புதன், 30 அக்டோபர், 2013

சாய்பாபா -பகுதி 9

சத்யா நடந்தே கமலாப்பூர் வந்து சேர்ந்து விட்டான்.எந்த வகையிலும் அவன் தன் பெற்றோரை சிரமப்படுத்த நினைத்ததில்லை. இந்தக்கால மாணவர்கள் சத்யசாய்பாபாவிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அவரது அண்ணன் சேஷமராஜூ பெண் எடுத்த ஊர் தான் கமலாப்பூர். தன் மாமனார் வீட்டில், சத்யாவை தங்கச் செய்து உயர்நிலைக் கல்விக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு சாய்பாபா அந்த வீட்டாரிடம் பணஉதவி எதுவும் கேட்டதில்லை. அதுபோல் தன் நண்பர்களிடமும் பணம் கேட்டதில்லை. அவரது வாழ்நாளில் சிறு பையனாக இருந்தபோதே உழைக்கத் துவங்கி விட்டார்.சில திறமைகள் மனிதர்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. குறிப்பாக இளமைப்பருவத்தில், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதை செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுவதால் தான் நமது மாணவர்கள் முன்னேறுவதில்லை. அமெரிக்காவில் மாணவர்கள் கார் துடைத்து சம்பாதிக்கிறார்கள், ஜப்பானில் ஓய்வு நேரத்தில் வேலைக்கு போகிறார்கள், என்று புத்தகங்களில் படிக்கிறார்களே தவிர, நாமும் அப்படி செய்தால் என்ன என்று பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. பெற்றோர்களும் அதை கவுரவக்குறைவாக கருதுகிறார்கள்.சத்யா அப்படியில்லை...அவர் இளமையிலேயே தன் திறமையால் சிறுசிறு வேலைகளைச் செய்தார். அதில் கிடைத்த பணத்தில் படித்தார். அண்ணன் சேஷமராஜூ திடீரென அனந்தப்பூருக்கு படிக்க சென்று விட்டார். தெலுங்கில் வித்வான் பட்டம் பெறுவது அவரது நோக்கம். எனவே படிப்பு நீங்கலான மற்ற செலவுகளுக்கு சத்யாவுக்கு பணம் கிடைப்பதில்லை. சத்யாவும் அனாவசியமாக செலவழிப்பதை விரும்பவில்லை. சிறுவயதில் மனஅடக்கம் இருப்பது கடினம். குழந்தைகளுக்கு எதைப்பார்த்தாலும் வாங்க வேண்டுமென்ற எண்ணமே இருக்கும். ஆனால் சத்யா அப்படி எதையும் விரும்பவில்லை. மனக்கட்டுப்பாடு மனிதனை வாழ்க்கையில் உயர்த்துகிறது. இதை சிறு வயதிலேயே நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை, மானிடராகப் பிறந்த சாய்பாபா, தன் வாழ்க்கையின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.இதரவகை செலவுகளை, சத்யாவே சம்பாதிக்க துவங்கி விட்டான். ஒருமுறை அவன், காகிதத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். அதை பின்பக்கமாக வந்த நண்பன் ஒருவன் படித்து விட்டு சிரித்தான்.

சத்யா! நீ பாட்டெல்லாம் கூட எழுதுவியா?சத்யா அவன் வந்ததை அப்போது தான் அறிந்தவனாய், உம்! அப்பப்ப பாட்டு எழுதுவேன். இது குடைப்பாட்டு. இங்குள்ள வியாபாரி கோட்டை சுப்பண்ணா ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார். அதாவது தன் கடைமுன்பு குழந்தைகளை நிறுத்தி, தன் கடையிலுள்ள பொம்மை, குடை, பேன்சி பொருட்களைப் பற்றி பாட வைக்கிறார். அவர்கள் பாட நல்ல பாட்டாக நான் எழுதி கொடுக்கிறேன். இவை விளம்பரப் பாடல்கள். இதை எழுதினால், அவர் எனக்கு பணமோ, பொருளோ தருவார். இதை வைத்து நான் பிற செலவுகளை கவனித்துக் கொள்கிறேன், என்றான்.மகான்கள் சிறுவயது முதலே மானிடர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்கள். நமது மாணவர்களும் தங்களால் முடிந்த வேலையை செய்து, தங்கள் ஓராண்டு படிப்புச் செலவை தாங்களே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இந்தக்காலத்தில் எவ்வளவோ சிறு வேலைகள் காத்துக் கிடக்கின்றன. மாணவர்கள் சத்யசாயியைப் போல வாழ்வில் முன்னேற உறுதி எடுக்க வேண்டும். இதற்கு சாயியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.சத்யா சிறுவயதில் பஜனைப் பாடல்கள் மட்டுமல்ல....தன்னை அன்போடு ஊட்டி வளர்த்த சுப்பம்மாவின் கணவர் பற்றியும் கூட ஒரு பாட்டு எழுதினான். அவர் கிராமகர்ணம் என்பதால் தோரணைக்காக பெரிய மீசை வைத்திருந்தார். அதைக் கேலி செய்து சத்யா ஒரு பாட்டுப் பாடினான். அதோடு அவர் மீசையை எடுத்து விட்டார். இப்படி சத்யா எழுதிய குறும்புப்பாடல்களும் அதிகம்.குழந்தைகள் குறும்புத்தனமாக பேசுவார்கள். ஏதாவது படம் வரைந்து கிறுக்கித் தள்ளுவார்கள். இதை நாம் தடுக்கக்கூடாது. காரணம், அவர்கள் தங்களை மேதைகள் போல மனதில் கருதி செய்பவை இவை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் இந்த கிறுக்கல் படைப்புகள் மிக உயர்ந்தது. இதை தடுக்காமல் இருந்தால் பத்தில் ஒருவர் சிறந்த படைப்பாளிகளாக வருவர் என்பது உறுதி. சத்யா சிறுவயதில் குறும்பாக எழுதிய பாடல்கள், காலப்போக்கில் அவனது கற்பனைத் திறனை விளம்பரப் பாடல்கள் எழுதும் அளவு உயர்த்தி விட்டது. அது சிறு வருமானத்தையும் தந்தது.

அன்று மாலையில் சத்யாவின் குடைப்பாட்டு ஊரில் பிரபலமானது.எடுத்து விரித்து பிரிக்கலாம், மடக்கி கையில் சுருட்டலாம், என எதுகை மோனையுடன் எழுதி இருந்ததைக் கேட்டு, மக்கள் அந்தப்பாட்டில் மனம் லயித்தனர். கோட்டை சுப்பண்ணாவுக்கு வியாபாரமும் நன்றாக இருந்தது.நாட்கள் வேகமாக நகர்ந்தன. யாருமே எதிர்பாராத பொழுதாக அன்று கமலாப்பூருக்கு விடிந்தது. தெய்வம் சில நாட்கள் புட்டபர்த்தி கிராமத்தில் இருந்தது. சில காலம் கமலாப்பூர் என்ற சிறு நகரத்தில் இருந்தது. இப்போது அண்ணன் சேஷமராஜூவுக்கு வித்வான் படிப்பு முடிந்து, உரவகொண்டா என்ற ஊரில் வேலை கிடைத்தது. அதுவும் ஆசிரியர் பணி. தான் பணியாற்றும் பள்ளியிலேயே தம்பியையும் சேர்த்துவிட அவர் முடிவு செய்து விட்டார்.சத்யாவுக்கு வேதனை. புட்டபர்த்தியிலுள்ள நண்பர்களைப் பிரிந்தாயிற்று. இன்று கமலாப்பூர் நண்பர்களையும் விட்டு பிரிய வேண்டிய சூழல் உருவாகி விட்டது. விளையாட்டு ஆசிரியர் இந்தத் தகவலைக் கேட்டு அழுதே விட்டார். ஊர் முக்கிய பிரமுகரின் மகன்கள் இருவரும், சத்யாவைக் கட்டிப்பிடித்து அழுதனர்.சத்யா...எங்க அப்பா இந்த ஊர் சிரஸ்தார். எங்ககிட்ட நெறய பணம் இருக்கு. ஆனா உன்னைப் போல நல்ல நண்பன் இல்லை. நீ இங்கேயே படி, எங்களை விட்டு போய் விடாதே, எனக்கதறினர்.சத்யா அமைதியாக அவர்களைத் தேற்றி, உங்கள் பணத்தில் படிப்பதை என் அண்ணனோ, நானோ விரும்பமாட்டோம். இங்கேயே தனியாகத் தங்கிப் படிப்பதை அம்மாவும் விரும்பமாட்டாள். தங்கிப்படிக்கும் அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை, என்றான். அவன் வாய் அப்படி சொன்னதே ஒழிய, அந்த நண்பர்களைப் பிரிய சத்யாவுக்கும் விருப்பமில்லை. ஆனாலும், பொங்கி வந்த கண்ணீரை இமைகளிலிருந்து கீழே விழாமல் அடக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.உரவுகொண்டா நகரம் சத்யாவுடன் உறவு கொள்ள தயாராக இருந்தது. ஆனால் அவன் படிக்கப் போகும் பள்ளியிலோ, ஆசிரியர்களுக்குள் ஒரு பெரிய தகராறே நடந்து கொண்டிருந்தது.தலைமை ஆசிரியரின் அறையில், சார்..அந்த சத்யாங்கிற பையன் நம்ம ஸ்கூலுக்கு வந்தா...என ஆரம்பித்தார் ஒரு ஆசிரியர். அதைக் கேட்டு மற்ற ஆசிரியர்கள் கொதித்தார்கள். முடியாது, முடியாது...அதெல்லாம் முடியாது....அந்தப் பையனை.... என்று கூச்சல் தொடர்ந்தது. அங்கு என்ன தான் நடந்தது?அங்கு பாபாவை சேர்க்கக்கூடாது என்ற விவாதம் ஏதும் நடக்கவில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் அவர் ஒரு தெய்வப்பிறவி என்பதை உணர்ந்து தங்கள் வகுப்பிற்கே அவரை அனுப்ப வேண்டுமென தலைமை ஆசிரியரிடம் போராடிக் கொண்டிருந்தனர். தலைமை ஆசிரியர் அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில், அந்தப் பையன் தெய்வம் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் தெய்வத்திடம் தானே முடிவை விட வேண்டும். அவன் விரும்பும் வகுப்புக்குச் செல்லட்டும், என்றார். ஒருவழியாக பாபா அங்கு வந்து சேர எல்லாரும் ஒற்றுமையாக அவரை வரவேற்றனர். அந்தப் பள்ளியிலேயே மிகச்சிறந்த மாணவராக அவர் விளங்கினார். அவரே அங்கு எழுதி நடத்திய நாடகம், பஜனை முதலானவை மாணவர்களையும், ஊர் மக்களையும் ஈர்த்தன. சிலகாலம் கழித்து புட்டபர்த்திக்கே திரும்பிய அவர், ஜிலேபி வரவழைத்துக் கொடுப்பது, உதிரிப்பூக்களை வீசி எறிந்து சாய்பாபா என தெ<லுங்கில் தனது பெயர் வரச்செய்வது என்று சித்து வேலைகளையும் செய்தார்.இந்த விஷயங்கள் பாபாவின் தந்தை வெங்கப்பராஜுவுக்கு தெரிய வர, அவர் தன் பெரியமகன் சேஷமராஜுவுக்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தினார். அவரும் பாபாவைக் கண்டித்து தன்னுடன் உரவுகொண்டாவுக்கே மீண்டும் அழைத்துச் சென்று விட்டார். ஒரு சமயம் ஹம்பி நகரிலுள்ள விருபாக்ஷர் கோயிலுக்கு அவர்கள் சென்றனர். அங்குள்ள கருவறைக்குள் பாபா சென்று விட்டார். அர்ச்சகர் அவரைக் கடுமையாகத் திட்டினார். வந்த பக்தர்களும் முகம் சுளித்தனர். ஆனால், திடீரென கருவறையில் இருந்து ஒளி வள்ளம் எழுந்தது கண்டு அவர்கள் அதிசயித்தனர். இன்னொரு சமயம் பாபாவின் தலையின் பின்பக்கம் ஒளிவெள்ளம் எழுந்தது கண்டு அவரது அண்ணியார் அதிசயப் பட்டார். ஆரம்பத்தில் அவரது அண்ணியாரும் அவர் தெய்வப்பிறவி என்பதை நம்ப மறுத்தார். இந்தக் காட்சி அவரது மனதை மாற்றிவிட்டது. காலவெள்ளத்தில் அவரது சகோதரரும் அவரது செயல்பாடுகள், முகத்தில் ஏற்பட்ட ஒளி ஆகியவற்றை நேரில் கண்டு அவரைத் தெய்வமென்று நம்பினார். போதாக்குறைக்கு அவ்வூரில் வசித்த நாராயண சாஸ்திரி என்ற பிரபல மனிதர், இளைஞர் என்றும் பாராமல் பாபாவின் கால்களில் விழுந்து நீயே தெய்வம் என்று கூறினார். இதன்பிறகு உரவுகொண்டாவிலுள்ள சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தோட்டத்தில் அமர்ந்திருந்த பாபா, தலையின் பின்பகுதியில் ஒளிவட்டத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்ட மக்களெல்லாம் அவரை வணங்கினர்.

என்னதான் தெய்வப்பிறவி போல தோன்றினாலும், சாய்பாபாவின் போக்கு சேஷமராஜுவுக்கு பிடிக்கவில்லை. அவர் உடனே தன் தாய் தந்தையை வரவழைத்தார். அவர்கள் ஊருக்குள் வந்தார்களோ இல்லையோ, தெய்வக்குழந்தையை எங்களுக்கு தந்த பெற்றோர் வாழ்க என்று அங்கு நின்றவர்கள் கோஷமிட்டனர். பாபாவும் உணர்வு நிலையிலேயே இல்லை, பெற்றோர்களைக் கவனிக்காமலே பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பாபாவின் அண்ணன் சேஷமராஜு பெற்றோரை பாபா அருகில் அழைத்துச்சென்று,சத்யா! இவர்களை யார் தெரிகிறதா? என்றார்.பாபா அவர்களைப் பார்த்து, இவர்கள் மாயைகள் என்றார்.ஈஸ்வரம்மா கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்.சத்யா! நீ நிஜத்தில் தெய்வமாகவே இருந்தாலும், எங்களை மாயை என எப்படி சொல்லலாம்? பற்றற்ற நிலைக்கு நீ வேண்டுமானால் போகலாம். பெற்ற எங்கள் வயிறு தாங்குமா? என்றார்.மேலும், மகனின் பேச்சால் அதிர்ந்து போன அவர், என்னங்க! சத்யாவை புட்டபர்த்திக்கே கூட்டிச் சென்று விடுவோம், என கணவரிடம் அழுதபடியே சொன்னார். வெங்கப்பராஜு மனைவியைத் தேற்றி,ஈஸ்வரா! நானும் அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனால், இங்கு வந்து பார்த்தபின் தானே, அவனுக்கு கிடைக்கும் மாலை மரியாதை, வழிபாடு ஆகியவையெல்லாம் தெரிகிறது. இனி அவன் நம் பிள்ளையல்ல! உலகத்துக்குச் சொந்தமாகி விட்டான், என்றார்.யார் என்ன சொன்னாலும் பெற்றவளின் மனம் கேட்குமா? ஈஸ்வரம்மா மகனிடம்,சத்யா! உன்னை இந்த சந்நியாசி கோலத்தில் பார்க்க மனம் சகிக்கலையடா! வா! உன் பாசத்துக்குரிய சொந்தமான இந்த தாயைப் பார், என்றார்.ஆனால் பாபா,இந்த உலகில் யார் யாருக்கு சொந்தம்? என்றுதிருப்பிக்கேட்டார். அந்த சமயத்தில் வந்த போட்டோகிராபர் ஒருவர்,அம்மா! அவரை வற்புறுத்தாதீர்கள். நேற்று நான் அவரை ஒரு படம் எடுத்தேன். பிரின்ட் போட்டுப் பார்த்தால் ஷிர்டிபாபாவின் படம் இருக்கிறது. அவர் அவரது அவதாரம், என்றார்.பின்னர் வெங்கப்பராஜு மனைவியிடம்,ஈஸ்வரா! கலங்காதே! அவன் இங்கே தானே இருக்கிறான்! அவனைத் தெய்வமென மக்கள் கொண்டாடுவதும் நமக்குப் பெருமை தானே! என்றார். அதன்பிறகு அம்மா வருகில் வரும்போதெல்லாம்,இதோ! மாயை வந்துவிட்டது என்பார்.

பிள்ளையின் இந்தச் சொல் அம்மாவுக்கு வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் திடீரென, அம்மா பசிக்கிறது, என்றார். ஈஸ்வரம்மா மகிழ்ந்தார். மகன் பழையநிலைக்கு திரும்பி விட்டதாக நினைத்தார். வகைவகையாக உணவு பரிமாறினார். சாய்பாபா அவற்றை மொத்தமாகப் பிசைந்தார். மூன்று உருண்டையாக உருட்டி, அவற்றை எடுத்துத்தரும்படி கேட்டார். அம்மா எடுத்துக் கொடுக்க அதைச் சாப்பிட்டார். உடனே தாய் அவரிடம்,சத்யா! நீ உன் விருப்பப்படியே இவ்வாறே பஜனை, சத்சங்கம் என்றே இரு! அதில் நாங்கள் தலையிடமாட்டோம். ஆனால், புட்டபர்த்திக்கு வந்து இதைச் செய், என்றார். இதற்கு பாபா மறுப்பேதும் சொல்லவில்லை. அவர்களுடன் புறப்பட்டும் விட்டார்.பாபாவின் புகழைக் கேள்விப்பட்டிருந்த உள்ளூர் மக்கள் அவரை வரவேற்க காத்து நின்றனர். அவர்களில் ஒருவர் சுப்பம்மா. பாபாவை இளமையில் வளர்த்தவர். தன் வீட்டுக்கு பாபா வரமாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்தார். பாபா ஊரில் வந்து இறங்கி தன் வீட்டுக்கு முதலிலும், பின்பு தனது தாய்மாமனார் வீட்டிற்கும் சென்றார். ஆனால், அங்கெல்லாம் குடும்பச்சண்டைகள் நிகழ்ந்தன. முற்றும் துறந்தால் அவரால் அதையெல்லாம் பொறுக்க முடியவில்லை. சுப்பம்மா வீட்டிற்கு சென்று நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.ஊர்மக்கள் அவரை பாபா என்று அழைத்தனர். சில பக்தர்கள் அவரிடம்,நீங்கள் தெய்வம் என்றால் மனிதவடிவில் ஏன் லீலை புரிகிறீர்கள்? என்றனர். அவர்களிடம்,நான் சங்கு சக்கரத்துடன் காட்சியளித்தால் நீங்கள் என்னை நம்பத்தயாரா? அப்படிச்செய்தால் ஏதோ நாடக வேடதாரி என்று தானே சொல்வீர்கள்! என திருப்பிக்கேட்டார்.சாயி எங்காவது இமயமலை பக்கம் போய்விடுவாரோ என பலரும் கருதினர். ஆனால், அவர் இன்று வரை புட்டபர்த்தியிலேயே தங்கி அந்த கிராமத்தை உலகப்புகழ் பெற்றதாக்கி விட்டார். பல சமுதாயப்பணிகளை மக்களுக்காக ஆற்றி வருகிறார். சாய்ராம்!
                                                              முற்றும்.

கருத்துகள் இல்லை: