புதன், 30 அக்டோபர், 2013

மகான்கள்

சாய்பாபா -பகுதி 1


கிராமத்தில் இருந்த பசுக்கள் பால் கறக்க மறுத்தன. குழந்தைகள் பாலின்றி சிரமப்பட்டனர். அந்த ஊருக்கு யாராவது புது பசுக்களை வாங்கி வந்தால் அவை நோய் கண்டு இறந்தன. ஊரெங்கும் ஒரே பாம்பு புற்றுகளாக காட்சியளித்தது. எப்போதும் இல்லாத வகையில் திடீரென புற்றுகள் தோன்றக் காரணம் என்ன என்ற விசாரணை ஆரம்பமானது. அவ்வூர் பசுக்களை மேய்க்கும் இடையனை பிடித்து மக்கள் விசாரித்தனர். அவன் சொன்ன விஷயம் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் ஒருமுறை வழக்கம் போல் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஒரு மாட்டிடம் மட்டும் தொடர்ந்து பால் இல்லாமல் இருந்தது. மதிய நேரத்தில் பார்த்தால் அந்த பசுவின் மடி நிறைந்திருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மடி காலியாகி இருக்கும். பால் இல்லாதது பற்றி மாட்டின் சொந்தக்காரர் கேட்டால் அவன் பதில் சொல்லி ஆக வேண்டுமே என்ற பயம். யாராவது அந்த மாட்டின் பாலைக் கறக்கிறார்களா என அவன் கண்டுபிடிக்க முயன்றான்.

ஒருநாள் மாட்டின் பின்னாலேயே சென்றான். அந்த மாடு ஒரு புற்றின் அருகில் போய் நின்றது. புற்றிலிருந்து ஒரு நாகப்பாம்பு வெளியே வந்தது. அந்த பாம்புக்கு குழந்தையின் முகம் இருந்தது. அது பசுவிடம் பால் குடிக்க ஆரம்பித்தது. இடையனுக்கு வந்தது கோபம்! அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்தான். ஒரே போடாக அதன் தலையில் போட்டான். அலறித்துடித்த பாம்பு சாபமிட்டது. என்னைக் கொன்ற இந்த ஊரில் இனி எந்த மாடும் பால் கறக்காது. இந்த ஊரெல்லாம் பாம்பு புற்றாகி மக்களை பயமுறுத்தும். யாரும் நிம்மதியாக தூங்க முடியாது. இந்த ஊரின் பெயரே இனி புற்றூர் என மாறும். பசுக்கள் வளர்ப்போர் பெரும் நஷ்டமடைவர், என்று சொல்லி விட்டு இறந்து போனது. அன்றுமுதல் தான் ஊரில் இந்த நிலை ஏற்பட்டு விட்டதாக இடையன் கூறினான். மக்கள் மிகவும் வருத்தப்பட்டனர். இந்த நிலைமையை மாற்றாவிட்டால் ஊரையே காலி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உண்டாயிற்று. அந்த ஊரின் பெயர் கொல்ஸ்பள்ளி. ஆனாலும் பசுக்கள் அதிகம் இருந்ததால், அதை ஆயர்பாடி என்றே செல்லமாக அழைத்தனர்.

செல்வச் செழிப்பு மிக்க அவ்வூர் வாடி வதங்கிப் போனதால் மக்கள் வாழ்வதற்கே சிரமப்பட்டனர். ஏழ்மை தாண்டவமாடியது. அவ்வளவு சிரமத்திற்கிடையிலும் ஒரு குடும்பம் மட்டும் புகழோடு விளங்கியது. ராஜூ வம்சத்தாரின் ஆளுகைக்கு உட்பட்டு அப்பகுதி அமைந்திருந்தது.  அந்த வம்சத்தில் ஒரு காலத்தில் மிகப் பெரிய அறிஞராகவும், மகானாகவும் விளங்கியவர் வெங்காவ தூதர். அவர் வம்சாவழியில் வந்தவர் ரத்னாகர கொண்டம ராஜூ. நூறாண்டு காலம் வாழ்க, என்ற வாழ்த்து இவருக்கு தான் பொருந்தும். ஏனெனில் இவர் நூறு வயது வாழ்ந்தவர். ராமாயணத்தை எப்போதும் படித்துக் கொண்டிருப்பார். ராமாயண கதைகளை மக்களுக்கு கூறுவார். ராமாயணத்தில் என்ன கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்வார். கொண்டமராஜூக்கு இரண்டு மகன்கள். இவர்களுக்கு தங்கள் குடும்பத்தின் குல விளக்காக விளங்கிய வெங்காவ தூதரின் பெயரையே வைத்தார் கொண்டமராஜூ. மூத்த மகன் பெத்த வெங்கப்ப ராஜூ என்றும், இளைய மகன் சின்ன வெங்கப்ப ராஜூ என்றும் அழைக்கப்பட்டனர்.

பெத்த வெங்கப்ப ராஜூ வளர்ந்ததும் அவருக்கு ஈஸ்வாராம்பா என்ற பெண்மணியை மணமுடித்து வைத்தார் கொண்டம ராஜூ. இவர்கள் இல்லறத்தை நல்லறமாக நடத்தி ஒரு ஆண் மகனையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றனர். பெரிய மகன் பெயர் சேஷமராஜூ. மகள்கள் வெங்கம்மா, பர்வதம்மா. இனிமையாக கழிந்து கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையில் மேலும் இனிமை சேர்க்க விரும்பினார் பகவான். ஒருநாள் கொண்டமராஜூவின் மனைவி ஒரு கனவு கண்டார். அவரது கனவில் சத்ய நாராயணன் தோன்றினார். அம்மா! நாளை உன் மருமகள் உடலில் ஒரு வியக்கத்தக்க மாற்றம் ஏற்படும். அதுகண்டு பயப்பட வேண்டாம், என்றார் சத்திய நாராயணன். மாமியார் தன் மருமகளை அழைத்து விபரம் சொன்னார். மருமகள் ஈஸ்வராம்பா அன்று கிணற்றடியில் நின்று பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.  தண்ணீர் இறைக்க ஆரம்பித்தார். அப்போது வானிலிருந்து ஈஸ்வராம்பாவை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது அந்த நீல நிற ஒளி.

கருத்துகள் இல்லை: