புதன், 30 அக்டோபர், 2013

23.சிவவாக்கியர்

பெண்ணே! இந்த மணலையும், கசப்புமிக்க இந்த சுரைக்காயை கசப்பு நீக்கி ருசியாகவும் சமைத்து தர உன்னால் முடியுமா? சிவவாக்கியர், அந்த குறவர் குலப்பெண்ணிடம் கேட்டார். அவள் பதிலேதும் பேசவில்லை. அவர் கொடுத்ததை பயபக்தியுடன் கைநீட்டி வாங்கினாள். அடுப்பு பற்ற வைத்தாள். மணலை அரிசி களைவது போல களைந்தாள். மண் பானையில் போட்டாள். குறிப்பிட்ட நேரத்திலேயே அது சாதமாகி விட்டது. அடுத்து சுரைக்காயை சமைத்தாள். கறி மிக ருசியாக இருந்தது. கசப்புத்தன்மை அறவே இல்லை. பெரியவர்கள் எதையாவது சொன்னால், ஏன் ஏதென்று கேட்காமல் செய்வது அக்காலத்தில் சிறியவர்களின் வழக்கமாக இருந்தது. அதிலும், இவரோ தவசிரேஷ்டர் போல இருக்கிறார். இளவயது வேறு. முகத்தில் தேஜஸ் ஜொலிக்கிறது. இந்த சிவவாக்கிய சித்தர் பிறந்த இடம் பற்றிய தகவல் இல்லை என்றாலும், இவர் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பது மட்டும் சில நூல்களில் இருந்து தெரிய வருகிறது. பிறக்கும் போதே குழந்தை சிவவாக்கியர் சிவசிவ என்று சொன்னாராம். சிவன் என்ற வாக்கியத்தைச் சொன்னதால் சிவவாக்கியர் என்று இவரது பெற்றோர் பெயர் வைத்து விட்டனர். சிவன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இவர், சிவபெருமானை நமசிவாய என்று சொல்லி வழிபடுபவர்களின் உயிர் பிரிந்து விட்டால் கூட மீண்டும் உயிர் பிழைத்து விடுவார் என்ற அடிப்படையில் ஒரு பாடல் பாடியுள்ளார். சிவபித்தரான இவர், சித்தர்களைப் பற்றி அறிந்தார். யாராவது ஒரு சித்தரை தனது குருவாக அடைய வேண்டும் எனக்கருதி காசிக்கு சென்று விட்டார். அங்கே ஒரு சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அந்த சித்தர் காசிக்கு வரும் பக்தர்களின் காலணி பழுதாகி விட்டால், அதை சரி செய்து கொடுப்பார். சிலருக்கு, அவர்களது காலின் அளவைப் பார்த்தே காலணி செய்து கொடுத்து விடுவார். அந்தளவுக்கு தொழிலில் திறமைசாலி. காலணி செய்யும் தொழில் செய்தாலும், பிராணாயமம், தியானம், யோகா என அவருக்குத் தெரியாத வித்தைகள் இல்லை. அவர் தியானத்தில் ஆழ்ந்து போனால், அவராக எழுந்தால் தான் உண்டு.

யாராலும் அவ்வளவு எளிதில் அவரை எழுப்ப முடியாது. தியானத்தில் திறமைசாலி என காசி மக்களிடையே அவருக்கு பெயர் இருந்தாலும், அவர் செய்யும் தொழிலால் பெரும்பாலோர் அவருக்கு மரியாதை செய்வதில்லை. ஒரு சிலர் அவரைக் கடவுள் போல நினைத்து ஆசி பெற்றுச் செல்வார்கள். அவரைப் பற்றி கேள்விப்பட்டார் சிவவாக்கியர். அவரிடம் சென்று, குருவே! தங்கள் மாணவன் வந்திருக்கிறேன், தங்களுக்கு பணிவிடை செய்வதில் எனக்கு ஆனந்தம். தங்கள் மூலமாக இறைவனைக் காண விரும்புகிறேன், என்றார். சிவவாக்கியரை சித்தர் ஒரு பலகையில் அமரச்சொன்னார். அவ்வளவுதான்! பலகை பறக்கத் தொடங்கி விட்டது. ஏதோ ஒரு பரவசம் சிவவாக்கியரை ஆட்கொண்டது. உயர உயரப் பறந்தார். வானமண்டலத்தை அடைந்து விட்டது போல் ஒரு உணர்வு. அங்கே தான் தெய்வங்கள் இருக்கும் என்பார்களே! தெய்வங் களைப் பார்க்க வேண்டும் என்று சித்தரிடம் ஒரு வார்த்தை தானே சொன்னோம். அவர் தேவலோகத் திற்கே கூட்டி வந்து விட்டாரே! நட்சத்திர மண்டலங்களின் மத்தியில் மிதந்தார் சிவவாக்கியர். தெய்வங்கள் யாராவது கண்ணில் படுகிறார்களா என ஆராய்ந்தார். சற்று நேரமானது. கடவுளைக் காண்பதற்குள்ளாகவே பலகை வேகமாக கீழ் நோக்கி இறங்கியது. சிவவாக்கியரின் உடல் நடுங்கியது. கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் வேறு. அந்த உணர்வு திடீரென நின்றது. சிவவாக்கியர் கண் திறந்தார். இப்போது உடலில் பரவசநிலையும் இல்லை. பலகை மேலே பறக்கவுமில்லை. இருந்த இடத்தில் அப்படியே இருந்தார். நான் நிஜமாகவே வானமண்டலத்திற்கு பறந்தேனா சுவாமி? என்றார். இல்லையே! நீ வந்ததில் இருந்தே என் முன்னால் தான் இருக்கிறாய்? என்ற சித்தர், சிவவாக்கியா! நீ கடவுளைக் காண ஆசைப்படுகிறாய். அது எளிதான காரியமல்ல. அதே நேரம், இப்போது பலகையில் பறப்பது போல உணர்ந்தாயே! அந்த உணர்வு நிரந்தரமாக உடலில் தங்கினால் நீ கடவுளை  காணலாம்.

 அதே நேரம் உனக்கு அதற்குரிய பக்குவம் வரவில்லை. நான் ஒரு பரிட்சை வைக்கிறேன். இந்த தேர்வில் தேறினால், நீ கடவுளைப் பார்த்து விடலாம், என்றார்.என்ன தேர்வு? என ஆவலுடன் சிவவாக்கியர் கேட்க, கங்கைக்குச் செல்.செருப்பு தயாரித்து இங்கே நான் சேர்த்து வைத்துள்ள இந்தக் காசை வாங்கிச்செல். என் குருநாதரின் காணிக்கை இது, என அவளிடம் சொல். அவள் வாங்கிக்கொள்வாள், வரும் போது இந்த தோல்பையில் கங்காதீர்த்தம் கொண்டு வா, என்று சொல்லி அனுப்பி வைத்தார். சிவவாக்கியரும் கங்கையிடம் சென்று, தாயே! என் குருநாதரின் இந்த காணிக்கையை ஏற்றுக்கொள், என்றார்.கங்கைக்குள் இருந்து இரண்டு வளையல் அணிந்த கரங்கள் வெளிப்பட்டன. சிவவாக்கியர் காசை அந்தக் கைகளில் வைத்தார். அதை வாங்கியதும் கைகள் தண்ணீருக்குள் போய் விட்டன. தோல்பையில் தண்ணீரை முகர்ந்து வந்த சிவவாக்கியரிடம் சித்தர், சிவவாக்கியா! நீ இந்த பையிலுள்ள கங்காதீர்த்தத்திடம், நான் கொடுத்த காசை திருப்பிக் கேள். அவள் தந்ததும் வாங்கிக் கொள், என்றார். சிவவாக்கியர் ஏன் எதற்கென்று குருவிடம் கேட்காமல், அவர் சொன்னது போலவே காசைக் கேட்டார். தோல் பைக்குள் உள்ள தீர்த்தத்தில் இருந்து எழுந்த கைகள் பெற்ற பணத்தை அப்படியே தந்து விட்டன. காசைக் கொடுக்கும் போதும், பெறும்போதும் சிவவாக்கியரின் மனதில் சிறு சலனம் ஏற்பட்டதை சித்தர் கவனித்து விட்டார். சிவவாக்கியா! அந்தக் கைகளை ஏன் அப்படியொரு பார்வை பார்த்தாய்? உனக்கு பெண்ணாசை இருக்கிறது. அதனால் தான் அந்தக் கைகளை அப்படி ரசித்தாய்! நான் சொல்வது சரிதானே! என்றதும், சிவவாக்கியருக்கு தூக்கி வாரிப்போட்டது.

அவர் தலை குனிந்து நின்றார்.சித்தர் அவரிடம், சிவவாக்கியா! உனக்கு இல்லறத்தில் நாட்டமிருக்கிறது. அது ஒன்றும் தவறல்ல. நீ திருமணம் செய்து கொள், எனச் சொல்லி அனுப்பிவிட்டார். குரு இப்படி சொல்லிவிட்டாரே என வருந்தினாலும், அவரது கட்டளையை ஏற்ற சிவவாக்கியர் திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், தவ வாழ்வையே தொடர்ந்தார். தன் குலத்தொழிலான குறவர்கள் செய்யும் பல்வேறு பணிகளைச் செய்து, அதில் கிடைத்த குறைந்த வருமானத்தில், நிறைவான வாழ்வு நடத்தினார்.  ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளையும் வெற்றி பெறச் செய்யும் பின்னணியில், அவனது மனைவியின் செயல்பாடே முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வகையில், சிவவாக்கியரின் மனைவியும் கணவரின் தவ வாழ்வுக்கு உற்ற துணையாக விளங்கினார்.பொதுவாக பெண்கள் பொன் நகைக்கு ஆசைப்படுவார்கள். சிவவாக்கியரின் மனைவி என்ன செய்தார் என கேளுங்கள். ஒருமுறை, சிவவாக்கியர் மூங்கில் காட்டுக்கு கம்பு ஒடிக்கச் சென்றார். அவர் கம்பை அறுக்கும் வேளையில், அந்த மரத்தில் இருந்து பொன் துகள்கள் சிந்தின. சிவவாக்கியர் அதிர்ந்து விட்டார். இதென்ன கொடுமை! நாமோ தவம் செய்து, இறையடியை நிரந்தரமாக அடைய விரும்புகிறோம். இங்கோ பொன் கொட்டுகிறது. இதைக் கொண்டு ஆனந்தமாக வாழலாம் என்று நினைப்பவர்களே உலகத்தில் அதிகம். நான் அந்த ரகமில்லையே, என் முன்னால் பொன் துகளைக் கொட்ட வைத்து, என்னை இறைவன் ஆசைப்படுகுழியில் தள்ளப் பார்க்கிறானே. பொன்னாசை மரண குழியின் வாசலாயிற்றே என்று நினைத்தவர், அங்கிருந்து சற்று தள்ளி நின்று கொண்டார். அப்போது, நான்கு பேர் அங்கே வந்தனர். அவர்கள் அங்கு சிந்திய பொன்குவியலைப் பார்த்தனர். பொன்னைப் பார்த்தால் விடுவார்களா? ஐயா! அங்கே பொன் துகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதை நாம் ஐந்து பேரும் பங்கிட்டுக் கொள்வோமே! என்றதும், வேண்டாம்... வேண்டாம்... உங்களுக்கும் அது வேண் டாம், எனக்கும் வேண்டாம். இது ஆளைக் கொன்று விடும் விஷத்திற்கு சமமானது, என்று அறிவுரை சொன்னார் சிவவாக்கியர்.அட பைத்தியமே! உனக்கு வேண்டாம் என்றால் ஓடிப்போ. எங்களை வாழவிடாமல் செய்வதில் உனக்கென்ன ஆனந்தம்! என்று கடிந்து கொண்டனர் அந்த நால்வரும்.

சிவவாக்கியர் வருத்தப்பட்டார்.இந்த உலகம் ஆசையில் இருந்து என்றுதான் மீளப்போகிறதோ? சித்தர்கள் இரும்பையும், தகரத்தையும் பொன்னாக்கும் ரசவாத வித்தையை படித்தது வறுமையைப் போக்குவதற்காக அல்ல! தங்கத்தை மக்கள் மத்தியில் காட்டி, அவர்கள் அதை வெறுத்து ஒதுக்கும் காட்சி கண்டு மனம் மகிழ்ந்து, அவர்களை ஆன்மிகப்பாதையில் திருப்பி விடுவதற்காகவே! தங்கத்தை வெறுக்கும் மனப்பக்குவத்தை எவன் பெறுகிறானோ, அவனே ஆன்மிக வாழ்வுக்கு தகுதியுடையவன் ஆகிறான். இவர்களைப் போல் மக்கள் இருப்பதால் தானே சித்தர்கள் யார் கண்ணிலும் படாமல் வாழ்கிறார்கள்! இந்த மக்கள் திருந்துவார்கள் என்று காத்திருக்கிறார்களே! ஆனால், உலக நடப்பைப் பார்த்தால் அவர்கள் எப்போது தான் வெளிப்படுவார்களோ! உலகம் திருந்தும் நாள் எப்போது? என்று வேதனையும் அடைந்தார். பின்னர் அங்கிருந்து போய்விட்டார்.தங்கத்தை மூடை மூடையாக கட்டிய நால்வருக்கும் பசி ஏற்பட்டது. இருவர் தங்கமூடைகளை பார்த்துக் கொள்வதென்றும், இருவர் ஊருக்குள் சென்று உணவு கொண்டு வருவதென்றும் முடிவாயிற்று. அதன்படி உணவு கொண்டு வரச்சென்றவர்கள் சாப்பிட்டு விட்டு, இரண்டு பொட்டலம் உணவை எடுத்து வந்தனர். வரும் வழியில் இருவரும், ஏய்! நாம் இருவரும் ஆளுக்குப் பாதியாக தங்கத்தைப் பங்கு போட்டுக் கொள்வோம். அவர்களுக்கு இந்த உணவில் விஷம் கலந்து கொடுத்து விடுவோம், என்று திட்டமிட்டனர். உணவில் விஷம் கலக்கப் பட்டது. அங்கேயும் இதே போல் ஒரு சதித்திட்டம் உருவானது. உணவு கொண்டு வருபவர்களை தண்ணீர் எடுத்து வரச்சொல்லி அந்த கிணற்றுப் பக்கம் போகச் சொல்வோம். அவர்கள் குனிந்து தண்ணீர் இறைக்கும்போது, உள்ளே தள்ளி விட்டு விடலாம். நாம் இருவரும் தங்கத்தைப் பங்கிட்டுக் கொள்வோம் என்று முடிவெடுத்தனர். இருதரப்பு முடிவும் வெற்றிகரமாக நிறைவேறியது. திட்டமிட்டபடியே, இருவரையும் கிணற்றுக்குள் தள்ளி வெளியே நின்றவர்கள் கொலை செய்தனர். அவர்கள் விஷ உணவைச் சாப்பிட்டு உயிரை விட்டனர்.

மறுநாள் அங்கு வந்த சிவவாக்கியர் அதைக்கண்டு வருத்தப்பட்டார்.ஆளைக் கொல்லும் விஷம் இந்த தங்கம் என்று சொன்னேனே! நால்வரும் கேட்காமல் தங்கள் அரிய உயிரை விட்டார்களே! என்று மனதுக்குள் அழுதார்.ஒருநாள், சிவவாக்கியரின் வீட்டுக்கு கொங்கணச்சித்தர் வந்தார். அப்போது வாக்கியர் வீட்டில் இல்லை. அவரது இல்லத்தரசி கொங்கணரை வரவேற்று உபசரித்தாள். அவர், சில இரும்புத் துண்டுகளை கொண்டு வரச் சொல்லி அவற்றைத் தங்கமாக மாற்றி அவளிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். சிவவாக்கியர் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி நடந்ததைச் சொல்லி தங்கத்தை கணவரிடம் கொடுத்தார். அதைத் தொடவும் விரும்பாத சிவவாக்கியர், மனைவியிடம், இது உன்னையும், என்னையும் கொன்றுவிடும் விஷம், இதை கிணற்றில் வீசிவிடு, என்றார்.அந்த கற்புடைய நங்கையும் கணவர் சொல்லுக்கு மறுசொல் பேசாமல், அவ்வாறே செய்து விட்டார். சிவவாக்கியர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. செல்வத்தால் நன்மையை விட சீரழிவே அதிகம் என்பதை வலியுறுத்தி சில நூல்களையும் அவர் எதிர்கால தலைமுறைக்காக எழுதினார். பற்றற்று இல்லறம் நடத்திய அவர், கும்பகோணம் ÷க்ஷத்ரத்துக்கு ஒருமுறை வந்தார். அங்கேயே அவர் சமாதியாகி விட்டார்.சிவவாக்கியரின் வரலாறை படித்த நாம், செல்வத்தை வெறுக்கும் பக்குவத்தைப் பெறுவோம். வரதட்சணையாக தங்கத்தைப் பெறும் பேராசையை ஒதுக்கித்தள்ளி, உழைத்து வாழ முடிவெடுப்போம்.

சிவ வாக்கிய சித்தர் பூஜை முறைகள்

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, முதல் சித்தராகப் போற்றப்படும் இந்த சித்தரின் திருவுருவப் படத்திற்கு முன் மஞ்சள் குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபமேற்ற வேண்டும்.

முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளைக் கண் மூடி மன முருகக் கூறி, சங்கு புஷ்பம் அல்லது தும்பை புஷ்பம் அல்லது வில்வத்தால் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. பாவங்களைப் போக்குபவரே போற்றி!
2. எங்கும் வியாபித்திருப்பவரே போற்றி!
3. சிவபெருமானின் அவதாரமே போற்றி!
4. ஜீவராசிகளைக் காப்பவரே போற்றி!
5. ருத்ரனின் அவதாரமே போற்றி!
6. தீமைகளை அழிப்பவரே போற்றி!
7. சர்வ வல்லமை படைத்தவரே போற்றி!
8. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி!
9. தேவர்களுக்கெல்லாம் தேவரே போற்றி!
10. சிவனின் அருள் பெற்றவரே போற்றி!
11. சிவசக்தி உருவமாகத் தோன்றுபவரே போற்றி!
12. கலைகளுக்கதிபதியே போற்றி!
13. காருண்ய மூர்த்தியே போற்றி!
14. மனநிம்மதி அளிப்பவரே போற்றி!
15. மங்களங்கள் தருபவரே போற்றி!
16. மகிமைகள் உடைய சிவ வாக்கிய சித்தர் பெருமானே போற்றி போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி, அர்ச்சித்த பிறகு, பின் வரும் மூல மந்திரத்தை, ஓம் ஸ்ரீ சிவ வாக்கிய சித்தர் பெருமானே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

பின்பு, நிவேதனமாக பழங்கள், சுத்தமான விபூதி, தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும்.

நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

சிவ வாக்கிய சித்தரின் பூஜைப் பலன்கள்

இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர கிரகதோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்தது. மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால், மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால், சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்,

1. மனவியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்.
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல், சரியான நேரத்தில் தவறான முடிவுகள் எடுப்பதும், தவறான நேரத்தில் சரியான முடிவுகள் எடுப்பதும் நீங்கி, தெளிவாக முடிவெடுக்க முடியும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்.
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தாய், மகன் மகள் பிரச்சனைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

நூல்:

நாடிப் பரீட்சை

தியானச் செய்யுள்:

சிவனில் சிந்தை வைத்து
ஜீவனில் சித்து வைத்து
அவனியைக் காக்க வந்த
அழகர் பெருமானே
அபாயம் நீக்கி சிவாயம் காட்டும்
தங்கள் தாமரைத் திருவடிக்காப்பு

காலம்: தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: