புதன், 18 டிசம்பர், 2013

பாவை உணர்த்தும் தத்துவம்!

துயில் நீக்கம் என்னும் ஆன்மிக மையங்கொண்ட அலைகள் இரு பாவைகளிலும் விரிகின்றன. சிறுமியர் தம் ஒத்த வயதினரை அதிகாலையில் எழுப்பி நீராட அழைக்கின்றனர். துயில் எழுப்புதலும் நீராட அழைத்தலும் இனிய ராகங்கள் துயில் எழுப்புதல் ஆன்மாவின் துயில் நீக்கத்தை உணர்த்துகின்றது. அருளாளர்கள் அனைவரும் அழைத்த அழைப்பின் சாரம் இதுவே.

உத்திஷ்டத ஜாக்ரத எழுமின்-விழிமின் எனும் உபநிடதக் குரலுக்கு மணிவாசகரும் ஆண்டாளும் தந்த இன்னமுதப் பாவைப் பாடல்களின் வாயில் நாடகப் பாங்கினது. உள்ளே துயில்வோர்; வாசலில் எழுப்புவோர். நேரமோ இருள் நீங்கும் அதிகாலை. எழுப்பும் குரலிலோ நட்புரிமை. சில போது எள்ளல், சிலபோது நகையாடல், சிலபோது செல்லக் கடிந்துரைகள் என எப்போதும் நேயமிகு நெருக்கம். வன்செவியோ நின் செவிதான்? எனக் கேட்பவள் திருவெம்பாவைத் தோழி. ஊமையோ அன்றிச் செவிடோ? (9) என வினபுபவள் திருப்பாவைத் தோழி. ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ? (4) என்பது திருவெம்பாவைக் குரல் எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? என்பது திருப்பாவை. நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்ற வள் நாணாமே போன திசை பகராய்! (6) என்பது திருவெம்பாவையின் செல்லக் கடிந்துரை. கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பர்கணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? (10) என்பது திருப்பாவையின் செல்லக் கடிந்துரை.

இவ்வழகிய உரையாடல் சித்திரங்கள் பாவைப் பாட்டுகளின் நுழைவாயில் வரவேற்பினிமைகள், அழகியல் ஆர்வமும் ஆன்மீகத் தேடலும் உடையவர் தம் உள்ளத்தை எளிதில் பிணிக்கும் எழில் கோலங்கள்!

நீராடல் சித்திரச் சோலையும்
நோன்பின் சித்திரக்கூடமும்.

இரு பாவைப் பாடல்களுக்கும் அமைந்த பொது மையம் ஆழமானது. எனினும் அவற்றிடையே நுட்பமான வேறுபட்ட பரிமாணங்களும் உள. நீராடலின் சித்திரம் திருவெம்பாவையிலும் நோன்பின் சித்திரம் திருப்பாவையிலும் விரிகின்றன. வாழ்க்கையை இனிய நோன்பின் புனித நீராடலாக அனுபவிக்கும் ஆழப் பார்வையின் விகசிப்பாகவே திருவெம்பாவை ஒளிர்கின்றது. இயற்கை அரங்கின் அழகெல்லாம் உருக்கி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. பொய்கையின் கருங்குவளையும் செந்தாமரையும் நீலமேனியாளையும் செந்தமிழ் வண்ணனையும் நினைவூட்ட; அங்கம் குருகினம் அம்மையின் கைவளையும் பின்னும் அரவம் அப்பனின் பாம்பணியும் நினைவூட்ட; தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தல் நீராடும் பொய்கையினைப் பரம்பொருட்சுனை ஆக்குகிறது.

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம் போதால்
அங்கம் குரு கினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடு

என ஆனந்தமடைகிறது பாடல் (திருவெம்பாவை 13)

இப்பார்வையின் பரவசத்தில் இன்னும் ஆழங்கால் படும்போது வாழ்க்கை அரங்கே இறைத் தடாகமாகின்றது. வாழும் வாழ்க்கையே பரமானந்த நீராடல் ஆகின்றது. பாய்ந்து பாய்ந்து - பாடிப் பாடி - குடைந்து குடைந்து- தோழியருடன் ஆனந்த நீராடும் வைகறை இனிமையே- திருவெம்பாவையின் ஞான மொழியில்-ஆன்மிக வாழ்க்கையின் அற்புதக் குறியீடாகின்றது. மாமத யானை மரத்தில் மறைந்திடும் அழகியல் நுட்பம் இது. பார் முதல் பூதம் பரத்தில் மறைந்திடும் ஆன்மவியல் பரவசம் இது.

வாழ்க்கையை உன்னதமான இறைக்காலத்தில் நோன்பின் சித்திரகூடமாகக் காணும் காட்சிக்கு இட்டுச் செல்கிறது. திருப்பாவை. மார்கழித் திங்கள்..... என்று தொடங்கி, நெய்யும் பாலும் நீக்கிடல், மலரும் மையும் ஒதுக்கிடல், செய்யத் தகாதன தவிர்த்தல் எனும் விரதநெறிகளைத் தருகிறது.

குள்ளக் குளிரக் குளிர்ந்து நீராடல்-இங்கு விரத அங்கமே துயில் எழுப்பும் குரலே நீட்டிக் கொள்கிறது. நந்தகோபன் மாளிகைக் காவலனை உணர்த்தி துயில் எழுப்பி-அவனைப் போற்றி மகிழ்கின்றது. கோதையின் பாவை. நோன்பின் நிறைவில் கோவிந்தன் அருளால் பெற்ற நல்லுடையும் பல்கலனும் அணியும் குதூகலம் அங்குண்டு. மூடநெய்பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்து உண்ணும் பேறு உண்டு. அனைத்துக்கும் மேலாகச் சிங்கமென வந்து கண்ணன் சிங்காதனமிருந்து அருளும் காட்சியும் பறை பெற்றுய்தல் எனும் கைங்கர்ய பிராப்தியின் ஆனந்தமும் சித்திரக்கூடச் சிகரக் காட்சியாகின்றன.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நங் காமங்கள் மாற்று என்பது வாழ்க்கையையே நோன்பாகக் காணும் கோதைப் பார்வை.
சிவமணமும் மால்மணுமும் திருவெம்பாவை சிவமணம் கமழ்வது. திருப்பாவை மால்மணம் கமழ்வது.

இறைமுகட்டின் புகழை இடையறாது ஒலிக்கும் இன்னருவி ஓசை பக்தி இலக்கியங்களின் பொதுமை. இறைப் புகழ் ஒன்றே பக்தர் நோக்கில் பொருள்சேர் புகழ் போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யாதலே நோக்கம். எனவே, என்னானாய் என்னானாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே எனும் நெகிழ்வொலியைப் பக்தி இலக்கியங்களிலும் பொதுப் பண்பாகவே காணலாம்.

நெஞ்சம் நெகிழ்தலே பக்திவயல்களின் வளமை ஆதாரம். இறைப் புகழ்த் தொடர்களே நெஞ்சம் நெகிழ்தலின் ஊற்றுக் கண்கள். இறைப் புகழ்த் தொடர்கள் தத்துவக் களத்திலோ-புராணக் களத்திலோ-உரிமைகெழுமிய உறவுப் பிணிப்பிலோ-அல்லது இவை மூன்றும் விரவிய இனிய சுரப்பிலோ கிளர்ந்தெழுகின்றன. இரு பாவைகளும் இவ்வகையான இறைப்புகழத் தொடர்களால் மனம் பிணிக்ககின்றன; நெகிழச் செய்கின்றன.

தேசன்- சிவலோகன்-தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசன்(2) என்றும்; ஆரழல் போல் செய்யா-வெண்ணீறாடி-மையார் தடங்கண் மடந்தை மணவாளன் (11) என்றும்; செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகன்-அங்கண் அரசு-அடியோங்கட்கு ஆரமுது(17) என்றும்; கண்ணாருமுதமாய் நின்றான்(18) என்றும்; என்னானை-என்னரையன்-இன்னமுது(7) என்றும், இன்னும் பல தொடர்களில் சிவமணம் தரும் திருவெம்பாவை.

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்-கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்றும், ஆழிமழைக்கண்ணன், மாயன்- மணிவண்ணன், சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்(14) என்றும் பலவாறு புகழ்கிறது திருப்பாவை.

மாயனை-மன்னு வடமதுரை மைந்தனை-தூய பெருநீர் யமுதில் தோன்றும் அணிவிளக்கை-தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை (5) என வேகப் படிக்கட்டேறித் துரத்தித் தொடர்வது தோகைத் தமிழ்.

மழைக் காட்சியின் மனக்குளிர்ச்சியில் இரு பாவைகளும் பெறும் பரவசமும் குறிக்கத்தக்கது. இறையருளின் சாசுவதக் குறியீடு மழை. விண்ணும் மண்ணும் இணையும் அழகிய மழைக் காட்சி அழகியலாரின் கலைக் கண்களுக்கு என்றுமே, எங்குமே பெருவிருந்து. உலக ஆன்மிக இலக்கியச் சொல்லோவிய அருங்காட்சியகத்துக்கு இருபாவைகளும் தந்த அற்புதச் சித்திரங்கள் இவை.

கார்மேகத்தில் உமையவள் திருமேனி அழகையும் மின்னலில் அவளது இடையொளிக்கீற்றையும் இடிமுழக்கில் அன்னையின் பொன்னஞ்சிலம்போசையினையும் காண்பது திருவெம்பாவை. ஆழிமழைக் கண்ணா! என்ற திருப்பாவைப் பாடலிலோ மேக நிறத்தில் திருமாலின் திருமேனியையும், மின்னல் சுழற்சியில் திருக்கைச் சக்கர அருள் சீற்றத்தையும் இடிமுழக்கத்தில் பாஞ்சஜன்யத்தின் பேரொலியையும், வீசும் மழைச்சரங்களில் சார்ங்கக் கணைப்பொழிவையும் கண்டு பரவசம் கொள்கிறது. (4)

மாணிக்கவாசகர் பக்தி நெகிழ்வில் ஞானக்காட்சிகளே ததும்புகின்றன. ஞானப் பார்வையின் சொற்சித்திரங்களே திருவெம்பாவையின் பரம்பொருட் காதல் அனுபவத்தை இனிமை செய்கின்றன. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடங்கண் மாதே, வளருதியோ! என்னும் தொடக்கமே ஆதியந்தமில்லாத அற்புதச் சோதியாகப் பரம்பொருளைச் சுவைக்கிறது.

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே எனும் போதும்(அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதலம் என) புராண மொழியில் தரப்படும் எழுநிலைத் தாழ்மன மண்டலங்களிலும் ஊடுருவி நீளும் பாதமலர் அழகும்; எவ்வகைப் பொருள் முடிவிலும் நீட்சி கொண்டு நிமிரும் போதார் புனைமுடி நலமும் ஞானச் சித்திரங்களாகவே அகம் நுழைகின்றன. அடிமுடி தேடிய அண்ணாமலைப் புராணத்தின் அற்புதச் சுட்டாக உணரினும் இவ்வரிகளின் ஞான மணத்தை உணரலாம்.

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும்பேர்த்துமப் பெற்றியனே!

என்னும் போதும் பரம்பொருளின் காலாதீதச் சித்திரமே மனம் கொள எடுத்துரைக்கப்படுகிறது. விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளை எனும் போதும்; ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன் எனும் போதும்; பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி, மண்ணாகி இத்தனையும் வேறாகி, எனும்போதும் ஞானச்சுவையே காதற் சுவையாகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம்; பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம். அழகியல் மீதூர்ந்த அமுதச் சித்திரங்களும், புராணக் கால்வழி எழும் புனைவுச் சித்திரங்களும் அவளது ஆழ்மனம் உணர்ந்த அற்புத சத்தியங்கள்; அவளது பாவனா சக்தியின் அற்புத தரிசனங்கள்.

கோதைக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயர்பாடி ஆகின்றது. தோழியர் ஆயர் கன்னிகையர் ஆகின்றனர். வடபத்ரசாயி திருக்கோயில் நந்தகோபன் மாளிகை ஆகின்றது. அங்கு எழுந்தருளியவன் ஆயர்பாடிக் கண்ணன் ஆகின்றான். இடையர்களது பேச்சும் இடையர் நடையும் இயல்பாகின்றன. தானே இடைச்சிறுமி ஆகின்றாள்.கோதை வாழ்வில் சீர்மல்கும் ஆய்ப்பாடி; அங்கு புழங்கும் நெய்யும் பாலும் விதவிலக்குப் பெறுகின்றன; சூழ நிற்பவை வாங்கக் குடம் நிரப்பும் வள்ளல் பெரும் பசுக்கள்; காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து ஆய்ச்சியர் மத்தினால் எழுப்பும் தயிர் அரவம் ஒலிக்கின்றது. எருமைகளைப் பனிப்புல்லுக்குச் சிறுமேய்ச்சலிடும் காட்சியும், எருமை தன் கன்றுக்கிரங்கிப் பால் சேரா நனைந்து இல்லம் சேறாகும் காட்சியும் அங்கு காணலாம். ஆயர்பாடி நாயகன் கண்ணன் ஆயர் குலத்து அணிவிளக்கு; அவனை ஓங்கி உலகளந்த உத்தமன் என்றும் பேய் முலை நஞ்சுண்டு- கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -வெள்ளதரவில் துயில் அமர்ந்த வித்து என்றும்; புள்ளின் வாய் கீண்டான் என்றும்; ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தான் என்றும் பலவாறு புனைந்து மகிழ்வாள் ஆண்டாள். புராணக் கீற்றுகள் மாணிக்கவாசகரிடம் ஞானச் சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். வாதவூரரும், வில்லிபுத்தூரியும் தந்த அழகிய பாவைப் பாட்டுகளில் நாம் காண்பதெல்லாம்-நாம் ருசிப்பதெல்லாம் ஆன்மிக அமுத வளமே!

கருத்துகள் இல்லை: