ஞாயிறு, 15 மே, 2022

தங்கம் தோன்றிய கதை பகுதி ஒன்று...

தங்கம் தோன்றிய கதை -1

இது மூன்று பாகங்களாக வெளிவரும். அதனால் PL stay tuned with me...

பீஷ்ம யுதிஷ்டிர சம்வதே...

யுதிஷ்டிரர் : பிதாமஹ! எல்லா கர்மங்களுக்கும் எல்லா யாகங்களுக்கும் பூமி, பசு, பொன் இவைகளை தட்சிணை என்று சொல்கிறார்கள். அதில் பொன்னே முக்கியமாகவும் சிறந்த பரிசுத்தமாகவும் பசு ,பூமியை காட்டிலும் சிறந்ததாக உள்ளது. பொன் என்பது எது? அது எக்காலத்தில் உருவானது? எவ்வுருவமானது? அதன் தேவதை மற்றும் பலனென்ன ?  இது எதனால் சிலாகித்து சொல்லப்படுகிறது என்று கூறும்!!!...

பீஷ்மர் : அரசனே! கேள் ! நான் எனது தந்தை சந்தனு மஹாராஜா மரணமடைந்த போது சிராத்தம் கொடுப்பதற்காக கங்கையின் உற்பத்திக்கு போனேன். அப்போது என் தாயாகிய கங்கையும் உதவி செய்தாள். அப்போது அங்கு வந்த பல ரிஷிகளை அமர வைத்து தர்ப்பண முதலிய கர்மங்களை தொடங்கினேன்.  முதல் கருமத்தை முடித்து பின்பு பிண்டதானம் செய்ய தொடங்கினேன்.

அரசனே! அப்போது பூமியில் இருந்து அழகான தோள் வளையையும் தொங்குகின்ற அணிகளையுமுடைய ஒருகை அந்த பரப்பின தர்பங்களை(தர்பை) ஒதுக்கி கொண்டு கிளம்பிற்று.  அதை பார்த்து என் பிதாவே நேரில் வாங்கி கொள்கிறார் என்று சற்று நேரம் ஆச்சர்யமுற்றேன்.  அதன் பிறகு சாஸ்திரத்தை ஆராயும் போது எனக்கு திரும்பவும் வேறு எண்ணமுண்டாயிற்று..

(இப்படி நடந்திருந்தா... நாமளா இருந்தா சாஸ்திரத்தை காத்துல விட்டிருப்போம்...ஆனா பெரியவங்க அதை செய்யவே இல்லை...)

பிதாவின் கையில் பிண்டதானம் செய்யவேண்டும் என்ற விதி வேதங்களில்லை. மனிதன் கொடுக்கும் பிண்டத்தை பித்ருகள் நேரே வாங்குவதுமில்லை. தர்பங்களில் தான் பிண்டம் கொடுக்கவேண்டும் என்பதுதான் விதிக்கப்பட்டுள்ளது என்ற புத்தி உண்டாயிற்று. அதனால், சாஸ்திரத்தை மீறாமல் பிண்டத்தை தர்பங்களில் வைத்தேன். அதன் பிறகு என் தந்தையின் கை மறைந்தது.

பிறகு, என் கனவில் பித்ருக்கள் தோன்றினர்.  அவர்கள் என்னை பார்த்து "பரதஸ்ரேஷ்டனே! நீ தர்ம காரியத்தில் மயங்காமல் இருக்கிறாய்" இந்த நல்லறிவால் திருப்தி அடைந்தோம்.  

(PL note , பிண்டத்தால் மட்டும் இல்லாமல் பித்ருகள் நம்முடைய நல்ல அறிவாலும் திருப்தி அடைகிறார்கள்)

நீ சாஸ்திர பிரகாரம் செய்ததால் உன்னுடைய தர்மமும் ஆத்மாவும் சாஸ்திர வேதங்களும் பிரம்மதேவரும் ரிஷிகளும் நம்பும்படி செய்யப்பட்டு அசைக்கப்படாமல் நிலை பெற்றனர். நீ நல்ல காரியம் செய்தாய். ஆனால், பூமிக்கும் பசுக்களுக்கும் பிரதியாக பொன்னை (தங்கம்) தானமாக கொடுக்கவேண்டும். இப்படி செய்தால் நாமும் நம்முடைய முன்னோர்களும் பரிசுத்தராவோம். பிறகு நான் கண் விழித்தவுடன் பொன்னை கொடுப்பதில் எண்ணம் வைத்தேன்.

இந்நிலையில், நான் உனக்கு பரசுராமரை பற்றியும் கூற விழைகிறேன். பகவான் பரசுராமர் பூமியை வென்ற பிறகு அசுவமேத யாகம் செய்ய விழைந்தார். அந்த யாகத்தால் சத்திரியர்களை அழித்த  பாபம் விலகினாலும் அதை பரசுராமர் மனம் ஏற்க்கவில்லை. மனம் லேசாயிருப்பதாக உணரவில்லை. அதனால் அந்த மஹாத்மா ரிஷிகளிடம் சென்று கேட்டார்.

அந்த ரிஷிகள் , ஓ! (பரசு) ராமரே!  எதை தானம் செய்தால் நீ பரிசுத்தம் ஆவாய் என்பதை கூறுகிறோம்.  பசுக்களையும் பூமியையும் கொடுத்தால் ஒருவன் பரிசுத்தன் ஆவான். மேலும் சிறந்த பாவனமாகிய மற்றொரு தானத்தை பற்றியும் கூறுகிறோம் . தேவர்களுக்குரியதும் மிக்க ஆச்சர்யமான உருவமுள்ளதும் அக்னியில் பிறந்ததுமாகிய ஸ்வர்ணமென்று பெயர் பெற்ற ஒரு பொருள் முற்காலத்தில் தன் சக்தியினால் உலகை எரித்து கிளம்பியது. அதனால் அதை கொடுப்பவன் பயன் பெறுவான் என்றனர்.

பிறகு அந்த ரிஷிகூட்டத்தில் நடுவில் இருந்த பரசு ராமரை பார்த்து வசிஷ்டர் கூறலானார், (பரசு)ராமா! அனலுக்கொப்பான  ஒளியுள்ள பொன்னானது எப்படி உண்டானது என்பதை கேளும். அது நீர் நினைத்த பலன் கொடுக்கும். இவ்வுலகில் தானத்திற்க்கு முக்கியமாக சொல்லப்படுகிறது.

சிறந்த கைகளையுடயவனே! ஸ்வர்ணமானது எங்கிருந்து வந்தது எப்படி குணங்களில் சிறந்ததானது என்பதை கூறுகிறேன்...... என்று கூறலானார்.

தொடரும்...


கருத்துகள் இல்லை: