம் வைகுண்ட பிராப்தி கேட்டு சென்று விட்டார்கள்.

ஐந்தாவது, அந்த நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களையும், மனிதர்களின் அறியாமையை போக்கி, புண்ணிய பாவங்களை அகற்றி, முக்தியடைய ஆச்சார்யார்கள் மூலம் விளக்கினால் தான் சரியாக வரும் என்று நித்ய சூரிகளை பூலோகத்தில் ஆச்சார்யார்களாக அவதரிக்க அனுப்பி வைத்தார் பரந்தாமன்.

இப்போது அந்த ஆச்சார்யார்களுக்கு சரியான சீடன், அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்ட, திட்டங்களை பூலோகத்தில் பரப்புதல், வைஷ்ணவக் கொள்கைகளை எளிய முறையில் பரப்புதல், பக்திக்கு இலக்கணமாக வாழ்தல், சரணாகதி தத்துவமே போதும், கைங்கரியம் ஒன்றே போதும் நம் கர்மவினைகள் அனைத்தும் ஒழிந்து முடிவில் மோட்சம் கிடைக்கும் என்று, கைங்கரியம் ஒன்றையே குறிக்கோளாக வாழ ஒரு மனிதரைப் படைக்க வேண்டும் என்று ஸ்ரீமந்நாராயணனான பரம்பொருள் எண்ணினார்.

வைகுண்டத்தில் இருக்கும் ஆதிசேஷனிடம், "நான் நின்றால், நடந்தால், அமர்ந்தால், குடையாக, சிம்மாசனமாக இருக்கும் தாம் தான் இப்பூலோகத்தில் அவதரித்து கைங்கரியத்தின் சிறப்பை உணர்த்தி, மக்கள் தாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை, கர்மவினை பலன்களை அனைத்திலிருந்தும் விடுபட்டு, புனரபி ஜனனம் - புனரபி மரணம் இதிலிருந்து மீள அவர்களுக்கு மறுபிறவி இல்லாத நிலை, மோட்சம் பற்றி எடுத்துக்கூறி நல்வழிப்படுத்த அவதரிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று கூறினார்.

ஆதிசேஷனும் இறைவனிடம் "தாங்கள் கூறுவதையே செய்கிறேன்" என்கிறார்.

🌺🌺 பார்த்தசாரதி திருக்கோவிலில் வழிபாடு:

சற்றேறக்குறைய ஆயிரத்தோரு ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ பெரும்புத்தூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக் கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோவில்... சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப் பெருமாள், அந்த ஊரில் வசித்தவர் அசூரிகேசவாச்சாரியார். இவர் வேள்வி செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். இவருக்கு 'ஸர்வக்ரது' என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர்.

இந்த 'ஸர்வக்ரது' என்ற சொல்லுக்கு எல்லா வேள்விகளும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால் இவரை 'ஸ்ரீமத் அசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர்' என்று மக்கள் அழைத்தனர். இந்த சமயத்தில் தான் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார் தான் ஆட்சி செய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் வந்து துறவியாக மாறிவிட்டார்.

அவரது சீடர் பெரியநம்பி. நாத்திகர் கூட அவரது பாடல்களைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்குச் சென்று விடுவார்கள் என்றால் இந்த இனிமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆளவந்தாரிடம் பெரிய திருமலை நம்பி என்பவரும் சீடராக இருந்தார். ஆளவந்தாரை விட பெரிய திருமலைநம்பிக்கு வயது அதிகம். ஆனாலும், பெரிய திருமலைநம்பி ஆளவந்தாரை குருவாக ஏற்றுக் கொண்டார்.

பெரிய திருமலைநம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஸர்வசக்ரது பட்டம் பெற்ற அசூரி கேசவாச்சாரியாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தீப்திமதியை அகரம் என்ற கிராமத்தில் வசித்த கலைநயனப்பட்டர் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். இவர்கள் இருவரின் திருமணத்தையும் சிறப்பாக நடத்திய பெரிய திருமலைநம்பி, எந்நேரமும் ஸ்ரீமந்நாராயணனின் திருவடியை மனதில் நினைத்துக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து இருந்தார்.

அசூர் கேசவாச்சாரியாரும், காந்திமதியும் இல்லற வாழ்க்கையை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்ற செல்வம் இல்லாது போயிற்று. எந்தக் குறையாக இருந்தாலும் தெய்வத்திடம் போனால் மனக்குறைகள் தீரும். இவர்கள் இருவரும் எந்தத் திருக்கோவில் போகலாம், அதிலும் இவர் வேள்விகள் சிறப்பாகச் செய்பவர் அல்லவா?! இவர் "விருந்தாரண்யம் என்று அழைக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமான அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலுக்குச் சென்றனர். திருஅல்லிக்கேணி குளத்தின் பெயரே ஊருக்கும் வந்துவிட்டது. அங்கு சென்ற அவர்கள் மகப்பேறு குறித்து வேள்வியை நடத்தினார்கள்.

யாகம் முடிந்தபின், அசூரி கேசவாச்சாரியாருக்கு தூக்கம் வர கோவிலிலேயே தூங்கி விட்டார். அப்போது அவரது கனவில் வந்த பார்த்தசாரதி பெருமாள், "கேசவா! நீர் ஒழுக்கசீலர், வேள்விகள் இயற்றி என்னைத் திருப்தி செய்பவர், உமது பக்தி ஆழமானது. இனி குழந்தை இல்லை என்ற கவலை உமக்கு இல்லை. நானே உனக்கு குழந்தையாகப் பிறப்பேன். இவ்வுலக மக்கள் பூர்வாச்சாரியார்கள் அருளிய உபதேசங்களின் மகிமைகளைப் புரியாமல், தங்களையே உயர்வாக எண்ணிக் கொண்டுள்ளனர். அகந்தை கொண்டு பல தீமைகள் புரிகிறார்கள். எனவே, அவர்களைக் கடைத்தேற்ற நான் அவதாரம் எடுப்பேன். இனி நீர் ஊர் திரும்பலாம்" என்றார் அந்த பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணன். இதைக்கண்டு விழித்த அசூரி கேசவாச்சார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காந்திமதியும் இதைக்கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். இருவரும் தங்கள் ஊரான ஸ்ரீ பெரும்புத்தூருக்குச் சென்றார்கள்.

(ராமானுஜர் நூற்றந்தாதி)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானைக் கலைபரவும்
தனி யானையைத் தண்டமிழ்செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை  வந்தெய்தினரே.(3909)
*பொருள்* : சாத்திரங்கள் துதிக்கும் ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனை , திருக்கண்ண மங்கையில் நின்று அருளுபவனை , குளிர்ச்சியான தமிழ்ப் பாசுரங்களால் பாடி மகிழ்வித்த நீலன் என்ற திருமங்கை ஆழ்வாரை உலகில் தனக்கு இன்பமாக எண்ணிய ராமானுஜனைத் தஞ்சமென்று வந்து அடைந்தவர்கள் எத்தகைய துயரங்கள் வந்தாலும் வெறுப்படைய மாட்டார்கள். இன்பங்கள் வந்தாலும் மனம் நெகிழாமல் இருப்பார்கள் .

*விளக்கம்* :
*முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம்* - முனிவர்கள் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாகவே எண்ணுவார்கள். ராமானுஜரைப்  பற்றியவர்களும் இவ்வாறே இருப்பார்கள் என்கிறார் .

*கண்ணமங்கை நின்றானை* -  இது  சோழ  நாட்டு திவ்ய  தேசமாகும். விமானம் , மண்டபம்,ஆரண்யம், சரசு , க்ஷேத்திரம் நதி  மற்றும்  நகரம் ஆகிய அனைத்தும் அமுத மயமானதால் இந்த தலம்  *சப்தஅம்ருத  தலம்*  என்று அழைக்கப்படுகிறது.

*கலைபரவும் தனியானையை* திருக்கண்ண மங்கையில் அனைத்து  சாஸ்திரங்களும் (கலைகள்) பெருமாளின் குணங்களைப் பற்றி பரவுகின்றன (துதிக்கின்றன).  எல்லா வேதங்களிலும்  நானே அறியப்படுகிறேன் என்றபடி இங்குள்ள பக்தசவத்சல  பெருமாள் ஒப்பற்ற மதம்  கொண்ட யானை போல திருமங்கை ஆழ்வாருக்குத் தெரிகிறானாம்.

*தனியானையைத் தண்டமிழ்செய்த நீலன்*-  திருமங்கை ஆழ்வார் வெஞ்சினக் களிற்றே  என்கிறார் பெரிய திருமொழியில்.  இதன் பொருள் அவனை அடைய முடியாது என்றாலும் யானை போல் அவனைக் கண்டு களிக்கலாம் என்பதாகும்.. நீலன் என்பது திருமங்கை ஆழ்வாரின் ஒரு பெயராகும்.
=============

எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு   உலகில்  வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற்கு  உதவும் இராமானுசன் எம் உறுதுணையே.(3910)
*பொருள்* : அறிவதற்கு அரியதான வேதங்களை ஆயிரக்கணக்கான இனிய பாசுரங்களால் அறிமுகப்படுத்த உலகில் அவதரித்த சடகோபரை சிந்தையுள் பொருத்திக்கொண்ட மதுரகவி ஆழ்வாருடைய சிறப்பான குணங்களை உயிர்களெல்லாம் பாவம் செய்யாமல் இருக்க எடுத்துரைத்த ராமானுஜரே  எனக்கு உற்ற துணையாவார் .

*விளக்கம்* :
*எய்தற் கரிய மறைகளை* - எய்தல் என்றால் அடைதல் . வேதங்கள் அளவில் அடங்காதவைகள் எனவே இவைகளை முழுதும் அறிந்தவர் எவரும் இலர் . மேலும் இவைகளின் உண்மையான பொருளைத் தானே மறைத்துக்கொண்டிருப்பதாலும் வேதங்கள் மறைகள் எனப்படுகின்றன.

*ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு*- வேதம் அளவற்றது ; இன்தமிழ்  ஆயிரம் என்னும் அளவுடையது .
*தெரியச்  சொன்ன ஆயிரம்* என்று நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கூறுவார்கள். வேதத்தை குறிப்பிட்டவர்கள் மட்டுமே ஓத  முடியும். ஆனால்  நம்மாழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை அனைவரும் இனிது படிக்கலாம் .

*உலகில்  வரும் சடகோபனை* - மற்றவர்கள் முன்வினையின் காரணமாக உலகில் வந்து பிறந்தனர் . நம்மாழ்வாரோ உலகோர் உய்வதற்கென்றே அவதரித்தவர். திருவாய் மொழி என்ற ஆயிரம் பாசுரங்களை இயற்றியவர் . நான்கு  வேதங்களின் சுருக்கமாக திருவாய்மொழி அமைந்துள்ளது என நாம் அறிவோம்.

*சிந்தையுள்ளே பெய்தற் கிசையும் பெரியவர்* - நம்மாழ்வாரைக்  குருவாக கொண்ட மதுரகவி ஆழ்வார் புகழ் பாடும் பாசுரம் இது. இவர் சடகோபனை (நம்மாழ்வாரை ) தனது சிந்தையில் வைத்துப் போற்றியவர் . இத்தனைக்கும் மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை விடப் பெரியவர். இருப்பினும் குருவின் மேல் அளவிலாத பக்தி கொண்டு குருவை தவிர எம்பெருமானைக் கூடப் பாட  மாட்டேன் என்று " கண்ணி  நுண் சிறுத்தாம்பு " என்ற ஒப்பற்ற பாசுரங்களை குருவின் மேல் இயற்றி, புகழ் பெற்றவர் .  

*உயிர்களெல்லாம் உய்தற்கு  உதவும் இராமானுசன்* -மதுர கவி ஆழ்வாரின் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்த ராமானுஜர்
=============

நாளை அவதாரத்தை அனுபவிக்கலாம்...

உய்ய ஒரே வழி! உடையவர் திருவடி!!


கருத்துகள் இல்லை: