புதன், 30 அக்டோபர், 2013

24.புலிப்பாணி

நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன். உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படுத்தி சென்றார். அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட புலிப்பாணி அவரது சீடரானார். அவரிடம் சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் பாரதத்துக்கு வந்து சேர்ந்தனர்.போகர் பழநியில் தங்கிய போது புலிப்பாணியும் உடன் தங்கினார். ஒருமுறை போகர் சித்தர் தாகத்துடன் ஒரு காட்டில் தவித்த போது, புலிப்பாணி தன் புலியின்மீது ஏறிச் சென்றார். தண்ணீரை பாணி என்றும் வேற்றுமொழியில் சொல்வதுண்டு. புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று இருமொ ழிகளையும் இணைத்து அவருக்கு பெயர் வந்ததாகவும், அவர் சீனாவில் பிறந்தவர் என்பதால் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.புலிப்பாணி புலியில் ஏறி தண்ணீர் கொண்டு வந்ததை நிரூபிக்கும் பாடல் ஒன்றை போகரே எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்!

ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே அப்பனே வேங்கை தனில்  ஏறிக்கொண்டு தாழ்ந்திடவே ஜலம் திரவ்விப்புனிதவானும் சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன் என்ற பாடல் புலிப்பாணியையே குறிப்பதாகச் சொல்கிறார்கள். முருகன் சிலை செய்ய மூலிகைகளைக் கொண்டு வரச்சொல்வதின் நோக்கத்தை புலிப்பாணி புரிந்து கொண்டார். எவ்வளவு அருமையான யோசனை! என் குருநாதருக்கு தான் இந்த மக்கள் மீது எவ்வளவு கரிசனம் இருக்கிறது! ஆனால், குருநாதர் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகைகளும் விஷத்தன்மை கொண்டவை ஆயிற்றே! விஷ மூலிகைகள் எப்படி மனிதனைக் குணப்படுத்தும்! மாறாக, அவை ஆளையல்லவா கொன்று விடும், என்ற சந்தேகமும் இருந்தது.தன் சந்தேகத்தை மிகுந்த பணிவுடன் கேட்டார் புலிப்பாணி. மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை மனதுக்குள் பாராட்டிய போக சித்தர், புலிப்பாணி! கவலை கொள்ளாதே. நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் பவ பாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும். இந்த மருந்தை நேரடியாகச் சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நவபாஷாணத்தை சிலையாக வடித்து, அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்கு பதிலாக மருத்துவத்தன்மை பெறும், மேலும், நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே போதும், மனிதன் புத்துணர்வு பெறுவான். இதோ! இந்த பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில்  மக்கள் வணங்கும் வகையில் பிரதிஷ்டை செய்வேன். அவன் அருளால் உலகம் செழிக்கும். எக்காலமும் வற்றாத மக்கள் வெள்ளம் இந்தக் கோயிலுக்கு வரும். பழநி முருகனின் ஆணையோடு தான் இந்தச் சிலையைச் செய்கிறேன். எனவே மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது, என்றார். புலிப்பாணி சித்தர் மகிழ்ச்சியடைந்தார். குருநாதர் சொன்னது போலவே புலியில் ஏறிச்சென்று ஒன்பது வகை மூலிகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார். பழநிக்குச் செல்பவர்கள், போகரை மட்டுமின்றி புலிப்பாணி சித்தரையும் நிச்சயமாக மனதில் நினைக்க வேண்டும். போகர், இவ்வூர் முருகன் சிலையைச் செய்யக் காரணமாக இருந்தவர் இவரே! போகர் நினைத்தபடி நவபாஷாண சிலை உருவாயிற்று.

ஒருநாள் புலிப்பாணியை அழைத்த போகர், புலிப்பாணி! நான் சீனதேசம் செல்கிறேன். இனி இங்கு எப்போது வருவேன் எனத்தெரியாது. நீயே இந்த முருகன் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என சொன்னார். புலிப்பாணியும் அவரது கட்டளையை ஏற்று, சிலையின் காவலர் ஆனார்.ஒருமுறை. சீனதேசத்தில் இருந்து வந்த சிலர், உன் குருநாதர் போகர், பெண்ணின்பத்தில் சிக்கி, தவ வலிமையை இழந்து விட்டார், என்றனர். அதிர்ச்சிய டைந்த புலிப்பாணி தவ சிரேஷ்டராகிய தன் குருவைக் காப் பாற்ற சீனா சென்றார். அவரை அங்கிருந்து பழநிக்கு அழைத்து வந்து, மீண்டும் தவ வலிமை பெறுவதற்குரிய வழிகளைச் செய்தார். போகருக்கே ஞானம் வழங்கிய பெருமை புலிப்பாணிக்கு உண்டு. சில நாட்களில் போகர் இறந்து விடவே, அவரது சமாதிக்கு பூஜை செய்யும் பணியை அவர் கவனித்தார். சமாதிக்கு பூஜை செய்பவர், முருகனின் பாதுகாவலராக இருக்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, எங்கள் குருவுக்கு குரு முருகப்பெருமான், எனக்கு குரு போகர் சித்தர். நான் அவரது சமாதியையே பூஜிப்பதையே பெருமையாகக் கருதுகிறேன், என அவர்களிடம் தன் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தன் வாழ்நாளில் பலரை மூலிகை வைத்தியம் மூலம் காப்பாற்றிய பெருமை உண்டு. நோயுற்றவர்கள் புலிப்பாணி சித்தரை மனதார நினைத்தால், அவரே நேரில் வந்து மருந்து தருவதாக ஐதீகம். புலிப்பாணி சித்தரும் தன் குரு போகரைப் போலவே பழநியிலேயே சமாதியாகி விட்டதாக தகவல் உள்ளது.

நூல்:

புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்
புலிப்பாணி வைத்தியம்  500
புலிப்பாணி ஜோதிடம்  300
புலிப்பாணி ஜாலம்  325
புலிப்பாணி வைத்திய சூத்திரம்  200
புலிப்பாணி பூஜாவிதி  50
புலிப்பாணி சண்முக பூஜை  30
புலிப்பாணி சிமிழ் வித்தை  25
புலிப்பாணி சூத்திர ஞானம்  12
புலிப்பாணி சூத்திரம்  9

தியானச் செய்யுள்:

மகாசித்தருக்கே மருத்துவம் சொன்ன
மரவுரி சித்தரே
புலிவாகனம் கொண்ட
மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே
எம் கலிப்பாவம் தீர்க்க
உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.

காலம்: தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: