புதன், 18 டிசம்பர், 2013

ஆண்டாள் பாடிய பாசுரங்கள்!

ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது.

பூமியைக் காட்டிய தாயார்: ஆண்டாளின் இடது கையில் கல்காரபுஷ்பமும், கிளியும் உள்ளன. வலக்கையை தொங்க விட்டு பூமியைக் காட்டியபடி இருக்கிறாள். இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.

ஆண்டாளின் பிறபெயர்கள்: ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவைபாடிய செல்வி, வேயர்குல விளக்கு என்ற பெயர்கள் உண்டு.

வெள்ளிக்குறடு மண்டபம்: ஆண்டாள் சந்நிதி அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்வாள். இந்நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தால், திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

ராமன் வணங்கிய பெருமாள்: ராவணனுடன் போரிடச் சென்ற ராமன் வானர சேனையுடன் சேதுக்கரையை அடைந்தார். கடலைக் கடந்து இலங்கை செல்ல வேண்டி கடலரசனை நோக்கி நாணல் புல்லின் மீது படுத்தபடி மூன்று நாட்கள் தியானத்தில் ஆழ்ந்தார். அந்த இடமே திருப்புல்லணை என்றானது. தற்போது திருப்புல்லாணி எனப்படுகிறது. ஆதிஜெகந்நாதப்பெருமாள் என்பது இவரது திருநாமம். ராமன் வாழ்ந்த திரேதாயுகத்திற்கும் முந்தியவர். இவருக்கு பெரியபெருமாள் என்ற பெயர் உண்டு. சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். ராவண சம்ஹாரத்திற்கு முன் ஜெகந்நாதரை வழிபட்ட ராமன், வெற்றி பெற்று அயோத்தி திரும்பும் போது மீண்டும் இங்கு வந்தார். இந்தக் கோயிலை மார்கழி மாதம் வழிபட்டால், இரட் டிப்பு பலன் கிடைக்கும் என்பர்.

கருத்துகள் இல்லை: