வியாழன், 24 ஏப்ரல், 2014

சென்னி மலை (சஷ்டிக் கவசம் அரங்கேறிய தலம்)

சென்னி மலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புப் பொருந்திய திருத்தலம். இத்தலம் 'சிரகிரி' என்னும் பெயராலும் அறியப் படுகிறது (சென்னி என்பது 'சிரம்' எனவும், மலை என்பது 'கிரி' எனவும் பொருள்படும்). 'சஷ்டிக் கவசம்' என்னும் சக்தி வாய்ந்த பாராயணப் பாடலை 'பாலன் தேவராய சுவாமிகள்' இத்தலத்திலேயே அரங்கேற்றம் செய்து அருளினார்.

மூலவர் 'சிரகிரி வேலவர்' என்னும் திருநாமம் தாங்கி எழுந்தருளி உள்ளார். சஷ்டிக் கவசத்தில் 'சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற பாடல் வரியில் தேவராய சுவாமிகள் குறிப்பது இத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானையே. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல இறைவனை போற்றிப் பாடி மகிழந்துள்ளார்.

இம்மலைக் கோயில் 1320 படிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் 'சிரகிரி வேலவர்' பால உருவத்திலும், ஸ்ரீவள்ளி அம்மை - தெய்வயானைத் தாயார் இருவரும் தவக்கோலத்திலும் எழுந்தருளி உள்ளனர். மூலவர் இத்தலத்தில் எழுந்தருளிய நிகழ்வு அற்புதம் நிறைந்தது.

ஆதியில், நிலத்தின் அடியில் இருந்து இப்பெருமான் தன்னை வெளிப்படுத்தி அருளினார். மூல மூர்த்தியின் திருவடிவத்தில், இடைப் பகுதியில் இருந்து திருவடிகள் வரை வேலைப் பாடுகள் இன்றி இருந்தது. உளி கொண்டு செதுக்க முயன்ற பொழுது குருதி பீறிட்டுக் கிளம்பியது.

அதனால், கிடைக்கப் பெற்ற அதே திருவடிவுடன் 'சிரகிரி வேலவரை' திருக்கோயிலில் எழுந்தருளச் செய்தனர். மூலவர் திருவுடலில் இடைப் பகுதியில் இருந்து கவசம் அணியப் பெற்றுள்ளதை இன்றும் கண்டு மகிழலாம். எண்ணற்ற அற்புதங்களை தன்னுள் கொண்டு அமைந்துள்ள சென்னிமலை தலத்தை கட்டாயம் தரிசித்துப் பயன் பெறுவோம்.

நினைவில் கொள்ள வேண்டிய ஆறுமுகக் கடவுளின் சில முக்கிய சுலோகங்கள்:

அனுதினமும் பூஜை அறையில் ஆறுமுகக் கடவுளை போற்றி மகிழ சில முக்கிய சுலோகங்கள் இவை. இப்பாடல்கள் முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றுத் தரும் என்பது திண்ணம். ஓம் சரவண பவ!!!

(கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர்):-
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

(திருவண்ணாமலை திருப்புகழ் - அருணகிரிநாதர்):-
ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!!

(திருமுருகாற்றுப்படை - நக்கீரர்):-
அஞ்சு முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும்
வெஞ் சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும்
-தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!!!

(கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சரியார்):-
ஆறிரு தடந்‌தோள் வாழ்க அறுமுகம் வாழ்க -வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க -செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்!!

(கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர்):-
நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை -நாடிவந்த
கோள் என்செயும் கொடும் கூற்று என்செயும் -குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் -சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து -தோன்றிடினே!!

இந்து சனாதன தர்மம்: எது தலையாய அறம் ?.

'அறம் செய்ய விரும்பு' என்றாள் தமிழ் மூதாட்டி. இந்து தர்மம் உணர்த்தும் உன்னதமான அறங்கள் பலப்பல. அறங்களில் தலையாயது எது? பார்ப்போம்!!!

திருவள்ளுவர் 'கொல்லாமை - புலால் மறுத்தல்' என்று இரு அதிகாரங்களில் 'எக்காரணம் கொண்டும் ஒரு உயிரை கொல்லாது இருத்தல் - புலால் உணவை உண்ணாது இருத்தல்' என்ற இவ்விரு செயல்களுமே அறங்களில் எல்லாம் தலைசிறந்த அறம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

'அன்பே சிவம்' என்று முழங்கிய பரம ஞானி திருமூலர் 'கொல்லாமை - புலால் மறுத்தல்' என்ற பகுதிகளில் அறம் அல்லாத இவ்விரு செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறார். 'கொல்லாமை' என்ற மலரே பூஜைக்கு உகந்த முதன்மையான மலர் என்றும், 'புலால் உணவை உட்கொள்வது' நரகத்துக்கு இணையான பெரும் துன்பத்தைப் பெற்றுத் தருவது உறுதி என்றும் குறிக்கிறார் திருமூலர்.

திருமந்திரம் - கொல்லாமை:-
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர்
அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்...

திருமந்திரம் - புலால் மறுத்தல்:-
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்து வைப்பாரே.

19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருட்சுடரான வள்ளலார் 'புலால் உணவை உட்கொள்ளும் வரை இறைவனின் அருளைப் பெற முடியாது' என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இறைவன் கருணை வடிவானவன். கருணை எங்கு இல்லையோ - அங்கு இறைவன் வசிப்பதில்லை.

(இராமலிங்க வள்ளலார்):-
கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் -வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் -அன்றே!!!!

புண்ணிய நதிகளில் நீராடினாலும், இறை வழிபாடுகள் செய்து வந்தாலும், ஞான நூல்களைக் கற்றிருந்தாலும், தான தர்மங்கள் பல புரிந்தாலும், புலால் உணவு உட்கொள்ளும் செயல் அந்த நற்செயல்களின் பலன்கள் அனைத்தையும் செயல் இழக்கச் செய்து, முடிவில் நரகத்துக்கு ஒப்பான துன்பத்தையே தேடித் தரும் என்று எச்சரிக்கிறார் வள்ளலார்.

வேதங்கள் - உபனிடதங்கள் - சாத்திரங்கள் - பக்தி இலக்கியங்கள் - ஞானிகளின் வாக்குகள் - இவை உணர்த்தும் நீதிகள் என்றுமே இப்புவியில் பொய்ப்பதில்லை. அறம் செய விரும்புவோம்!!!!

இந்து சனாதன தர்மம் - பக்திக்கு அகிம்சை என்னும் தர்மமே ஆதாரம்:-

இறைவனின் ஆணையான தர்மங்களை முழுமனதாக ஏற்று, அவற்றை பின்பற்றுவதாகவும் உறுதி பூண்டு, பின்னர் இறைவனிடம் அன்பு செலுத்தும் முறையே 'பக்தி' என அழைக்கப் பெறும். தர்மங்களை முழுவதுமாக புறக்கணித்து விட்டு இறைவனிடம் கொள்ளும் அன்பு 'பக்தி' ஆகாது என்ற புரிதல் மிகவும் அவசியம் ஆகிறது.

மணிக்கணக்கில் கிருஷ்ண நாம ஜெபம் செய்ய விழையும் மனம், கண்ணனின் வாக்கான கீதையை பின்பற்ற மறுக்கிறது. ஸ்ரீராமாயண நிகழ்வுகளை ரசித்து மகிழும் மனம், ஸ்ரீராமாயணம் உணர்த்தும் தர்மங்களை உணர மறுக்கிறது. சீரடி பாபாவின் பஜனைகளுக்கு பழகிய மனம் - அப்பரம ஞானியின் போதனைகளை தெரிந்து கொள்ள ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை.

எண்ணற்ற மகான்களை வணங்கத் தயங்காத மனம் - அந்த அருளாளர்களின் தெய்வ வாக்கில் இருந்து உதிக்கும் தர்மங்களை கடைபிடிக்க மறுக்கிறது. ஞானிகளின் படங்களை விட அவர்களின் பாடங்கள் மிக முக்கியம். படங்களால் முக்தி பெற முடியாது - அப்பெருமக்களின் பாடங்களான தர்மங்களே முக்தி நெறிக்கு நம்மை இட்டுச் செல்ல வல்லது.

தர்மமே பக்திக்கு ஆதாரம். தர்மத்தை பின்பற்றாத நிலையில் பக்தி செயல் இழக்கிறது. எது தர்மம் ? அகிம்சையே உயர்ந்த தர்மம். அகிம்சையே உன்னதமான கடமை. 'மற்றொரு உயிருக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதே' ஞானப் பாதையில் பயணிக்க விரும்பும் ஒவ்வொருவரின் லட்சியமாக இருத்தல் வேண்டும்.

மனு தர்ம சாத்திரம் (அத்தியாயம் 5 - சாத்திரம் 51 & 52):-
ஒரு உயிரினத்தை கொல்ல அனுமதிப்பவர் - கொல்பவர் - கூறுகளாக வெட்டுபவர் - மாமிசமாக்கி விற்பவர் - வாங்குபவர் - சமைத்து உணவாக்குபவர் - பரிமாறுபவர் - உட்கொள்பவர் - இவர்கள் அனைவருமே அந்த உயிரைக் கொன்றவர்களாகவே கருதப் படுவர். தன் உடம்பை வளர்க்கும் பொருட்டு பிற உயிர்களின் மாமிசத்தை உண்பதை விட பெரிய பாவச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

அகிம்சையை முன்னிருத்தும் இந்து தர்மம்:- அகிம்சை குறித்த சில நுட்பமான கருத்துக்கள்!!!

ஒரு குழந்தையை வதைத்துப் பின் அதன் தாயிடமே சென்று அன்பு பாராட்டி, உதவியையும் கோரும் செயலை யாரும் செய்வரோ? தன் குழந்தை வதைக்கப் படுவதை பதைப்பதைப்புடன் கண்னுற்ற எந்த ஒரு தாயின் மனமாவது சீற்றம் கொள்ளாமல் இருக்குமா? இப்புவியில் வாழ்ந்து வரும் கோடான கோடி ஜீவராசிகளுக்கும் தாய் - தந்தையாய் விளங்கி வருபவன் இறைவன்.

கருணையே வடிவான இறைவன் தன்னுடைய குழந்தைகளான உயிரினங்களை வதைத்கும் செயலை ஒரு பொழுதும் அங்கீகரிப்பது இல்லை - பொறுப்பதும் இல்லை. 'வதைக்கும் செயல் புரிந்தால் சர்வ நிச்சயமாய் வதைபட வேண்டி வரும்' என்பது இந்து தர்ம சாத்திரங்கள் அறுதியிட்டுக் கூறும் படைப்பின் நியதி.

ஆன்மாக்கள் கர்ம பலனைப் பொறுத்து வெவ்வேறு வடிவங்கள் எடுத்துக் கொள்கின்றன என்பது இந்து தர்மத்தின் முக்கியக் கோட்பாடு. ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரு ஜீவாத்மா உறைந்துள்ளது. இறைவன் ஒருவனே பரமாத்மா. ஒரு ஜீவாத்மா மனித உடலில் உறையும் பொழுது அது வதைப்பட்டால் அதற்குப் பெயர் கொலை - வன்முறை - தீவிரவாதம்.

அதே ஆத்மா வேறு ஒரு உயிரினத்தில் உறையும் பொழுது வதைபட்டால் அதை உணவு என்று கருதுவது ஏற்புடையது அல்ல. இறைவனின் படைப்பு மனித குலத்திற்காக மட்டுமே என்று எண்ணுவது பெரும் பிழை. அனேக கோடி ஜீவராசிகள் வாழும் பொருட்டே இறைவனால் இப்புவியில் படைப்பு நிகழ்த்தப் படுகிறது.

ஒரு தொடர்பு ஏற்படுத்தப் பட வேண்டும் என்றால் இரு முனையிலும் பரிமாற்றம் இருத்தல் அவசியம். இறைவனுடன் நாம் தொடர்பு ஏற்படுத்த விரும்புகிறோம். நாம் பேசுவதை மட்டும் இறைவன் செவி மடுக்க வேண்டும் என்று விழைகிறோம். இறைவனின் வார்த்தைகளான தர்மங்களை செவி மடுக்க மறுக்கிறோம். இதனால் அன்றோ இறைத் தொடர்பு ஏற்படாமலே வாழ்நாள் வீணே கழிகின்றது.

ஒவ்வொரு உணவு வேளையிலும் 'அகிம்சை - தர்மம் - கருணை - நீதி' இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உணவை தேர்ந்தெடுக்கும் சக்தியும், அதிகாரமும் நம்மிடம் உள்ளது. புலால் உணவை மறுப்போம் - நலம் பெறுவோம்!!!

புலால் உணவு உட்கொண்டும் கண்ணப்ப நாயனார் சிவ பதம் பெற்றது எவ்வாறு ? சில விளக்கங்கள்.

'புலால் உணவை கைவிடுவது இல்லை' என்னும் முடிவுக்கு முன்னமே வந்து, பின்னர் அம்முடிவுக்கு சாதகமான புராண- இதிகாச நிகழ்வுகளை சேகரித்து வைத்துக் கொண்டு வாதிடுவது முறையன்று. தர்மங்களை புராணங்கள் - சாத்திரங்கள் - நீதி நூல்கள் மூலம் முறையாகக் கற்று, அதன் பின்னரே தர்ம - அதர்மம் குறித்த முடிவுக்கு வருதல் வேண்டும்.

கண்ணப்பர் வேடர் மரபில் தோன்றிய அருளாளர். தர்ம அதர்மம் குறித்த புரிதல் பெரிதாக இல்லாத வேடர்கள் நிறைந்த சூழலில் - வனப் பகுதியில் உதித்தவர். ஆனால் நம் நிலையோ முற்றிலும் மாறுபட்டது. எண்ணற்ற தர்ம சாத்திரங்களை கற்று உணர வாய்ப்பும், கல்வியும் நமக்கு இன்று அமையப் பெற்றுள்ளது. ஆகவே, கண்ணப்பரின் சூழலையும் நம் சூழலையும் ஒப்பு நோக்குவது முறையன்று.

நம் உடலின் ஊடு-கதிர்ப்படத்தை (எக்ஸ்-ரே) மருத்துவத் துறையில் வல்லுனரான ஒருவரின் துணையைக் கொண்டே அறிய முயல்கிறோம். அது போல புராண நிகழ்வுகளில் இருந்து நாம் உணர வேண்டிய நீதிகளை, சமயத் தொண்டாற்றும் ஆச்சார்யார்கள் மூலமே கற்றுத் தெளிய வேண்டும். அது விடுத்து, புராண நிகழ்வுகளை மேலோட்டமாக அணுகுவது நுனிப் புல் மேய்வதை ஒக்கும்.

கண்ணப்பர் வரலாறில் உள்ள சாரம் யாது எனில் 'இறை வழிபாட்டில் அன்பே பிரதானம். ஆச்சாரமும் நெறிமுறைகளும் அவசியமே. ஆனால் அவையால் மட்டும் வழிபாடு முழுமை பெறுவதில்லை. ஆச்சாரம் மிகுந்த வழிபாடு நாளடைவில் அன்பு வழிபாடாக பரிணாமம் பெறுகிறது. விதி முறைகள் வழிபாட்டின் தொடக்க நிலை; அன்பே அதன் இறுதி நோக்கம்'.

கண்ணப்பர் தன்னலமில்லா அன்பின் உறைவிடம். அன்பின் வெள்ளமான அப்பெருந்தகையுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதோ? அவ்வன்பில் கோடியில் ஒரு பங்கு வாய்ப்பினும் நாம் உய்வு பெறுவது உறுதி. இறைவனுக்கு கண்களை அகழ்ந்து அளிக்க நம்மால் ஆகுமா ? 'ஊக்கமது கைவிடேல்' என்னும் ஆத்திச்சூடி வாசகத்திற்கு 'ஊக்கத்தை தரும் மதுவை கைவிடேல்' என்றா பொருள் கொள்வது?

அடியவரை ஆட்கொள்ள எண்ணற்ற எளிய முறைகள் இருக்க, இக்கடுமையான முறையை சிவப்பரம்பொருள் தேர்ந்தெடுக்க 'வேடர் மரபின் காரணமாக அகிம்சையை பின்பற்ற முடியாத கண்ணப்பரின் சூழலும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்' என்பதும் சிந்திக்க வேண்டிய மற்றொரு கோணம்.

இந்து தர்மத்தின் ஞானிகள் - அருளாளர்கள் - ஆச்சாரியர்கள் அனைவரும் ஏக மனதாக, ஒருமித்தக் கருத்துடன் புலால் உணவை அறவே தவிர்க்குமாறு அறிவுறுத்தி வந்துள்ளனர். விதிவிலக்குகள் விதிகள் ஆகிவிடாது. தர்மமாகிய விதிகளை பின்பற்றுவோம். விதி விலக்கான நிகழ்வுகளை முறையாகப் புரிந்து கொள்வோம்!!

தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிருந்தாவனம் (காங்கேயநல்லூர்)

வாரியார் சுவாமிகள் பிறவாமையை பெற்று அருளிய தினம் 7 - 11 - 93. சொற்பொழிவின் பொருட்டு லண்டன் சென்று இருந்த சுவாமிகள் விமானம் மூலம் மும்பையை அடைந்தார். பின்பு, மற்றொரு விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னைக்கு வருகை தரும் வேளையில், சுவாமிகளின் ஆன்மாவை பரமபதியான குமரவேள் (ஆகாயத்தில் பயணிக்கும் பொழுதே) தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டருளினார்.

தொண்டு; ஒழுக்கம்; பக்தி; நியமம்; புலமை; தியாகம்; ஈகை இவை அனைத்திலும் மிகவும் உயர்ந்து விளங்கிய தன்மையால், விண்வெளியில் உயரப் பறந்து கொண்டிருக்கும் நிலையில் வாரியார் சுவாமிகளை குமரக் கடவுள் ஆட்கொண்டார் போலும்! தொண்டால் பழுத்த உத்தம சீலரின் புனித உடலை, சுவாமிகளின் தலமான காங்கேய நல்லூருக்கு எடுத்துச் சென்றனர்.

காங்கேய நல்லூர் முருகப் பெருமானின் ஆலயத்துக்கு நேர் எதிரில், சுவாமிகளுக்கு சமாதிக் கோயில் எழுப்பி, அதில் சுவாமிகளின் புனித உடலைக் கோயில் கொள்ளச் செய்தனர். மிக அழகிய முறையில் அமையப் பெற்றுள்ளது வாரியார் பெருமானின் பிருந்தாவனம். இக்கோயிலில் சுவாமிகளின் திருவுருவம் தத்ரூபமாக வடிக்கப் பட்டுள்ளது.

நேரில் சுவாமிகளை தரிசிப்பதைப் போன்ற உணர்வை சர்வ நிச்சயமாய் ஏற்படுத்தும். அதீத சாந்தம் நிறைந்த, அதே கனிவான புன்னகையுடன் சுவாமிகள் இக்கோயிலில் அருள் புரிந்து கொண்டு இருக்கிறார். அடியவர் வழிபாடு இந்து தர்மத்தில் மிகமுக்கிய இடம் பெறுகிறது. அடியவர் வழிபாடு இறை வழிபாட்டை விட சிறப்புப் பொருந்தியது என்று குறிக்கிறார் திருமூலர்.

சுவாமிகளின் அவதாரத் தலம் காங்கேய நல்லூர். இத்தலத்தில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானின் ஆலயத்துக்கு எண்ணற்ற திருப்பணிகளை சுவாமிகள் புரிந்துள்ளார். இத்தலத்தில் வசித்து வரும் அனைத்து குடும்பங்களும் சுவாமிகளை குல தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். சுவாமிகள் சிறுவயதில் வசித்த வீடு தற்பொழுது நினைவாலயமாக மாற்றப் பட்டுள்ளது.

காங்கேயநல்லூரில் உறையும் முருகப் பெருமானின் ஆலயத்தையும், அதன் நேரெதிரில் வீற்றிருந்து அருளும் பரம குருநாதரான வாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தையும், கட்டாயம் தரிசித்து வினைகள் நீங்கப் பெறுவோம்.


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
விநாயகர் அகவல் (ஔவையார் அருளியது)

ஒரு சமயம், ஔவையார் ஆனைமுகக் கடவுளைப் பூஜித்துக் கொண்டு இருந்தார். அவ்வேளையில், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகாய மார்கமாக கயிலை மலைக்கு ஏகுவதைக் கண்னுற்றார். சுந்தரர், தன் அவதார நோக்கம் நிறைவுற்றதால், சிவபெருமான் ஏவலால் தம்மை அழைப்பிக்கும் பொருட்டு வந்த வெள்ளை யானையின் மீது ஆரோகணித்து, கயிலையம் பதிக்கு சென்று கொண்டிருந்தார்.


ஔவை பிராட்டி 'கயிலை மலைக்கு முன்னமே சென்று, சுந்தரருக்கு சிறப்பான வரவேற்பு புரிதல் வேண்டும்' என்ற எண்ணம் கொண்டார். பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.


புன்முறுவல் பூத்த ஸ்ரீகணேச மூர்த்தி 'ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை புரிவாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார். இத்தருணத்தில் ஔவையார் பாடி அருளியது தான் 'விநாயகர் அகவல்' என்னும் ஒப்பற்ற பாடல் தொகுப்பு. 72 வரிகளைக் கொண்டது. பாராயணம் புரிய மிகவும் எளிதானது.


அகவல் துதியால் பெரிதும் மகிழ்ந்த விநாயகக் கடவுள், தன் துதிக்கையால் ஔவையைப் பற்றித் தூக்கி, ஒரு நொடியில் கயிலை மலையில் சேர்ப்பித்து அருளினார். இந்நிகழ்வு நடந்தேறி வெகுநேரம் சென்ற பின்பே, சுந்தர மூர்த்தி சுவாமிகள் கயிலை மலை ஏகினார். ஔவை பிராட்டியும் வரவேற்றுப் பேருவகை கொண்டார். முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் கருணைக்கு எல்லை என்பதும் உளதோ?


'வி' நாயகன்' என்னும் பதம் 'தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாத' பரம்பொருளின் தன்மையைக் குறிக்கும். அனைத்து வழிபாடுகளும் - யாகங்களும் - பூஜைகளும் இப்பெருமானின் ஆசியோடு அன்றோ தொடங்கப் பெறுகிறது! அனைத்து தொடக்கங்களின் தொடக்கமும் இப்பெருமான் அன்றோ!!


ஒரு ஆன்மா முக்தி நிலையை அடைய, ஆறு சக்கரங்களை கடந்து சகஸ்ராரம் என்னும் ஏழாம் சக்கரத்தை அடைதல் வேண்டும். முதல் சக்கரமான மூலாதாரத்தின் உபாசன தெய்வம் 'ஸ்ரீவிநாயக மூர்த்தி'. 'சைவமோ - வைணவமோ' விநாயகக் கடவுளின் திருவடி தொழுதால், ஒரு நொடியில் நம்மை முக்தி நிலையான 'கைலாயம் - வைகுந்தம்' முதலிய பதங்களில் சேர்ப்பித்து அருளுவார்.


விநாயகர் அகவலைப் பாராயணம் செய்வோம். ஆனைமுக இறைவனின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோம்.
திருநாரையூர் - பொல்லா பிள்ளையார் (நம்பி ஆண்டார் நம்பி வணங்கிய ஸ்ரீவிநாயகர்)

திருநாரையூர் என்னும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலம் சிதம்பரம் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் விநாயகப் பெருமான் 'பொல்லாப் பிள்ளையார்' என்னும் திருநாமம் கொண்டு எழுந்தருளி உள்ளார். 'பொல்லா' என்னும் பதம் 'உளியால் செதுக்கப் படாத' தன்மையைக் குறிக்கும். சுயம்பு மூர்த்தி இப்பெருமான்.

இத்தலத்தில் 'நம்பி ஆண்டார் நம்பி' என்பார் வாழ்ந்து வந்தார். பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல் பதினோரு திருமுறைகள் வரைத் தொகுத்த அருளாளர். பதினோராம் திருமுறையின் சில தொகுப்புகளுக்கு இவர் ஆசிரியரும் கூட. திருநாரையூரில் உறையும் 'பொல்லாப் பிள்ளையார்' இவரின் குருவாக அமைந்தது ஒரு சுவையான வரலாறு.

நம்பிக்கு அப்பொழுது பள்ளிப் பருவம். நம்பியின் தந்தை அர்ச்சகராகத் தொண்டு புரிந்து வந்தார். ஒரு முறை, தந்தைக்கு உடல் நலம் குன்றிய காரணத்தால், நம்பி திருக்கோயிலுக்கு நிவேதன உணவை எடுத்துச் சென்றார். 'பொல்லாப் பிள்ளையார்' சந்நிதி முன்பு வைத்தார். பெருமான் உண்மையில் நிவேதன உணவை உட்கொள்வார் என்று அவரின் பிஞ்சு உள்ளம் நம்பியது.

ஆனால் நம்பியின் எண்ணமோ ஈடேறவில்லை. பெருமான் நிவேதன உணவை ஏற்காதது கண்டு நம்பி பதறித் துடித்தார். பெரும் தவறு இழைத்து விட்டதாக எண்ணினார். தந்தையின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே என்றும் அஞ்சினார். தன் இன்னுயிரை போக்கும் எண்ணத்தில், பெருமானின் திருவடியில் தலையை மோதிக் கொள்ளத் துவங்கினார்.

உண்மை அன்புக்கும் பக்திக்கும் மட்டுமே அகப்படும் பரம்பொருளான ஸ்ரீவிநாயகப் பெருமான், தன் விக்கிரக நிலையில் இருந்து நீங்கி, ஸ்தூல வடிவில் திருக்காட்சி அளித்து, நம்பியை தடுத்து ஆட்கொண்டார். நம்பி நேரில் காண, நிவேதன உணவை உண்டு அருளினார். நம்பியும் பெருமகிழ்வு கொண்டு வீடு திரும்பினார். நம்பியின் தந்தையோ 'பிள்ளையின் கூற்றை' அறவே நம்ப மறுத்தார்.

மறுநாள், பக்தனான நம்பியின் கூற்றை மெய்ப்பிக்க, பெருமான் நம்பியின் தந்தையும் காணும் படி, நிவேதன உணவை உட்கொண்டு அருளினார். மேலும் நம்பியின் வேண்டுகோளுக்கு இணங்க, நம்பியை சீடனாகவும் ஏற்று அருளினார். இம்மூர்த்தியே பின்னாளில் 'தேவாரப் பதிகங்கள் அனைத்தும் சிதம்பரம் திருக்கோயிலில், திருக்காப்பிட்ட ஒரு அறையில் உள்ளது' என்று நம்பி ஆண்டார் நம்பிக்கு உணர்த்தி அருளியவர்.

திருநாரையூர் தலம் சென்று 'பொல்லாப் பிள்ளையாரை' தரிசித்து உய்வு பெறுவோம்.
புராணங்களை இயற்ற வேத வியாசருக்கு அருளிய ஸ்ரீவிநாயகர் (விநாயகர் புராணம் விளக்கும் சக்தி வாய்ந்த 16 திருநாமங்கள்)

பதிணென் புராணங்களும் ஆதியில் சிவபெருமானால் நந்திதேவருக்கு உபதேசிக்கப் பட்டது. நந்திதேவர் சனத்குமார முனிவருக்கு உபதேசித்தார். சனத்குமார முனிவரிடம் இருந்து வேத வியாசர் புராணங்கள் யாவையும் உபதேசமாகப் பெற்றார். பின்னர் புவியில் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், 18 புராணங்களையும் எழுத்து வடிவில் சுலோகங்களாக இயற்றும் எண்ணம் கொண்டார்.

புராணங்களை எழுத முனைந்த வியாசரின் மனதில் பெரும் குழப்பம் பரவத் தொடங்கியது. புராண நிகழ்வுகள் அனைத்தும் அறிந்திருந்தும் ஒரு சுலோகம் கூட முழுமையாக இயற்ற முடியாத நிலை உருவானது. பணியின் தொடக்கத்திலேயே இவ்வித விக்கினம் தோன்றியதால், பிரமலோகம் சென்று நான்முகனிடம் 'இந்நிலை உருவாகக் காரணம் யாது' என வினவினார்.

பிரமன் வியாசரிடம் 'முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி ஆசி பெறாது தொடங்கிய காரணத்தால் உம் பணியில் இவ்விதம் விக்கினம் உருவானது' என்று விளக்கினார். மேலும், 'ஸ்ரீகணேசரை வணங்காது கற்ப கோடி காலம் முயன்றாலும் ஒரு பாடலைக் கூட புனைய இயலாது' என்றும் அறிவுறுத்தினார்.

வியாசருக்கு ஸ்ரீவிநாயகரை மகிழ்விக்கும் முக்கிய திருநாமங்கள் அடங்கிய மந்திரத்தையும் உபதேசித்தார் நான்முகன். பூலோகம் திரும்பிய வேத வியாசர் அம்மந்திரங்களால் ஸ்ரீவிநாயகரை துதித்து, 12 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். வியாசரின் தவத்துக்கு மகிழ்ந்து கோடி சூர்ய பிரகாசமாய் திருக்காட்சி அளித்து அருளினார் ஸ்ரீவிநாயக மூர்த்தி.

பணிந்து போற்றிய வியாசருக்கு ஆசியளித்து, புராணங்களை இயற்றும் வல்லமையையும் அளித்து அருளினார் ஆனைமுகக் கடவுள். வியாசர் துதித்த ஸ்ரீவிநாயகரின் 16 திருநாமங்கள் மிகவும் சக்தி பொருந்தியவை. அனுதினமும் இம்மந்திரங்களால் ஆனைமுகக் கடவுளை துதித்து, அப்பெருமானின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோம்.

1. ஓம் சுமூகாய நம;
2. ஓம் ஏகதந்தாய நம;
3. ஓம் கபிலாய நம;
4. ஓம் கஜகர்ணகாய நம;
5. ஓம் லம்போதராய நம;
6. ஓம் விநாயகாய நம;
7. ஓம் விக்கினராஜாய நம;
8. ஓம் கணாத்பதியே நம;
9. ஓம் தூமகேதவே நம;
10. ஓம் கணாத்யஷாய நம;
11. ஓம் பாலசந்திராய நம;
12. ஓம் கஜானனாய நம;
13. ஓம் வக்ர துண்டாய நம;
14. ஓம் சூர்ப்பகன்னாய நம;
15. ஓம் ஏரம்பாய நம;
16. ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம;

அருணகிரிநாதருக்கு அருளிய பொய்யா கணபதி {வயலூர் முருகன் திருக்கோயில்}
 திருச்சிராப்பள்ளிக்கு மிக அருகில் அமைந்துள்ளது வயலூர் என்னும் சிறப்புப் பொருந்திய தலம். முருகப் பெருமான் இத்தலத்தில் 'சுப்ரமண்ய சுவாமி' என்னும் திருநாமம் கொண்டு ஸ்ரீவள்ளி - தெய்வயானையோடு எழுந்தருளி உள்ளார். திருமுருக வாரியார் சுவாமிகளால் எண்ணற்ற திருப்பணிகள் நடந்தேறிய தலம்.
*
மூலவர் ஸ்ரீசுப்ரமண்யர் தன் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஞான வேலால் உருவாக்கி அருளியது இத்தல தீர்த்தமான 'சக்தி தீர்த்தம்'. இந்து சனாதன தர்மத்தின் ஒரு பிரிவான 'கௌமாரம்' என்னும் முருக வழிபாட்டு சமயத்துக்கு தனிப்பெரும் குருநாதராக விளங்குபவர் அருணகிரிநாதர். இவர் முதன் முதலில் திருப்புகழ் பாடல்களை பாடத் துவங்கிய தலம் வயலூர்.
*
இத்தலத்தில் 'பொய்யா கணபதி' என்னும் திருநாமத்துடன் விநாயகப் பெருமான் எழுந்தருளி உள்ளார். அருணகிரிநாதர், பொய்யா கணபதியைப் போற்றிப் பாடி, ஆசி பெற்ற பின்னரே, முருகக் கடவுளைப் பாடத் துவங்குகிறார். 'கைத்தல நிறை கனி' என்ற இத்திருப்புகழ் பாடல் மிகவும் பிரசித்தம்.
****
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்
*
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
*
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடிசெய்த அதி தீரா
*
அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே!!!!
****
எண்ணற்ற சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள வயலூர் தலம் சென்று ஸ்ரீபொய்யா கணபதியையும், இரு தேவியரோடு அருள் புரியும் ஸ்ரீசுப்ரமண்யரையும், முருகக் கடவுள் பூஜித்த சிவலிங்கத் திருமேனியான ஆதிநாதரையும், ஆதிநாயகி அம்பிகையையும் தரிசித்துப் பிறவிப் பயன் பெறுவோம்.